Sunday, January 23, 2022

வலியவரைக் கட்டுதல்

இன்றைய (24 ஜனவரி 2022) நற்செய்தி (மாற் 3:22-30)

வலியவரைக் கட்டுதல்

விமர்சனங்கள் தவிர்க்க இயலாதவை. நாம் பேசும் ஒவ்வொன்றுமே விமர்சனம்தான். 'இந்த வாட்ச் நல்லா இருக்கு!' 'நீங்க நல்லா இருக்கீங்க!' 'இந்தக் கலர் உங்களுக்கு பொருத்துமா இருக்கு!' என்று நாம் எதைப் பற்றிப் பேசினாலும், அது விமர்சனமே. நம்மிடம் மற்றவர்கள் பகிர்வதும் விமர்சனங்களே.

நேர்முகமான விமர்சனங்கள் நம்மை வளர்க்கின்றன.

எதிர்மறையான விமர்சனங்கள் நம்மைத் தளர்க்கின்றன.

இன்றைய முதல் வாசகத்தில் தாவீது எதிர்மறையான விமர்சனம் ஒன்றை எதிர்கொள்கின்றார். தன் முப்பதாவது வயதில் அரசராகப் பொறுப்பேற்றபின் தன் சொந்த ஊருக்கு வருகின்றார். அங்கிருந்த எபூசிய இனத்தவர்கள், 'நீர் இங்கே வர முடியாது. பார்வையற்றவரும் முடவரும் கூட உம்மை அப்புறப்படுத்தி விடுவார்கள்!' என்று சொல்லி தாவீதுக்கு எதிராகப் பேசுகிறார்கள்.

நற்செய்தி வாசகத்தில், இயேசு பேய்களை ஓட்டுவதைக் கண்ட மறைநூல் அறிஞர்கள், 'இவனைப் பெயல்செபூல் பிடித்திருக்கிறது. பேய்களின் தலைவனைக் கொண்டே இவன் பேய்களை ஓட்டுகிறான்' என்றும் சொல்லி அவரைக் குறித்து இடறல் படுகின்றனர்.

தாவீது மற்றும் இயேசு என்னும் இரு இளவல்களும் மிக அழகாக மேற்காணும் எதிர்மறை விமர்சனங்களைக் கையாளுகின்றனர்.

அவர்கள் செய்வது என்ன?

'வலியவரைக் கட்டுகின்றனர்'

வலியவரைக் கட்டினால் அவர் வலுவிழந்து போவார்.

தாவீது எபூசியரை வெற்றிகொள்கின்றார். 

இயேசு மறைநூல் அறிஞர்களுக்குத் தான் யாரெனத் தெளிவுபடுத்துகின்றார்.

எபூசியரும் மறைநூல் அறிஞர்களும் தாவீது மற்றும் இயேசுவிடமிருந்த இறை ஆற்றலை மறுத்ததுடன், தீயவன் அவர்களில் இருப்பதாகச் சொல்லி, அவர்களது ஆற்றலை இழிவுபடுத்துகின்றனர்.

நாம் வலியவரைக் கட்டிவிட்டால் அவர் வலுவிழந்து போகின்றார். கட்டியவர் வலியவர் ஆகின்றார். சாத்தான் வலியவர் போலத் தெரிந்தாலும் அவரைக் கட்டிய இயேசு அதைவிட வலியவர் ஆகின்றார்.

இந்த நாள் தரும் செய்திகள் இரண்டு:

ஒன்று, எனக்கு அடுத்திருப்பவர் அரும்பெரும் செயல்கள் செய்யும்போது நான் வீசும் விமர்சனம் என்ன? நான் அளிக்கும் விமர்சனம் அவரைப் பற்றி அல்ல, மாறாக, என்னைப் பற்றியே பேசுகிறது.

இரண்டு, இன்று நான் கட்டிவைக்க வேண்டிய வலியவர் யார்? அவரை நான் மேற்கொள்வது எப்படி?

1 comment:

  1. தினமும் நாம் எதிர்கொள்ளும் ஒரு விஷயம் தான் இன்றையப் பதிவின் கருப்பொருள்…“விமர்சனம்.” சமயங்களில் நம்மை நோக்கி வரும் எதிர்மறையான விமர்சனங்கள் நம்மை எப்படி நிலைகுலைய வைக்கின்றன என்பது தெரிந்திருந்தும் நாம் பல சமயங்களில் சிறிதும் தயங்குவதில்லை இப்படிப்பட்ட விமர்சனங்களை அடுத்தவரைக் குறித்து முன்னெடுக்க.இன்றையப்பதிவின் இரு இளவல்களும் அவர்களைக் குறிவைத்த விமர்சனங்களைக் கையாண்ட முறையைச் சொல்கின்றனர். “வலியவரைக்கட்டினால் அவர் வலுவிழந்து போவார்.” முதலில் நம்மை விமர்சிப்பவரின் உளமறிந்து….அந்த விமர்சனத்தின் உண்மைத்தன்மையறிந்து நம்மைப் பதப்படுத்தும் விஷயமெனில் ஏற்றுக்கொள்ளவும்….இலையெனில் உதறித்தள்ளவும் நமக்கு அறிவுறுத்துவதோடு, நாம் அடுத்தவரை நோக்கி வைக்கும் முறையற்ற விமர்சனம் நம்மையே பிரதிபலிக்கிறது என்பதையும் உணரவைக்கிறது.”கட்டுபவர்…..கட்டப்பட வேண்டியவர்”…. இதில் நான் யார்? யோசிக்க வைக்கும் தந்தைக்கு நன்றிகள்!!!

    ReplyDelete