Tuesday, August 31, 2021

சிங்கத்தின் தேன் - 6

சிம்சோன் புதிரும் புதினமும்

நாசீர்

இவள் கருத்தரிப்பாள் என்று சொன்ன வானதூதர் மறைந்துவிட்டார். தன் கணவனிடம் அவள் ஓடுகிறாள். அச்சமும் மகிழ்ச்சியும், கலக்கமும் துள்ளலும் கலந்த ஓர் உணர்வு அவள் வயிற்றில் நெளிந்துகொண்டிருக்கிறது. அவள் கருத்தரித்துவிட்டாள். அல்லது சீக்கிரம் கருத்தரிப்பாள். ஆனால், அந்தக் குழந்தை? எப்படிச் சொல்வது? அந்தக் குழந்தை அவளுடையது அல்ல. மற்ற எல்லாத் தாய்மார்களுக்கும், அவர்கள் பெற்றெடுக்கும் குழந்தை அவர்களுடையது. ஆனால், பாவம் இவள்! இவளின் குழந்தை இவளுடையது அல்ல! பத்து மாதங்கள் ஒரு குழந்தையைப் பாதுகாக்கும் வங்கியின் பாதுகாப்புப் பெட்டகம் அவள். அவ்வளவுதான்! அவள் ஒரு சேமிப்புப் பெட்டகம்! அவளுக்குத் தெரியும்! சேமிக்கப்படும் அனைத்தும் அதன் உரிமையாளரிடம் திருப்பிக் கொடுக்கப்பட வேண்டும். பெட்டி அவளுடையது! ஆனால், பணம் அவளுடையது அன்று! நிலம் அவளுடையது! ஆனால், புதையல் அவளுடையது அன்று!

ஏதோ ஓர் இனம் புரியாத சுமையால் அவள் சுமத்தப்படுகிறாள். அவளின் நடை தளர்கிறது. அவளுடைய வயிற்றில் வளரும் அந்தக் குழந்தை யார்? அவனுடைய உடல் உருவாக்கத்திற்குக் காரணம் யார்? தன் தந்தையின் விந்திலும், தாயின் சுரோணிதத்திலும் பிறந்தவனா அவன்? அவன் அவர்களின் எலும்பின் எலும்பா? சதையின் சதையா? அவன் யார்? அசாதாரணமான, அவிழ்க்க முடியாத முடிச்சாய் இருக்கின்ற, புரிந்துகொள்ள முடியாத புதிராய் இருக்கின்ற அவன் யார்? அவன் அசாதாரணமான மனிதனா? முதலில் அவன் மனிதனா?

அவனுடைய உருவில், உடலில் எத்தனை சதவிகிதம் என்னுடையது? நான் இந்தக் குழந்தைக்காகத்தான் கடவுளிடம் கண்ணீர் சிந்தி மன்றாடினேனா? இயற்கையான, இயல்பான, தாய்மைக்குரிய அன்பை இவனுக்கு நான் கொடுக்க முடியுமா? நான் என் அன்பை அள்ளி இறைக்க ஒரு மகனுக்காகக் காத்திருந்தேனே! ஆனால், இப்போது மகன் கிடைத்துவிட, அன்பை அள்ளி இறைக்க என்னால் ஏன் இயலவில்லை? – தன் கணவனிடம் நற்செய்தி சொல்ல ஓடிய அந்த இளவலின் எண்ணங்களில் உதித்த கேள்விகள் இவை.

