Tuesday, January 18, 2022

ஆண்டவரின் போர்

இன்றைய (19 ஜனவரி 2022) முதல் வாசகம் (1 சாமு 17:32-33,37,40-50)

ஆண்டவரின் போர்

தாவீது கோலியாத்தை எதிர்கொண்டு வெற்றிபெறும் நிகழ்வை இன்றைய முதல் வாசகத்தில் வாசிக்கின்றோம். 

இந்த நிகழ்வு நமக்கு மூன்று பாடங்களைக் கற்றுத் தருகின்றது:

(அ) தானாக முன்வருதல்

கோலியாத் பற்றிய அச்சத்தில் மக்கள் இருந்தபோது, அவரை எதிர்கொள்வதற்குத் தாமாகவே முன்வருகின்றார் தாவீது. தாவீதின் இறைநம்பிக்கையே அவருடைய தன்னம்பிக்கையின் ஊற்றாக இருக்கிறது. ஆண்டவர் தன்னோடு இருக்கிறார் என்ற ஆழ்ந்த நம்பிக்கை அவருடைய முன்னெடுப்புக்கும் முன்னேறிச் செல்தலுக்கும் காரணமாக இருக்கின்றது.

(ஆ) ஆண்டவரின் போர்

கோலியாத்தின்மேல் கூழாங்கல்லை எறியும் தாவீதின் செயலைப் பார்க்கும்போது, தாவீதின் செயலுக்கும் கோலியாத்தின் வீழ்ச்சிக்கும் தொடர்பே இல்லாதது போல இருக்கிறது. தாவீது 'வழவழப்பான ஐந்து கூழாங்கற்களை எடுக்கின்றார்.' கவனில் வைத்து எய்யப்படுகின்ற கல் கூர்மையானதாக அல்லது சொரசொரப்பானதாக இருக்க வேண்டும். வழவழப்பான கல் நழுவி ஓடும். மேலும், தாவீது தன் பைக்குள் கையை விட்டு குத்துமதிப்பாக ஒரு கல்லை எடுக்கின்றார். வழவழப்பான கல் நெற்றியில் பதிந்தது என எழுதுகின்றார் ஆசிரியர். இதுவும் ஆச்சர்யமாக இருக்கிறது. இதன் வழியாக முழுக்க முழுக்க ஆண்டவரே இந்நிகழ்வை நடத்துகின்றார் என்பது தெளிவாகிறது.

(இ) தன்மேல் கவனம்

தாவீது கோலியாத்தை அணுகிச் செல்லும்போது அவரைச் சபிக்கின்றார் கோலியாத்து. ஆனால், அதைக் கண்டுகொள்ளவில்லை தாவீது. தன் கவனம் சிதறாதவாறு பார்த்துக்கொள்கின்றார் தாவீது. மேலும், கோலியாத்தின் எவ்வித எதிர்மறையான வார்த்தைகளுக்கும் எதிர்வினை ஆற்றவில்லை தாவீது.

அன்றாட வாழ்வில் நாம் எதிர்கொள்ளும் கோலியாத்துகள் நிறையவே இருக்கின்றன. நம் குடும்பத்தில், பணித்தளத்தில், சமூகத்தில் என நாம் எதிர்கொள்ள வேண்டிய பிரச்சினைகளும் நெருக்கடிகளும் கூடிக்கொண்டே இருக்கின்றன. 'இது ஆண்டவரின் போர்!' என்ற எண்ணம் ஒன்றே நம்மை உந்தித் தள்ளும்.

நற்செய்தி வாசகத்தில் (காண். மாற் 3:1-6), ஓய்வுநாளில் தொழுகைக்கூடத்தில் நலம் தருகின்றார் இயேசு. ஆனால், இயேசுவின் இச்செயல் அவருடைய எதிரிகளின் கோபத்தைத் தூண்டுகிறது. இருந்தாலும் அவர்களை எதிர்கொள்கின்றார் இயேசு.

1 comment:

  1. எளிமைக்கும்,வலிமைக்குமிடையாயான போரில் “எளிமையும் வெல்லலாம் நம்முடன் ஆண்டவரின் உடனிருப்பு இருந்தால்!” என்று சொல்லும் பதிவு.தாவீது எனும் சிறு கூழாங்கல் கோலியாத் எனும் மலையை வீழ்த்த முடியுமெனில், நாம் நம் அன்றாட வாழ்க்கைப்பாதையில் எதிர்கொள்ளும் கோலியாத்துகளை வீழ்த்த முடியாதா என்ன? தேவையெல்லாம் ‘என் ஆண்டவர் என்னுடன் இருக்கிறார்’ எனும் எண்ணமும், ‘வல்லவனுக்குப் புல்லும் ஆயுதமே’ எனும் தன்னம்பிக்கையும் தான். காரணமின்றி நம்மேல் காழ்ப்புணர்வு கொள்பவர்களையும் புறந்தள்ள முடியும் இயேசு போல்…” நான் செய்வது சரியே” என்ற திடமான நம்பிக்கை நமக்கிருந்தால்!
    நம்பிக்கை எனும் தடுப்பூசியை நம்மில் செலுத்துவோம்….எந்த விஷக்கிருமிகளும் நம்மை அண்டவிடாமல்.
    வழவழப்பான மற்றும் சொரசொரப்பான கூழாங்கல் பற்றிய ஒரு செய்திக்காக தந்தைக்கு நன்றிகள்!!!

    ReplyDelete