தானாக வளரும்
நம்ம வாழ்க்கைல சில நேரங்களில் நாம இப்படி இருக்கணும், அப்படி இருக்கணும் என நினைத்து பரபரப்பாகவே இருக்கிறோம். அடுத்த என்ன செய்றது? இதை எப்படி சமாளிக்கிறது? அவர்ட்ட எப்படி பேசுறது? என நினைத்து, அல்லது அதிகமாக நினைத்து நம் ஆற்றலை வீணாக்குகிறோம்.
இறையாட்சி பற்றி இயேசு கூறும் இரு உவமைகள் நமக்கு வாழ்க்கைப் பாடங்களைத் தருகின்றன: முதல் உவமையில், ஒருவர் விதை ஒன்றை தன் நிலத்தில் விதைக்கிறார். அது தானாக வளரத் தொடங்கி பெரிய மரமாகிறது. அவருடைய எந்த முயற்சியும் இல்லாமல் இயற்கை தன் போக்கில் அதை நடக்கிறது. இரண்டாவது உவமையில், கடுகு விதை ஒன்று விதைக்கப்படுகிறது. கண்டுகொள்ளப்படாமல் இருந்த ஒன்று உயர்ந்து நிற்கிறது.
ஒரு பக்கம், நம் உழைப்பு அவசியம். அதாவது, எதைச் செய்ய வேண்டுமோ அதைச் செய்வது. நிலத்தில் விதையை விதைப்பது.
இன்னொரு பக்கம், நம் துணையில்லாமலும் அது வளரும் என்று நம்புவது. பல நேரங்களில் நம்மில் இதுதான் குறைவுபடுகிறது. நிலத்தில் நட்டு வைத்த செடி ஒன்று தினமும் முளைக்கிறதா என்று தோண்டிப் பார்த்த கதைநபரைப் போல, நாம் ரொம்பவே கவலைப்பட்டுக் கலங்குகிறோம்.
தொடக்கத் திருஅவையில் இறையாட்சி பற்றிய கவலை சீடர்களுக்கு அப்படித்தான் இருந்திருக்கும். 'இது எப்படி வளரும்?' என்ற கேள்வி இருந்திருக்கும். ஆனால், அது தானாகவே வளர்கிறது. ஏனெனில், அதன் ஆற்றல் அப்படிப்பட்டது.
முதல் வாசகத்தில், தாவீது பத்சேபாவுடன் உறவு கொண்டதையும், தொடர்ந்து அவருடைய கணவர் உரியாவைக் கொன்றதையும் வாசிக்கின்றோம்.
மதிய நேரத்தில் தாவீது பேசாமல் தூங்கியிருந்தால் இப்படிப்பட்ட ஒரு நிகழ்வு நடந்திருக்காது. அனைத்தையும் தன் கைக்குள் எடுத்து தானே முடிவெடுத்து, அவசர அவசரமாகச் செயல்படுகின்றார். ஆனாலும், ஆண்டவர் தொடர்ந்து அவருடன் இருக்கின்றார்.
ஆக, வாழ்க்கையை அதன் போக்கில் வாழ, நாம் செய்ய வேண்டியதை மட்டும் முழுமையாகச் செய்ய இன்றைய நாள் நம்மை அழைக்கிறது.
இன்று அக்வினா நகர் புனித தோமாவை நினைவுகூர்ந்து கொண்டாடுகின்றோம். புனித அகுஸ்தினாரும் இவரும் திருஅவை இறையியலின் இரு பெரும் தூண்கள். அறிவுப் பெருங்களஞ்சியமாக இவர் வளர்ந்தார். ஆனால், இவரின் தொடக்கம் என்னவோ சிறிய கடுகுவிதைபோல்தான் இருந்தது.
ஆற்றங்கரை ஓரங்களில் வளரும் சிறிய நாணல் ஆனாலும்…..இந்து தேவாலயங்களின் அருகே ஓங்கி வளர்ந்துள்ள பெரிய ஆலமரங்களானாலும் சரி..யார் கண்டுகொண்டாலும்…இல்லையெனினும், அவற்றின் போக்கில் வளர்கின்றன. மனிதன் ஆரம்ப நிலையில் மேற்கொள்ளும் முயற்சிகள் அவற்றை அவற்றின் போக்கில் வளர்க்கின்றன. கிராமங்களில் ஒரு பழமொழி உண்டு…” மரம் வைத்தவன் தண்ணி ஊத்துவான்” என்று.இன்னும் விடியாத நாளையைப்பற்றிக் கவலைப்படுபவன் மனிதன் மட்டுமே! காலம் தன்னைக் கூட்டிச்செல்லும் வழியில் செல்லாதவர்கள் சிக்கலில் மாட்டிக்கொள்வர் தாவீது அரசன் போன்று.கடுகு விதைகளாகத் தொடக்கம் கண்ட புனித. தோமாவும்,புனித.அகுஸ்தினாரும் நமக்கு சிறியதில் பெருமை காண உதவி செய்வார்களாக! போகிற போக்கில் தெளித்த சிறிய…பெரிய விதைகளுக்காகத் தந்தைக்கு நன்றிகள்!!!
ReplyDelete