தன் கணவனைச் சந்தித்து, அவள் அவனிடம் பேசத் தொடங்கியவுடன், அமுக்கி வைத்த வார்த்தைகளை அவள் அடுக்கத் தொடங்கியவுடன், மூடையை அவிழ்த்துக் கொட்டிய நெல்லிக்காய்களாக, அவை இங்குமங்கும் சிதறி ஓடுகின்றன. எண்ணங்களின் பேரிரைச்சல் ஆற்றலோடு அவளை அமுக்குகிறது. 'பையன், கருவில் உருவாகும் நாள் முதல்' என்று சொல்லத் தொடங்கியவளின் கழுத்தில் ஏதோ முள் சிக்கியது போல, துப்பவும் முடியாமல், விழுங்கவும் முடியாமல், விழிபிதுங்கி நின்ற அவள், தனக்கு வானதூதர் சொன்ன வார்த்தைகளைச் சொல்வதற்குப் பதிலாக, அவற்றை விழுங்கிவிட்டு, முற்றிலும் மாறுபட்ட, யாரும் எதிர்பார்த்திராத, ஏன், அவளையே ஆச்சர்யத்திற்குள்ளாக்கிய அந்த வார்த்தைகளை உதிர்க்கிறாள்: 'அவன் இறக்கும் நாள் வரை!'

இதோ! இந்தத் தாய்! பிறக்குமுன்னே தன் மகனின் இறப்பு நாள் பற்றிப் பேசி, அவனுக்கு தாலாட்டு பாடும் முன்பே ஒப்பாரி வைத்துத இந்தத் தாய்! மோகனம் பாடுவதற்கு முன்பே முகாரி பாடிய இந்த அபலைப் பெண், இனி தன் குழந்தையோடு சொல்ல முடியாத நிலையில் அந்நியப்பட்டு நிற்பாள். அவளின் தொப்புள்கொடி அவனை இணைத்தாலும், அந்த முடிச்சு போட்ட நொடியிலேயே அவிழ்ந்து போயிற்று. இனி அவன் அவளுக்குச் சொந்தமில்லை. இல்லை! அவன் எப்போதுமே அவளுக்குச் சொந்தமில்லை. தன் தாயிடமிருந்து பிறப்பிலேயே அந்நியப்பட்ட அவன், சிம்சோன், இனி தன் வாழ்நாள் முழுவதும் அந்நியப்பட்டே நிற்பான். அவனுக்கு அவன் தாயே சொந்தமில்லை. ஆக, அவனுக்கு யாருமே சொந்தமில்லை. அவன் இனி சந்திக்கும் எல்லாரும் அவனை ஏமாற்றுவார்கள், காட்டிக் கொடுப்பார்கள், மறுதலிப்பார்கள், பயன்படுத்துவார்கள், வேடிக்கை பார்ப்பார்கள், கேலி செய்வார்கள். தன் இனத்தின் மீட்புக்காய்ப் பிறந்த அவன், தனக்கே அந்நியனாய் இறந்து போவான். சிம்சோன், தன் வாழ்வின் இறுதியில் சொல்வதுபோல, அவன் 'மற்ற மனிதர்களைப் போல அல்ல!' அவன் ஒருபோதும் மற்றவர்களைப் போல இருக்க முடியாது. ஏனெனில், மற்றது என்ற முதல் உறவே அவனுக்கு அந்நியமாய்ப் போயிற்று.

ஆக, சிம்சோனின் பிறப்பால் அவனுடைய தாயின் மலட்டுத்தன்மை குணமானாலும், அந்நியப்படுத்தப்படுதல் என்னும் மலட்டுத்தன்மையை, அவள் தன்னை அறியாமலேயே தன் மகனின் செல்லுக்குள் கடத்தி விட்டாள். உடலின் மலட்டுத்தன்மை அவளுக்கு நலமானது. ஆனால், உறவின் மலட்டுத்தன்மை அவளுடைய மகனைப் பற்றிக்கொண்டது. பாவம்! மலட்டுத்தன்மை சிம்சோனின் குடும்ப நோயாகிப்போனது!

