Monday, January 24, 2022

சவுல் பவுலாக

இன்றைய (25 ஜனவரி 2022) திருநாள்

சவுல் பவுலாக

இன்று புனித பவுலின் மனமாற்றத் திருநாளைக் கொண்டாடி மகிழ்கின்றோம்.

பவுலின் அழைத்தல் நிகழ்வு மூன்று விதங்களில் கொடுக்கப்பட்டுள்ளது: (அ) கலாத்திய நகரத் திருஅவைக்கு எழுதுகின்ற பவுல், தாயின் கருவில் இருக்கும்போதே கடவுள் தன்னை அழைத்ததாகப் பவுல் கூறுகின்றார் (காண். கலா 1:15). (ஆ) தமஸ்கு நகருக்குச் செல்லும் வழியில் கடவுள் பவுலைத் தடுத்தாட்கொண்டதாகப் பதிவு செய்கின்றார் லூக்கா (காண். திப 9, 22, 26). (இ) பர்னபா வழியாக பவுல் கிறிஸ்தவத்தைத் தழுவுகின்றார். திருத்தூதர்களுக்குப் பவுலை அறிமுகப்படுத்துகின்ற பர்னபா அவருடைய பாதை மாற்றத்திற்கு உதவி செய்கின்றார்.

பவுலின் அழைத்தல் அல்லது மனமாற்றம் பற்றிய பதிவுகள் தங்களிலே முரண்பட்டாலும் ஒன்றை மட்டும் நமக்கு உறுதியாகச் சொல்கின்றன: பவுல் முழுமையான மாற்றம் பெறுகின்றார். பவுலின் பாதை மாறுகின்றது. பவுலின் இலக்கு மாறுகின்றது.

பவுலின் மனமாற்ற நிகழ்வை வாசிக்கும்போதெல்லாம் எனக்குள் ஒரு கேள்வி வரும்: தன்னை அனுப்பிய தலைமைச்சங்கத்திற்குப் பவுல் என்ன மறுமொழி கூறியிருப்பார்? அவரின் வாழ்க்கையே மறுமொழியாக இருந்திருக்கும்.

தமஸ்கு நிகழ்வில் பவுல் எழுப்பும் இரு கேள்விகள் நமக்குச் சவால்களாக அமைகின்றன:

(அ) 'ஆண்டவரே, நீர் யார்?'

'ஆண்டவரே' என்பதற்கு 'கிரியே' என்னும் கிரேக்கச் சொல் பயன்படுத்தப்பட்டுள்ளது. 'கிரியே' என்பதை 'ஐயா' அல்லது 'ஆண்டவர்' என்று மொழிபெயர்க்கலாம். 'சவுலே, சவுலே, ஏன் என்னைத் துன்புறுத்துகிறாய்?' என்னும் கேள்வி பவுலுக்கு ஆச்சர்யம் தந்திருக்கலாம். தன் பெயரை அறிந்த இவர் யார்? என்னும் கேள்வியே, 'நீர் யார்?' என்று கேட்கத் தூண்டுகிறது. 'நீ துன்புறுத்தும் இயேசு நானே' என்று தன்னை வெளிப்படுத்துகின்றார் ஆண்டவர். நாம் ஆண்டவரைப் பற்றி நிறையக் கேள்விப்பட்டுள்ளோம். நம் பெற்றோர், ஞானப் பெற்றோர், மறையுரைகள், மறைக்கல்வி வகுப்புகள் போன்றவை, 'ஆண்டவர் யார்?' என்பதை நமக்குக் கற்றுக் கொடுத்துள்ளன. ஆனால், இதைக் கடந்து, 'ஆண்டவரே, நீர் யார்?' என்று நாம் அவரைப் பார்த்து எழுப்பும் கேள்விதான் நம் மனமாற்றம் அல்லது வாழ்வு மாற்றத்தின் முதற்படியாக இருக்க முடியும். விவிலியம் வாசிக்கும்போது, இறைவேண்டல் செய்யும்போது, நம் தனிமையில், மௌனத்தில், 'ஆண்டவரே, நீர் யார்?' என்று நாம் கேட்கும் ஒற்றைக் கேள்வி, நம் குதிரைகளிலிருந்து நம்மைத் தள்ளிவிடும்.

(ஆ) 'ஆண்டவரே, நான் என்ன செய்ய வேண்டும்?'

