சிம்சோன் புதிரும் புதினமும்
தேன் பாட்டிலைத் திறக்குமுன்
'உண்பவனிடமிருந்து உணவு வெளிவந்தது.
வலியவனிடமிருந்து இனியது வந்தது'
... ... ...
'தேனினும் இனியது எது?
சிங்கத்தினும் வலியது எது?'
(நீதித் தலைவர்கள் 14:14,18)
என் நெடுநாள் கனவு ஒன்றை இன்று நான் நிறைவேற்றத் தொடங்குகிறேன்.
சிம்சோன் பற்றிய ஒரு புதினத்தை தமிழில் எழுதிப் பார்க்கும் என் அவா, எழுதினால்தான் நிறைவேறும் என்பதால் இன்று எழுதத் தொடங்குகிறேன்.
நீதித்தலைவர், வீரர், பலசாலி, தெய்வமகன், சபலன், நாசீர் என பல பெயர்களால் நம் காதுகளில் ஒலித்தாலும் சிம்சோன் இன்றும் ஒரு புதிராகவே இருக்கின்றார். விவிலியம் காட்டும் இக்கதைமாந்தர் பற்றி நிறைய புதினங்கள் எழுதப்பட்டுள்ளன. அவற்றில், டேவிட் க்ரோஸ்மான் அவர்கள் எபிரேயத்தில் எழுதி, ஸ்டூவர்ட் ஸ்ஷாப்மேன் அவர்கள் ஆங்கிலத்தில் மொழிபெயர்த்த 'லயன்ஸ் ஹனி: தெ மித் ஆஃப் சாம்சன்' என்னும் நூலைத் தழுவி, நான் என்னுடைய எபிரேய வகுப்புகளில் இக்கதையாடல்கள் பற்றிக் கற்றறிந்ததைக் கலந்து, ஓர் அழகியல் தொடராகப் பதிய விரும்புகிறேன். மேற்குறிப்பிட்ட நூலையும் என் ஆசிரியர்களின் விளக்கக் குறிப்புகளையும் நான் எடுத்தாளுகிறேன் என்பதை இங்கே குறிப்பிட்டு அவர்களுக்கு என் நன்றியை உரித்தாக்குகிறேன்.
'ஒன்றைப் பற்றிக்கொண்டிருக்கும்போது, அதற்கு மாறானதைக் கைவிடாதீர். நீவிர் கடவுளுக்கு அஞ்சி நடப்பீரானால் அனைத்திலும் வெற்றி பெறுவீர்!' (சஉ 7:18)
ஒரே நேரத்தில் இரு தூண்களுக்கு இடையே நின்றவர் சிம்சோன்.
ஒரே நேரத்தில் நாசீர் அர்ப்பணத்தையும் அதை மீறுதலையும் பற்றிக்கொண்டவர் அவர்.
ஒரே நேரத்தில் பெலிஸ்தியப் பெண்களையும் தன் இனத்து மக்களையும் அரவணைத்துக்கொண்டவர் அவர்.
சிங்கமும் தேனுமாக அவர் இருந்தாரா?
அல்லது சிங்கத்தின் தேனாக அவர் இருந்தாரா?
கடவுளே சிங்கமா? அவருடைய பிரமாணிக்கமே தேனா?
அல்லது சிம்சோன்தான் சிங்கமும் தேனுமா?
சிங்கத்தின் தேனைச் சுவைக்க முயற்சி செய்வோம்.
முதலில் கதையைத் தொடங்குவோம்.
