மணமகனின் தோழர்
தன் வாழ்நாள் முழுவதும் தான் இருக்க வேண்டிய இடம் இரண்டாம் இடம்தான் என்று தெரிந்தாலும், இரண்டாம் இடத்தில் இருத்தல் இனிது என நமக்கு உணர்த்தும் மாமனிதர் திருமுழுக்கு யோவான். இயேசுவுக்கும் இவருக்கும் வெறும் வயது வித்தியாசம் வெறும் ஆறு மாதங்கள்தாம் (லூக்காவின் பதிவின்படி). இருந்தாலும், இவருக்கும் இயேசுவுக்கும் எந்தவொரு ஈகோ பிரச்சினையும், யார் பெரியவர் என்ற பிரச்சினையும் வந்ததில்லை.
இன்றைய நற்செய்தி வாசகத்தில் உள்ள நிகழ்வு யோவான் நற்செய்தியில் மட்டுமே காணப்படுகின்றது. இயேசு திருமுழுக்கு கொடுக்கின்றார். அதாவது, திருமுழுக்கு யோவான் செய்த பணியை அவர் சில நாள்கள் செய்கின்றார். இது பற்றி திருமுழுக்கு யோவானிடம் சிலர் அறிவிக்கின்றனர். யோவானிடம் வந்தவர்கள், 'இப்போது அவரும் திருமுழுக்கு கொடுக்கின்றார். எல்லாரும் அவரிடம் செல்கின்றனர்' என்கின்றனர். அதாவது, 'நீரும் திருமுழுக்கு கொடுக்கிறீர். உம்மிடம் யாரும் வருவதில்லை' என்று மறைமுகமாகச் சொல்லி அவருடைய ஈகோவைத் தூண்டுகின்றனர். உம்மிடம் திருமுழுக்கு பெற்ற ஒருவர் உம்மைவிடப் பெரியவர் ஆகிவிட்டார் என்று சொல்லி, ஒப்புமை உணர்வையும் பொறாமை உணர்வையும் தூண்டுகின்றனர்.
திருமுழுக்கு யோவான் மிகவும் எளிதாகவும், இனிமையாகவும், பொறுமையாகவும் நிகழ்வைக் கையாளுகின்றார். யோவானின் பதிலிறுப்பு மூன்று நிலைகளில் இருக்கின்றது:
(அ) 'மேலிருந்து அருளப்பட்ட கொடை'
'விண்ணிலிருந்து அருளப்படாவிட்டால் எவரும் எதையும் பெற்றுக்கொள்ள முடியாது' என்று சொல்வதன் வழியாக, இயேசுவுக்கு திருமுழுக்கு அளிக்கும் ஆற்றல் அல்லது கொடை தன்னிடமிருந்து அல்ல, மாறாக, கடவுளிடமிருந்து வந்தது என்று சொல்கின்றார். இயேசு பெற்றுள்ள விண்ணகக் கொடையை அறிக்கையிடுகின்றார். இந்த இடத்தில் இன்னொரு வாழ்க்கைப் பாடத்தையும் நாம் கற்கலாம். நாம் எவ்வளவு முயற்சி செய்தாலும், மேலிருந்து அருளப்படாவிட்டால், நாம் முன்னேறிச் செல்ல முடியாது. ஆக, மேலிருந்து அருளப்படுகின்றவற்றை அறிந்து அவற்றில் வளர்வது நலம்.
(ஆ) 'நான் மெசியா அல்ல'
'நான் யார்' என்பதை அறிவது எவ்வளவு முக்கியமோ, அந்த அளவிற்கு, 'நான் யார் இல்லை' என்பதை அறிவதும் முக்கியம் என உணர்த்துகிறார் திருமுழுக்கு யோவான். தான் மெசியா அல்ல என்பதை வெளிப்படையாக அறிக்கையிடுகின்றார். 'நானும் மெசியா' என்றோ, 'நான் மெசியாவைப் போன்றவர்' என்றோ தனக்கான எந்த போலியான அடையாளங்களையும் அவர் தேட விரும்பவில்லை. இன்று, 'நான் யார் இல்லை' என்பது பற்றிய தெளிவு என்னிடம் இருக்கிறதா?