இருந்தாலும், கடவுள்தான், சிம்சோனின் தாய் அல்ல, அவளுடைய மகனை நாசீர் நிலைக்கு எடுத்துக்கொள்கின்றார். அவனுக்கும் அவனுடைய வாழ்க்கைக்கும் இடையே இணைக்க முடியாத ஒரு பிளவை ஏற்படுத்துபவர் கடவுளே. 'நாசீர்' என்ற எபிரேய வார்த்தை, 'நாடர்' ('பொருத்தனை') என்ற வார்த்தையிலிருந்தும், 'ஸ்சார்' ('அந்நியன்') என்னும் வார்த்தையிலிருந்தும் வருகிறது. இந்தப் பிளவு யாரும் கடக்க முடியாத பிளவாக சிம்சோனுக்கு இருக்கும். அவனுக்கு அருகில் யாரும் வர முடியாது. வருகிற எவரும் அவனைவிட்டுத் தப்ப முடியாது. இனி அவன் தன் வாழ்நாள் முழுவதும் இருதுருவங்களால் இழுக்கப்பட்டுக்கொண்டே இருப்பான். கடவுள் அவனை நாசீர் எனத் தனக்கென எடுத்துக்கொண்டாலும், தன்னுடைய வயிற்றின் கரு முளையைப் பார்த்து, அவள் சொன்ன அந்தக் குளிர்ந்த வார்த்தைகள், 'அவன் இறக்கும் நாள் வரை' என்னும் வார்த்தைகள், கடவுளின் கட்டளையை உறுதி செய்வதுபோல ஆக்கிவிட்டன.

(தொடரும்)


1 comment:

  1. உறங்கச் செல்லும் நேரம்! என் கண்கள் பார்ப்பதும்,காதுகள் கேட்பதும் முகாரி இராகங்கள்.பத்து மாதம் வங்கியின் ஒரு குழந்தையைப் பாதுகாக்கும் பாதுகாப்புப் பெட்டகம் மட்டுமே அவள்!. அவ்வளவே! பெட்டி அவளுடையது; பணம் அவளுடையதல்ல; நிலம் அவளுடையது..ஆனால் புதையல் அவளுடையதல்ல…. நெஞ்சில் முள் தைத்த உணர்வோடு எத்தனை நாளைக்குத் அந்த வலியோடு ஒரு பெண் வலம் அவர் முடியும்!?

    அவளால் விழுங்கவோ, துப்பவோ முடியாமல் மனத்தில் பதுக்கி வைத்திருந்தது வேறு ஏதுமில்லை…” அவன் இறக்கும் நாள் வரை!” கணவனோடு கூட பகிர முடியாத விஷம் போன்ற விஷயத்தைப் பாவை அவள் எப்படிப் பாதுகாப்பாள்?அவளுடைய உடலின் மலட்டுத்தன்மை நலமாக, உறவின் மலட்டுத்தன்மையை இருவருடைய விருப்பமில்லாமலே மகனுக்குள் பாய்ச்சி விட்டாள் அவள்! அவளின் மகனை உறவிலிருந்து…..உணர்விலிருந்து பிரிப்பவர் கடவுளே! அவனை மற்ற குழந்தைகள் போல் பிறக்க வைத்து நாசீராக்க முடியாதா? எதற்காக இறைவன் அவர்கள் வாழ்வைத் தன் விளையாட்டு மைதானமாக்குகிறார்?. அந்தத் தாய்க்கும் பேச முடிந்த ஒரே வார்த்தை “ இறக்கும் நாள் வரை என்றானது்”

    அவனாலோ….அவளாலோ தங்களின் நிலை குறித்துக் கேட்க முடியாது இறைவனிடம்! ஏனெனில் அவர் இறைவன்! ..கேள்விகளுக்கெல்லாம் அப்பாற்பட்டவர். அவர் தருவது விஷமாயினும்…விருட்சமாயினும் நாம் விழுங்கியே ஆகவேண்டும்!

    சோக விஷயங்களுக்கு இந்த அளவுக்கு ஒரு உணர்வூட்டி….உயிரூட்டி நம் கண்களுக்கு வந்தடையும் நேரத்தையும் கணக்கிட்டு தந்தை கதை சொல்லும் விதத்திலும் ஒரு
    வசீகரம் இருக்கத்தான் செய்கிறது! வாழ்த்துக்கள்!!!

    ReplyDelete