Friday, January 28, 2022

அக்கரைக்குச் செல்வோம்!

இன்றைய (29 ஜனவரி 2022) நற்செய்தி (மாற் 4:35-41)

அக்கரைக்குச் செல்வோம்!

இன்றைய நற்செய்தி வாசகத்தில், 'அக்கரைக்குச் செல்வோம், வாருங்கள்!' என்று தன் சீடர்களை அழைக்க, 'படகிலிருந்தவாறே அவரை அழைத்துச் செல்கிறார்கள்.' அக்கரைக்குப் போவோம் என்றதால் என்னவோ, அக்கரை வரும் வரை தூங்குவோம் என எண்ணித் தூங்கி விடுகின்றார் இயேசு. 

இப்படித்தான் கடவுள். 'இதைச் செய்! அதைச் செய்!' என்று நம் உள்ளத்தில் எதையாவது தூண்டிவிட்டு, நாம் அதைச் செய்யத் தொடங்கியவுடன் அவர் தூங்கிவிடுகின்றார். சுற்றிலும் அலை அடைக்க, முன்னாலும் செல்ல இயலாமல், பின்னாலும் செல்ல இயலாமல் நாம் தவிக்கிறோம்.

சீடர்கள், 'போதகரே, சாகப் போகிறோமே! உமக்குக் கவலை இல்லiயா?' எனக் கேட்கின்றனர். பயத்தினால் வரும் விரக்தியின் உச்சத்தில் இப்படி முறையிடுகிறார்கள் சீடர்கள். 'அக்கரைக்குப் போவோம்!' என்று சொன்ன அவர், நம்மை அக்கரை சேர்க்காமல் சாக விடுவாரா என்ன? சீடர்கள் தங்கள் பயத்திலும் விரக்தியிலும் நம்பிக்கையை இழக்கின்றனர்.

நாமும் சில நேரங்களில், சிறிய பிரச்சினைக்குக் கூட, நாமே அழிந்துவிட்டதுபோல மிகைப்படுத்தி யோசிக்கின்றோம். 'போதகரே, வாழப் போகிறோமே! உமக்குக் கவலை இல்லையா?' என்று கடவுளைத் தட்டி எழுப்புவதுதான் சரியாக இருக்கும்.

விழித்தெழுந்த இயேசு முதலில் கடலையும், இரண்டாவதாக சீடர்களையும் கடிந்துகொள்கின்றார். கடல் என்பது யூத மரபில் தீமையின் உறைவிடமாக இருந்தது. ஆக, தீமையின்மேல் வெற்றிகொள்கின்றார் இயேசு. தான் தீமையை வெல்பவர் என்ற நம்பிக்கையை அவர்கள் பெற்றுக்கொள்ளுமாறு 'ஏன் அஞ்சுகிறீர்கள்?' எனக் கேட்கிறார் இயேசு. 

ஆக, இயேசு தருகின்ற பாடம் இதுதான்:

'அக்கரைக்குச் செல்வோம்' என்று நம்மை அழைக்கிறவர் மறுகரை சேர்க்கும் வரை நம் உடன் வருவார் என்ற நம்பிக்கை நமக்கு அவசியம். சில நேரங்களில் கடவுள் நம்மை விட்டு விலகித் தூங்குவதுபோல நாம் உணரலாம். ஆனால், தூங்கினாலும் அவர் தன் கனவிலும் நம்மையே காண்கிறார்.

முதல் வாசகத்தில், பத்சேபா உறவில் பதற்றப்படுகின்ற தாவீது உரியாவைக் கொலை செய்துவிட்டால் எல்லாம் சரியாகிவிடும் என நினைக்கின்றார். மனிதர்களின் கண்களுக்கு மறைவாய் இருக்கின்ற ஒன்று கடவுளுக்கு வெட்ட வெளிச்சமாக இருக்கும் என்பதை மறந்துவிட்டார் தாவீது.

