தீய ஆவி
இயேசு தொழுகைக்கூடத்திலிருந்த தீய ஆவியை விரட்டும் நிகழ்வை வாசிக்கும்போதெல்லாம், நற்செய்தியாளர்களின் நகைச்சுவை உணர்வுதான் என் நினைவுக்கு வரும். நற்செய்தியாளர்கள் தங்கள் நூல்களை எழுதிய காலத்தில் புதிய நம்பிக்கையைத் தழுவியவர்கள், அதாவது இயேசுவை கிறிஸ்து என ஏற்றுக்கொண்டவர்கள் யூதர்களின் தொழுகைக்கூடத்திலிருந்து வெளியேற்றப்பட்டனர். இந்தப் பின்புலத்தில் தொழுகைக்கூடத்தைக் கேலி செய்யும் நோக்குடன் நற்செய்தியாளர் தம் பதிவை எழுதியிருக்கலாம். அதாவது, தீய ஆவி பிடித்தவர்கள்தாம் தொழுகைக்கூடத்திற்கு வருவார்கள் என்றும், தொழுகைக்கூடத்தில் இருப்பது தீய ஆவிதான் என்றும் முரணைப் பதிவு செய்ய விரும்பியிருப்பார் ஆசிரியர். மேலும், தொழுகைக்கூடத்தில் உள்ள தீய ஆவியை ஓட்டுகின்ற அதிகாரம் யூத சமயத்திற்கு அல்ல, மாறாக, தங்கள் இயேசு கிறிஸ்துவுக்கே உள்ளது என்று குறிப்பிடுவதற்காக எழுதியிருப்பார்.
நிகழ்வின்படி, தொழுகைக்கூடத்தில் தீய ஆவி பிடித்த நபர் ஒருவர் இருக்கின்றார். இயேசு வருவதைக் கண்ட அவர், 'உமக்கு இங்கு என்ன வேலை?' என்று கூச்சலிடுகின்றார். இயேசு கேட்க வேண்டிய கேள்வியை அந்த நபர் கேட்கின்றார். அந்த நபரின் கூச்சலை வேறு யாரும் அதட்டுவதாக இல்லை. அவர்கள் எல்லாரும் சேர்ந்து இயேசுவிடம், 'உமக்கு இங்கு என்ன வேலை?' என்று கேட்பது போல உள்ளது அவர்களது அமைதி.
ஆனால், இயேசு தீய ஆவியை விரட்டுகின்றார். மக்கள் அனைவரும் வியப்புறுகின்றனர்.
முதல் வாசகத்தில், அன்னா கடவுளின் முன்னிலையில் அழுது செபிப்பதைத் தவறாகப் புரிந்துகொள்கின்ற குரு ஏலி, 'குடிகாரி' என அவரைக் கடிந்துகொள்கின்றார்.
'தீய ஆவி பிடித்தவர்,' 'குடிகாரி' போன்றவை அடையாளக் குறிகள். மற்றவர்களை நாம் புரிந்துகொள்ள முயற்சி செய்வதற்கு முன்னர் இப்படியான ஒரு லேபிள் அல்லது அடையாளக் குறியை மற்றவர்கள்மேல் பதித்துவிடுகின்றோம். இப்படி நாம் அடையாளம் இட்டுவிட்டால் அவர்களைப் பற்றி மேலும் தெரிந்துகொள்ள முயற்சி செய்யத் தேவையில்லை.
இயேசு இவ்வகையான அடையாளங்களைக் களைகின்றார்.
இந்த நிகழ்வு நமக்குத் தரும் பாடங்கள் எவை?
(அ) 'இங்கு என்ன வேலை?'
நம்மில் ஏதோ ஒரு பகுதியில் தீய ஆவி குடியிருக்க வாய்ப்பு இருக்கிறது. அதை நாம் அதட்டி வெளியேற்றும்போது, 'உனக்கு என்ன வேலை?' என்று நம்மை அது அதட்டவும் வாய்ப்பிருக்கிறது. நம்மில் குடிகொள்ளும் தீமையை அடையாளம் காணுதல் நலம்.
(ஆ) அடையாளங்கள் மறுத்தல்
நம்மேல் மற்றவர்கள் இடும் அடையாளங்கள் நம்மைக் கட்டி வைப்பது போல, நமக்கு நாமே இடும் அடையாளங்களும் நம்மைக் கட்டிவைக்கின்றன. நம் வளர்ச்சியைத் தடுக்கின்றன. நமக்கு நாமே இட்டுகொள்ளும் எதிர்மறையான லேபிள்களை நாம் களைய முயற்சி செய்தல் வேண்டும்.
(இ) கடவுள் ஆற்றும் செயல்பாடு
அன்னாவை ஏலி கடிந்து கொண்டாலும், 'இஸ்ரயேலின் ஆண்டவர் உன் விண்ணப்பத்திற்குச் செவிசாய்க்கின்றார்' என அவருக்கு ஆறுதல் சொல்கின்றார். இயேசுவை தீய ஆவி பிடித்த நபர் கடிந்துகொண்டாலும், அவர் அவரைக் குணமாக்குகின்றார். இறைவன் குறுக்கிடும்போது நம் வாழ்வில் மாற்றம் நிகழ்ந்தே தீருகிறது. இறைவனின் குறுக்கீட்டை நாம் கண்டுகொள்ளத் தடையாக இருக்கின்ற காரணிகள் எவை?
நம்மிலிருந்து வேறுபட்டு நிற்பவர்களைப்… பல நேரங்களில்… அவர்களின் பெயரை மறந்து அவர்களின் உருவத்தையும்,குணாதிசயங்களையும் வைத்து அவர்களைப் பெயரிட்டு அழைப்பதைக் கேட்டிருப்போம்.ஏன்…நாமே கூட அதைச் செய்திருப்போம். அம்மாதிரியான நபர்களுக்கு ஒரு சவுக்கடிதான் இன்றையப்பதிவு.இயேசுவையே ‘ தீய ஆவி பிடித்தவன்’ என்றவர்கள்; …..துயரத்தில் உறைந்து போன அன்னாவைக் ‘குடிகாரி’ என்றவர்கள்… இதில் நம்முடைய பங்கு என்ன? யோசிக்க வேண்டிய விஷயம்.மற்றவரை கைகாட்டுமுன் நம்மிடமுள்ள கரும் பகுதிகளை இனம் காணவும், நம்மைப்பற்றி நாமே எதிர்மறை உணர்வுகளை எழுப்பி அதில் நம் அடையாளமே தொலைந்து போகுமளவிற்கு மூழ்கிப்போவதைத் தடுத்து நிறுத்தவும், நம்மைக் கடிந்து கொள்பவர்கள் மூலமாகக் கூட இறைவன் நம்மில் செயலாற்றுகிறார் என்பதை நம்பி செயல்படவும் நமக்கு அழைப்பு விடுக்கும் ஒரு பதிவிற்காகத் தந்தைக்கு நன்றிகள்!!!
ReplyDelete