பெரிதினும் பெரிது
கிறிஸ்து பிறப்புக் காலம் முடிந்து ஆண்டின் பொதுக்காலத்திற்குள் நுழைகின்றோம். இன்றைய நற்செய்தி வாசகத்தில் இயேசுவின் பணித் தொடக்கத்தை (மாற்கு நற்செய்தியாளரின் பதிவு) வாசிக்கின்றோம். இன்று தொடங்கி சில நாள்களுக்கு சாமுவேல் முதல் நூலிலிருந்து முதல் வாசகத்தைக் கேட்கின்றோம்.
இன்றைய நற்செய்தி வாசகம் இரு பகுதிகளாக அமைந்துள்ளது: முதல் பகுதியில் இயேசு மனமாற்றத்தின் செய்தியை அறிவிக்கின்றார். இரண்டாம் பகுதியில் தன் முதற்சீடர்களை அழைக்கின்றார்.
'காலம் நிறைவேறிவிட்டது. இறையாட்சி நெருங்கி வந்துவிட்டது. மனம் மாறி நற்செய்தியை நம்புங்கள்' என்பதே இயேசுவின் அறிக்கையாக இருக்கின்றது. 'காலம்' என்பது விவிலியத்தில் இரு நிலைகளில் புரிந்துகொள்ளப்படுகின்றது. ஒன்று, 'க்ரோனோஸ்' – அதாவது நாள்காட்டி நேரம். 'மூன்று நாள்களுக்குப் பின்,' 'ஆறு நாள்களுக்குப் பின்' என்று நற்செய்தி நூல்களில் வரும் பதிவுகளில், இவ்வகையான நேரத்தைப் பார்க்கின்றோம். இரண்டு, 'கைரோஸ்' – அதாவது தொகுப்பு நேரம். சபை உரையாளர் நூலில், 'பிறக்க ஒரு காலம். இறக்க ஒரு காலம் ... நட ஒரு காலம். அறுவடைக்கு ஒரு காலம்' என்று சொல்லும் பகுதியில், இத்தகைய நேரத்தைக் காண்கின்றோம். நம் வாழ்வை நாம் திரும்பிப் பார்க்கும்போது, 'நாள்காட்டி நேரம்' மறைந்து, 'தொகுப்பு நேரமே' நினைவில் நிற்கிறது. எடுத்துக்காட்டாக, நாம் படித்துக்கொண்டிருந்த நேரம், நாம் யாரையாவது சந்தித்த நேரம், புதிய பணியில் இருந்த நேரம், அந்தப் பணி நிறைவுபெற்ற நேரம் என்று நாம் நினைவில் கொள்கின்றோம். நாள்காட்டி நேரத்தை விட தொகுப்பு நேரம் பெரியது. நாள்காட்டி நேரம் விடுத்து, தொகுப்பு நேரத்திற்குள் கடப்பதே முதிர்ச்சி.
தன்னைப் பற்றி இறைவாக்குகள் உரைக்கப்பட்டதன் காலம் நிறைவேறியதாகவும், இறைவாக்குகள் இப்போது நிறைவேறுவதாகவும் சொல்கின்றார் இயேசு. தொடர்ந்து, 'மனம் மாறி நற்செய்தி நம்புங்கள்' என அழைக்கிறார் இயேசு. 'மனம் மாறுதல்' என்பதை 'பாதை திருப்புதல்' என்று புரிந்துகொள்ளலாம். 'நற்செய்தி' என்பது இங்கே இயேசுவையும், அவர் அறிவிக்கும் செய்தியையும் குறிக்கின்றது. அதாவது, பாதை மாறுகின்ற ஒருவர்தான் இயேசுவை ஏற்றுக்கொள்ளவும், அவர் அறிவிக்கின்ற நற்செய்தியைப் பற்றிக்கொள்ளவும் முடியும்.
