Tuesday, January 11, 2022

ஆண்டவரின் வார்த்தை

இன்றைய (12 ஜனவரி 2022) முதல் வாசகம் (1 சாமு 3:1-10,19-20)

ஆண்டவரின் வார்த்தை

இன்றைய முதல் வாசகம் சாமுவேலின் அழைப்பு நிகழ்வை நம் கண்முன் கொண்டுவருகின்றது. மிக நேர்த்தியாக எழுதப்பட்ட எபிரேய விவிலியப் பகுதிகளுள் இதுவும் ஒன்று. எபிரேயத்தில் வாசிக்கும்போது இதில் உள்ள சில சொல்லாடல்கள் மொழிபெயர்ப்புச் சிக்கல்களையும் தருகின்றன. 

'ஆண்டவரின் வார்த்தை அரிதாக இருந்தது' என்ற சோகமான வாக்கியத்துடன் நிகழ்வு தொடங்குகிறது. ஏனெனில், ஆண்டவருடைய பணிக்கென தேர்ந்துகொள்ளப்பட்ட நீதித்தலைவர்கள் மக்களை சிலைவழிபாட்டுக்குள் இட்டுச்சென்றனர். ஏலியின் மகன்கள் அதிகாரப் பிறழ்வு மற்றும் பாலியல் பிறழ்வு கொண்ட குருக்களாகப் பணியாற்றினர். ஆண்டவருடைய வார்த்தையைக் கேட்க ஆள்கள் இல்லாமல் போனதால், அவருடைய வார்த்தையும் அரிதாகப் போகின்றது. இதைத்தான், 'இறைவார்த்தைப் பஞ்சம்' என எச்சரிக்கின்றனர் இறைவாக்கினர்கள். உணவுப் பஞ்சத்தைக் கூடத் தாங்கிக் கொள்ளலாம். ஆனால், இறைவார்த்தைப் பஞ்சத்தை எப்படித் தாங்குவது?

தொடர்ந்து, நிகழ்வில் ஏலி படுத்திருக்கிறார் – அதாவது, பணி செய்ய இயலாத அளவுக்கு மூப்பு. கண் பார்வை மங்கிவிட்டதால் அவரால் காண இயலவில்லை. இருந்தாலும், 'கடவுளின் விளக்கு இன்னும் அணையவில்லை'. இதுதான் கடவுளின் மாட்சி. மனிதர்கள் எப்படிப்பட்டவர்களாக இருந்தாலும், கடவுள் அங்கே, அவர்கள் நடுவே தன் ஒளியை ஒளிரச் செய்கின்றார். 

கடவுளின் பேழை வைக்கப்பட்ட இடத்தில் சாமுவேல் தூங்குகிறார். இந்த வரியைக் கற்பனை செய்து பார்த்தாலே நம் உடல் சிலிர்க்கிறது. கடவுளின் மாட்சி உறைந்து நிற்கும் ஒரு பேழை – அதாவது, கடவுளே அங்கு இருக்கிறார். அந்த இடத்தில் ஓர் இளவல் கையை மடக்கி, காலைச் சுருக்கித் தூங்குகிறான்.

'சாமுவேல்' என ஆண்டவர் அழைக்க, அருகிலிருந்த பேழையைப் பார்க்காமல், அடுத்த அறையிலிருந்து ஏலியைத் தேடி ஓடுகின்றார் இளவல். இரண்டாம் முறையும் இப்படியே நடக்கின்றது. 'சாமுவேல் ஆண்டவரை இன்னும் அறியவில்லை' என்று ஒரு வாக்கியத்தைப் பதிவிடுகின்றார் ஆசிரியர். மூன்றாம் முறையாக ஓடியபோதுதான் ஏலி உணர்கின்றார். வார்த்தை அரிதாக இருந்ததால் ஏலியும் ஆண்டவரை மறந்துவிட்டார். 'ஆண்டவரே, பேசும், உம் அடியான் கேட்கிறேன்' என்று சொல்லுமாறு ஏலி அறிவுறுத்த, சாமுவேலோ, 'பேசும், உம் அடியான் கேட்கிறேன்' என்கிறார். இதன் மறைபொருள் இந்நாள் வரை விளங்கவில்லை. 

இந்த இடத்தில் ஒரு மாற்றம் நிகழ்கிறது.

'ஆண்டவர் சாமுவேலோடு இருந்தார். சாமுவேலது வார்த்தை எதையும் அவர் தரையில் விழவிடவில்லை' எனப் பதிவு செய்கின்றார் ஆசிரியர்.

