Thursday, January 20, 2022

என்னிலும் நீதிமான்

இன்றைய (21 ஜனவரி 2022) முதல் வாசகம் (1 சாமு 24:2-20)

என்னிலும் நீதிமான்

'நீ என்னிலும் நீதிமான். நீ எனக்கு நன்மை செய்தாய். ஆனால், நானோ உனக்குத் தீங்கு செய்தேன். ஆண்டவர் என்னை உம்மிடம் ஒப்புவித்திருந்தும் நீ என்னைக் கொல்லவில்லை.'

- இப்படியாக, சவுல் தாவீதை வாழ்த்துகிறார்.

சவுல் தாவீPதைக் கொல்வதற்காக அவரைத் தேடி வருகின்றார். ஆனால், சவுல் தாவீதின் கையருகில் இருந்தும் சவுலைக் கொல்லாது விடுகின்றார் தாவீது. இந்த நிகழ்வில் சில சொல்லாடல்களும் செயல்களும் நம் கவனத்தை ஈர்க்கின்றன.

(அ) நமக்கருகிருப்பவர்களின் தவறான வழிநடத்துதல்

தாவீதின் ஆள்கள் அவரிடம் 'வெரி குட்' வாங்குவதற்காக, சவுலையும் அவருடைய வலுவற்ற நிலையையும் கண்டவுடன், 'இதோ! உன் எதிரியை உன்னிடம் ஒப்புவிப்பேன். உன் விருப்பத்திற்கேற்ப அவனுக்குச் செய் என்று ஆண்டவர் சொன்ன நாள் இதுவே!' என்று தாவீதிடம் சொல்கின்றனர். ஆண்டவர் தாவீதுக்கு அப்படி ஒன்றும் சொல்லவில்லை. தாவீது இவ்வார்த்தைகளைப் பொருட்படுத்தவில்லை. தன் பெருந்தன்மை மற்றவர்களின் சிறிய புத்தியால் தவறிவிடக்கூடாது என்பதில் மிகக் கருத்தாக இருக்கிறார். ஆனால், உடனிருக்கும் மனிதர்களின் வார்த்தைகளைக் கேட்டுச் செயல்படுவதாக சவுலைக் கடிந்துகொள்கின்றார் தாவீது.

(ஆ) மனவருத்தம்

சவுலைத் தான் நெருங்கியதற்கு அடையாளமாக அவருடைய மேலாடையின் தொங்கலை அறுத்துக்கொள்கின்றார் தாவீது. இச்செயலுக்காக உடனே வருந்துகிறார். ஏனெனில், 'ஆண்டவரால் திருப்பொழிவு செய்யப்பட்டவர் மேல் தன் கரம் படக் கூடாது' என்னும் கருத்து கொண்டவர் தாவீது. மேலாடையின்மேல் கரம் பட்டதும் தவறு என மனவருத்தம் கொள்கின்றார் தாவீது.

(இ) 'தீயோரிடமிருந்தே தீமை பிறக்கும்'

'தீயோரிடமிருந்தே தீமை பிறக்கும்' என்னும் பழமொழி ஒன்றை மேற்கோள் காட்டுகின்றார் தாவீது. 'நல்ல மரம் நல்ல கனியைக் கொடுக்கும்' என்னும் இயேசுவின் வார்த்தைகளின் எதிர்ச்சொல்லாடலாக இது உள்ளது. இப்படிச் சொல்வதன் வழியாக, தான் நல்லவர் என்றும், தன்னிடம் தீமை என்பது இல்லை என்றும் உரைக்கிறார் தாவீது.

