Sunday, August 1, 2021

தவறான ஊட்டத்தின்மேல் நாட்டம்

ஆண்டின் பொதுக்காலம் 18ஆம் ஞாயிறு

தவறான ஊட்டத்தின்மேல் நாட்டம்

கடந்த ஞாயிறு நற்செய்தி வாசகத்தில் ஐந்து அப்பங்களை ஐயாயிரம் பேருக்குப் பகிர்ந்தளித்தார் இயேசு. அந்நிகழ்வைத் தொடர்ந்து அவர் ஆற்றும், 'வாழ்வுதரும் உணவு நானே' என்னும் பேருரையின் முகவுரையே இன்றைய நற்செய்தி வாசகம். இன்றைய நற்செய்தி வாசகமும் முதல் வாசகமும், 'தவறான ஊட்டத்தையும் நாம் தேடி அலைவதற்கான வாய்ப்பு, மற்றும் பிறழ்வான ஆதாரங்களிலிருந்து வாழ்வைப் பெறுவதற்கான முயற்சி' பற்றி நமக்கு எச்சரிக்கின்றன.

இஸ்ரயேல் மக்கள் எகிப்திலிருந்து வெளியேறியபோது, இஸ்ரயேல் மக்கள் தங்கள் ஆண்டவராகிய கடவுளின் அளப்பரிய செயல்களையும் வியத்தகு அறிகுறிகளையும் கண்டனர். அப்படிக் கண்டவர்கள் அதே ஆண்டவரை நோக்கி எப்படி முணுமுணுத்தார்கள் என்பதை நாம் இன்றைய முதல் வாசகத்தில் வாசிக்கின்றோம். செங்கடலைக் கடந்து அவர்கள் தொடர்கின்ற பயணத்தில் இன்று இரண்டாம் முறையாக முணுமுணுக்கின்றனர். முதலில், தண்ணீருக்காக அவர்கள் முணுமுணுத்தனர் (காண். விப 15:22-27). இரண்டாவது முணுமுணுப்பு முன்னதைக் காட்டிலும் அதிகமாக இருக்கிறது. இஸ்ரயேல் மக்கள், எகிப்தில் நைல் நதியின் கரைகளில் விளைச்சலைக் கண்டு, அதன் நிறைவை உண்டவர்கள், இப்போது பாலைவனத்தின் குறைவையும், வெறுமையையும், பாதுகாப்பின்மையையும் தாங்கிக்கொள்ள முடியாதவர்களாக மாறுகின்றனர். உணவுத் தேவை குறித்த அவர்களுடைய அங்கலாய்ப்பு ஏற்றுக்கொள்ளத்தக்கதாக இருந்தாலும், எகிப்தின் உணவே தங்களுக்கு வேண்டும் என்ற கோரிக்கை – 'இறைச்சிப் பாத்திரத்தின் அருகில் அமர்ந்து, அப்பம் உண்டு நிறைவடைந்து – ஏற்புடையது அல்ல.

தங்கள் கற்பனையில் மட்டுமே இருந்த இறைச்சிப் பாத்திரத்தின் நிறைவின்மேல் விருப்பம் கொள்வதும், கானல் நீர் போலிருந்த அப்பத்தை உண்டு நிறைவுகொள்வதில் நாட்டம் கொள்வதும் எகிப்தில் அவர்கள் பட்ட அடிமைத்தனத்தின் நினைவுகளை மறைத்துவிட்டது. எகிப்தின் உணவுக்காக, தங்கள் ஆண்டவராகிய கடவுள் தந்த விடுதலையை மறந்துவிட்டு, மீண்டும் பாரவோனுக்கு அடிமைகளாகிட அவர்கள் விரும்பினர். கடவுள் அவர்கள் செய்த அனைத்தையும் அப்படியே துடைத்து எடுத்து தங்கள் முதுகுக்குப் பின்னால் எறிந்துவிடுவது போல இருந்தது அவர்களுடைய செயல். கடவுள் அவர்களுக்கு விடுதலை தந்தார், அதை இலவசமாகத் தந்தார். ஆனால், இப்போது அவர்கள் மீண்டும் அடிமைகளாக இருந்தனர். அதற்காக தங்கள் இன்னுயிரையும் விலையாகத் தர முயன்றனர். பாலைவனத்தில் நிலவிய உணவுப் பற்றாக்குறை கடவுளுடைய அரும்பெரும் செயல்களை மறந்துவிட அவர்களைத் தூண்டியது. மேலும், கடவுள் தங்களைத் தொடர்ந்து பராமரிப்பாரா? என்ற அவநம்பிக்கைநிறை கேள்வியையும் அவர்கள் உள்ளத்தில் எழுப்பியது.

