Wednesday, August 4, 2021

கடவுளின் கடிந்துரை

இன்றைய (5 ஆகஸ்ட் 2021) முதல் வாசகம் (எண் 20:1-13)

கடவுளின் கடிந்துரை

இன்றைய முதல் வாசகமும் நற்செய்தி வாசகமும் கடவுள் மனிதர்களைக் கடிந்துகொள்ளும் நிகழ்வுகளை நம் கண்முன் கொண்டுவருகின்றன. இவர்கள் சாதாரண மனிதர்கள் அல்லர். முதல் வாசகத்தில் கடிந்துகொள்ளப்படுபவர் இஸ்ரயேலின் தந்தையாகிய மோசே. நற்செய்தி வாசகத்தில் கடிந்துகொள்ளப்படுபவர் புதிய இஸ்ரயேல் என்னும் திருஅவையின் தந்தையாகிய பேதுரு.

இவர்கள் கடிந்துகொள்ளப்படக் காரணம் என்ன?

இஸ்ரயேல் மக்கள் மெரிபா என்ற இடத்திற்கு வருகின்றனர். அங்கே தண்ணீர் இல்லை. தாகத்தால் வாடுகின்றனர். கடவுளை நோக்கிக் குரல் எழுப்புகின்றனர். அவர்களின் குரலுக்குச் செவிகொடுக்கின்ற ஆண்டவராகிய கடவுள், 'கோலை எடுத்துக்கொள். நீயும் உன் சகோதரன் ஆரோனும் மக்கள் கூட்டமைப்பைப் கூடிவரச் செய்யுங்கள். அவர்கள் பார்வையில் பாறை தண்ணீர் தரும்படி அதனிடம் பேசுங்கள். இவ்வாறு அவர்களுக்காகப் பாறையிடமிருந்து தண்ணீர் பெறுவீர்கள்' என்று சொல்கின்றார்.

பாவம் மோசே! கடவுளின் குரல் தெளிவாக அவருக்கு விளங்கவில்லையோ என்னவோ, கோலை எடுத்து, பாறையை இரு முறை அடிக்கின்றார். ஆண்டவர் பாறையிடம் பேசுமாறு கூறுகின்றார். மோசேயோ பாறையை அடிக்கின்றார். 'பேசுனா எப்படி தண்ணீர் வரும்?' என்று அவர் கேட்டாரோ என்னவோ?

கடவுளின் பார்வையில் இது கீழ்ப்படிதலின்மையாகவும், கடவுளின் ஆற்றலைக் குறைத்து மதிப்பிடுவதாகவும் இருந்ததால், பாலும் தேனும் பொழியும் கானான் நாட்டிற்குள் மோசேக்கு (ஆரோனுக்கும்) அனுமதி மறுக்கப்படுகின்றது.

கடவுளை நம்மால் புரிந்துகொள்ள இயலவில்லை. மாபெரும் அறிகுறிகளை நிகழ்த்திய மோசே இச்சிறிய தவறுக்காக இவ்வளவு பெரிய தண்டனையை அனுபவிக்க வேண்டுமா?

நற்செய்தி வாசகத்தில், 'நீங்கள் என்னை யார் எனச் சொல்கிறீர்கள்?' என்று இயேசு தன் சீடர்களிடம் கேட்கின்றார். 'நீர் மெசியா! வாழும் கடவுளின் மகன்!' என்று பதிலிறுக்கின்றார் பேதுரு. அவரைப் பாராட்டி மகிழ்கின்றார் இயேசு. ஆனால், அடுத்த நொடியில், இயேசு தன் பாடுகளைப் பற்றிச் சொன்னபோது, தன்னைப் பேதுரு தவறாகப் புரிந்துகொண்டதால், தனக்கு துன்பம் வேண்டாம் என்று சொன்னதால், 'என் கண்முன் நில்லாதே சாத்தானே!' எனக் கடிந்துகொள்கின்றார்.

இயேசுவின் மெசியா நிலை மாட்சியின் வழியாகக் கிடைக்கும் எனப் பேதுரு தவறாகப் புரிந்துகொள்கின்றார். துன்புறும் இயேசுவை அவரால் கற்பனை செய்ய இயலவில்லை. அல்லது அத்தகைய துன்பம் தன் தலைவருக்கு வேண்டாம் என்று நினைக்கின்றார் பேதுரு.

மோசே பாறையை அடிக்கின்றார். தண்ணீர் வருகின்றது.

