Thursday, January 6, 2022

நான் விரும்புகிறேன்

இன்றைய (7 ஜனவரி 2022) நற்செய்தி (லூக் 5:12-16)

நான் விரும்புகிறேன்

இன்றைய நற்செய்தி வாசகம் இரு பகுதிகளாக அமைந்துள்ளது. முதல் பகுதியில், தொழுநோயால் பாதிக்கப்பட்டிருந்த ஒருவருக்கு இயேசு நலம் தருகின்றார். இரண்டாவது பகுதியில், மக்கள் கூட்டத்தைத் தவிர்க்கின்ற இயேசு தனியே இறைவனிடம் வேண்டிக்கொண்டிருக்கின்றார்.

இந்த இரு பகுதிகளும் இயேசுவின் இரு முக்கியமான பண்புகளை நமக்குச் சுட்டிக்காட்டுகின்றன: 'இரக்கம்,' 'நம்பிக்கை.'

எபிரேயருக்கு எழுதப்பட்ட திருமடலின் ஆசிரியர் இதையே, 'ஆதலின், கடவுள் பணியில் அவர் இரக்கமும் நம்பிக்கையும் உள்ள தலைமைக் குருவாயிருந்து, மக்களுடைய பாவங்களுக்குக் கழுவாயாகுமாறு எல்லாவற்றிலும் தம் சகோதரர், சகோதரிகளைப் போல ஆக வேண்டியதாயிற்று' (காண். எபி 2:17) என எழுதுகின்றார்.

இயேசுவின் இரக்கம் தொழுநோயாளரை நோக்கியதாகவும், அவருடைய நம்பிக்கை இறைவனை நோக்கியதாகவும் இருக்கிறது. இரக்கம் நலம் தருகின்றது. நம்பிக்கை இறைவேண்டலில் அவர் நிலைக்கச் செய்கிறது.

இயேசுவின் இரக்கம் மூன்று நிலைகளில் வெளிப்படுகின்றது: (அ) 'விரும்புதல்,' (ஆ) 'கையை நீட்டுதல்,' (இ) 'நோயுற்றவரைத் தொடுதல்.' மேலும், இயேசு அவருக்கு நலம் தந்தவுடன் அவரை மீண்டும் சமூகத்தின் உறுப்பினராக்குவதற்கு முயற்சி செய்கின்றார். 

மக்கள் நிறையப் பேர் நலம் பெற வேண்டி இயேசுவிடம் வர, அவரோ அவர்களை விட்டுத் தனியே செல்கின்றார். இது நமக்கு வியப்பாக இருக்கிறது. அனைத்து மக்களுக்கும் அவர் இரக்கம் காட்டி, அவர்களுக்கு நலம் தந்திருக்கலாமே? எனக் கேட்கத் தோன்றுகிறது. ஆனால், கூட்டத்தை விட்டு எப்போது விலக வேண்டும் என்பதை இயேசு அறிந்தவராக இருக்கின்றார்.

'எப்போது இடத்தை விட்டு நகர வேண்டும்' என்று அறிதல் மிக முக்கியம். தன் வாழ்வின் முதன்மையான இறைவேண்டலை, தன் தந்தையோடு தான் கொண்டுள்ள உறவை இயேசு விட்டவிடவில்லை. தன்னுடைய பேட்டரியை தான் சார்ஜ் செய்துகொள்ளும் இடமாக இயேசு இறைவேண்டலைக் கண்டார். 'ரம்பத்தைக் கூர்மைப்படுத்தாமல் மரத்தை அறுக்க முயற்சி செய்வது நேரம் மற்றும் ஆற்றல் விரயம்' என்பதை அறிந்தவராக இருந்தார் இயேசு.

இன்று வாழ்வின் இவ்விரு முதன்மைகளையும் - பிறரோடு உறவு,  இறைவனோடு உறவு – சமநிலையில் வைத்திருத்தல் ஒரு கலை. 


1 comment:

  1. ‘ இரக்கம்’….. ‘ நம்பிக்கை’ கப்பலைக் கரையோடு இணைத்து வைக்கும் நங்கூரங்களாகப் பார்க்கிறேன். முன்னையது என்னை என் அயலானோடு இணைப்பதெனில் பின்னையது என்னை இறைவனோடு இணைப்பது. என் வாழ்வு தடம் மாறாமல் பிரயாணிக்க இரண்டுமே தேவை.ஒரு நற்செயல் முழு உருப்பெற அது மூன்று நிலைகளைத் தொடவேண்டுமென நமக்குக் கற்றுத்தருகிறார் இயேசு. நற்செயலுக்கான உந்துதல் மனத்தில் உதித்து….பின் கைகளை நீட்டி….சுகமாகவேண்டியவரைத் தொடுகிறார். எந்த நற்காரியமும் மாங்காய் மரத்திலிருந்து விழும் மந்திரமல்ல….நம் விருப்பத்தினால்…முயற்சியினால் முழுமையடைவது. ஆனாலும் இது தொடர் செயல் அல்ல….தொடங்கிய காரியத்தை எப்பொழுது நிறுத்த வேண்டுமெனவும் சொல்லித்தருகிறார்.நிறுத்தும் இடைவெளி தன் உடல்- உள்ள உறுதியை இன்னும் கொஞ்சம் தீட்டிக்கொள்ளவே என்று புரிய வைக்கிறார்.” ரம்பத்தைக் கூர்மைப்படுத்தாமல் மரத்தை அறுக்க முயற்சி செய்வது நேரம் மற்றும் ஆற்றல் விரயம்”
    தந்தையின் உருவகம் அவரின் வரிகளுக்கு உரமும்,உறுதியும் சேர்க்கிறது.
    பிறரோடு உறவு- இறைவனோடு உறவு…. சமநிலையில் வைத்திருத்தல் ஒரு கலை…உண்மையே! நாம் கற்றுத் தேற வேண்டிய கலை. இறைவனோடும்,மனிதனோடுமான உறவை உறுதியாகக் கையாள வழி சொல்லும் ஒரு அழகான பதிவு.தந்தைக்கு நன்றிகள்!!!

    ReplyDelete