Monday, January 17, 2022

இன்னொரு சிறுவன்

இன்றைய (18 ஜனவரி 2022) முதல் வாசகம் (1 சாமு 16:1-13)

இன்னொரு சிறுவன்

'உன் பிள்ளைகள் இத்தனை பேர்தானா?' என்று சாமுவேல் கேட்க, 'இன்னொரு சிறுவன் இருக்கிறான். அவன் ஆடுகளை மேய்த்துக்கொண்டிருக்கிறான்' என்று பதிலளித்தார் ஈசாய்.

சவுலை ஆண்டவர் புறக்கணித்துவிடுகின்றார். இஸ்ரயேல் மக்களுக்கென இன்னொரு அரசரை அருள்பொழிவு செய்யுமாறு சாமுவேலை ஆண்டவர் அனுப்புகின்றார். இந்த இடத்தில், அன்று விளங்கிய அரசியல் காழ்ப்புணர்வைச் சற்றே புரிந்துகொள்தல் நலம். சவுல் பென்யமின் குலத்தைச் சார்ந்தவர். தாவீது யூதா குலத்தைச் சார்ந்தவர். இந்த இரு குலங்களுக்கும் இடையே பனிப்போர் இருந்துகொண்டே வந்தது. தன் எதிரியின் குலத்தை இழிவு செய்வதும், தன் குலத்தை மேன்மையாக எழுதுவதும் இயல்பு. சாமுவேல் யூதா குலத்தைச் சார்ந்தவர். ஆக, பென்யமின் குலத்திலிருந்து வந்த தலைமைத்துவம் தோல்வியாக முடிந்தது என்றும், யூதா குலத்திலிருந்து வரவருக்கின்ற தலைமைத்துவமே வெற்றியாக மலரும் என்று ஆசிரியர் சொல்ல விழைகின்றார். மேலும், விவிலிய நூல்கள் பெரும்பாலும் யூதா குலத்து ஆசிரியர்களால் எழுதப்பட்டவை. அவர்கள் தங்கள் குலத்தையும், தங்கள் குலத்தின் தலைவர்களையும் பற்றி பெருமையாகவே எழுதுகின்றனர்.

சவுல் மற்றும் தாவீது ஆகியோரின் அறிமுகங்களை நாம் சற்றே ஆய்ந்து பார்ப்போம்:

(அ) சவுல் கழுதையைத் தேடி வருகின்றார். தாவீது ஆடுகளை மேய்த்துக் கொண்டிருக்கின்றார். 'கழுதை' என்பது அன்றைய வாகனமாகக் கருதப்பட்டாலும், 'கழுதை மேய்த்தல்' அல்லது 'கழுதை தேடுதல்' என்பது இழிதொழிலாகக் கருதப்பட்டது. மாறாக, உணவு மற்றும் உடைக்குப் பயன்படும் ஆடு வளர்த்தல் மேன்மையான செயலாகக் கருதப்பட்டது. பென்யமினிலிருந்து வரும் தலைவர் கழுதை மேய்க்கின்றார். யூதாவிலிருந்து வரும் தலைவர் ஆடு மேய்க்கின்றார்.

(ஆ) சவுல் இளைஞராக இருந்தார். தாவீது சிறுவனாக இருந்தார். வயதில் குறைந்தவராக இருந்தாலும் ஆண்டவரால் தெரிந்துகொள்ளப்பட்டவர் தாவீது என்று தாவீதை மேன்மைப்படுத்துகின்றார் ஆசிரியர்.

(இ) சவுல் இளமையும் அழகும் கொண்டவராக இருக்கிறார். தாவீது சிவந்த மேனியும் ஒளிரும் கண்களும் உடையவராக இருந்தார். ஒருவரின் இளமையும் அழகும் மாறக் கூடியவை. ஆனால், மேனியின் நிறமும் கண்களின் ஒளியும் என்றும் நிலைத்திருப்பவை. ஆக, நிலையற்ற அழகைக் கொண்டவர் சவுல் என்றும், நிலையான அழகைக் கொண்டவர் தாவீது என்றும் பிரிவு பாராட்டுகின்றார் ஆசிரியர்.

சாதிய அல்லது இன அல்லது குழு சார்பு மற்றும் வெறுப்பு என்பது மனித குலம் தோன்றியதிலிருந்தே இருக்கின்றது. பென்யமின் மற்றும் யூதா குலத்திற்கு இடையேயான இந்த வெறுப்பு அரசியல் நமக்கு அதிர்ச்சி தருகின்றது. 'தாவீதின் மகன் இயேசு' என்று நாம் வழங்கும் சொல்லாடல் கூட கேள்விக்கு உட்படுத்தப்பட வேண்டுமோ என்று தோன்றுகின்றது! ஏனெனில், இதுவும் ஓர் அரசியல் சொல்லாடலே! 