நற்செய்தி வாசகத்தில், பேதுரு என்னும் பாறை இயேசுவால் கடிந்துகொள்ளப்பட்டுக் கண்ணீர் வடிக்கின்றது.

கடவுளின் கடிந்துரை நமக்குச் சொல்வது என்ன?

(அ) நல்லது ஒன்று செய்வதால் தீயது ஒன்றைக் கடவுள் பொறுத்துக்கொள்வார் என்ற சமரசமும், அறநெறி ஈட்டுதலும் கடவுளிடம் கிடையாது. அதாவது, 'நான் திருடிக்கொள்கின்றேன். அதே வேளையில் 100 ஏழைகளுக்கு உணவு தருகின்றேன்' என்று நான் சமரசம் செய்ய முடியாது. மோசேயின் முந்தைய நற்செயல்களைக் கடவுள் பொருட்படுத்தவில்லை. இந்தக் கீழ்ப்படிதலின்மைக்காக அவரைத் தண்டிக்கின்றார். பேதுருவின் முந்தைய நம்பிக்கை அறிக்கையைப் பொருட்படுத்தவில்லை இயேசு. பிந்தைய புரிதலின்மைக்காக அவரைக் கடிந்துகொள்கின்றார்.

(ஆ) தலைமைத்துவத்திற்குப் பொறுமையும், கண்ணியமும் அவசியம். மோசே தன் பொறுமையின்மையால் பாறையை இருமுறை அடிக்கின்றார். பேதுரு தன் பொறுமையின்மையால் இயேசுவைத் தவறாகப் புரிந்துகொள்ள மறுக்கின்றார்.

(இ) கடவுளின் வழிகள் கடவுளின் வழிகளே. பெரிய தவற்றையும் சில நேரங்களில் பொருட்படுத்தமாட்டார். சிறிய தவறு ஒன்றுக்காக ஆண்டுக்கணக்கில் பாடாய்ப் படுத்துவார்.

மனிதர்களாகிய நாம் மனிதர்களே என்று நாம் உணர்ந்துகொள்ள நம் தலையில் சில கொட்டுக்களை இடுகின்றார் கடவுள். நம் அவசரம், புரியாமை, குறுகிய எண்ணம் ஆகியவற்றால் கொட்டுக்கள் வாங்கிக்கொண்டே இருக்கின்றோம் நாம்.


1 comment:

  1. தவறு செய்த யாரையுமே… அவர்கள் எத்தனை நெருக்கமாக அவருக்கு இருந்திருப்பினும் கூட, ‘மன்னிக்கும் கடவுள்’ என்று நாம் அழைக்கும் இறைவன் அவர்களை விட்டு வைப்பதில்லை என்பதற்கு பழைய ஏற்பாட்டின் தந்தை மோசேயும்,புதிய ஏற்பாட்டின் தந்தை பேதுருவும் சாட்சிகளாய் நம்முன் நிற்கிறார்கள். உண்மைதான்…கடவுளைப் புரிந்து கொள்ள முடியவில்லை தான். சிறிய தவறோ…பெரிய தவறோ இஸ்ரயேலின் தந்தை மோசேக்கும், இயேசுவையே ‘வாழும் கடவுளின் மகன்’ என உலகுக்கே பிரகடனப்படுத்திய பேதுருவுக்கும் இத்தனை பெரிய தண்டனை தேவையா? என மனம் மருளுகிறது. இந்த நிகழ்வுகளால் நமக்கு எதைப்புரிய வைக்கிறார் தந்தை?

    நாம் செய்த 100 நல்ல காரியங்களை மனத்தில் வைத்து, நமது ஒரு சிறு தவறுக்காகக் கூட நம்மோடு சமரசம் செய்யாத இறைவன்; சமயங்களில் பெரிய தவறையும் கண்டுகொள்ளாதவர்,சிறிய தவறுக்காக நம்மைப்பாடாய்ப்படுத்துவது உண்மையே! நம் தவறுகளை உணர்ந்து கொள்ள நம்மை அவர் கொட்டுவதும்….நமக்கு அந்தக் கொட்டுக்களை வாங்கி,வாங்கி பழக்கப்பட்டுப் போவதும் பழக்கப்பட்டுப் போன விஷயமே! ஆம்! நாம் புரிந்து கொள்ள முடியாதவர் தான் நம் இறைவன்!

    “ கடவுளின் வழிகள் கடவுளின் வழிகளே!” எனும் மாபெரும் உண்மையைத் தனக்கே உரித்தான எளிமையான நடையில் புரிய வைத்துள்ள தந்தைக்கு நன்றிகள்!!!

    ReplyDelete