Saturday, August 7, 2021

அவர் எத்துணை இனியவர்!

ஆண்டின் பொதுக்காலம் 19ஆம் ஞாயிறு

I. 1 அரசர்கள் 19:4-8 II. எபேசியர் 4:30-5:2 III. யோவான் 6:41-51

அவர் எத்துணை இனியவர்!

'ஆண்டவர் எத்துணை இனியவர் என்று சுவைத்துப் பாருங்கள்' எனத் துள்ளிக் குதிக்கிறார் திருப்பாடல் ஆசிரியர் (காண். திபா 34).

ஆனால், இன்றைய முதல் வாசகத்தில் எலியா துவண்டு கிடக்கின்றார். நற்செய்தி வாசகத்தில், இயேசுவின் எளிய பின்புலம் கண்டு மக்கள் இடறல்பட்டு நிற்கின்றனர். இரண்டாம் வாசகத்தில் தங்களின் பழைய வாழ்க்கை நிலைகளில் சிக்கிக் கிடக்கின்றனர் எபேசு நகர இறைமக்கள்.

இந்தப் பின்புலத்தில் நம் ஆண்டவரை இனியவர் என்று எப்படிப் புரிந்துகொள்வது?

பாகால் இறைவாக்கினர்கள் நானூறு பேரை நேருக்கு நேராக எதிர்கொண்டு, அவர்களை வெட்டி வீழ்த்திய எலியா, ஈசபேல் தன்னை விரட்டுவது கண்டு, பயந்துபோய் அகதியாகப் பாலைநிலத்தில் அலைகின்றார். சில நேரங்களில் நம் வாழ்க்கையின் மிக இனிமையான பொழுதுகள் மிகவும் துன்பமான பொழுதுகளாகவும், வெற்றியில் களிக்க வேண்டிய பொழுதுகள் தோல்வியில் துவண்ட பொழுதுகளாகவும் ஆகிவிடுகின்றன. 'அச்சமுற்று, தன் உயிரைக் காத்துக்கொள்ளுமாறு தப்பி ஓடுகின்ற' எலியா, சூரைச் செடியின் அடியில் அமர்ந்து கொண்டு, 'ஆண்டவரே, நான் வாழ்ந்தது போதும். என் உயிரை எடுத்துக்கொள்ளும். நான் என் மூதாதையரை விட நல்லவன் அல்ல' என்கிறார். ஒரே நேரத்தில் எலியா நான்கு எதிர்மறை உணர்வுகளால் அவதியுறுகிறார்: ஈசபேல் பற்றிய பயம், தன் செயல்மேல் கோபம், தன் கடந்த காலம் பற்றிய குற்றவுணர்வு, தன்நிலை பற்றிய தாழ்வு மனப்பான்மை.

'உயிரைக் காத்துக்கொள்ளுமாறு' ஓடிய எலியா, 'உயிரை எடுத்துக்கொள்ளும்' என ஆண்டவரிடம் கேட்பது ஏன்? தன் உயிரை எடுக்குமாறு தன்னைத் துரத்துகின்ற ஈசபேலிடம் அதைக் கொடுத்திருக்கலாமே! புலம்பிக் கொண்டே இருந்த அவர் அப்படியே தூங்கிவிடுகின்றார். மனச்சோர்வும் தூக்கமும் உடன்பிறந்த சகோதரர்கள். வானதூதர் அவரைத் தட்டி எழுப்பி, 'எழுந்து சாப்பிடு!' என்கிறார். தணலில் சுட்ட அப்பமும் தண்ணீரும் கண்டு, அவற்றை உண்டபின் மீ;ண்டும் உறங்கிப் போகின்றார். 'நீ நீண்ட தூரம் பயணம் செய்ய வேண்டும்' என்று இரண்டாம் முறை வானதூதர் உணவு வழங்கியபோது, உண்டு வலிமை பெறுகின்றார். நாற்பது நாள்கள் அவர் மேற்கொள்ளும் பயணமே அவருடைய இறையனுபவப் பயணமாக மாறுகின்றது. அந்த மலையில் அவர் புதிய மனிதராகப் பிறக்கின்றார்.