சிம்சோன் தெலீலாவின் மடியில் படுத்துறங்கும் அந்தப் பொழுது
அந்தப் பொழுதுதான் சிம்சோன் கதையாடலில் அனைவரின் கவனத்தையும் ஒரே புள்ளியில் குவிக்கும் பொழுது! தன்னுடைய வன்மம், வன்முறை, உணர்வுப் பேரார்வம் அனைத்தையும் முடக்கி ஒரு குழந்தைபோல் மடியில் தூங்குகிறார்
இந்தப் பொழுதில்தான் அவருடைய விதியும் முத்திரையிடப்படுகிறது. அவருடைய தலைமுடியை ஒரு கையிலும், சவரக்கத்தியை இன்னொரு கையிலும் தெலீலா ஏந்தியிருக்கும் அந்த நேரத்தில், அந்த அறைக்கு வெளியே பிலிஸ்தியர்கள் மகிழ்ச்சி ஆரவாரம் செய்கிறார்கள். விரைவில் அவருடைய கண்கள் பிடுங்கப்பட்டு, அவர் தன்னுடைய ஆற்றல் அனைத்தையும் இழப்பார். விரைவில் சிறையில் அடைக்கப்பட்டு, எதிரிகளின் முன் விளையாட்டுப் பொருளாக நிற்பார். அவருடைய நாள்கள் விரைவில் முடிவுக்கு வரும்
ஆனால், இங்குதான், தன் வாழ்வில் முதன்முறையாக, அமைதியைக் காண்கிறார். இங்கே, துரோகத்தின் நடுவில் - இதற்காகத்தான் இவ்வளவு நாள்கள் காத்திருந்தார் - இக்கொடிய துரோகத்தின் நடுவில்தான் அவர் நிறைவான அமைதியைப் பெறுவார். தன்னிடமிருந்தும், புயலடிக்கும் தன் வாழ்வு என்ற நாடகத்திலிருந்தும் அவர் விடுவிக்கப்படுவார்.
ஒருவேளை சிம்சோன் தெலீலாவைக் காதலிக்கவில்லை என்றால்,
அவளின் மடியில் அவர் தூங்கவில்லை என்றால்,
அவரின் தலைமுடி மழிக்கப்படவில்லை என்றால்,
அவரின் கண்கள் பிடுங்கப்படவில்லை என்றால்,
அவர் தூண்கள் நடுவே நிறுத்தப்படவில்லை என்றால்,
'என் உயிர் பெலிஸ்தியருடன் மடியட்டும்' எனச் சொல்லி அவர் தன்னை மாய்த்துக்கொல்லவில்லை என்றால்,
சிம்சோனுடன் கடவுள், அவரின் தாயின் தொப்புள்கொடி வழியாகக் கட்டியிருந்த நாசீர் என்னும் அர்ப்பணத்தின் முடிச்சு அவிழ்ந்துபோகவில்லை என்றால்,
என்ன ஆகியிருக்கும்?
தெலீலா என்ற முள்ளின்மேல் சிம்சோன் என்ற பறவை சாகும் வரை மோதிக்கொள்ளும் அவசியம் ஏன்?
பெலிஸ்தியரிடமிருந்து தன் மக்களின் உயிரைக் காக்க வேண்டிய சிம்சோன், அவர்களோடு தன் உயிரை மாய்த்துக்கொண்டது ஏன்?
ஆண்டவராகிய கடவுள் என்னும் சிங்கம், தானாகத் தேர்ந்து தயாரித்த சிம்சோன் என்னும் தேன் கொட்டப்பட்டதா? கொண்டாடப்பட்டதா?