அவர்கள் தங்கள் மனத்தளவில் எகிப்து நாட்டையே விரும்பி தனக்குத் துரோகம் செய்தாலும், ஆண்டவர் தன் பிரமாணிக்கம் மற்றும் பற்றுறுதிநிலையில் தவறவில்லை. முணுமுணுக்கும் அந்த மக்களுக்கு மன்னாவும் காடையும் வழங்குகின்றார். இவை இரண்டுமே இயற்கை நிகழ்வுகள். எபிரேயத்தில், 'மன்னா' என்றால், 'அது என்ன?' என்பது பொருள். பாலைவன மரங்கள் சுரத்த பிசின் போன்ற உணவு வகையே மன்னா. அதிகாலையில் மரத்தில் வடியும் அது மதிய வெயிலில் மறைந்து போகும். காடைகள் பாலைவனத்தை ஒரே வேகத்தில் கடக்க முடியாமல், சோர்வடைந்து ஆங்காங்கே தரையிறங்கி நின்று ஓய்வெடுக்கக்கூடியவை. இவற்றை உணவாகத் தந்ததன் வழியாக, கடவுள் இயற்கையின் வழியாக அவர்களுக்கு ஊட்டம் தருகின்றார்.

'விண்ணகத்தின் கொடையான' மன்னா அவர்களுக்கு தினமும் கிடைக்கும். அதைச் சேகரித்து வைக்கவோ, சேமித்து வைக்கவோ வேண்டாம் என்று கடவுள் அவர்களை எச்சரித்தார். ஓய்வுநாளுக்கு முந்திய நாள் மட்டும் அவர்கள் ஓய்வுநாளுக்காகச் சேமித்துக்கொள்ளலாம். இப்படியாக, அவர்கள் ஆண்டவராகிய கடவுளின் பராமரிப்புச் செயலில் நம்பிக்கை கொள்ளவேண்டும் என்று அவர்களுக்குக் கற்றுக்கொடுத்தார். அத்தகைய பற்றுறுதியும் கீழ்ப்படிதலும் கடவுளின் மக்கள் கொள்ள வேண்டிய அடிப்படைப் பண்புகளாக இருந்தன. இப்படியாக, தங்களுடைய கற்பனை உணவையும், திட்டமிடுதலையும் விட்டு இறைவனின் விரலைப் பிடித்துக்கொண்டு அவர்கள் பயணம் செய்ய வேண்டியதாக இருந்தது. தொடர்ந்து அவர்களுக்கு உணவு கொடுத்ததன் வழியாக கடவுள் தன் மக்களுக்குப் பிரமாணிக்கமாக இருந்தார். ஆனால், மக்களோ உள்ளத்தில் உறுதியற்றவர்களாக இருந்தனர் – ஒரு பக்கம் ஆண்டவர் தரும் உணவையும் உண்டனர், இன்னொரு பக்கம் கருணையற்ற தங்களுடைய எகிப்தியத் தலைவர்களின் உணவின்மேலும் நாட்டம் கொண்டவர். ஆண்டவருக்கும் பாரவோனுக்கும் இடையே ஆடிக்கொண்டிருந்த ஊசல் போல இருந்தது அவர்களுடைய வாழ்க்கை.