ஆக, 'இறந்து போக வேண்டும்' என வந்தவர், புதிய வாழ்வுக்குப் பிறக்கின்றார். ஆண்டவர் அவருக்குப் பரிமாறிய உணவினால் அவருடைய வாழ்க்கை மாறுகின்றது. ஆண்டவராகிய கடவுள் அவருக்குக் கொடுத்தது அப்பம் என்றாலும், அது அவருடைய உடல் வலிமைக்குப் பயன்பட்டதோடு, அவர் ஆன்மிக வலிமை பெறுவதற்கான பயணத்திற்கும் உதவியாக இருந்தது. மனச்சோர்வு மற்றும் விரக்தியானால் வருந்திய இறைவாக்கினர் நம்பிக்கையும் எதிர்நோக்கும் பெறுகின்றார். ஆண்டவர் எத்துணை இனியவர் என்பதை உணர்கின்றார்.

இரண்டாம் வாசகத்தில், கிறிஸ்தவ வாழ்வின் அடையாளம் பற்றிய கருத்துரு தொடர்கின்றது. கிறிஸ்தவ அடையாளம் என்பது தெளிவாகத் தெரிந்துகொள்ள வேண்டியது. இந்தத் தெரிவு நிபந்தனையற்றதாகவும் உறுதியாகவும் இருக்க வேண்டும். எப்படிப்பட்ட தடைகள் வந்தாலும் தெரிவில் ஒருவர் உறுதியாக இருத்தல் வேண்டும். கிறிஸ்தவக் குழும வாழ்விற்கான ஆறு தடைகளைப் பவுல் பட்டியலிடுகின்றார்: 'மனக் கசப்பு, சீற்றம், சினம், கூச்சல், பழிச்சொல், தீமை'. இவை கிறிஸ்தவ அடையாளத்தை வலுவிழக்கச் செய்வதோடு, தூய ஆவியாருக்கும் துயரம் வருவிக்க வல்லவை எனப் பவுல் எச்சரிக்கின்றார். மேலும், கிறிஸ்தவ அடையாளத்திற்கு வலுவூட்டும் காரணிகளையும் அவர் முன்மொழிகின்றார்: 'நன்மை செய்தல், பரிவு காட்டுதல், மன்னித்தல், அன்புகொண்டு வாழ்தல்.' கிறிஸ்துவையே அன்பிற்கான முன்னுதாரணமாக வைக்கின்றார் பவுல். அன்பில் தற்கையளிப்பு இருக்க வேண்டும் என்பது பவுலின் பாடம்.

ஆக, மனக்கசப்பு கொண்டு வாழும் எபேசு நகர மக்களுக்கு இனிமையாக வருகின்றது கிறிஸ்துவின் அன்பு. கிறிஸ்துவுடைய அன்பின் தற்கையளிப்புப் பண்பை அறிந்தனுபவிக்கும் அவர்கள், அந்த அன்பை தங்கள் வாழ்வின் மேல்வரிச்சட்டாக ஏற்க வேண்டும்.

நற்செய்தி வாசகம் கடந்த வார வாசகத்தின் தொடர்ச்சியாக அமைந்துள்ளது. தன்னைத் தேடி வந்தவர்களின் தேடலைக் கூர்மைப்படுத்துகின்ற இயேசு, இந்த வாரம், அந்தத் தேடலின் தேடுபொருள் தானே என்பதை அவர்களுக்குத் தெளிவுபடுத்துகின்றார். இயேசு, தன்னையே, 'வானிலிருந்து இறங்கி வந்த உணவு' என்று முன்மொழிந்தபோது, அதைக் கேட்கின்ற மக்கள் முணுமுணுக்கின்றனர். இரண்டு காரணங்கள்: ஒன்று, இயேசு வானிலிருந்து இறங்கி வரவில்லை. ஏனெனில், அவர் நாசரேத்தூரில் பிறந்து வளர்ந்தவர். அவருடைய எளிய பின்புலம் அவர்களுக்குத் தெரிந்திருந்தது. மேலும், 'இவர் யோசேப்பின் மகனல்லவா!' என்று அவரைக் கேலி செய்கின்றனர். இயேசு ஒரு கன்னியிடமிருந்து பிறந்தார் என்றும், எந்தவொரு ஆண்தொடர்பும் இல்லாமல் அவருடைய அன்னை வியத்தகு முறையில் கருத்தாங்கினார் என்றும் இயேசுவின் சமகாலத்தவர்கள் அறிந்திருந்தனர். அந்தப் பின்புலத்தில்தான் அவரைக் கேலி செய்யும் நோக்குடன், 'யோசேப்பின் மகனல்லவா!' என்று அவருடைய பிறப்பு பற்றியும் இடறல்படுகின்றனர். இப்படிச் சொல்வதன் வழியாக இயேசுவின் பிறப்பில் எந்தவொரு இறைத்தொடுதலும் இல்லை என்பதை உறுதிபடச் சொல்கின்றனர்.