பிரிவு 1
அந்த நாள்களில், ஏறக்குறைய கி.மு. 12ஆம் நூற்றாண்டின் இறுதியில், 11ஆம் நூற்றாண்டின் தொடக்கத்தில், இஸ்ரயேலில் அரசன் யாரும் இல்லை. அதிகார மையம் என்று எதுவும் இல்லை. ஒவ்வொருவரும் தன் பார்வையில் சரி எனப் பட்டதைச் செய்துகொண்டிருந்தனர். மிதியான், கானான், மோவாபு, அம்மோன், மற்றும் பெலிஸ்தியா போன்ற அண்டை நாடுகள், எபிரேய குலங்களின்மேல் அவ்வப்போது படையெடுத்து, வெற்றி கொண்டு, தங்களுடைய ஆதிக்கத்தை அவர்கள்மேல் செலுத்தினர். அந்த நாள்களில் அக்குலங்களிலிருந்து ஒருவர் எழுவார். அல்லது கடவுள் ஒருவரை எழுப்புவார். அவர் தன்னுடைய குலத்தை, தனியாகவோ, அல்லது மற்ற குலங்களின் துணையாகவோ, அண்டை நாடுகளின் ஆதிக்கத்திலிருந்து மீட்டெடுப்பார். அவர் வெற்றி பெற்றால், அவரே அக்குலத்தின் நீதித்தலைவராக இருப்பார். எபிரேயத்தில் 'ஷோஃபெட்' என அழைக்கப்படுவார். கிதியோன், இப்தா, கேராவின் மகன் ஏகூது, அனாத்தின் மகன் சம்கார், இலப்பிதோத்தின் மனைவி தெபோரோ போன்றவர்கள் அப்படித்தான் நீதித்தலைவர்களாக இருந்தனர். இவ்வாறாக, இஸ்ரயேல் மக்கள் அடிமைத்தனத்திற்கும் விடுதலைக்கும் இடையே ஊசலாடிக்கொண்டிருந்தனர். நீதித்தலைவர்கள் நூல் முழுவதுமே, பாவத்திற்கும் மனமாற்றத்திற்கும் இடையே அவர்கள் ஆடிய ஊசலாட்டம் பற்றித்தான் எழுதப்பட்டுள்ளது. இது ஒரு வட்டம் போலச் சுற்றிக்கொண்டே இருக்கும். முதலில், அவர்கள் சிலைகளை வழிபடுவார்கள், கம்பங்களுடன் விபச்சாரம் செய்வார். அவர்களைத் தண்டிக்கும் பொருட்டு, கடவுள் அவர்களுக்கு அருகில் இருக்கின்ற ஒரு எதிரி நாட்டைத் தூண்டி விடுவார். எதிரியின் கொடுமையைத் தாங்க முடியாமல் மக்கள் ஆண்டவரை நோக்கிக் குரல் எழுப்புவர். அவர்களின் குரலுக்குச் செவிகொடுக்கின்ற ஆண்டவர், அவர்கள் நடுவே ஒருவரை எழுப்ப, அவர் மக்களை எதிரிகளிடமிருந்து காப்பாற்றுவார். எதிரிகள் அழிக்கப்பட்டு, நிலம் சிறிது காலம் அமைதியில் இளைப்பாறும். மீண்டும் இஸ்ரயேல் மக்கள், ஆண்டவர் பார்வையில் தீயதெனப்பட்டதைச் செய்வர். எதிரிகளின் கைகளில் மீண்டும் அவர்களை ஆண்டவர் விற்றுவிடுவார். இப்படியே சக்கரம் சுற்றிக்கொண்டே இருக்கும்.
(தொடரும்)
Excellent fr waiting for the countinuation
ReplyDeleteAwesome father.. ! please consider releasing as a booklet like Penmaan & Job.
ReplyDeleteஒவ்வொரு மணித்துளியையும் சாதனையாக மாற்றும் தந்தையின் இன்னொரு மைல் கல்! நெடுநாள் கனவு நனவாக வாசகர்களுடன் இணைந்து வாழ்த்துகிறேன்! தொடக்கம் என்பதைக் குறிக்கும் “ தேன் பாட்டிலைத் திறக்குமுன்” அருமை! தந்தையின் கேள்விப்படையெடுப்புகளுக்கு மத்தியில் “ஆண்டவராகிய கடவுள் என்னும் சிங்கம், தானாகத் தேர்ந்து தயாரித்த சிம்சோன் எனும் தேன் கொட்டப்பட்டதா? கொண்டாடப் பட்டதாரி?” மனம் நெருடுகிறது.
ReplyDelete“தெலீலா எனும் பச்சைத்துரோகி தன் பாசவலையில் விழுந்த விட்டில் பூச்சிதான் சிம்சோன்” பள்ளிப்பருவத்தில் காதில் விழுந்த வார்த்தைகள்! தந்தை வழி முழுவதும் கேட்க ஆவல்! தொடருங்கள் உங்கள் “ புதினப் பயணத்தை” ஆண்டவரின் உடனிருப்போடு! வாழ்த்துக்கள்!! அன்புடன்!!!
தொடருங்கள் தந்தை - நானும் உங்களைத் தொடர்கின்றேன்!
ReplyDeleteதொடரும் இறை ஆசீர்!
இனி எல்லாம் சுகமே!