Wednesday, January 5, 2022

தொடக்கம்

இன்றைய (6 ஜனவரி 2022) நற்செய்தி (லூக் 4:14-22)

தொடக்கம்

நாம் நினைக்கும் பல காரியங்கள் முடியாமற் போவதற்கான காரணம் நாம் அவற்றைத் தொடங்கவில்லை என்பதுதான். 

பல செயல்கள் நம் எண்ணங்களாகவும், சொற்களாகவும் மறைந்துவிடக் காரணம் என்ன? நாம் நினைக்கும் செயல்களையும், பகிரும் கனவுகளையும் செயல்களாகத் தொடங்குவதற்கான தடை என்ன? நாம் அவற்றைத் தொடங்குவதற்கு தயக்கம் கொள்வது ஏன்?

இன்றைய நற்செய்தி வாசகத்தில் இயேசு தன் பொதுவாழ்வை அல்லது பணிவாழ்வை நாசரேத்தூரில் உள்ள தொழுகைக்கூடம் ஒன்றில் தொடங்குகின்றார். தன் பணியின் நோக்கம் என்ன என்பதை எசாயாவின் எழுத்துகள் வழியாகத் தன் ஊராருக்கு எடுத்துரைக்கின்றார். 'நீங்கள் கேட்ட இந்த மறைநூல் வாக்கு இன்று நிறைவேறிற்று' என்று அவர் சொல்ல, அவருடைய வாயிலிருந்து வந்த அருள்மொழிகளைக் கேட்டு வியப்புற்ற அவருடைய ஊரார், 'இவர் யோசேப்பின் மகன் அல்லவா?' எனக் கூறி அவரைப் பாராட்டுகின்றனர்.

இயேசுவின் நாசரேத்தூர் பணித்தொடக்கம் அல்லது நாசரேத்தூர் பணி அறிக்கை நமக்கு மூன்று விடயங்களைக் கற்றுத் தருகின்றது:

(அ) அறிகுறிகள் அறிதல்

லூக்காவின் பதிவின்படி, இயேசு அடிக்கடி தொழுகைக்கூடத்திற்குச் செல்கின்றார். அதாவது, அவர் அதைத் தனது வழக்கமாகக் கொண்டிருக்கின்றார். அவர் ஒவ்வொரு முறை செல்லும்போதும் மறைநூலை வாசிக்கின்றார். ஆனால், இன்று அவரிடம் கொடுக்கப்பட்ட பகுதி எசாயாவின் இறைவாக்காக இருக்கின்றது. அதை ஓர் அறிகுறி என உணர்கின்ற இயேசு, எதார்த்தமாக அதைப் பிரிக்க, அவர் காணும் பகுதியில், 'ஆண்டவருடைய ஆவி என்மேல் உளது' என எழுதியுள்ளது. இது எதார்த்தமாக அல்லது இயல்பாக நடந்தது எனலாம். அல்லது இறைத்திட்டத்தின்படி நடந்தது எனலாம். அல்லது இது அதிர்ஷ்டம் எனலாம். ஆனால், எப்படி நாம் சொன்னாலும், இயேசுவின் உள்ளுணர்வில், 'இதுதான் அது! இதுதான் நான்!' என்று ஓர் ஒளி உதிக்கின்றது. அந்த ஒளியை அவர் சிக்கெனப் பிடித்துக்கொள்கின்றார். நாம் நினைக்கும் எந்தவொரு எண்ணமும் நம்மைப் பிரபஞ்சத்தோடும், இறைவனோடும் இணைக்கின்றது. ஏனெனில், எண்ணங்கள் அங்கிருந்தே வருகின்றன. நாம் அவற்றைச் சரியாகப் புரிதலும், செயல்படுதலும் அவசியம்.

(ஆ) இருந்தவற்றிலிருந்து தொடங்குவது

புதிதாக, 'இதுதான் நான்!' என்று இயேசு சொல்வதற்குப் பதிலாக, எசாயாவின் இறைவாக்குப் பகுதி தன்னில் நிறைவேறுவதாக முன்மொழிகின்றார். நாம் செய்யும் செயல்கள் அனைத்தும் இந்த உலகில் உள்ள யாரோ ஒருவரின் தோள்மேல் ஏறித்தான் செய்கின்றோம். அதாவது, ஏற்கெனவே ஒருவர் செய்த வேலையை நாம் தொடர்கின்றோம். எடுத்துக்காட்டாக, நான் ஓர் நாவலாசிரியராக வேண்டும் எனில், நான் ஏற்கெனவே உள்ள மொழி, சொல்லாட்சி, சிந்தனைக் களம், கருத்துரு என உள்ளவற்றை அடிப்படையாக வைத்தே தொடங்குகின்றேன். ஒன்றுமில்லாமையிலிருந்து உருவாக்க நாம் யாரும் கடவுளர் இல்லை. இயேசு பத்துக்கட்டளைகள் அல்லது உடன்படிக்கைப் பகுதி போன்றவற்றைத் தெரிவு செய்யாமல், எசாயாவின் இறைவாக்குப் பகுதியைத் தெரிவு செய்கின்றார். எசாயா இறைவாக்கினர் முன்மொழிந்த பணிகளைத் தான் தொடரவிருப்பதாக அறிவிக்கின்றார்.