நற்செய்தி வாசகத்தில் இரண்டாம் பகுதியில், மீன்பிடித்துக் கொண்டிருந்த முதற் சீடர்களை, 'நான் உங்களை மனிதரைப் பிடிப்பவர் ஆக்குவேன்' என்கிறார் இயேசு. அதாவது, அவர்கள் இதுவரை கொண்டிருந்த பார்வையை மிகவே அகலமாக்குகின்றார். ஆனால், முதற்சீடர்கள் இயேசுவிடம் எந்தவொரு எதிர்கேள்வியும் கேட்கவில்லை. உடனடியாக தங்கள் வலைகளையும், தங்கள் தந்தையையும், கூலியாள்களையும், படகுகளையும் விட்டுவிட்டு இயேசுவின் பின்னால் செல்கின்றனர். இதுதான் அவர்களுடைய பாதை மாற்றம். மீன்பிடிக் காலம் முடிந்தது என்றும், இனி மனித அறுவடைக் காலம் தொடங்கியது என்றும் சீடர்கள் உணர்கின்றனர்.
முதல் வாசகத்தில், எல்கானா-அன்னா-பெனின்னா குடும்ப உறுப்பினர்களை அறிமுகம் செய்கின்றார் ஆசிரியர் 'குழந்தைப் பேறு இல்லாத காலம்' மறைந்து 'குழந்தை பேற்றுக் காலம்' தொடங்குவதன் அறிமுகமாக இது உள்ளது.
இன்றைய வாசகங்கள் நமக்குத் தரும் பாடங்கள் எவை?
(அ) நம் பார்வையை அகலமாக்குவது. மீன்பிடித்தல் போதும் என்று குனிந்துகொண்டே இருப்பவர்கள் தங்கள் கண்முன் நிற்கும் மெசியாவையும், புதிய வாழ்க்கையையும் கண்டுகொள்ள முடியாது.
(ஆ) உடனடி பாதை மாற்றம். பழைய காரியங்களைச் செய்துகொண்டே புதிய விளைவுகளை எதிர்பார்க்க முடியாது. புதிய விளைவுகள் வேண்டுமெனில், முயற்சிகளும் புதியனவாக இருத்தல் வேண்டும்.
(இ) காலத்தைப் பற்றிய உணர்வு. காலத்தைப் பற்றிய உணர்வு மனிதர்களாகிய நாம் பெற்றிருக்கின்ற பெரிய கொடை. இந்த உணர்வே நம் வாழ்வை நாம் மேன்மையாக வாழ நம்மைத் தூண்டுகிறது.
ஆண்டின் பொதுக்காலத்திற்குள் நுழைந்துள்ள நாம் மனமாற்றத்திற்காக அழைக்கப்படுகிறோம். பழையன கழிந்து புதியனவற்றைப் புகுத்தும் செய்திகளைப் பார்க்கிறோம். குழந்தைப் பேறின்றி இருந்த அன்னா குழந்தைக்குத் தாயாவதும், மீன் பிடித்துக்கொண்டிருந்தவர்கள் மனிதரைப்பிடிக்க இயேசுவின் பின்செல்வதும்…. இப்படிப்பல விஷயங்கள். மாற்றங்கள் நம் வாழ்வில் அடிக்கடி வருவதில்லை.ஆனால் அப்படி வருகையில் இயேசுவின் சொல் கேட்ட…..மீன் பிடித்தலிலிருந்து மனிதரைப் பிடிக்கத் தயாரான சீடர்களைப் போல மாற்றுப்பாதையை சிக்கெனப் பிடித்துக்கொள்வதே விவேகம்.
ReplyDeleteபார்வையை அகலமாக்குவதும்….பாதை மாறுவதும்…..காலத்தைப் பற்றிய உணர்வால் உந்தித் தள்ளுதலும் இன்று நம்மை நோக்கிப் படையெடுக்கும் விஷயங்கள்.காலத்தோடு பயிர் செய்வோம்…..காரியத்தை அறுவடை செய்வோம்.கைக்கெட்டிய தூரத்தில் உள்ள விஷயங்களை எட்டிப்பிடிக்க வழி சொல்லும் ஒரு பதிவு. தந்தைக்கு நன்றிகள்!!!