Friday, January 14, 2022

கழுதை தேடி வந்தவர்

இன்றைய (15 ஜனவரி 2022) முதல் வாசகம் (1 சாமு 9:1-4, 17-19, 10:1)

கழுதை தேடி வந்தவர்

சாமுவேல் 1 மற்றும் 2ஆம் நூல்கள் மிக அழகான கதையாடல்களைக் கொண்டிருக்கின்றன. பல்வேறு புரட்டிப்போடுதல்கள் இக்கதையாடல்களில் நடக்கின்றன. மனித வாழ்வின் எதார்த்தங்கள், ஏமாற்றங்கள், உயர்வுகள், தாழ்வுகள், உணர்வுப் பிறழ்வுகள், உறவுப் பிறழ்வுகள் என்று பிண்ணி நிற்கும் கதையாடல்கள் நாம் முகம் பார்க்கும் கண்ணாடி போல இருக்கின்றன.

கழுதையைத் தேடி வந்தவர் அரசர் ஆகிறார் - இதுதான் இன்றைய முதல் வாசகத்தின் சுருக்கம்.

நேற்றைய வாசகத்தில், இஸ்ரயேல் மக்கள் கேட்டுக்கொண்டபடி அவர்களுக்கென ஓர் அரசரை நியமிக்குமாறு சாமுவேலுக்கு அறிவுறுத்துகின்றார் ஆண்டவராகிய கடவுள். இன்றைய வாசகத்தில், அந்த அரசரை அவர் அடையாளம் காட்டுகின்றார்.

சவுல் பென்யமின் குலத்தைச் சார்ந்தவர். பென்யமின் யாக்கோபின் கடைசி மகன். ஆக, இந்தக் குலமும் கடைநிலைக் குலமாக இருந்தது. ஆனால், இந்தக் கடையனையே முதல்வன் ஆக்குகின்றார். சவுலைப் பற்றிய மூன்று பெயரெச்சங்கள் இங்கே கவனிக்கத்தக்கவை: (அ) சவுல் இளமை கொண்டவர், (ஆ) சவுல் அனைத்து இஸ்ரயேல் ஆண்களை விட அழகுடையவர், (இ) சவுல் அனைவரையும் விட உயரமானவர். தங்கள் அரசரைப் பற்றிய மிகைப்படுத்துதலாக இது இருந்தாலும், இம்மூன்று பெயரெச்சங்களும் முக்கியமானவை. 'இளமை கொண்டவர்' என்பதால் ஆற்றல் அதிகம் உள்ளவர் சவுல். 'அழகுடையவர்' என்பதால் அனைவரையும் ஈர்க்கக் கூடியவர். உடல்சார் அழகும் ஈர்ப்புத்தன்மையும் முக்கியமில்லை என நாம் பல நேரங்களில் நினைக்கின்றோம். ஆனால், நாம் எடுக்கும் முடிவுகள் பல இவற்றை மையப்படுத்தியதாகவே இருக்கின்றன. 'உயரமானவர்' என்பதால் போரில் மிகவும் பயன்படக் கூடியவர். ஏனெனில், எதிரிகள் பார்ப்பதை விட இவரால் அதிகமாகப் பார்க்க முடியும்.

'பணியாளன் ஒருவனைக் கூட்டிக்கொண்டு கழுதைகளைத் தேடிப் போ!' என அவரை அனுப்புகிறார் அவருடைய தந்தை.

நிகழ்வை முழுவதும் படித்தால் இன்னும் அழகாக இருக்கும். சில பெண்கள் தண்ணீர் எடுக்கச் செல்கிறார்கள். விவிலியத்தில் தண்ணீர், குளம், கிணறு என வரும் இடங்கள் முக்கியமானவை. ஏனெனில், அந்த நிகழ்வுகளில் திருமணம் நடக்கும். இஸ்ரயேலின் அரசன் என்னும் மணமகனாக மாறுகிறார் சவுல்.

'ஆண்டவர் தம் உரிமைச் சொத்துக்குத் தலைவனாக இருக்கும்படி உன்னைத் திருப்பொழிவு செய்துள்ளார் அன்றோ?' என்று சொல்லி சவுலை அருள்பொழிவு செய்கின்றார் சாமுவேல். 'அன்றோ?' என்ற கேள்வி வாசகருக்கு நெருடலைத் தருகின்றது. ஏனெனில், தான் திருப்பொழிவு செய்யப்பட்ட நிலையை விரைவில் மறந்துவிடுகின்றார் சவுல். 

இந்த நிகழ்வு நமக்குத் தரும் பாடங்கள் எவை?

