Sunday, January 16, 2022

நீக்கிவிட்டார்!

இன்றைய (17 ஜனவரி 2022) முதல் வாசகம் (1 சாமு 15:16-23)

நீக்கிவிட்டார்!

சவுல் ஆண்டவராகிய கடவுளால் நிராகரிக்கப்படுவதை இன்றைய முதல் வாசகத்தில் வாசிக்கின்றோம். இஸ்ரயேலின் போர் விதிகளில் ஒன்று எதிரி நாட்டை அழிக்கும்போது முற்றிலும் - ஆண்கள், பெண்கள், ஆடுகள், மாடுகள், விளைச்சல் - அழிக்க வேண்டும். ஏனெனில், அப்படி அழிக்காமல் விடப்படுகின்ற ஒன்று, இஸ்ரயேல் மக்களை ஆண்டவராகிய கடவுளின் உடன்படிக்கைப் பிரமாணிக்கத்திலிருந்து மாற்றக் கூடும். 

அமலேக்கியருடன் நேர்ந்த சண்டையில் அரசர் மற்றும் ஆண்கள் கொல்லப்பட, சவுல் சில ஆடு, மாடுகளைக் கொல்லாமல் விடுகின்றார். நிகழ்வின்படி, தன் வீரர்கள் அப்படிச் செய்ததாக சாமுவேலிடம் சவுல் சொல்கின்றார்.

சவுலின் சறுக்கலுக்கான காரணங்கள் எவை?

(அ) கீழ்ப்படியாமை

'கீழ்ப்படிதல் பலியைவிடச் சிறந்தது' என சவுலுக்கு அறிவுறுத்துகின்றார் சாமுவேல். கீழ்ப்படியாமை என்பது செயல். அதைத் தூண்டுவது ஆணவம் என்னும் உணர்வு. சவுல் தன்னைக் கடவுளுக்கு இணையாக்கிக் கொண்டு தனக்கென வரையறைகள் வகுக்கக் தொடங்குகிறார். அதுவே கீழ்ப்படியாமை என்னும் செயலாக மாறுகிறது.

(ஆ) இலக்கு வழிகளை நியாயப்படுத்துமா?

அறநெறியில் உள்ள முக்கிய விதிகளில் ஒன்று: 'நல்ல இலக்குகள் கெட்ட வழிகளை நியாயப்படுத்துவதில்லை.' தேர்வில் முதல் மதிப்பெண் வாங்குவது நல்ல இலக்கு. ஆனால், நான் அடுத்தவரைப் பார்த்து எழுதி அதை வாங்கினாலும் பரவாயில்லை என நினைத்தல் தவறு. ஆடு, மாடுகளைப் பலியிடுவதற்காக விட்டு வைத்ததாகச் சொல்கின்றார் சவுல். பலி செலுத்துதல் என்னும் இலக்கு நல்லதுதான். ஆனால், நல்ல இலக்கு கெட்ட வழியை ஒருபோதும் நியாயப்படுத்துவது இல்லை (End never justifies the means).

(இ) பொறுப்புணர்வின்மை

தான் அரசராக இருந்தாலும், தன் வீரர்கள்மேல் பொறுப்பைச் சுமத்திவிட்டு தான் விலகிக் கொள்ள நினைக்கின்றார் சவுல். அரசராக இருந்து போரை வழிநடத்தியதால் வெற்றி, தோல்வி என அனைத்துக்கும் அவரே பொறுப்பானவர்.

கடவுள் நம்மை உயரே தூக்கி நிறுத்துகின்றார். அந்த உயரத்தில் நிற்கத் தொடர் முயற்சி அவசியம்.

1 comment:

  1. பல நேரங்களில் இப்படித்தான் ஒரு செயலைச் செய்யவேண்டுமென உள் மனம் சொல்லிடினும், கொஞ்சம் இப்படி,அப்படி செய்தால் பெருசா என்ன ஆகிவிடப்போகிறது? என்ற எண்ணத்தில் வரைமுறை தவறுகிறோம்….அமலேக்கியருடன் செய்த சண்டையில் தெரிந்தே சில விஷயங்களை விட்டுக்கொடுத்த சவுல் போல.அம்மாதிரியான தருணங்களில் “ கீழ்ப்படிதல் பலியை விடச் சிறந்தது” என்ற எண்ணமும்….., நமக்கு மகிழ்ச்சி தரும் முடிவுகளாயிருப்பினும் நேரான பாதைகள் மட்டுமே அதைத்தேடித்தரும் என்ற உறுதியும்….செய்ய வேண்டிய செயலைவிட்டு விலகிநிற்பதால் ஒரு செயலின் வெற்றி- தோல்வி நம்மைப்பாதிக்காது என்ற எண்ணத்திலிருந்து ஒதுங்கி நிற்பதுமே நம்மைப் பல தவறான விஷயங்களிலிருந்து காப்பாற்றும். கடவுள் நம்மைத் தூக்கி நிற்கும் உயரத்தை விட்டு விழாமலிருக்க நம் முயற்சி தொடர்வது அவசியம். வாழ்வின் சிறிய விஷயங்களில் பொறுமை காத்தலே , நம்மைப்பல பெரிய விஷயங்களுக்கு இட்டுச்செல்லும் மந்திரக்கோல் என்ற உண்மையைப் புரிய வைத்த தந்தைக்கு வாழ்த்துக்கள்!!!

    ReplyDelete