Tuesday, February 1, 2022

ஆண்டவரே காணிக்கையாக

இன்றைய (2 பிப்ரவரி 2022) திருநாள் 

ஆண்டவரே காணிக்கையாக

ஆண்டவர் இயேசுவை அவருடைய பெற்றோர் எருசலேம் ஆலயத்தில் காணிக்கையாக ஒப்புக்கொடுத்ததை இன்றைய நாளில் கொண்டாடுகின்றோம். கிறிஸ்து பிறப்பு பெருவிழாவின் 40ஆம் நாள் இது. இந்த நாள் அர்ப்பணத்தின் நாள் எனச் சிறப்பிக்கப்பட்டு, திருநிலை மற்றும் துறவறப் பணிக்காகத் தங்களையே அர்ப்பணித்தவர்களின் நாள் என்றும் கொண்டாடப்படுகின்றது. இன்று நாம் கைகளில் ஏந்திச் செல்லும் மெழுகுதிரிகள் இயேசு அர்ப்பணிக்கப்பட்ட நிகழ்வை நமக்கு நினைவூட்டுவதோடு நம்மையும் அவருக்கே அர்ப்பணிக்க நம்மைத் தூண்டுகின்றன.

இந்த நாள் நமக்கு ஆறு வாழ்க்கைப் பாடங்களைக் கற்பிக்கின்றது:

(1) பொறுமை

இன்றைய முதல் வாசகத்தில், 'நீங்கள் தேடுகின்ற தலைவர் திடீரெனத் தம் கோவிலுக்கு வருவார்' என இறைவாக்குரைக்கின்றார் மலாக்கி. நற்செய்தி வாசகத்தில், 'இஸ்ரயேலுக்கு வாக்களிக்கப்பட்ட ஆறதலை எதிர்பார்த்திருந்தார் சிமியோன்' என எழுதுகிறார் லூக்கா. இறையனுபவம் என்பது உடனடி நிகழ்வு அன்று. அதற்கான காத்திருத்தலும், எதிர்நோக்கும் நிறைய அவசியம். 

(2) புகழ்ச்சி

குழந்தையைத் தன் கைகளில் ஏந்துகின்ற சிமியோன் கடவுளைப் புகழ்கின்றார். அன்னா, குழந்தையைப் பற்றி மற்றவர்களிடம் எடுத்துரைக்கின்றார். இறைவனை ஏந்தும் அனுபவம் பெற்றவர்கள் அவரைப் புகழாமலும், அவரைப் பற்றி ஒருவர் மற்றவரிடம் அறிவிக்காமலும் இருத்தல் இயலாது.

(3) எளிமை

இயேசுவின் பெற்றோர் தங்களுடைய எளிய நிலையில் மாடப் புறாக்களை அர்ப்பணிக்கின்றனர். கடவுள் எளிய நிலையில் மனிதத்தைத் தழுவிக்கொள்கிறார். இதையே இன்றைய இரண்டாம் வாசகத்தில், 'எல்லாவற்றிலும் தம் சகோதரர் சகோதரிகளைப் போல் அவர் ஆக வேண்டியதாயிற்று' என்கிறார் எபிரேயருக்கு எழுதப்பட்ட திருமடலின் ஆசிரியர்.

(4) இறைஉரிமை

நம் இல்லங்களில் பிறந்த குழந்தைகளுக்கு நாம் 40 நாள்கள் கழித்து, அல்லது சில மாதங்கள் கழித்து மொட்டை எடுக்கின்றோம். இதை, 'முடி இறக்குதல்' அல்லது 'முடி எடுத்தல்' என அழைக்கின்றோம். அதாவது, குழந்தையின் மணிமுடி போல இருக்கின்ற தலைமுடியைக் கழற்றி இறைவனின் காலடியில் வைத்து, 'இறைவா, இனி இக்குழந்தையை நீயே பொறுப்பேற்றுக்கொள்!' அவரிடம் சமர்ப்பிக்கின்றோம். ஆக, நம் வாழ்வின், இருத்தலின், இயக்கத்தின் உரிமையாளர் இறைவன்.

(5) நோக்கம்

இயேசு எதற்காக இவ்வுலகுக்கு வந்தார் என்பதை அனைவரும் கேட்கும்படியாக இறைவாக்காக உரைக்கின்றார் சிமியோன். குழந்தை அடைய வேண்டிய வாழ்வின் நோக்கம் மற்றும் இலக்கு பெற்றோருக்கும் தெளிவாகின்றது. நம் வாழ்வு ஒரு விபத்து அல்ல. மாறாக, அது நோக்கத்தை அடிப்படையாகக் கொண்டுள்ளது. அந்த நோக்கத்தைத் தெளிவுறத் தெரிதலும், தெரிந்தபின் அதை நோக்கி நகர்தலும் அவசியம்.