இரண்டாம் வாசகம் (காண். எபே 4:17,20-24), இரண்டு வகையான வாழ்க்கை முறைகளை வேறுபடுத்திக் காட்டுகிறது: கிறிஸ்தவ முறை மற்றும் புறவினத்தார் முறை. இந்த இரண்டு முறைகளுக்கும் இடையே இருக்கின்ற தெரிவை எபேசிய நகரத் திருஅவைக்கு முன்மொழிகின்றார் பவுல். 'வீணான எண்ணங்கள்,' 'தீய நாட்டங்கள்,' 'ஏமாற்றும்,' 'அழிவுக்கு இட்டுச் செல்லும்', 'புத்தியை மழுங்கடிக்கும்,' 'கடவுளிடமிருந்து அந்நியப்படுத்தும்,' 'கடின உள்ளம் கொண்ட,' 'அழுக்கும் பேராசையும்' நிறைந்த வாழ்க்கை முறையாக இருந்தது புறவினத்தார் வாழ்க்கை முறை. யூத-கிறிஸ்தவ சமூகம் அன்றைய கிரேக்கச் சமூகத்தின் அறநெறியை எப்படிப் பார்த்தது என்பதை இது நமக்குச் சுட்டிக்காட்டுகிறது. பலகடவுளர் வழிபாட்டு முறை தழுவப்பட்ட நிலையில் மக்களை அடிமைப்படுத்திய, அறநெறிப் பிறழ்வுகள் நிறைந்த சமூகமாக அன்றைய கிரேக்கச் சமூகம் இருந்தது. இச்சமூகம் கடவுளின் சட்டத்தை உணராததாகவும், அறநெறியில் பிறழ்வுபட்டதாகவும் உணர்கின்ற பவுல், அதற்கான மாற்றுச் சமூகமாகக் கிறிஸ்தவ சமூகம் இருக்க வேண்டும் என்று விரும்புகின்றார். இருந்தாலும், தங்களுக்கு அருகில் வாழ்ந்த மக்களின் வாழ்க்கை முறையில் கிறிஸ்தவர்கள் மிகவும் அதிகம் ஈர்க்கப்படுகின்றனர். மேலும், புதிதாக மனம் மாறி கிறிஸ்தவத்தைத் தழுவியவர்கள் தங்கள் பழைய முறையையும், முறைமைகளையும் விட்டுவிட இயலாமல் தவித்தனர். சில வேளைகளில் கிறிஸ்தவத்தைப் பெயரளவில் தழுவிக்கொண்டு, மனதளவிலும் உடலளவிலும் தங்கள் பழைய வாழ்க்கையை வாழ்ந்து சமரசம் செய்தனர். இப்படி அவர்கள் செய்ததால் தங்களுடைய தான்மையையும் நம்பிக்கை அர்ப்பணத்தையும் நீர்த்துப்போகச் செய்தனர்.