'கடவுள் ஈர்த்தாலொழிய தன்னிடம் யாரும் வர இயலாது' என உறுதிபடச் சொல்கின்றார் இயேசு. மேலும், தன்னை அவர்கள் உண்ண வேண்டும் என முன்வைக்கின்றார். உண்ணப்படும் பொருள் தன்னையே இழக்கின்றது. சிலுவையில் இயேசு தன்னையே இழப்பார் என்பதை இது முன்னுணர்த்துகிறது.

இயேசுவின் எளிய பின்புலம் கண்டு இடறல்பட்டவர்களுக்குத் தன்னையே உணவாக அளிக்க முன்வருகின்றார் இயேசு.

ஆக,

முதல் வாசகத்தில் மனச்சோர்வடைந்த எலியா, ஆண்டவராகிய கடவுள் தருகின்ற அப்பம் என்ற உணவின் வழியாக, அவரது இனிமையைச் சுவைக்கின்றார்.

இரண்டாம் வாசகத்தில், மனக்கசப்பில் வாழ்ந்த எபேசு நகர நம்பிக்கையாளர்கள், இயேசுவின் அன்பில் திகழ்ந்த தற்கையளிப்பு வழியாக, அவருடைய இனிமையைச் சுவைக்கின்றனர்.

நற்செய்தி வாசகத்தில், இயேசுவின் எளிய பின்புலம் கண்டு அவரைப் பற்றி இடறல்பட்டவர்கள், தந்தையால் ஈர்க்கப்பட்டு, அவரிடம் வந்து அவருடைய இனிமையைச் சுவைக்கின்றனர்.

இவ்வாறாக, ஆண்டவர் இனியவராக இருக்கின்றார்.

இது நமக்கு இரண்டு நிலைகளில் சவாலாக அமைகின்றது:

முதலில், 'நான் ஆண்டவருடைய இனிமையைச் சுவைக்கின்றேனா?'

இரண்டு, 'நானும் ஓர் இனியவராக இருக்கின்றேனா?'

எலியா போலச் சோர்ந்து விழும் பொழுதுகள் பல. மனக்கசப்பினால் குடும்ப மற்றும் குழும உறவுகளில் நாம் எதிர்கொள்ளும் துன்பங்கள் பல. இயேசுவின் ஊர்க்காரர்கள்போல மற்றவர்களின் பின்புலம் கண்டு இடறல் படும் பொழுதுகள் பல.

ஆனால், இவற்றையெல்லாம் கடந்த இனிமை நம் இறைவனிடம் உள்ளது என உணர்ந்துகொள்தல் நலம்.

'அவரை நோக்கிப் பார்த்தோர் மகிழ்ச்சியால் மிளிர்ந்தனர். அவர்கள் முகம் அவமானத்திற்கு உள்ளாகவில்லை' என்னும் பதிலுரைப்பாடலின் வரிகள் நம் வாழ்வியல் அனுபவமாக மாறட்டும்.

2 comments:

  1. ஆண்டின் பொதுக்காலம் 19 ம் ஞாயிறின் மறையுரை! “ஆண்டவர் எத்துணை இனியவர் என்று சுவைத்துப்பாருங்கள்!” எனும் துள்ளலான வரிகளோடு, நம்மையும் துள்ளி அமரச்செய்கின்றன. கூடவே “ ஆண்டவர் எப்பொழுதுமே இனியவர் தானா? “:எனும் கேள்வியும் மூளையில் எங்கோ எட்டிப்பார்ப்பதை உணரமுடிகிறது.” சில நேரங்களில் நம் வாழ்வின் மிக இனிமையான பொழுதுகள் துன்பமான பொழுதுகளாகவும்,வெற்றியில் களிக்க வேண்டிய பொழுதுகள்,தோல்வியில் துவண்ட பொழுதுகளாகவும் ஆகிவிடுகின்றன” எனும் தந்தையின் வார்த்தைகள் இக்கேள்விக்குத் தூபமிடுவது போல்இருக்கிறது. ஆனால் கொஞ்சம் உள்மன அமைதியோடு நம் வாழ்வைத்திரும்பிப்பார்த்தால் நமக்குப் புலப்படும்… ஆண்டவர் நமக்கு இனிமையானவராகவும், இனிமையற்றவராகவும் இருந்த பொழுதுகள் எப்பொழுது என்று.