ஒரு குட்டிக் கதையுடன் தாவீதிடம் வருகின்றார் நாத்தான். கதை கேட்ட தாவீது, 'ஆண்டவர்மேல் ஆணை! இதைச் செய்தவன் கட்டாயம் சாகவேண்டும். இரக்கமின்றி அவன் இதைச் செய்ததால் அவன் ஓர் ஆட்டுக்குட்டிக்காக நான்கு மடங்கு திருப்பித் தரவேண்டும்' என்று எழுகின்றார்.

'நீயே அம்மனிதன்!' என்று தாவீதிடம் விரல் நீட்டுகிறார் நாத்தான்.

'நான் ஆண்டவருக்கு எதிராகப் பாவம் செய்துவிட்டேன்' என சரணாகதி அடைகின்றார் தாவீது.

பாவம்! தாவீதின் குழந்தையின்மேல் கையை நீட்டுகிறார் கடவுள். எப்படியாவது கடவுள் இரங்கிவிட மாட்டாரா என்று குழந்தைக்காக நோன்பிருக்கிறார் தாவீது.

தாவீதின் எளிய உள்ளம் நமக்கு ஆச்சர்யம் தருகிறது.

போரில் கொடூரமாக உரியாவை கொலை செய்யச் சொன்னவர், பிஞ்சுக் குழந்தைக்காக அழுகின்றார். அது இறந்துவிடக் கூடாது என மன்றாடுகின்றார். இது மனமாற்றத்தின் விளைவாகக் கூட இருக்கலாம்.

தன் மனமாற்றத்தால் அக்கரைக்குச் செல்கின்றார் தாவீது.

நம்பிக்கையால் சீடர்கள் அக்கரைக்குச் செல்கின்றனர்.

நாமும் அவ்வாறே!



1 comment:

  1. அக்கரைக்குச் செல்ல விரும்பிய இயேசு அதுவரை ஓய்வெடுக்க விரும்புகிறார். சீடர்களோ பதறுகிறார்கள். அவருக்குத்தெரியாதா எந்தக் காற்றுக்கும் …கடல்லைக்கும் அவரைத்தீண்டும் தைரியம் இல்லையென்று? சீடர்களுக்கு இயேசு அருகிலிருந்தும் சாவு பயம்.நமக்கோ அவர் நம்முடனேயே இருப்பது தெரியாமலே பயம்.அவர் உறங்கினாலும்…விழித்திருந்தாலும் அவர் கனவிலும்…நினைவிலும் நிறைந்திருப்பவர் நாமே! என்பதை நாம் நம்ப வேண்டும்.
    முதல் வாசகம் சொல்வது போல் கண்களுக்குத் தூரமாயிருப்பவை கடவுளுக்கு வெட்ட வெளிச்சமாயிருக்குமென்பதை மறந்து போனார் தாவீது.தான் செய்த பாவத்தால் தன் குழந்தை இறந்துபோகும் நிலமை வந்தபோது ஒரு தந்தைக்குரிய வாஞ்சையுடன் மருகுகிறார்.இது பாசத்தின் விளைவா..இல்லை மனமாற்றமா? இறைவனுக்கே வெளிச்சம்.
    மனமாற்றத்தால் தாவீது அக்கரை சென்றதும் சரி….
    நம்பிக்கையால் சீடர்கள் அக்கரை சென்றதும் சரி….
    தங்கள் மனத்திலிருந்த கறை போக்கவே…..
    நம்மையும் அதையே செய்ய அழைக்கிறது இன்றைய வாசகம்…

    போனமுறை இதே வாசகம் வந்தபோது தந்தையின் விளக்கவுரையை நினைத்துப்பார்க்கிறேன்.என்னே வேறுபாடு! ஒரே விஷயத்தை இப்படிப்பல கோணங்களில் அலசிப்பார்த்து…வாசகருக்குப் படைக்கும் தந்தைக்கு வாழ்த்துக்கள்!!!

    ReplyDelete