அன்புடையார்
சவுலும் யோனத்தானும் இறந்த செய்தி தாவீதுக்கு அறிவிக்கப்படுவதையும், தாவீது இச்செய்திக்கு ஆற்றும் பதிலிறுப்பும் இன்றைய முதல் வாசகத்தில் கொடுக்கப்பட்டுள்ளன.
'இறப்பு அனைத்தையும் சமமாக்குகிறது' என்று சொல்லப்படுவதுண்டு. நம் உள்ளத்து உணர்வுகளை அது சமமாக்கிவிடுகிறது. நாம் விரும்பாதவர்கள் அல்லது நம்மை விரும்பாதவர்கள் இறந்து போனால் அவர்கள்மேல் உள்ள கோபம், அல்லது அவர்கள் நம்மேல் கொண்டிருந்த கோபம் அனைத்தும் அவருடனே இறந்துவிடுகின்றன. நம்மை அறியாமல் ஒருவித சோகம் நம்மைப் பற்றிக்கொள்கின்றது. இறப்பு மானுட உள்ளத்தில் ஒரு பெரிய வெற்றிடத்தை ஏற்படுத்துகிறது. நம்மோடு இருந்த ஒருவர் இன்று நம்மோடு இல்லை என்ற எதார்த்தத்தை நம்மால் ஏற்றுக்கொள்ள முடியவில்லை.
சவுல் மற்றும் யோனத்தான் போர்க்களத்தில் இறந்துகிடக்கின்றனர். போரில் பல வீரர்கள் ஓடிவிட, சிலர் மட்டும் நின்று சண்டையிடுகின்றனர். அவர்களில் சவுலும் யோனத்தானும் அடங்குவர். அவர்கள் தங்களுக்காகப் போரிடவில்லை. மாறாக, தங்கள் மக்களுக்காகப் போரிடுகின்றனர். போரில் இறப்பது என்பது பெருமையாகக் கருதப்பட்டாலும், போர்க்களத்தில் கேட்க யாரும் இல்லாமல் இறந்து கிடப்பது ஒரு கொடுமையான எதார்த்தம். மேலும், எதிரிகளின் கைகளில் இறந்தவர்களின் உடல் கிடைத்துவிட்டால் அவர்கள் அதை இன்னும் இழிவுபடுத்துவர். இப்படிப்பட்ட ஓர் இறப்பை சவுலும் யோனத்தானும் எதிர்கொள்கின்றனர்.
இதையே, 'இஸ்ரயேலே! உனது மாட்சி உன் மலைகளிலே மாண்டு கிடக்கிறது!' என்று புலம்புகின்றார் தாவீது. மேலும், 'அன்புடையார், அருளுடையார், வாழ்விலும் சாவிலும் இணைபிரியார்!' என்று பாடுகின்றார். தந்தையும் மகனும் இணைந்தே நிற்கின்றனர்.
யோனத்தான் சவுலின் மூத்த மகன். யோனத்தானின் மகன் மெபிபொஷெத். தாவீதுடன் ஓர் உடன்படிக்கை செய்துகொண்டு தாவீதுடன் நட்பு பாராட்டுகின்றார் யோனத்தான். அன்றைய கால வழக்கப்படி, மூத்த மகன்தான் அரசனுக்குப் பின்னர் அரியணை ஏற முடியும். ஆனால், தாவீதுக்காக அந்த உரிமையை விட்டுக் கொடுக்கின்றார்.
'சகோதரன் யோனத்தான்! உனக்காக என் உளம் உடைந்து போனது! எனக்கு உவகை அளித்தவன் நீ! என்மீது நீ பொழிந்த பேரன்பை என்னென்பேன்! அது மகளிரின் காதலையும் மிஞ்சியது அன்றோ!' என யோனத்தானை நினைத்து அழுகின்றார் தாவீது. 'மகளிரின் காதல்' என்னும் சொல்லாடல் தாவீதுக்கும் யோனத்தானுக்கும் இடையே இருந்த நெருக்கமான உறவை எடுத்துச் சொல்கின்றது.
நற்செய்தி வாசகத்தில், இயேசு மதிமயங்கியிருப்பதாகக் கேள்விப்படுகின்ற அவருடைய உறவினர்கள் அவரைத் தேடி வருகின்றனர். இயேசு தான் வாழ்ந்த காலத்தில் இப்படிப்பட்ட எதிர்மறையான அடையாளங்களையும் சுமந்தார்.
அடையாளங்கள் அனைத்தும் மறைந்துவிடுகின்றன. ஒன்று, நம் இறப்பில். இரண்டு, நம் பரந்த மனப்பான்மையில்.
தாவீதின் நம்பிக்கைப் பார்வை பெரியது. அனைத்தையும், அனைவரையும் இறைத்திட்டத்தின் ஒரு பகுதியாகவே காண்கின்றார்.
சவுல் மற்றும் யோனத்தான் ஆகியோரால் தான் அரியணை ஏற முடிந்தது என்பதை இறுதிவரை உணர்ந்தவராக இருக்கின்றார் தாவீது. நாள்கள் நகர நகர அனைத்தையும் அப்படியே ஏற்றுக்கொள்பவராக மாறுகின்றார் தாவீது.
இதுவே ஞானம்.
முதல் தொடங்கி இறுதிவரை ஒரு சோக நாதம் இழையோடும் ஒரு பதிவு.’அன்புடையாருக்கு இறுதியில் கிடைப்பதெல்லாம் வெறும் சோகமே’ என்ற உணர்வையும் சேர்த்தே பார்க்க முடிகிறது.போரில் மக்களுக்காக சண்டையிட்டு யாருமற்ற அநாதைகளாக இறந்து கிடந்த தந்தையையும்,தனயனையும் சேர்த்தே பார்க்கும் தாவீது, உள்ளம் நொறுங்குண்டவராய் “ இஸ்ரயேலே! உன் மாட்சி மலைகளில் மாண்டு கிடக்கிறது” எனப் புலம்புகிறார்.தான் அரியணை ஏறக்காரணமான இருவரின் இறப்பையும் ஏற்றுக்கொள்ள காரணமாக நிற்கிறது அவர் உள்ளத்தில் நிரம்பி நின்ற ஞானமும்,அவரிடமிருந்த நம்பிக்கைப் பார்வையும்.இறப்பு ஒரு பெரிய வெற்றிடத்தை ஏற்படுகிறது என்பதும்,நம்மிடமுள்ள அடையாளங்களனைத்தும் நம் இறப்பிலும், நம் பரந்த மனப்பான்மையிலும் மறைந்துவிடுகின்றன என்பதுமே நிதர்சனம்.நம் இறப்பு என்று,எப்படி வரும் என்று அறிய முடியாத நம்மால் நம் பரந்த மனப்பான்மையால் பல தீய அடையாளங்களை நம்மிடமிருந்து விரட்டிவிட முடியும்.இறப்பு என்ற ஒன்று உடல் சார்ந்த வெற்றிடத்தை நம்மைச் சார்ந்தவருக்கு ஏற்படுத்தினாலும், நாம் வாழ்ந்த வாழ்க்கையின் விழுமியங்கள் அந்த வெற்றிடத்தை நிரப்புமளவிற்கு ஒரு வாழ்க்கை வாழப்பழகுவோம். சோகம் கூட சில நேரங்களில் நமக்கு சுகம் தரும் என்றதொரு பதிவிற்காகத் தந்தைக்கு நன்றிகள்!!!
ReplyDelete