Tuesday, January 25, 2022

இறைவார்த்தை

இன்றைய (26 ஜனவரி 2022) நற்செய்தி

இறைவார்த்தை

திரு. ஜெயமோகன் அவர்கள் எழுதிய 'அறம்' என்னும் சிறுகதையை நேற்று வாசித்தேன். ஓர் எழுத்தாளர் அடைகின்ற துன்பத்தின் பின்புலத்தில் எழுத்துகளின் ஆற்றலை மிக அழகாக எடுத்துரைக்கிறது இக்கதை. கதையின் நாயகர் பெரியவர் கதையின் இறுதியில் இப்படிச் சொல்கிறார்:

'அப்ப தெரிஞ்சுது சொல்லுன்னா என்னான்னு. அது அர்ச்சுனன் வில்லு. எடுக்கிறப்ப ஒண்ணு. தொடுக்கிறப்ப நூறு. படுறப்ப ஆயிரம் ...'

சொல் ஒன்றாக இருந்தாலும் அது ஆயிரம் மடங்கு ஆற்றல் கொண்டது என்பது ஆசிரியரின் கருத்து.

இன்றைய நற்செய்தி வாசகத்தில் விதைப்பவர் எடுத்துக்காட்டையும், அந்த எடுத்துக்காட்டுக்கு இயேசு தரும் விளக்கத்தையும் வாசிக்கின்றோம். 'விதைப்பவர் இறைவார்த்தையை விதைக்கிறார்' என நேரடியாக விளக்கம் தருகிறார் இயேசு. விதையின் ஆற்றல் அதைக் கேட்பவரைப் பொருத்து மாறுபடுகிறது. அல்லது நிலம் விதை பலன்தருதலைப் பாதிக்கிறது. 

நல்ல நிலத்தில் விதைக்கப்பட்ட இறைவார்த்தை முப்பது, அறுபது, நூறு என மூன்று நிலைகளில் பலன் தருகிறது என்னும் வாக்கியத்தை, மத்தேயு, நூறு, அறுபது, முப்பது என எழுதுகின்றார். லூக்காவோ மொத்தமாக நூறு என மட்டும் எழுதுகின்றார்.

விதை ஒன்றுதான். நிலமும் ஒன்றுதான். பின் எப்படி விளைச்சலில் வேறுபாடு?

இந்த வாக்கியத்தைப் புரிந்துகொள்ள முதல் ஏற்பாட்டு நிகழ்வு ஒன்றை எடுத்துக்கொள்வோம். கெராரில் வாழ்க்கை நடத்துகின்ற ஈசாக்கு 'அந்த நாட்டில் பயிரிட்டு அதே ஆண்டில் நூறு மடங்கு அறுவடை செய்தார். ஆண்டவர் அவருக்கு ஆசி வழங்கினார்.' (தொநூ 26:12).

ஆக, ஆண்டவரின் ஆசி விளைச்சலின் மடங்கைக் கூட்டுகிறது.

விதை, நிலம், ஆசி என மூன்றும் இணையும் போது விளைச்சல் நூறு மடங்காகிறது.

இன்றைய நாளில் நாம் புனித திமொத்தேயு மற்றும் தீத்து என்னும் தொடக்கத் திருஅவை ஆயர்களை நினைவுகூர்ந்து கொண்டாடுகின்றோம். பவுலின் உடனுழைப்பாளர்களாக இருந்த இந்த இளவல்கள், நம்பிக்கையில் நல்ல மகன்களாகவும், சபைகளை வழிநடத்துவதில் திறம்படைத்தவர்களாகவும் இருந்தனர். தாங்கள் புதிதாக கிறிஸ்தவ நம்பிக்கையைத் தழுவினாலும், தங்கள் உள்ளம் என்னும் நிலத்தை அதற்கேற்றாற் போல பக்குவப்படுத்திக்கொள்கின்றனர். 

இறைவார்த்தையை நல்ல நிலம் போல ஏற்றுக்கொண்ட இவர்கள், திருத்தூதர்களையும் நம்மையும் இணைக்கும் இணைப்புக் கோடுகளாக உள்ளனர்.

1 comment:

  1. பாறைமீது கட்டிய வீட்டை ஒத்திருக்கிறது இன்றைய நல்ல நிலத்தில் விழுந்த விதையின் நிலமை.நல்ல நிலத்தில் விழுந்த விதையின் எதிர்காலம் எப்படியோ…அப்படியே தான் நல்லவரின் மனத்தில் விதைக்கப்படும் இறைவார்த்தைகளும். நம் வாயிலிருந்து வரும் வார்த்தைகள்….அவை நல்லவையோ,தீயவையோ ஒவ்வொன்றுக்கும் ஒரு சக்தி உண்டு; சென்றடைந்தவரை வாழவும் வைக்கலாம்; வீழ்த்தவும் செய்யலாம்.நல்லநிலத்தில் விழுந்த விதை நூறுமடங்கு பலன் தருவதற்கும்….நல்லவரின் மனத்தில் விழுந்த இறைவார்த்தை கேட்டவருக்கு அதன் பலனைத்தரவும்…அனைத்திற்குமே தேவை இறையாசி.
    தீத்து…திமோத்தேயு …சேர்த்தே பேசப்படுபவர்கள். இறைவார்த்தையை ஏற்றுக்கொள்ள பக்குவப்படுத்தப்பட்ட நிலமாக இருந்த இவர்கள் மனம் போல, நம் மனத்தையும் சீர்ப்படுத்தி வைத்திருக்க அழைப்பு விடுக்கிறார்கள்.
    குறிவைத்த இடம் தவிர, அம்பு எங்கு பட்டாலும் விளைவது தீமையே! ஆகவே குறிபார்த்து எய்யும் அர்ச்சுணனின் அம்பாக இருக்க வேண்டும், நாம் அடுத்தவரைக் குறிவைத்துப் பேசும் வார்த்தைகள் எனும் நல்ல செய்திக்காகத் தந்தைக்கு நன்றிகள்!!!

    ReplyDelete