Wednesday, January 26, 2022

உள்ளவருக்கு கொடுக்கப்படும்

இன்றைய (27 ஜனவரி 2022) நற்செய்தி (லூக் 4:21-25)

உள்ளவருக்கு கொடுக்கப்படும்

'உள்ளவருக்குக் கொடுக்கப்படும். இல்லாதவரிடமிருந்து உள்ளதும் எடுக்கப்படும்' என்னும் இயேசுவின் வார்த்தைகளை நற்செய்தி வாசகத்தில் வாசித்தவுடன், கடந்த இரு வாரங்களுக்கு முன்னர் ஆக்ஸ்ஃபாம் என்னும் நிறுவனம் வெளியிட்ட நிதிநிலை அறிக்கை நினைவுக்கு வருகிறது. கோவித்-19 பெருந்தொற்றுக் காலத்தில் பணக்காரர்களின் வருமானம் 106 மடங்கு கூடியிருக்கிறது என்றும், ஏழைகளின் வருமானம் 89 மடங்கு குறைந்துள்ளது என்றும் சொல்கிறது அறிக்கை. பெருந்தொற்று பணக்காரர்களைப் பெரும் பணக்காரர்களாக ஆக்கிவிட்டது. இல்லாதவர்களை ஒன்றும் இல்லாதவர்களாக ஆக்கிவிட்டது.

'(பணம்) உள்ளவருக்குக் கொடுக்கப்படும். (பணம்) இல்லாதவரிடமிருந்து உள்ளதும் எடுக்கப்படும்' என்று இயேசுவின் வார்த்தைகளைச் சற்றே நீட்டிப் பார்த்தால் இயேசுவின் சிந்தனை கார்ப்பரேட் சிந்தனை போலத் தெரிகிறது.

இன்றைய நற்செய்தி இரு பிரிவுகளாக அமைந்துள்ளது: முதல் பிரிவில், 'விளக்கைக் கொண்டு வருவது எதற்காக?' என்னும் கேள்வியை எழுப்புகின்ற இயேசு, அதற்கான விடையையும் அவரே அளிக்கின்றார். இரண்டாம் பிரிவில், நாம் அளக்கின்ற அளவை பற்றிப் பேசுகின்றார். இவ்விரு பிரிவுகளும் ஒன்று மற்றொன்றிலிருந்து வேறுபட்டு இருந்தாலும், இரண்டுக்கும் ஏதோ ஓர் இணக்கம் இருக்கவே செய்கின்றது. அதாவது, ஒன்று எந்த நோக்கத்திற்காக உருவாக்கப்பட்டதோ, அந்த நோக்கத்தை அது நிறைவேற்றினால் அதனால் பயன் பெறுகிறவர்கள் அதிகமாக இருப்பார்கள். விளக்குத் தண்டின் மேல் வைக்கப்படுகின்ற விளக்கு நிறைய வெளிச்சத்தை அளக்கும். கட்டிலின் கீழ் உள்ள விளக்கு குறைவான வெளிச்சத்தை அளக்கும். நிறைய வெளிச்சத்தை அளந்தால் அதனால் பயன் பெறுகிறவர்கள் அதிகம் பேர். குறைவான வெளிச்சத்தை அளந்தால் அதனால் பயன் பெறுகிறவர்கள் குறைவான பேர்.

விளக்கு என்பது சீடத்துவத்தை அல்லது சீடர்களின் சாட்சிய வாழ்வை இங்கே குறிக்கிறது. இயேசுவின் சீடராக இருப்பவர் தன் இயல்பை முழுமையமாக வெளிப்படுத்த வேண்டும். தான் எந்த நோக்கத்திற்காகச் சீடராக மாறினாரோ அந்த நோக்கத்தை நிறைவேற்ற வேண்டும். தன் குழுமத்திற்குப் பயனுள்ளவராக மாற வேண்டும். அப்போதுதான் அவர் சரியான அளவையால் அளக்கிறார். அப்போதுதான் அவரிடம் உள்ளது வளரும். கட்டிலுக்குக் கீழ் வைக்கப்படும் விளக்கு தன் முழு பயனைத் தருவதில்லை. இன்னொரு பக்கம் கட்டிலுக்கே அது ஆபத்தைக் கொண்டுவந்துவிடும்.

இன்றைய முதல் வாசகத்தில், தன் கைகளையும் மடியையும் இறைவன் அளவுகடந்த விதத்தில் நிறைத்ததற்காகக் கடவுளுக்கு நன்றி கூறுகின்றார் தாவீது. தன் எளிய நிலையை உணர்கின்ற தாவீது, ஆண்டவரின் பேரன்பின் முன் திக்குமுக்காடியவராய், 'இது மனித வழக்கம் அல்லவே!' என்று கடவுளிடம் சரணாகதி அடைகின்றார். 

இன்று என் விளக்கை நான் எங்கே ஏற்றி வைத்துள்ளேன்?

என் அளவை பெரியதாக இருக்கிறதா?



2 comments:

  1. நாம் அடிக்கடி யோசித்துத் தெளிய கொடுக்கப்பட்ட சிந்தனைதான். தண்டின் மேல் வைக்கப்பட்ட விளக்கு நிறைய பேருக்கு வெளிச்சத்தை அள்ளி வீசுவதும்…கட்டிலுக்குக் கீழ் வைக்கப்படும் விளக்கு முழுபலனைத்தருவதில்லை என்பதோடு அது கட்டிலுக்கே ஆபத்தைக் கொண்டுவரும் என்பதும் நாமறிந்ததே.இங்கே விளக்கு, வெளிச்சம் ..இவை சீடத்துவதம் எந்த அளவிற்கு முழுமையாகத் தன்னைக் கையளிக்க வேண்டுமெனும் புரிதலைத்தருகிறது.
    நமக்குக் கிடைத்த விஷயங்களுக்காக இறைவனிடம் சரணாகதி அடைவதும் அதற்காக அவருக்கு நன்றி சொல்வதும்,அதை இல்லாதோரிடம் பகிர்ந்து கொள்வதும் கூட, நம் கூடவே கைகோர்த்து நடக்க வேண்டிய ஒரு விஷயம்..
    என் விளக்கின் வெளிச்சம் எத்தனை பேரை வழி நடத்துகிறது?
    இறைவன் எனக்கென அள்ளிக்கொடுத்ததை நான் கிள்ளியாவது கொடுக்கிறேனா?
    இல்லையேல் இந்த அறச்செயல்களை நமதாக்கத்தொடங்குவோம். பிள்ளையார் சுழி போட்ட தந்தைக்கு நன்றிகள்!!!

    ReplyDelete
  2. '(பணம்) உள்ளவருக்குக் கொடுக்கப்படும். (பணம்) இல்லாதவரிடமிருந்து உள்ளதும் எடுக்கப்படும்' என்று இயேசுவின் வார்த்தைகளைச் சற்றே நீட்டிப் பார்த்தால் இயேசுவின் சிந்தனை கார்ப்பரேட் சிந்தனை போலத் தெரிகிறது.

    // To me, it actually means zeal, whoever has zeal, would be blessed with blessings and whoever doesnt have, whatever he has would be taken away. The guy that multiplied 5 to 10 talents had the zeal to multiply it, whereas the one that buried it, didnt have.. Christ is communist, not a corporate.

    ReplyDelete