பவுல் சமரசமற்ற ஒரு நிலைப்பாட்டை எடுக்கின்றார். 'இது அல்லது அது. இடைப்பட்டது எதுவும் இல்லை' என்று நேரிடையாக அவர்களுக்குச் சவால் விடுகின்றார். புறவினத்து முறைமேல் உள்ள ஈர்ப்பை வெல்வது அவர்களின் அன்றாடப் போராட்டமாக இருக்க வேண்டும் என அறிவுறுத்துகின்றார். பழைய வழிகளை விட்டுவிட்டு, தங்கள் மனப்பாங்கை அவர்கள் புதுப்பித்து, 'கிறிஸ்துவை அணிந்துகொள்ள' அழைக்கின்றார். இந்தப் புதிய மனிதருக்குரிய இயல்பு, படைப்பின் தொடக்கத்தில் கடவுள் முதல் மனிதர்களுக்கு அளித்த இயல்பை மீட்டுருவாக்கம் செய்வதாக இருக்கும். இவ்வாறாக, இரண்டு வழிகளில் ஒன்றைத் தெரிவு செய்வது மற்றொன்றை விடுவதைக் குறிப்பதாகும் எனச் சொல்கின்ற பவுல், கிறிஸ்துவின் வழி நோக்கி அவர்கள் திரும்ப அவர்களை ஊக்குவிக்கின்றார். கிறிஸ்துவின் வழியில் நடப்பதன் வழியாக அவர்கள் தங்கள் வாழ்வின் ஊட்டத்தைக் கண்டுகொள்வார்கள். கண்ணுக்கு விருந்தளிக்கும் ஆனால் காலப்போக்கில் நம்மையே அழிக்கும் புறவினத்தாரின் வழி தவறான ஊட்டத்தையே தரும் என எச்சரிக்கின்றார்.

நற்செய்தி வாசகம், அப்பங்கள் பலுகிய நிகழ்வு மற்றும் இயேசு கடல்மேல் நடக்கும் நிகழ்வு (காண். யோவா 6:16-22) ஆகியவற்றின் தொடர்ச்சியாக அமைந்துள்ளது. இந்த இரு அரும்பெரும் நிகழ்வுகளும் மக்கள்மேல் ஏற்படுத்திய தாக்கத்தை நம் கண்முன் கொண்டு வருகின்றார் யோவான். வியத்தகு முறையில் வயிறு நிரம்பிய மக்கள் இயேசுவை இறைவாக்கினராகவும் அரசராகவும் கண்டு அவரை எதிர்நோக்கிக் காத்திருக்கின்றனர். இருந்தாலும், அவர்கள் அவரைத் தேடியதன் காரணம் தவறு. இன்னும் அதிக அப்பங்களையும் மீன்களையும் அவர் தருவார் என்றும், அரசர் தருகின்ற பாதுகாப்பை அவர் தங்களுக்கு வழங்குவார் என்றும் எதிர்நோக்கினர். அவர்களின் தவறான எண்ணங்களைத் திருத்துகின்ற இயேசு தான் அவர்களுக்குக் கொடுக்க விரும்புது என்ன என்பதைத் தெளிவுபடுத்துகின்றார். 'மானிட மகனாக' அவர் அவர்களுக்கு வழங்கும் உணவு சாதாரண அப்பம் அல்ல, மாறாக, நீடித்த, நிலையான ஊட்டம் என்று அறிவிக்கின்றார்.

இயேசுவின் வார்த்தைகளைத் தவறாகப் புரிந்துகொள்கின்ற மக்கள், அந்த உணவை உடல் உழைப்பால் பெற்றுக்கொள்ள முடியும் என்று எண்ணி, அந்த உணவைப் பெறுவதற்கான வழியைப் பற்றி இயேசுவிடம் கேட்கின்றனர். தன்மேல் அவர்கள் கொள்ளும் நம்பிக்கையே நீடித்த உணவின் ஊற்று என்கிறார் இயேசு. இதை ஏற்றுக்கொள்வதற்கு அவரிடம் அறிகுறி கேட்டு நிற்கின்றனர் மக்கள். மோசேயின்மேல் நம்பகத்தன்மையை உருவாக்க அன்று மன்னா பொழியப்பட்டது. இயேசு என்ன கொடுப்பார்? மக்கள் மேற்கோள் காட்டிய இறைவார்த்தையின் சரியான பொருளை இயேசு தருகின்றார். பாலைவனத்தில் இஸ்ரயேல் மக்களுக்கு உணவு கொடுத்தது மோசே அல்ல, கடவுளே என்று தெளிவுபடுத்தும் இயேசு, 'என் தந்தையே' என்று கடவுளை அழைக்கின்றார். இதுவே அவர்களுக்குள் ஒரு பெரிய நெருடலை ஏற்படுத்தியிருக்கும். கடவுள் தன் மகனையே புதிய அப்பமாக அனுப்பி மானுடத்தின் பசியையும் தாகத்தையும் போக்க விரும்புகின்றார்.