    ஈசபேலுக்குப் பயந்தவராய் இறைநம்பிக்கையையும்,தன்னம்பிக்கையையும் எங்கோ தொலைத்து விட்டுத் தன் உயிர் தன்னை விட்டுப் பிரிய வேண்டுமென அலைபாய்கையில் எலியாவை விட்டு இறைவன் தூர இருந்ததையும், பின் ஆண்டவரின் தூதர் கொடுத்த உணவை அருந்தி மனச்சோர்வு நீங்கி வலிமையும், நம்பிக்கையும் பெறுகையில்இறைவன் அவர் கூட இருந்ததையும் உணர்த்தும் முதல் வாசகமும்…..கிறிஸ்துவ அடையாளத்தைத்துறந்து சீற்றம்,சினம்,பழிச்சல் இவைகளால் ஆட்கொள்ளப்பட்டிருந்த எபேசு நகர மக்களுக்கு எச்சரிக்கை விடுத்ததோடல்லாமல் அவர்கள் நன்மை செய்தல், பரிவு காட்டுதல்,மன்னித்தல் முதலிய பண்புகளில் சிறந்து விளங்க வேண்டும் என உணர்த்திய பவுலின் இரண்டாம் வாசகமும், “ இவர் யோசேப்பின் மகன் தானே!” என்று கேலி பேசிய மக்களுக்கு “ வானிலிருந்து இறங்கிய உணவு நானே!” எனறு கூறியதோடல்லாமல், “என் தந்தை ஈர்த்தாலொழிய என்னிடம் யாரும் வர இயலாது” என்று கூறும் இயேசுவின் சொற்களை உள்ளடக்கிய நற்செய்தி வாசகமும் “ நாம் அவரை நினைத்த நேரங்களில் அவர் நம்முடன் கைகோர்த்து நின்றதும்…நாம் அவரை மறந்த நேரங்களில் அவர் நம்மை விட்டுத்தூர நின்றதும்” புரியும்.

    மேற்கண்ட வாசகங்களின் பின்னனியில் நான் கையிலெடுக்கவேண்டிய வாழ்க்கைப்பாடம்…” நான் ஆண்டவருடைய இனிமையை சுவைக்கிறேனா? அதைப் பிறருடன் பகிர்ந்து கொள்கிறேனா? என்பவையே! நாமும், நம்மைச் சார்ந்தவர்களும் சோர்ந்து நிற்கும் பொழுதுகளில் “ இவற்றையெல்லாம் கடந்த இனிமை நம் இறைவனிடம் உள்ளது” என்பதை நாமும் உணர்வதோடல்லாமல் நம்மைச் சார்ந்தவர்களும் உணர உதவ வேண்டும்.அப்படி ஒரு வாழ்க்கை நாம் வாழும் பட்சத்தில்
    “ அவரை நோக்கிப்பார்த்தோர் மகிழ்ச்சியால் மிளிர்ந்தனர்.அவர்கள் முகம் அவமானத்திற்கு உள்ளாகவில்லை” எனும் பதிலுரைப்பாடலின் வரிகளை நம்மாலும் பாட முடியும்! வாழ்க்கையை இனிமையாக்கும் ஒரு எளிய வழியை உள்ளடக்கிய மறையுரைக்காகத் தந்தைக்கு நன்றியும்! ஞாயிறு வார்த்தைகளும்!!!

    ReplyDelete
  2. You complain to God, that you are weary... You can no more get on with this. You want to end your ministry and your life and you pray for it.. Annnnndddd.... God gives you more work ... athuvum epdi.. eat a snack and walk for 40 days.... He is like 'You want to put an end to this? .. Here you go, take some more work' ....

    ReplyDelete