இந்தக் கேள்வி திப 22இல் மட்டுமே உள்ளது. 'ஆண்டவரே, நீர் யார்?' என்று நாம் அவரைக் கேட்ட அந்த நொடியே, 'நான் யார்?' என்பதை அவர் நமக்குக் காட்டுகின்றார். பவுலுடைய தயார்நிலை நம்மை இங்கே வியக்கவைக்கிறது. அவர் பெற்ற அனுபவம் எந்த அளவுக்கு தாக்கத்தை ஏற்படுத்தியது என்றால், அவர் உடனடியாக, 'நான் என்ன செய்ய வேண்டும்?' என்று சரணடைகின்றார். பவுல் என்ன செய்ய வேண்டும் என்பது அனனியா வழியாக அவருக்குச் சொல்லப்படுகின்றது: 'பிற இனத்தவருக்கும் அரசருக்கும் இஸ்ரயேல் மக்களுக்கும் முன்பாக எனது பெயரை எடுத்துச் லெ;ல நான் தேர்ந்தெடுத்துக் கொண்ட கருவியாய் இருக்கிறார்' (திப 9:15). தன் திட்டத்தை ஒதுக்கி வைத்து விட்டு இறைத்திட்டத்தைத் தழுவிக்கொள்கின்றார் பவுல். தன் பயணத்தின் இலக்கை மாற்றுகின்றார்.

இன்று நாம் எந்த வாழ்வியல் நிலையில் இருந்தாலும், மேற்காணும் இரு கேள்விகளை நாம் கேட்கும்போது நம் வாழ்க்கைப் பாதை மாறவே செய்கின்றது.

கடவுளுக்கு எதிராக வாள் எடுத்தவர் கடவுளின் வாளாக மாறுகின்றார்.

1 comment:

  1. பவுலாக மாறும் சவுல்…. இவரது மனமாற்றத்திற்கு யார் வேண்டுமானாலும்,எது வேண்டுமானாலும் காரணமாயிருந்திருக்கலாம். ஆனால் அவர் தன்னை முழுவதுமாக இறைவனிடம் ஒப்படைத்தார்….சரணாகதியடைந்தார் என்பதே நமக்குத் தெரிய வேண்டிய….நாம் தேட வேண்டிய உண்மை.”சவுலே,சவுலே ஏன் என்னைத் துன்புறுத்துகிறாய்?” எனும் ஆண்டவரின் கேள்விக்கு “ நீர் யார்?” என்ற கேள்வியையே பதிலாக வைக்கிறார் சவுல்.எத்தனையோ பேரின் வழியாக…எத்தனையோ வழிகளில் “ஆண்டவர் யார்?” எனும் கேள்விக்கு நமக்கு பதில் கிடைத்திருப்பினும், என் உள்ளத்தின் தனிமையில் ஆண்டவரே நீர் யார்? என என் மனத்திலிருந்து எட்டிப்பார்க்கும் கேள்விமட்டுமே என்னில் தலைகீழ் மாற்றத்தைக் கொண்டுவரும்.
    என்ன செய்ய வேண்டுமெனும் சவுலின் கேள்விக்கு அனனியா வழியாக அவருக்குக் கிடைத்த பதில்…”அனைத்து ஜனங்களுக்கும் என்னை எடுத்துச் செல்லும் கருவியாகப் போகிறாய்”…. அவர் சிறிதும் எதிர்பாராத வேலை…எதிர்பாரா நேரம்…எதிர் பாராத ஒருவரிடமிருந்து வருகிறது. சவுல் திகைக்கவோ, தடுமாறவோ இல்லை. இறைத்திட்டத்திற்கு செவிமடுத்தவராய் தன் பயணத்தின் இலக்கை மாற்றுகிறார்.
    இறைவனிடமிருந்து இப்படிப்பட்ட தொரு அழைப்பு யாரோ சிலருக்கு மட்டுமே கிடைக்கிறது. யார் கண்டது? எனக்கும் கூட வந்திருக்கலாம்.நான் செவிமடுக்காமல் போயிருக்கலாம். இன்னும் காலமிருக்கிறது என ஒத்திப்போடாமல் இன்றே நம் செவிகளை அவரிடம் திருப்புவோம்…அவர் சொல்வது என்னவென்று அறிய. என்னையும் கூட அவர் கேட்கலாம்…என்னை ஏன் துன்புறுத்துகிறாய்? என்று. வாள் எடுத்தவர் வாளாக மாறியது போல் நானும் அவர் கரங்களாய்….இதழ்களாய்….கால்களாய் மாறும் வரம் கேட்கலாம்.’பவுலாய் மாறிய சவுல்’ என்னையும் இறைவனின் கருவியாய் மாறும் வரம் தருவாராக! எனக்கு மிகவும் பிடித்த பவுலாய் மாறிய சவுல் குறித்த பதிவு. அது சொல்லப்பட்டிருக்கும் விதம் குறித்து தந்தைக்கு வாழ்த்துக்களும்! நன்றியும்!!!

    ReplyDelete