(6) அன்றாட அர்ப்பணம்

இறைவனுக்கு நம்மை மறுஅர்ப்பணம் செய்தல் என்பது ஓர் அன்றாட நிகழ்வாக நடத்தல் வேண்டும். நம் இல்லங்களை திருஇருதய ஆண்டவருக்கு ஒவ்வோர் ஆண்டும் அர்ப்பணிக்கின்றோம். நம் புதிய செயல்களை இறைவனுக்கு அர்ப்பணிக்கின்றோம். நாம் அர்ப்பணிக்கும் ஒவ்வொன்றிலும் இறைவனை அதன் பார்ட்னர் ஆக்குகின்றோம். சுமக்க முடியாத நம் சுமையைச் சுமக்க அவரும் தன் கைகளை நீட்டுகின்றார்.

ஆக,

சிமியோன் வழியாக நீண்டது இறைவனின் கரங்களே. பெற்றோரின் கரங்களும் இறைக்கரங்களும் இணைந்து குழந்தையைத் தூக்குகின்றன.

மெழுகுதிரிகளை ஏந்தும் நம் கைகளையும் இறைக்கரங்கள் தாங்கிப் பிடிக்கின்றன என்னும் அனுபவத்தை இன்றைய திருநாள் நமக்குத் தந்தால் நலம்!


2 comments:

  1. “ஆண்டவரே காணிக்கையாக!” …ஆண்டவரின் அர்ப்பணிப்பு! “எதை நான் தருவேன் இறைவா! என் இதயத்தின் அன்பிற்கீடாக?” எனும் வரிகளுக்கான பதில் இன்றையத் திருவிழா! என்னைப்படைத்த இறைவனுக்கு என்னையே உவந்தளிக்கத் தூண்டும் ஒரு திருவிழா! சிறுவயதில் ஆவலோடு காத்திருந்திருக்கிறேன்…இந்தத் திருவிழாவிற்காகக் கைகளில் மெழுகுதிரிகளை ஏந்திச்செல்ல…..அதன் அர்த்தம் புரியாமலே….அது தரும்சூட்டைக்கூட பொருட்படுத்தாமலே! இன்றும் கூட அந்த ஆவலில் சற்றும் குறைவில்லை….அதன் அர்த்தம் ஓரளவு புரிந்தும் கூட.’நாம் பிறவி எடுத்திருப்பதே ஒரு அர்ப்பண வாழ்க்கைக்காத்தான்’ என்று கூற வருகிறது இன்றையப் பதிவு.அர்ப்பணம் என்பது துறவறத்தாருக்கு மட்டும் சொந்தமான வார்த்தையல்ல….திருமுழுக்கு பெற்று இறைவனின் பிள்ளைகளான அனைவருக்குமே சொந்தமானதுதான்.கோவிலில் இக்குழந்தைக்காகத் தவம் கிடந்த சிமியோன்…இக்குழந்தையின் வரவினால் உந்தப்பட்டு எங்கிருந்தோ வந்து சேர்ந்த அன்னா…..இவர்களில் கைகளில் குழந்தை இந்த மனுக்குலத்தை…ஏன் என்னையும்,உங்களையும் சேர்த்தே பார்க்கிறது.காத்திருத்தலின் பொறுமையும்…இறைவனை ஏந்துவதின் புகழ்ச்சியும்…
    மாடப்புறாக்களின் எளிமையும்….தலைமுடியைத் தருதலில் இருத்தலின் இயக்கமும்…இந்த இனியவிழா நமக்கு சொல்லித்தரும் விஷயங்கள். இவ்வுலகில் நம் தோன்றல் மற்றும் இருத்தலைப் புரிந்து கொண்டு நம்மையே அர்ப்பணிப்போம்…நம்மை நோக்கித்தம் கைகளை நீட்டும் அவரிடம்!
    தந்தையின் இறுதிச்செய்தி…. “ மெழுகுதிரிகளை ஏந்தும் நம் கைகளையும் இறைக்கரங்கள் தாங்கிப்பிடிக்கின்றன.” இந்த இனிய செய்தி நம் அன்றாட சுமைகளைத் தாங்கிப்பிடிக்க நமக்கு உதவட்டும்! தந்தைக்கு நன்றியும்! திருநாள் வாழ்த்துக்களும்!!!

    ReplyDelete