Tuesday, January 4, 2022

தண்டு வலிக்க

இன்றைய (5 ஜனவரி 2022) நற்செய்தி (மாற் 6:45-52)

தண்டு வலிக்க

ஐயாயிரம் பேர் உணவு உண்ட பின்னர் இயேசு மக்கள் கூட்டத்தை அனுப்பி விடுகின்றார். தம் சீடரையும் கட்டாயப்படுத்தி அனுப்புகின்றார். 

தன் சீடர்களை அனுப்பிவிடுகின்ற இயேசு இறைவேண்டல் செய்வதற்காக மலைக்குச் செல்கின்றார். 

பசும்புல் தரையில் அமரச் செய்து உணவு பரிமாறிய இயேசு மக்களையும் சீடர்களையும் அனுப்புகின்றார். இது வாழ்வின் அடுத்த பக்கத்தைக் காட்டுகிறது. அதாவது, உணவு உண்டவர்கள் உழைக்கச் செல்ல வேண்டும். அமர்ந்திருந்தவர்கள் எழுந்து தங்கள் பணிக்குச் செல்ல வேண்டும்.

கூட்டொருங்கியக்கத்துக்கான மாமன்றம் பற்றிய வார்த்தைப்படப் பகிர்வில், 'இயேசு-மக்கள் கூட்டம்-திருத்தூதர்கள்' என்று மூவரும் இணைந்திருந்ததை திருத்தந்தை பிரான்சிஸ் முன்மொழிகின்றார். இங்கே இந்த மூவரும் தனித்தனியே நிற்கின்றனர். மக்கள் கூட்டம் தங்கள் வீடுகளுக்குச் சென்றுவிட்டனர். திருத்தூதர்கள் கடலைக் கடந்துகொண்டிருக்கின்றனர். இயேசுவோ இறைவேண்டல் செய்துகொண்டிருக்கின்றார். 

இயேசுவின் இரவுநேர இறைவேண்டல் தனித்திருத்தலின் அவசியத்தை நமக்கு எடுத்துச் சொல்கின்றது.

இன்றைய நற்செய்தி வாசகத்தில் ஒரு வாக்கியம் நம் கவனத்தை மிகவே ஈர்க்கிறது: 'சீடர்கள் தண்டு வலிக்கப் பெரிதும் வருந்துவதைக் கண்ட இயேசு கடல்மீது நடந்து அவர்களை நோக்கி வந்தார். அவர்களைக் கடந்து செல்ல விரும்பினார்.'

ஐந்து அப்பங்களை ஐயாயிரம் பேருக்குப் பலுகச் செய்த இயேசு, தன் சீடர்களைத் துன்புறுத்திய எதிர்க்காற்றை ஏன் நிறுத்தவில்லை? சீடர்களை நோக்கி வந்த இயேசு ஏன் அவர்களைக் கடந்து செல்ல விரும்பினார்? என்னும் கேள்விகள் நமக்குள் எழும் வேளையில் அந்த அற்புதம் நடந்தேறுகிறது. இயேசு கடல்மீது நடந்து வருகின்றார். ஆனால், சீடர்கள், 'அது பேய்' என எண்ணுகின்றனர். 'துணிவோடு இருங்கள். நான்தான். அஞ்சாதீர்கள்' என்கிறார் இயேசு. அவர் படகில் ஏறியவுடன் காற்று அடங்கியதைக் காண்கின்ற சீடர்கள் மலைத்துப் போகின்றனர்.

எதிர்காற்றின் அச்சம், தண்டு வலிக்க வந்ததின் துன்பம், இன்னும் கடக்க வேண்டிய தூரம் பற்றிய மலைப்பு இயேசுவை அவர்களுடைய பார்வையிலிருந்து மறைத்துவிடுகின்றது.

