Wednesday, January 19, 2022

பொறாமை

இன்றைய (20 ஜனவரி 2022) முதல் வாசகம் (1 சாமு 18:6-9, 19:1-7)

பொறாமை

சவுலின் போதாத நேரம் அனைத்தும் அவருக்கு எதிராகவே நடக்கின்றது. சவுலின் அனுமதியுடன்தான் தாவீது போர்க்களத்தில் கோலியாத்தை எதிர்கொள்கின்றார், வெற்றி பெறுகின்றார். ஆக, சவுலின் சார்பாகவே தாவீது போரிடுகின்றார். தாவீதின் வெற்றி சவுலின் வெற்றியே. தாவீதின் வெற்றியும் தன் வெற்றியே என்று கொண்டாடுவதற்குப் பதிலாக, அவர்மேல் பொறாமை கொண்டு அவரை அழிக்கத் தேடுகின்றார் சவுல்.

சவுலைச் சந்திக்க வந்த பெண்கள் பாடிக்கொண்டே வருகின்றனர். பாடகருக்கே உரிய பாணியில், மிகைப்படுத்திப் பாடுகின்றனர்: 'சவுல் ஆயிரம் பேரைக் கொன்றார், தாவீது பதினாயிரம் பேரைக் கொன்றார்.' 'ஆமாம் அப்படித்தான்!' என்று சவுல் சொல்லிவிட்டு நகர்ந்திருந்தால் ஒரு பிரச்சினையும் இல்லை. மாறாக, அவர் அந்த வார்த்தைகளைத் தன் மூளைக்குள் எடுத்துக்கொண்டு அதீதமாகச் சிந்திக்கின்றார். 

விளைவு, பொறாமை.

பொறாமை ஒரு தீ. பொறாமையின் ஊற்று கோபமே. பொறாமையினால் சந்தேகம் வலுக்கிறது.

திருவள்ளுவர் தன் திருக்குறளில், 'அழுக்காறாமை' (161-170 குறள்கள்) என்னும் பகுதியில் பொறாமையின் தீய இயல்புகளை மிக  அழகாக எடுத்துரைக்கின்றார்.

'ஒழுக்காறாக் கொள்க ஒருவன்தன் நெஞ்சத்து

அழுக்காறு இலாத இயல்பு' (குறள் 161)

'ஒருவன் தன் நெஞ்சில் பொறாமை இல்லாமல் வாழும் இயல்பைத் தனக்கு உரிய ஒழுக்க நெறியாகக் கொண்டு போற்ற வேண்டும்' என எழுதுகின்றார். 

பொறாமை கொள்வதால் சவுல் அடையும் துன்பங்கள் எவை?

(அ) குறுகிய பார்வை

பொறாமை அடுத்தவரைப் பற்றிய ஓர் அச்சத்தை நமக்குள் உருவாக்குகிறது. எதார்த்தத்தைவிட மிகப் பெரிய தோற்றத்தை ஏற்படுத்துவதால் அச்சம் வருகிறது. ஆனால், உண்மையில் நம் பார்வை குறுகுகின்றது. சவுல் தாவீதை மிகவும் மிகைப்படுத்திப் பார்க்கின்றார். இப்போதே தன் அரியணை பறிபோய்விட்டதாக உணர்கின்றார். ஆனால், உண்மையில் தாவீது ஓர் இளவல். அவ்வளவுதான். சவுலுக்குக் கட்டுப்பட்டவர்தான். பொறாமையால் சவுலின் பார்வை சுருங்குகிறது.

(ஆ) அழிக்க நினைக்கும் எண்ணம்

பொறாமை அடுத்தவரின் இருப்பை அழிக்குமாறு நம்மைத் தூண்டுகிறது. அடுத்தவரை அழிக்க இயலாத நிலையில், அவருடைய நற்பெயரையாவது அழித்துவிட முயற்சி செய்கிறது. அடுத்தவரின் இருத்தல் இருக்கும் வரை பொறாமை இருக்கும். சவுல் தாவீதைக் கொல்ல நினைக்கிறார். பொறாமை கொண்ட உள்ளம் குறுகிவிடுவதால், இதைத்தவிர வேறொன்றும் அதனால் சிந்திக்க இயலாது.

(இ) சிறுவனும் புத்தி சொல்லும் நிலை வரும்

தன் தந்தை சவுல் தாவீதின்மேல் பொறாமை கொண்டிருப்பதைக் காண்கின்ற யோனத்தான் அவருக்கு நல்ல புத்தி சொல்கின்றார். தந்தை மகனுக்கு அறிவுறுத்தும் நிலை மாறி, மகன் தந்தைக்கு அறிவுறுத்தும் நிலை ஏற்படக் காரணம் சவுலின் பொறாமையே. 

பொறாமையை எப்படிக் களைவது?

பெருந்தன்மையை வளர்த்துக்கொள்வதன் வழியாகவும், இருத்தலை ஏற்றுக்கொள்வதன் வழியாகவும், மற்றவர்களைக் கொண்டாடுவதன் வழியாகவும் வெற்றி கொள்ள முடியும். பொறாமை யார்மேல் வருகிறதோ அவரை வெற்றிகொண்டு என் நண்பராக்கிவிட்டால் அவருடைய வெற்றியும் என் வெற்றியாக மாறிவிடும்.

இன்னொரு பக்கம் பொறாமை என்பது நம் மனத்தின் எண்ணமே தவிர, வெளியில் அது உண்மையாக இல்லை. நம் மனத்தில்தான் நாம் எண்ணங்களை உருவாக்கிக்கொண்டு பொறாமை கொள்கின்றோம்.


1 comment:

  1. “ பொறாமை” இது ஒரு தீ.தன்னை மட்டுமல்ல….தான் சார்ந்தவர்களையும் எரித்துவிடும்.சவுலுக்காகவே தாவீது கோலியாத்தைக் கொன்றிடினும்,தாவீதின் வெற்றியைத் தன் வெற்றியாகப் பார்க்க முடியவில்லை சவுலால். பொறாமைத் தீயில் வெந்து மாய்கிறார் சவுல்.இதில் நாம் பெருமைப்பட வேண்டியது சவுலின் மகன் யோனத்தனின் பெருந்தன்மைக்காக மட்டுமே! அடுத்தவரை எரிக்க நினைக்கும் பொறாமைத் தீயால், நம் உள்ளத்தில் உருவாகும் தீய எண்ணங்களை சுட்டெரித்தால் நம் பொறாமைக்குக் காரணமானவர்களின் வெற்றி நம் வெற்றியாகி,நம் மனத்தில் நல்லெண்ணங்கள் உருவாகும்.
    அடுத்தவரின் வெற்றி குறித்த எதிர்மறை எண்ணம் தோன்றும் அந்த விநாடியே அவர் செய்த நல்விஷயங்களை நேர்மறை எண்ணங்களாக மாற்றினால் நம்மில் போறாமை எண்ணும் தீ தோன்றும் முன்னே அதை எரித்தவராவோம்….ஜெயித்தவராவோம். நாளும் வாழ்க்கையில் எதிர்கொள்ள வேண்டிய விஷயங்களை “ எப்படி?” என்ற வினாவிற்கு பதிலாக்கித்தரும் தந்தைக்கு நன்றிகள்!!!

    ReplyDelete