(இ) 'மணமகன் தோழரின் மகிழ்ச்சி'
திருமண நிகழ்வு உருவகத்தைப் பயன்படுத்துகின்ற யோவான், இயேசுவை மணமகன் என்றும், தன்னை மணமகனின் தோழர் என்றும் உருவகிக்கின்றார். திருமண நிகழ்வில் கவனிக்கப்படுகிறவர் மணமகன் மட்டுமே. தோழர் மணமகனுக்குப் பணிவிடை செய்பவர். அதில் மகிழ்பவர். 'அதில் அவர் பெருமகிழ்ச்சி அடைகிறார். என் மகிழ்ச்சியும் இது போன்றது. இம்மகிழ்ச்சி என்னுள் நிறைந்துள்ளது. அவரது செல்வாக்கு பெருக வேண்டும். எனது செல்வாக்கு குறைய வேண்டும்' என்று தான் பெற்றுள்ள மகிழ்ச்சியையும் நிறைவையும் எடுத்துரைக்கின்றார் யோவான்.
திருமுழுக்கு யோவானின் இவ்வார்த்தைகளைக் கேட்டவர்கள் இயேசுவிடம் போய் இவற்றைச் சொன்னால் இயேசுவின் பதிலிறுப்பு எப்படி இருக்கும்? இயேசு பெருமிதம் கொள்வார்.
நம்மிடம் மற்றவர்களைப் பற்றிச் சொல்பவர்கள், நம்மைப் பற்றியும் மற்றவர்களிடம் சொல்வார்கள். ஆக, சொல்லப்படுபவர்களைப் பற்றி நாம் பெருமையாகப் பேசிவிட்டால், நம்மிடம் சொன்னவர்கள் மௌனம் காப்பார்கள். நாமும் நம் மகிழ்ச்சியைத் தக்கவைத்துக்கொள்ள முடியும்.
வாழ்வில் முதலிடம் மட்டுமே முதன்மையானது அல்ல என்பதைத் தன் தாழ்ச்சியாலும், தாராள உள்ளத்தாலும், பெருந்தன்மையாலும், மனநிறைவாலும், மகிழ்ச்சியாலும் நமக்கு உணர்த்துகிறார் திருமுழுக்கு யோவான்.
‘ திருமுழுக்கு யோவான்’ …உம்மைவிட ஒருவர் பெரியவராகிவிட்டாரெனும் வார்த்தைகள் அவரிடம் பொறாமை மற்றும் ஒப்புமை உணர்வைத் தூண்டிவிடும் எனும் எதிர்பார்ப்பில் கூறப்பட, அவரோ இப்படிப்பட்டதொரு நிகழ்வை எளிதாகவும்,இனிமையாகவும்,பொறுமையாகவும் கையாளும் சூட்சுமத்தை நமக்கு சொல்லித்தருகிறார். பல சமயங்களில் நாமும் கூட ஒரு காரியத்தைச் செய்து முடித்தே ஆக வேண்டுமென எத்தனை பிரயத்தனப்பட்டாலும் அது கைகூடாமல் போகும் தருணங்களில் “இதில் இறை சித்தம் இல்லை” என நம்மை அமைதிப்படுத்திக்கொள்வது ஒன்றே நமக்கு ஆறுதல்.அடுத்தவருக்கு நடந்த ஒரு நல்ல காரியம் நமக்கும் கைகூட வேண்டுமென நினைக்கும் பொழுதே “ நான் அவரில்லை; அந்தத் தகுதியும் எனக்கில்லை” எனும் உண்மை நம் உள்மனத்தை தொடுதல் நலம்.
ReplyDeleteஎன்னதான் மணமகனுக்குத் தோழன் எனினும்,அவரின் அருமை,பெருமைகளை இவருடையதாகக் கருதப் பெரிய மனம் வேண்டும்; அது திருமுழுக்கு யோவானுக்கு நிறையவே இருந்தது.” வாழ்ந்தாலும் பேசும்; தாழ்ந்தாலும் பேசும் உலகமிது.” நாம் பேசுபொருளாக ஆக்கப்படுகையில் உள்ளதை எடுத்து,அல்லதைத் தள்ளுவதே விவேகம். இவ்வாறு வாழும் கலையை….முதலிடத்திற்கு அப்பாலும் தாழ்ச்சி,தாராள உள்ளம்,பெருந்தன்மை,மனநிறைவு,மகிழ்ச்சி போன்ற நாம் வாழ்ந்துகாட்ட வேண்டிய விஷயங்கள் இருக்கின்றன என்று எடுத்துவரும் திருமுழுக்கு யோவான் பற்றிய அழகானதொரு வாழ்த்துமடலுக்காகத் தந்தைக்கு நன்றிகள்!!!
Amen
ReplyDeleteAmen!
ReplyDelete