(அ) வாழ்வில் நடக்கும் நிகழ்வுகள் ஆச்சர்யமானவை. நாம் இதுவரை வாழ்ந்த வாழ்க்கையோடு நாம் இறந்துவிட்டோம். இனி வருவதெல்லாம் நமக்கு ஆச்சர்யங்கள் என அப்படியே ஏற்றுக்கொள்ளப் பழகிக்கொண்டால் வாழ்க்கை இனிதாகும். சாதாரண கழுதையைத் தேடி வந்தவரைக் கடவுள் இஸ்ரயேலின் முதல் அரசராக மாற்றுகின்றார். கடவுள் நம் வாழ்வில் நிகழ்த்தும் ஆச்சர்யங்கள் மேன்மையானவை.

(ஆ) மேலானதைக் கண்டவுடன் கீழானதை விட வேண்டும். அரசர் நிலைக்கு நாம் உயர்த்தப்பட்டால் கழுதையைத் தேடுவதை விட வேண்டும். 'கழுதை கிடைத்துவிடும். நீ அந்தக் கவலையை விடு! நீ பட வேண்டிய கவலை மக்களைக் குறித்து!' என சவுலின் பார்வையை மாற்றுகின்றார் சாமுவேல். ஆனால், சில ஆண்டுகளில் சவுல் அமலேக்கியரின் ஆடு, மாடுகளைப் பிடித்து வைத்துக்கொண்டதன் நிமித்தம் தன் அரச நிலையை இழக்கின்றார். அரசராக மாறினாலும், அவருடைய எண்ணம் என்னவோ கழுதைமேலேயே இருந்தது. பாவம் சவுல்!

(இ) அன்றாட வாழ்வின் பணிகள். அன்றாட வாழ்வின் பணிகளை நாம் எவ்வளவு மேன்மையாகச் செய்ய வேண்டுமோ அவ்வளவு மேன்மையாகச் செய்ய வேண்டும். அந்தக் காலத்தில் கழுதையைத் தேடிச் செல்தல் என்பது காணாமல் போன இன்றைய பென்ஸ் அல்லது பிஎம்டபுள்யு வாகனத்தைத் தேடிப் போவது. 'போதும் பார்த்துக்கொள்ளலாம்!' என ஓய்ந்துவிடாமல், அதை எப்படியாவது காண வேண்டும் என்று தேடியதால்தான் திருக்காட்சியாளரான சாமுவேலிடம் வருகின்றார் சவுல். 'இதுதான் நான். இவ்வளவுதான் என் வேலை' எனச் சுருக்கிக் கொள்ளாமல் நாம் நம் எல்லைகளை விரித்துக்கொண்டே சென்றால், வாழ்க்கை நமக்கு நிறைய ஆச்சர்யங்களோடு காத்திருக்கின்றது.

சவுல் தன் பணியைச் சரியாக முடிக்கவில்லை என்றாலும், அவரின் தொடக்கம் என்னவோ மிகவும் அழகாகவே இருந்தது.

ஏனெனில், சவுல் அழகானவர்!


1 comment:

  1. “ கழுதையைத் தேடி வந்தவர் அரசராகிறார்!”…. சவுலைப்போலவே பதிவின் தலைப்பும் அழகு.சவுலைப்போலவே நமக்கும் ஆண்டவர் நம் வாழ்வில் ஆச்சரியங்களையும்,அதிசயங்களையும் அள்ளித்தெளிக்கிறார். நாம் கனவிலும் நினையாத விஷயங்களைக்கூட நனவாக்குகிறார். அவர் ஆசீர்வாத்த்தை அடைமழையெனக்கொட்டுகிறார்.நாம் தான் பாதை சறுக்குகிறோம்…சவுலைப்போல..நம் வாழ்வின் ஆச்சரியங்களை அப்படியே ஏற்றுக்கொள்ளவும், கீழானதை மறந்து மேலானவை மீது நம் சிந்தனையைச் செலுத்தவும்,அன்றாட வாழ்வின் பணிகளை நேர்த்தி குன்றாமல் செய்யவும் அழைப்பு விடுக்கிறது இன்றையப்பதிவு.
    “ ஆண்டவர் தம் உரிமைச்சொத்துக்கு நம்மையும் தலைவனாகத் திருப்பொழிவு செய்துள்ளார் நம் திருமுழுக்கின் வழியாக!” எனும் எண்ணம் நமக்கு அக மற்றும் புற அழகை அள்ளித்தரக் காத்திருக்கிறது சவுலைப்போல! சவுலின் அழகால் ஈர்க்கப்பட்டத் தந்தையைப் பார்க்க முடிகிறது இன்றையப் பதிவில். நன்றிகள்!!!

    ReplyDelete