(ஈ) செத்த நாய்

'இஸ்ரயேலின் அரசர் யாரைத் தேடிப் புறப்பட்டார்? யாரைப் பின்தொடர்கிறீர்? ஒரு செத்த நாயை அன்றோ? ஒரு தௌ;ளுப் பூச்சியை அன்றோ?' என்று சவுலிடம் கேட்கின்றார் தாவீது. அரச மேன்மையில் இருக்கும் ஒருவர் அந்த மேன்மையை மறந்துவிட்டு, அனைவரும் விலகிச் செல்லும் செத்த நாயைக் கண்டும், யாரும் கண்டுகொள்ளாத தௌ;ளுப் பூச்சியைக் கண்டும் செல்லத் தேவையில்லை என்கிறார் தாவீது. தாவீதின் தாழ்ச்சி நமக்கு இங்கே ஆச்சர்யம் தருகின்றது.

(உ) ஆண்டவர் நன்மை செய்வார்

'இன்று நீ எனக்குச் செய்த நன்மைக்கு ஈடாக, ஆண்டவரும் உனக்கு நன்மை செய்வாராக! இதோ, நீ திண்ணமாய் அரசனாவாய் என்றும் இஸ்ரயேலின் அரசை நீ உறுதிப்படுத்துவாய் என்றும் இப்போது அறிகிறேன்' என்று தாவீதை வாழ்த்துகின்றார் சவுல். ஆக, நாம் ஒருவருக்குச் செய்யும் நன்மை அல்லது நாம் ஒருவருக்குக் காட்டும் தாராள உள்ளம் அல்லது பரந்த மனப்பான்மை கடவுளிடமிருந்து நமக்கு ஆசியைப் பெற்றுத் தருகின்றது.


1 comment:

  1. தாவீதைக் கொல்ல வரும் சவுல்; சவுலைக் கையருகில் கண்டும் அவரைக் கொல்லாது விடும் தாவீது.இன்றைய நாடகத்தின் ஆரம்ப வரிகள் இந்நிகழ்ச்சியை நமக்கு வெளிப்படுத்தியிருப்பினும், நாடகத்தின் முடிவு யார் நல்லவர்? யார் தீயவர் என்று இனம் காண முடியாத அளவிற்கு அவர்களை மாற்றி விடுகிறது. மனம் மாறுபவர் யார்? மனத்தை மாற்றுபவர் யார்? இருவருமே நல்லவர்கள் தான்; சந்தர்ப்ப சூழ்நிலையின் அடிமைகளே இருவரும் என நமக்குப் புரிகிறது.கூட நிற்பவர்கள் சவுலைக் கொல்லும்படி தாவீதைத் தூண்டும் நிலையிலும், சவுல் “ஆண்டவரால் திருப்பொழிவு செய்யப்பட்டவர்” எனும் ஒரே காரணத்திற்காக அவரைத் துன்புறுத்தக் கூடாது என்பதில் உறுதி காட்டுவது மட்டுமின்றி,அவரது கரம் சவுலின் மேலாடை மீது பட்டதற்காகத் தன்னை நொந்து கொள்கிறார் தாவீது. தன்னை ஒரு செத்த நாயென்றும், தெள்ளுப்பூச்சியென்றும் தாழ்த்திப்பேசும் தாவீதின் மனமாற்றம் சவுலையும் பற்றிக்கொள்ள தாவீதுக்கு வாழ்த்துப்பா தொடுக்கிறார் சவுல்.தான் கொல்ல வந்தவரை “ஆண்டவர் அரசனாக்கட்டும்” என்று வாயார வாழ்த்துகிறார். ஒருவரின் கையில் ஒளிர்ந்து கொண்டிருக்கும் ஒரு திரி எதிரியின் திரியையும் ஒளிரவைக்கக் கூடியது என்பதற்கு இவர்கள் இருவருமே சாட்சிகளாய் நிற்கிறார்கள் நம் கண்முன்.நாம் எந்த அளவையால்
    அளக்கிறோமோ,அதே… ஏன் அதைவிட மேலான அளவையால் நமக்கும் அளக்கப்படும் என்பதை முன் வைக்கும் வரிகளுக்காகத் தந்தைக்கு நன்றிகள்!!!

    ReplyDelete