இயேசுவைத் தேடி வந்த கூட்டத்தின் எண்ணமெல்லாம் தவறான ஊட்டத்தின்மேல் இருந்தது. முதல் வாசகத்தின் இஸ்ரயேல் மக்கள் போல, தங்கள் வயிற்றுக்கான உணவையே அவர்கள் தேடி நின்றனர். ஆனால், இயேசு வழங்க விரும்பிய உணவோ வேறு. மக்கள் தங்கள் எண்ணத்தை மாற்றிக்கொண்டு, இப்புதிய உணவை ஏற்றுக்கொள்வார்களா? அல்லது சாதாரண அப்பத்தையே அவர்கள் இன்னும் நாடி நிற்பார்களா? என்பதே கேள்வி.

இவ்வாறாக,

இன்றைய இறைவார்த்தை வழிபாடு சரியான ஊட்டம் பற்றிய தவறான புரிதல்களை நம்முன் நிறுத்துகின்றது. உடல் பசியால் உந்தப்பட்ட இஸ்ரயேல் மக்கள் அடிமைத்தனத்தின் பாதுகாப்பையே விரும்பினர். ஏனெனில், அது அவர்களுடைய உடல் பசியைப் போக்குவதாக இருந்தது. அவர்களுக்கு இப்போது தேவைப்படுவதோ கடவுள்மேல் நம்பிக்கையும் அவருடைய பராமரிப்பின்மேல் பற்றுறுதியும்தான். அவர்கள் எதைத் தெரிவு செய்வார்கள்?

இரண்டாம் வாசகத்தில், பவுல் சரியான வாழ்க்கை முறையைத் தெரிந்துகொள்ள எபேசிய நகர இறைமக்களை அழைக்கின்றார். அவர்கள் ஈர்ப்பு நிறைந்த புறவினத்தார் வழியைத் தெரிந்துகொள்வார்களா? அல்லது ஊட்டமும் வாழ்வும் தருகின்ற கிறிஸ்தவ வழியைத் தெரிந்துகொள்வார்களா?

தன்னைத் தேடி வந்த மக்களின் தவறான புரிதல்களைச் சரி செய்கின்ற இயேசு தான் அவர்களுக்கு அளிக்க விரும்புவது எது என்பதைத் தெளிவுபடுத்துகின்றார். அப்பத்தையும் மீனையும் கொடுக்க அவர் வரவில்லை. மாறாக, நிலைவாழ்வுக்கான ஊட்டத்தை வழங்க அவர் வந்துள்ளார். இயேசு தரும் அந்த உணவின்மேல் மக்கள் நாட்டம் கொள்வார்களா? தங்களுடைய எதிர்பார்ப்புகளை மாற்றிக்கொள்வார்களா? இக்கேள்விகளுக்கான விடையைத் தருகின்ற இனி வரும் வாரங்களின் வாசகங்கள்.

இயேசுவே வானகத் தந்தை நம்மை நோக்கி அனுப்பிய உணவு. இந்த உணவையே 'வானதூதரின் உணவு' என அழைக்கின்றார் இன்றைய பதிலுரைப்பாடலின் ஆசிரியர் (காண். திபா 78). வானத்து உணவை உண்டு மகிழும் நாம் தவறான உணவின் மேலும் ஊட்டத்தின் மேலும் நாட்டம் கொள்தல் சரியா?

