Wednesday, January 12, 2022

கடவுளின் பேழை

இன்றைய (13 ஜனவரி 2022) முதல் வாசகம் (1 சாமு 4:1-11)

கடவுளின் பேழை

வெளிப்புற அடையாளங்களும் பொருள்களும் நம்மைக் காப்பாற்ற இயலாது, மாறாக, நம் அக இயல்பே நம்மைக் காப்பாற்ற இயலும் எனக் கற்பிக்கிறது இன்றைய முதல் வாசகம்.

முதல் வாசகத்தின் சூழல், பெலிஸ்தியருக்கும் இஸ்ரயேலருக்கும் இடையேயான போர். போரில் இஸ்ரயேல் மக்கள் நான்காயிரம் பேர் இறக்கின்றனர். தங்கள் தோல்விக்கான காரணத்தை ஆய்ந்தறிகின்ற இஸ்ரயேலின் பெரியோர்கள் தங்களிடம் கடவுளின் உடன்படிக்கைப் பேழை இல்லாததால் தாங்கள் தோல்வி அடைந்ததாக எண்ணி, பேழையை சீலோவிடமிருந்து கொண்டு வருகின்றனர். பேழை நகருக்குள் வந்தவுடன் கடவுளின் மாட்சி தங்களிடம் வந்துவிட்டதை உணர்ந்து ஆர்ப்பரித்து அக்களிக்கின்றனர். இந்த ஆர்ப்பரிப்பு எதிரிகளுக்கு அச்சத்தை உண்டாக்குகிறது. மறுபடியும் நடக்கின்ற போரில், இஸ்ரயேல் மக்கள் முப்பதாயிரம் பேர் மடிகின்றனர். ஏறக்குறைய பத்து மடங்கு அதிக மக்கள் இறக்கின்றனர்.

கடவுளின் பேழை தங்களோடு இருந்தும் இஸ்ரயேல் மக்கள் தோல்வி அடைந்தது ஏன்?

மூன்று காரணங்களை இங்கே குறிப்பிடலாம்:

ஒன்று, வெறும் வெளிப்புற அடையாளங்கள் மேல் நம்பிக்கை. அதாவது, கடவுளின் உடன்படிக்கைக்கு பிரமாணிக்கமாக இருப்பதை விடுத்து, அந்த உடன்படிக்கைப் பேழை தங்களோடு இருந்தால் போதும் என்ற மனநிலையில் இஸ்ரயேல் மக்கள் இருந்தனர். எடுத்துக்காட்டாக, ஒருவருக்கு இரவு பற்றிய அச்சம் இருக்கிறது என வைத்துக்கொள்வோம். இந்த அச்சத்தைப் போக்க அவர் தன்னிடம் ஒரு புனிதப் பொருளை எப்போதும் வைத்துக்கொள்கின்றார். ஆனால், ஒருநாள் இரவில் வெளியே செல்லும்போது அச்சப்பட்டு நோய்வாய்ப்படுகின்றார். அவர் தன் மனத்திலிருந்த அச்சத்தை அகற்றுவதை விடுத்து, வெளிப்புறப் பொருள் தன்னைக் காப்பாற்றும் என நினைத்ததால் இப்போது நோய்வாய்ப்படுகின்றார்.