பெர்ட்ரான்ட் ரஸ்ஸல் அழகாகச் சொல்வார்: 'இரு நாடுகளுக்கு இடையே நடக்கும் போராட்டம் தொடங்கி, கணவனுக்கும் மனைவிக்கும் இடையே நடக்கும் சண்டை வரை அனைத்திற்கும் அடிப்படையாக இருப்பது சமயமும் அரசியலுமே. சமயத்தையும் அரசியலையும் இணைத்தே சொல்பவை புனித நூல்களே.'

சாமுவேல் நூலின் அரசியலை ஒரு பக்கம் விடுத்து, தாவீது தெரிந்துகொள்ளப்படும் இந்தப் பகுதி நமக்குத் தரும் செய்தி என்ன?

கடவுள் எளியவரைத் தெரிந்துகொள்கின்றார். அவருடைய தெரிதல் வியக்கத்தக்க வகையில் அமைந்துள்ளது. 'எளியவரைத் தெரிந்துகொள்கின்றார்' என்று நாம் சொல்லும்போதும் கவனமாக இருக்க வேண்டும். ஏனெனில், அப்படி எனில், 'கடவுள் வலியவரைத் தெரிந்துகொள்வதில்லையா?' 'கடவுள் பாகுபாடு பார்ப்பவரா?' என்ற கேள்விகள் எழக் கூடும்.

சாமுவேல் தோற்றத்தையும் உயரத்தையும் பார்க்கின்றார். ஏனெனில், சவுலின் உயரமே முன்னொரு முறை சாமுவேலின் கண்களில் பட்டது. சாமுவேலின் பார்வையை மாற்றுகின்றார் கடவுள்.

தான் எதற்காக அழைக்கப்பட்டோம் என்று தாவீது எண்ணிப் பார்ப்பதற்குள், அவருடைய தலையின்மேல் எண்ணெய் ஊற்றப்படுகின்றது. 'இதற்கு நீ சம்மதிக்கிறாயா? இது உனக்கு விருப்பமா?' என்று வாழ்க்கை நம்மிடம் அனுமதியும் விருப்பமும் கேட்பதில்லை. 'நம் கன்னத்தில் அறைகிறது' அல்லது 'நம் தலையில் எண்ணெய் வார்க்கிறது.'

'ஆண்டவரின் ஆவி தாவீதின்மேல் நிறைவாக இருந்தது' எனப் பதிவு செய்கின்றார் ஆசிரியர்.

என்னதான் விவிலியத்தில் அரசியல் இருந்தாலும், அனைத்தையும் கடந்து நிற்பது என்னவோ ஆண்டவரின் ஆவியே.


1 comment:

  1. யூதா மற்றும் பென்யமின் குலத்தில் சமய -அரசியல் பின்னனியில் விஞ்சி நின்ற பனிப்போரை வெளிச்சமிட்டுக்காட்டும் ஒரு பதிவு. கடவுளின் பார்வையில் தீயதெனப்பட்டதைச் செய்த காரணத்திற்காக சவுல் புறக்கணிக்கப்பட்டு தாவீது அரசுக்கட்டிலில் ஏற்றப்படுகிறார்.சவுலின் கழுதையா இல்லை தாவீதின் ஆடு மேய்க்கும் தொழிலா? இளைஞன் சவுலா இல்லை சிறுவன் தாவீதா? சவுலின் இளமையா இல்லை தாவீதின் சிவந்த மேனியா? இங்கே வலிய யூதா குலத்திடம் எளிய பென்யமின் குலம் மண்டியிடுவது போல் தோன்றினாலும் அனைத்தையும் கடந்து நிற்கும் ஆண்டவரின் ஆவி தேர்ந்து கொண்டது என்னவோ எளியவன் தாவீதையே! இத்தனை வேறுபாடுகள் மோதிக்கொண்டாலும் அனைத்தையும் கடந்து நிற்பது ஆண்டவரின் ஆவியே!
    தான் எதற்காக அழைக்கப்பட்டோம் என்ற புரிதல் வருவதற்கு முன்னமேயே தாவீதின் தலையின் மேல் எண்ணெய் ஊற்றப்படுகிறது அவன் அனுமதி கேட்கப்படாமலேயே.
    ஏனெனில் ஆண்டவரின் ஆவி தாவீதின் மேல் நிறைவாக இருந்தது.
    எளிமைக்கும்,வலிமைக்கும் உள்ள வேறுபாடுகளைச் சுட்டிக்காட்டும் ஒரு பதிவு எனினும், தந்தையால் சொல்லப்பட்டிருக்கும் விதம் அழகு! நன்றிகள்!!!

    ReplyDelete