ஆண்டவரின் வார்த்தையை சாமுவேல் கேட்டதால், அவரின் வார்த்தைகள் நம்பிக்கைக்கு உரியதாக மாறுகின்றன. வார்த்தைகள் அரிதாக இருக்கும்வரை தான் அவற்றுக்கு மதிப்பு. ஏனெனில், வார்த்தைகள் வெறும் வார்த்தைகள் அல்ல. அவை செயல்கள். 

நற்செய்தி வாசகத்தில், பல அரும் அடையாளங்கள் நிகழ்த்தி, பலரைக் குணமாக்கிய இயேசு தனியே இறைவேண்டல் செய்கின்றார் இரவு முழுவதும். காலையில் அவரைத் தேடி வருகின்ற சீடர்கள், 'எல்லாரும் உம்மைத் தேடுகிறார்கள்' என்று சொன்னபோது, 'வாருங்கள். வேறிடம் செல்வோம்!' என்கிறார் இயேசு.

தான் அரிதாக இருக்க விரும்புகின்றார் இயேசு.

அரிதாக இருக்கும் வரைதான் மதிப்பு இருக்கிறது.

'நேற்றும் இங்கு வந்தார். இன்றும் இங்கும் வருகிறார். நாளையும் இங்கு வருவார்' என்று மக்கள் கூட்டம் இயேசுவை நினைக்கத் தொடங்கிவிட்டால், அவர் சாதாரண நபராக மாறிவிடுவார். தன் வார்த்தையும் செயலும் முன்னிலையும் அரிதாக இருக்க வேண்டும் என விரும்புகின்ற இயேசு, தானே அடுத்த ஊருக்குச் செல்கின்றார்.

ஆண்டவரின் வார்த்தை அரிதாக இருந்ததால் அது மதிப்புக்குரியதாக இருந்தது.

இயேசுவின் பிரசன்னம் அரிதாக இருந்ததால் மக்கள் அதைத் தேடி வந்தனர்.

நம் வார்த்தைகளும், இருத்தலும் அரிதாக – மதிப்புக்குரியதாக - இருந்தால் நலம். அரிதாக இருக்க நாம் என்ன செய்ய வேண்டும்? அமைதி காக்க வேண்டும். நமக்குள்ளேயே ஆழமாகச் செல்ல வேண்டும். ஏனெனில், ஆழத்தில்தான் பொன்னும் வைரமும் இருக்கின்றன. 

1 comment:

  1. எனக்கு மிகவும் பிடித்த ‘ சாமுவேல்’ பற்றியதொரு பதிவு. “ ஆண்டவரே பேசும்.உம் அடியான் கேட்கிறேன்” என்று சொல்லித்தர ஒரு குரு.கண்பார்வை மங்கிவிட்டாலும் கடவுளின் விளக்கு இன்னும் அணையவில்லை… இதுவே இறைவனின் மாட்சி.இவ்வார்த்தைகளின் அர்த்தம் தந்தைக்குப் புரியவில்லை எனினும், “ ஆண்டவர் சாமுவேலோடு இருந்தார்; சாமுவேலது வார்த்தை எதையும் அவர் தரையில் விடவில்லை” எனும் வார்த்தைகள் இறை பிரசன்னம் சாமுவேலோடு என்றுமே இருந்தது” என்பதை உணர்த்துகின்றன.
    “இயேசு தனியே இருக்க விரும்பினார்; தான் அரிதாக இருக்க விரும்பினார்.” உண்மைதான்! கைக்கெட்டிய தூரத்தில் இருக்கும் எதுவுமே……நாம் காசு செலவழித்து வாங்காத எதுவுமே நமக்கு மலிவானவைதான்…அது நமக்கு வெகு
    அருகிலிருக்கும் ஆலயத்தில் நமக்காகக் காத்திருக்கும் இறைவனாய் இருப்பினும்
    கூட. உண்மைதான்! பொன்னும்,வைரமும் அரியவைதான்….ஆழத்தில் உள்ளவைதான்.ஆனால் அவற்றால் யாருக்கு யாது பயன் அவை வெளியே எடுக்கப்பட்டு ஆபரணங்களாக உருமாறும் வரை! நாமும்,நம் வார்த்தைகளும் அரிதாக இருக்க வேண்டுமென்பதில் தப்பில்லை! ஆனால் ஒரு தேவையிலிருப்போருக்கு…..எங்கிருந்து நமக்கு ஒரு உதவி கிடைக்கும் எனும் கையறு நிலையிலிருப்போருக்கு நம் முகம் தெரிந்தால் போதும்.அம்மாதிரி தருணங்களில் ‘அரிது’ என்பது அர்த்தமற்ற வார்த்தையாகப் போய்விடும்.
    இன்றைய இரு வாசகங்களின் கருத்தை அழகு சிதையாமல் கூறியிருக்கும் தந்தைக்கு நன்றியும்! வாழ்த்துக்களும்!!!

    ReplyDelete