இன்றைய நாம் வாழ்க்கை முறையில் ஏதோ ஒரு இனம் புரியாத குறையுணர்வு நம்மை இறுகப் பற்றியுள்ளது. எதன்மேலும் நமக்கு நிறைவு இல்லை. கையில் இருக்கும் செயல்திறன் பேசியை எவ்வளவு முறை பார்த்தாலும் இன்னும் அதைப் பார்க்க வேண்டும் என்றே தோன்றுகிறது. எவ்வளவு எதிர்மறையான செய்திகளை தொலைக்காட்சிகள் நம் இல்லங்களில் கொட்டினாலும் அவற்றைக் கேட்டுக் கொண்டே இருக்கவே மனம் விரும்புகிறது. ஸ்விக்கி, சோமாட்டோ என எச்செயலியில் நாம் உணவுக்கு ஆணையிட்டாலும் நம் உடல் இன்னும் அதிகம் கேட்கிறது. இந்த நிரந்தரமான அதிருப்தி உணர்வு கடவுள் நம் வாழ்வில் ஆற்றும் செயல்களை மறக்கடிக்கிறது. கடவுளின் அரும்பெரும் செயல்களையும் அவர் தந்த விடுதலையையும் நாம் மறந்து ஆண்டுகள் பல ஆகிவிட்டன. அவருடைய பராமரிப்பு நமக்கு மறந்து போயிற்று. அவருக்கு நன்றி சொல்வதற்குப் பதிலாக நாமும் பல நேரங்களில் அவரை நோக்கு முணுமுணுக்கிறோம்.

வைஃபை கிடைக்கவில்லை என்றால், மொபைலில் சார்ஜ் இறங்கி விட்டால், நெட்வொர்க் சிக்னல் கிடைக்கவில்லை என்றால், உணவு வந்து சேரத் தாமதமானால் நாம் முணுமுணுக்கிறோம். உறவுகளில் முணுமுணுப்பு, பணியில் முணுமுணுப்பு, பயணத்தில் முணுமுணுப்பு என்று வாழ்க்கை நகர்கிறது. நம் தேடல்கள் எல்லாம் வீணாகப் போகின்றன. நாம் தேடிக் கண்டுபிடித்த புதையல்களாக நினைப்பவை செல்லாக் காசுகளாக மாறுகின்றன. இருந்தாலும் தேடி ஓடுகிறோம். தன் வாலைத் தானே கடித்துத் தின்று தன்னை அழித்துக் கொள்ளும் புராணக் கதை பாம்பு போல, நம்மை நாமே கடித்துக் தின்கிறோம்.

நம்மைச் சுற்றி இருக்கும் அனைத்தும் ஊட்டம் தந்தாலும், உண்மையான ஊட்டம் என்பது இறைவனிடம் மட்டுமே இருக்கின்றது. தவறான ஊட்டங்கள் நமக்கு சற்று நேரம் இன்பம் தரலாம். ஆனால், நீடித்த மகிழ்ச்சியை அவை நம்மிடமிருந்து பறித்துவிடுகின்றன.

உண்மையான ஊட்டத்தின், நீடித்த மதிப்பீடுகளின் ஊற்று – கடவுள் மட்டுமே.

அவரின் ஊட்டம் பெறும் நாம் அன்றாட வாழ்வில் பசி, தாகம், வேலையின்மை, வறுமை, புலம்பெயர்நிலை போன்ற காரணிகளால் வருந்தும் நம் சகோதர சகோதரிகளுக்கு ஊட்டம் தருதல் நலம்.

1 comment:

  1. ஆண்டின் பொதுக்காலத்தின் 18ம ஞாயிறு. உண்மையான ஊட்டத்தையும், ஆண்டவரின் அளப்பரிய செயல்களையும் மறந்து ,தவறான ஊட்டத்தின் மேல் நாட்டம் கொள்ளும் இஸ்ரேல் மக்களின் இழிநிலை பற்றியும், இயேசு தரும் உண்மையான வாழ்விற்கான ஊட்டம் பற்றியும் முன் வைக்கின்றன இன்றைய வாசகங்கள்.