(இ) மற்றவர்கள்முன் அறிக்கையிடுவது

நாம் செய்யும் செயல்கள் நம்மை யாரென்று மற்றவர்களுக்குச் சொல்கின்றன. தனியான ஒரு தோப்பில் நான் பண்ணையார் என்று சொல்லிக்கொள்ள வாழ்க்கை நம்மை அழைக்கவில்லை. மற்றவர்கள்முன் அறிக்கையிடுவதில் உள்ள பெரிய சிக்கல் விமர்சனம். 'இந்த மறைநூல் வாக்கு இன்று நிறைவேறிற்று' என்று சொன்ன அடுத்த நொடி, 'இவர் யோசேப்பின் மகன் அல்லவா?' என்று பதிலிறுப்பு செய்கின்றனர் மக்கள். இந்தப் பதிலிறுப்பு விரைவாக எதிர்வினையாக மாறி, இயேசுவின் எளிய பின்புலம் குறித்து மக்கள் இடறல்படத் தொடங்குகின்றனர். ஒருவரின் நிகழ்கால இருப்பை எதிர்கொள்ள இயலாத உலகம் பல நேரங்களில் அவருடைய இறந்தகால இருப்பை நினைத்து இடறல் படுகிறது. ஆனால், விமர்சனங்களை எதிர்கொள்ளாமல் இருத்தலும் நகர்தலும் சாத்தியம் அல்ல. மேலும், இயேசு இறைப்பிரசன்னத்தில் தொடங்குகின்றார். இறைத் திருமுன்னிலையில் தன்னையே ஊன்றி நிற்கும் ஒருவர் மற்றவர்களின் முன்னிலையை எளிதாக எதிர்கொள்ள முடியும்.

இயேசுவின் பணிவாழ்வின் தொடக்கம், இன்று நாம் தொடங்க வேண்டிய பல காரியங்களுக்கு உந்துதலாக இருக்கட்டும். இயேசுவின் பணிநோக்கம் இன்னும் நிறைவேறாமல் இருக்கின்றது. நாம் பெற்ற அருள்பொழிவை நினைவுகூர்ந்து, ஆண்டவர் அருள்தரும் ஆண்டினை அறிவிக்க நாமும் முயற்சி செய்வோம்.

இந்தப் புதிய ஆண்டு நமக்கு அருள்தரும் ஆண்டாக அமைவதாக!


2 comments:

  1. இந்த ஆண்டை ‘அருள்தரும் ஆண்டாக’ ஆக்க நாம் செய்ய வேண்டிய விஷயங்களைச் சொல்லும் ஒரு பதிவு.
    “ உள்ளுவதெல்லாம் உயர்வுள்ளல்” என்பது முன்னோர் வாக்கு. நல்ல எண்ணங்களே நல்வாழ்க்கைக்கு வித்திடுகின்றன என்பது வாழ்க்கையை வாழ்ந்து பார்த்தவர்களின் கூற்று.நல்ல எண்ணங்களும்,சரியான புரிதலும் வந்துவிடின் அவை நல்ல செயல்களாக உருவெடுக்கும்…..
    நம்முடைய வாழ்க்கையின் அனைத்து சொல்லும்,செயலும் நம் முன்னோர்கள் நமக்கு வித்திட்டவையே! அந்த வித்துக்கள் சரியான காற்றை சுவாசித்து…சரியானவற்றையே உண்டு..தன்னுள் பிறக்கும் அனைத்து நல்லவற்றையும் நமக்குப் பின வரும் தன் சந்ததிகளுக்கு விட்டுச்செல்வது…
    “ இவர் யோசேப்பின் மகன் தானே!” இதை ஏன் நாம் எதிர்மறையாகப் பார்க்க வேண்டும்? பேர் சொல்லும் ஒரு பிள்ளையைப் பெற்றவர்தானே பெருமைக்குரிய தகப்பன்? தங்கள் பெயரை முன்னெடுத்தும் பிள்ளைகள் தானே தந்தையரின் எதிர்பார்ப்பு? அதைத் தானே நமக்கு வாழ்ந்து காட்டிச் சென்றுள்ளார் குழந்தை இயேசு?
    இயேசுவின் பணி நோக்கம் முழுவதுமாக நிறைவேறாத ஒன்றாக இருப்பினும்,அதுவே நமக்கு உந்து சக்தியாக அமையட்டும்!
    “ இந்த ஆண்டு நமக்கு அருள் தரும் ஆண்டாக” அமைய தந்தையுடன் இணைந்து நாமும் இறைவனின் ஆசீரை வேண்டுவோம்! தந்தைக்கு நன்றிகள்!!!

    ReplyDelete