நம் வாழ்வின் நிகழ்வுகள் இம்மூன்று உணர்வுகளை நமக்கும் தருகின்றன. 'இன்று சுறுப்பாக நாளைத் தொடங்க வேண்டும்' என்று எழும் நமக்குச் சில நேரங்களில் உடல்நலம் ஒத்துழைப்பதில்லை. ஒத்துழைக்காத உடல்நலம் ஒரு பக்கம், அன்றாட வேலை மறுபக்கம் என்று நாம் தொடர்ந்து துன்பம் ஏற்கின்றோம். இப்படியே எத்தனை நாளைக் கடத்துவது? என்ற கேள்வி மலைப்பாக நம்மேல் ஏறிக்கொள்கிறது. 

எதிர்காற்று வெளிப்புறத்திலிருந்து வரக்கூடிய அச்சுறுத்தலின் உருவகமாகவும், தண்டு வலித்தல் நம் உடல்சார் அச்சுறுத்தலாகவும், மலைப்பு உணர்வு நம் உள்ளம்சார் அச்சுறுத்தலாகவும் உள்ளது.

அச்சறுத்தல்கள் நம்மைச் சூழ்ந்த வேளையில்தான் இயேசு அருகில் நடந்து வருகின்றார். நம்மைக் கடந்து செல்ல அவர் விரும்பக் காரணம், நாமே அச்சுறுத்தல்களை எதிர்கொள்ள முடியும் என்னும் அவருடைய நம்பிக்கைதான். இருந்தாலும், அவர் தன் மனத்தை மாற்றிக்கொண்டு நம் படகில் ஏறுகின்றார். அவர் படகில் ஏறியவுடன் படகின் சுமை கூடுவதில்லை. மாறாக, காற்று நிற்கிறது. பயணம் இனிதாகிறது.

சில நேரங்களில் அற்புதங்களும், சில நேரங்களில் நம் துன்பங்களும் நம் இதயங்களைக் கடினமாக்குகின்றன. ஆனாலும் அவர் நம்மைக் கடிந்துகொள்வதில்லை. நாம் எந்த அளவுக்குத் தண்டு வலிக்க நம் படகை நகர்த்த வேண்டுமோ, அந்த அளவுக்குப் படகை நகர்த்துதல் நலம். 

3 comments:

  1. உணவு….உழைப்பு….இறைவேண்டல்…அத்தனையுமே ஒரு தனிமனிதனுக்குத் தண்டு வலிக்க உதவும் விஷயங்கள் என்று புரிய வைக்கும் ஒரு பதிவு.விஷயம் பழசுதான்.ஆயினும் இன்று….. வேறொரு விஷயத்தை நமக்கு எடுத்து வைக்கிறார் தந்தை….நாம் மலைத்து நிற்கும் நேரங்களில் நம்மருகில் நிற்கும் இயேசு ஏன் நம் கண்களுக்குத் தெரிவதில்லை என்பதைப் புரிய வைக்கிறார்.நாம் வாழும் வாழ்க்கையில் நம்மைத் துரத்தும் எதிர் காற்றின் அச்சம்,தண்டு வலித்தலின் துன்பம் மற்றும் கடக்க வேண்டிய தூரம் இயேசுவை நம் பார்வையிலிருந்து மறைத்து விடுகிறது.நம் நம்பிக்கையின்மை அவருக்கு ஏற்றுக்கொள்ள முடியா விஷயமாக இருப்பினும்,அதைப்பொருட்படுத்தாது நம் படகில் ஏறுகிறார்.காற்று நின்று பயணமும் இனிதாகிறது.
    அற்புதங்களும்,அச்சுறுத்தல்களும் மாறி மாறி வந்தால் மட்டுமே வாழ்க்கை சுவைக்கும் என்பதை அறிந்த இயேசு சமயங்களில் நமக்கு உடல்,உள்ள வலியைத் தந்து அதற்கு மருந்துமிடுகிறார்.நம்மை அச்சுறுத்தும் விஷயங்களை ஓரங்கட்டி நம் படகை மட்டுமே நகர்த்தி, நம் வாழ்க்கையை வாழ்வாங்கு வாழ நமக்கு வழிசொல்லும் ஒரு பதிவிற்காகத் தந்தைக்கு நன்றிகள்!!!

    ReplyDelete