    கானல் நீர் போன்றிருந்த மக்களின் வாழ்வினை மன்னாவாலும், காடைகளாலும் நிரப்பிய இறைவனை மறந்து ….அதுவே நிரந்தரமென நம்பி பாரவோனிடம் மீண்டும் அடிமைகளாகிவிடத் துடித்த மக்களின் பேதமை.தங்களிடம் பிரமாணிக்கம் காட்டிய இறைவனா இல்லை அடிமைத்தனத்தின் தளைகளில் கட்டிவைத்த பாரவோனா…. எதைத்தேடிச் செல்கிறது இந்த நன்றி மறந்த கூட்டம்? பொறுமை காக்கும் இறைவன் இங்கே நம் கண்களுக்குப் பெரிதாகத்தெரிகிறார் முதல் வாசகத்தில்.

    தன்னைத்தேடி வந்த மக்களுக்குத் அவர் கொடுக்கவிருப்பது மீனும்,அப்பமுமா.. இல்லை இறைவார்த்தையின் ஊட்டமா என்ற குழப்பத்தை ஏற்படுத்திப் பின் புரிதலைத்தருகிறது இரண்டாம் வாசகம்.”இயேசுவே வானகத்தந்தை நமக்காக அனுப்பிய உணவு” என்று தெரிந்த பிறகும், தவறான ஊட்டத்தின் மேலும்,உணவின் மேலும் நாட்டம் கொள்தல் சரியா?…. கேள்வியைத் தொடுக்கிறார் பவுலடியார்.

    இயேசுவே அவர்களுக்குத் தன் தந்தையால் அனுப்பப்பட்ட நிரந்தர உணவு என்பதை அறியாத மக்கள், அப்பம் மற்றும் மீன்களுக்காக மட்டுமே அவரைச்சுற்றி வந்தனர் எனக் கோடிட்டுக்காட்டும் நற்செய்தி வாசகம்.நிலையான வாழ்வு கொடுக்க வந்த இயேசுவைப் புரிந்து கொள்ளா மக்கள் அவரை அப்பம் மற்றும் மீன் வடிவில் சுருக்கி விடுகின்றனர்.

    அந்த மக்களின் மனநிலை குறித்து ஆராயும் நம்முடைய மனநிலை என்ன? இறைவன் தந்த அத்தனை நிலையான ஆசார்வாதங்களை மறந்து உதறிவிட்டு,அழிந்து போகும் கானல் நீர் போன்ற விஷயங்களுக்காக முணுமுணுப்பதில்லையா? தடம் புரண்டு போயிருக்கும் நாம் தடம் மாற வேண்டிய தருணமிது.

    இன்றைய உண்மைகளின் பின்புலத்தில் அவரால் ஊட்டம் பெற்ற நாம் அன்றாட வாழ்வில் பசி,தாகம்,வேலையின்மை, வறுமை,புலம் பெயர்ந்த நிலை போன்ற விஷயங்களால் வறுமையில் வாடுவோருக்கு ஊட்டமளிப்போம்.

    பதிலுரைப்பாடலின் ஆசிரியரோடு இணைந்து “ வானக தூதரின் உணவை” உண்ட நாம் தவறான உணவின் மீதும்,ஊட்டத்தின் மீதும் நாட்டம் கொள்வதைத் தவிர்ப்போம். மறைந்து போகும் கானல் நீரையல்ல…. மாறா வாழ்வளிக்கும் “ வானதூதரின் உணவையே” நாடித் தேடுவோம். வாழ்வின் மையமாக இருக்க வேண்டிய அழகானதொரு விஷயத்தை அறிவு பூர்வமாக்கித் தந்த தந்தைக்கு நன்றிகளும்! ஞாயிறு வணக்கங்கள்!!!

    புதிய மாதத்தின் முதல் நாள் மட்டுமல்ல…அனைத்து நாட்களுமே நமக்கு ஆசீர்வாத்த்தை அள்ளித்தெளிக்கட்டும்! அன்புடன்….

    ReplyDelete