இரண்டு, தலைவர்களின் தகுதியின்மை. உடன்படிக்கைப் பேழையைத் தூக்கிக்கொண்டு வந்தவர்கள் ஏலியின் புதல்வர்கள் ஒப்னியும் பினகாசும் என பதிவு செய்கின்றார் ஆசிரியர். இதற்கு முந்தைய பகுதியில் இவ்விருவரும் கடவுளுக்கென படைக்கப்பட்ட பலிப்பொருள்களைத் தங்களுடையதாக்கிக் கொள்கின்றனர். மேலும், சந்திப்புக் கூடாரத்தில் பணிபுரிகின்ற பெண்களோடு தகாத உறவில் ஈடுபடுகின்றனர். இவ்வாறாக, நிர்வாகம் மற்றும் பாலியல் பிறழ்வுகளில் ஈடுபடுகின்றனர். இதைக் குறித்து அவர்களுடைய தந்தை ஏலி அவர்களை எச்சரிக்கின்றார்: 'நீங்கள் ஏன் இவ்வாறு செய்கிறீர்கள்? இவ்வனைத்து மக்களிடமிருந்தும் உங்கள் தீய நடவடிக்கைகள் பற்றிக் கேள்விப்படுகிறேனே. வேண்டாம் பிள்ளைகளே! ஆண்டவரின் மக்களிடையே பரவி இருப்பதாக நான் கேள்விப்படும் இச்செய்தி நல்லதல்ல. ஒருவர் மனிதருக்கு எதிராகப் பாவம் செய்தால் வெறெவராவது கடவுளிடம் அவருக்காகப் பரிந்து பேசலாம். ஆனால், ஒருவர் ஆண்டவருக்கு எதிராகப் பாவம் செய்தால் அவருக்காகப் பரிந்து பேசுவோர் யார்?' (1 சாமு 2:23-24). புதல்வர்கள் தங்கள் தந்தையின் எச்சரிக்கைக்குச் செவிசாய்த்து தங்கள் வாழ்க்கையை மாற்றிக்கொள்ளவில்லை. அதாவது, 'என்னை விட்டால் யாரும் இல்லை' என்ற மேட்டிமை உணர்வே அவர்களை இப்பிறழ்வுகளுக்கும் கடின உள்ளத்திற்கும் இட்டுச் சென்றது. தகுதியற்ற நிலையில் அவர்கள் இறைவனுக்குப் பணி செய்ததால் அனைவர்மேலும் அவர்கள் தண்டனையை வருவிக்கின்றனர்.

மூன்று, வழிகாட்டக் கூடிய தலைமையின்மை. போரில் இஸ்ரயேல் மக்களை வழிநடத்த அவர்களுக்கென்று தலைவர்கள் இல்லை. இதன் காரணமாகத்தான் அவர்கள் சாமுவேலிடம் தங்களுக்கென்ற ஓர் அரசனைக் கேட்கின்றனர். ஒரு தலைமை இல்லாதபோது அனைவரும் தங்களையே தலைவர்கள் ஆக்கிக்கொள்ள முயற்சி செய்வர். பல தலைமை ஒரே இடத்தில் இயங்குவது நிறுவனத்திற்குத் தோல்வியையே தருகின்றது.

இன்று நம் ஆன்மிக வாழ்விலும் சில 'ஆடோமேடிக் நம்பிக்கைகளை' நாம் கொண்டிருக்கலாம். திருப்பலி, நவநாள், செபமாலை, திருப்பயணம் போன்றவற்றில் நான் தவறாமல் இருக்கிறேன். ஆகையால் எனக்குத் தீங்கு எதுவும் நடக்காது என்று நினைக்கலாம். ஆனால், நம் உளப்பாங்கு புதுப்பிக்கப்பட்டு, நம் வாழ்வுப் பாதையில் மாற்றம் இல்லை என்றால், நாமும் வாழ்வில் மிகப்பெரிய அழிவைச் சந்திக்க நேரிடலாம்.

நற்செய்தி வாசகத்தில், இயேசுவிடம் வருகின்ற தொழுநோயாளர், தன் நோயை நீக்குமாறு இயேசுவிடம் வேண்டுகின்றார். இயேசுவும் அவருக்கு நலம் தருகின்றார்.

இறைவனிடம் சரணாகதி அடைதல் நம் வெளிப்புறச் சடங்குகளை விட மேன்மையானது.


3 comments:

  1. நம்முடைய செய்கைகள் நேர்மையானவையாக இருந்தும்…..எந்த தப்பான உள்நோக்கமும் கொண்ட செய்கைகளைத் தவிர்த்திடினும் பல நேரங்களில் நாம் தேவையற்ற…குழப்பம் தரும் விஷயங்களைச் சந்திக்கிறோம்.இதற்கான காரணம் தெரிந்து அவற்றைக் களைய அழைப்பு விடுக்கும் ஒரு பதிவு. மனத்தில் ஆண்டவனை நிறுத்தாமல் அவரை ஞாபகப்படுத்தும் பொருட்களே நம்மை நற்கதிக்கு இட்டுச்செல்லும் எனும் நம்பிக்கையைப் புறந்தள்ளி ,ஆன்மாவின் புனித்த்தை மட்டுமே பேணிக்காக்க அழைக்கப்படுகிறோம். ஆன்மாவின் புனிதம் காக்கப்பட வேண்டுமெனில் இறைவனின் காலடி பற்றும் நம் சரணாகதி முக்கியம் என்பதை நினைவூட்டும் ஒரு பதிவிற்காகத் தந்தைக்கு நன்றிகள்!!!

    ReplyDelete