I. யோசுவா 24:1-2,15-17,18 II. எபேசியர் 5:21-32 III. யோவான் 6:60-69
ஆண்டவரைத் தெரிந்துகொள்தல்
'தெரிவு' (சாய்ஸ்) என்ற ஒற்றைச் சொல் நம்மை மற்ற உயிர்களிலிருந்து வேறுபடுத்துகிறது. 'எனக்கு எது வேண்டும்' என்பதை நான் என் உணர்வுத்தூண்டுதலால் அல்லாமல், அறிவுப்பூர்வமாக ஆய்ந்து தேர்ந்துகொள்ள முடியும். இதுவே மனுக்குலம் பெற்றிருக்கின்ற விருப்புரிமை. இந்த விருப்புரிமையின் அடிப்படையில் நாம் அனைத்திலும் இறைவனை மட்டுமே தெரிந்துகொண்டால் வாழ்க்கை எத்துணை இனிமையாக இருக்கும் என்று, இறைவனைத் தெரிந்துகொள்ள நம்மை அழைக்கிறது இன்றைய இறைவார்த்தை வழிபாடு.
இன்றைய முதல் வாசகத்தில் யோசுவா செக்கேமில் உடன்படிக்கையைப் புதுப்பிக்கின்றார். உடன்படிக்கையைப் புதுப்பிக்கும் முன் மக்களைத் தூய்மைப்படுத்தும் சடங்கு நடக்கிறது. யோசுவா மோசேயின் சாயலாக இரு நிலைகளில் முன்மொழியப்படுகின்றார்: முதலில், மோசே இஸ்ரயேல் மக்களைப் பாதம் நனையாமல் செங்கடலைக் கடக்கச் செய்தது போல, யோசுவா அவர்களைப் பாதம் நனையாமல் யோர்தான் ஆற்றைக் கடக்கச் செய்கின்றார். இரண்டாவதாக, மோசே ஆண்டவராகிய கடவுளுக்கும் இஸ்ரயேல் மக்களுக்கும் நடுவே நின்று உடன்படிக்கையை நிறைவேற்றியது போல, செக்கேமில் ஆண்டவராகிய கடவுளுக்கும் இஸ்ரயேல் மக்களுக்கும் நடுவே நின்று உடன்படிக்கையைப் புதுப்பிக்கின்றார். மோசே உடன்படிக்கை செய்யும்போது புறத்தூய்மையை வலியுறுத்துகின்றார். ஆனால், யோசுவா அகத்தூய்மையை வலியுறுத்துகின்றார்.
சிலைவழிபாட்டிலிருந்து மக்கள் தங்களை விடுவித்துக்கொள்ள வேண்டும் என்பதே யோசுவாவின் அழைப்பு. லாபான் வீட்டிலிருந்து தப்பி ஓடி வருகின்றார் யாக்கோபு. அவரை விரட்டி வருகின்ற லாபான் தன் வீட்டுச் சிலைகளை அவர் தூக்கி வந்ததாகக் குற்றம் சுமத்துகிறார். வீட்டுச் சிலைகளைத் தூக்கி வந்தது ராகேல். சிலைகள் வைத்திருந்த சாக்கின்மேல் அமர்ந்துகொண்டு தனக்கு மாதவிலக்கு உள்ளதாகச் சொல்லி, அந்தச் சாக்கையும் சிலைகளையும் காப்பாற்றுகின்றாள். அன்று தொடங்கி இஸ்ரயேல் மக்கள் பாபிலோனியாவுக்கு நாடுகடத்தப்படும் வரை சிலைகள் அவர்களுக்குப் பெரும் கண்ணியாக இருக்கின்றன. இஸ்ரயேல் மக்கள் யாவே என்ற ஏகக்கடவுளை வழிபடுமுன் ஏகப்பட்ட கடவுளர் நம்பிக்கையே கொண்டிருந்தனர். அவர்களால் மற்ற தெய்வங்களை எளிதாக விட இயலவில்லை. குறிப்பாக கானான் நாட்டில் விளங்கிய வளமை வழிபாடு அவர்களை மிகவும் ஈர்த்தது. நிலத்தின் வளமைக்கும், கால்நடைகளின் பலுகுதலுக்கும், பயிர்களின் விளைச்சலுக்கும் எனக் கானானியர் கடவுளர்களை வைத்திருந்தனர். இஸ்ரயேல் மக்கள் கானான் நாட்டில் தங்கத் தொடங்கியபோது விவசாய சமூகமாக உருவெடுத்ததால் மற்றவர்களின் வளமை வழிபாட்டிலும் பங்கேற்பதை அவர்களால் நிறுத்த முடியவில்லை. இந்தப் பின்புலத்தில்தான், 'யாருக்கு ஊழியம் புரிவீர்கள்?' என்று கேட்கின்றார் யோசுவா.
'ஊழியம் புரிதல்' என்பது விடுதலைப் பயண நூலில் மிக முக்கியமான வார்த்தை. ஏனெனில், எகிப்தில் பாரவோனுக்கு ஊழியம் புரிந்துகொண்டிருந்த மக்களைத் தனக்கு ஊழியம் புரியமாறு அழைத்துச் செல்கின்றார் ஆண்டவராகிய கடவுள். ஆண்டவருக்கு ஊழியம் புரிவதை விடுத்து மற்ற தெய்வங்களுக்கு ஊழியம் புரிவது 'பிரமாணிக்கமின்மை' அல்லது 'விபசாரம் செய்தல்' என்ற பெரிய பாவமாகக் கருதப்பட்டது. இஸ்ரயேல் மக்கள் இரு நிலைகளில் உந்தப்பட்டு, 'நாங்கள் ஆண்டவருக்கே ஊழியம் புரிவோம்' என்று சொல்கின்றனர்: முதலில், தங்கள் தலைவராகிய யோசுவாவின் முன்மாதிரி. யோசுவா இங்கே ஒரு நல்ல தலைவராக இருக்கிறார். 'நானும் என் வீட்டாரும் ஆண்டவருக்கே ஊழியம் புரிவோம்' என்று நிபந்தனைகள் எதுவுமின்றி முன்மொழிகின்றார். இரண்டாவது, இஸ்ரயேல் மக்கள் தங்கள் ஆண்டவராகிய கடவுள் எகிப்தில் செய்த வியத்தகு அடையாளங்களை எண்ணிப்பார்க்கின்றனர். ஏறக்குறைய இப்போது இரண்டாவது அல்லது மூன்றாவது தலைமுறையினர் இங்கே நிற்கின்றனர். தங்கள் மூதாதையர் தங்களுக்குச் சொன்னவற்றை நினைவுகூர்கின்றனர்.
ஆக, முதல் வாசகத்தில் தங்கள் சிலைகளை விடுத்து ஆண்டவராகிய கடவுளைத் தெரிந்துகொள்கின்றனர் இஸ்ரயேல் மக்கள்.
இரண்டாம் வாசகத்தில், எபேசு நகர திருஅவைக்கு எழுதப்பட்ட திருமடலின் ஆசிரியர் (பவுல்), புதிய இயல்பு, ஒளிபெற்ற வாழ்க்கை ஆகியவை பற்றிய கருத்துருக்களை முன்வைத்த பின்னர், குடும்ப உறவு பற்றிப் பேசுகின்றார். இது ஒரே நேரத்தில் குடும்ப வாழ்வு பற்றிய அறநெறிப் போதனையாகவும், திருஅவையியல் பற்றிய கருதுகோளாகவும் இருக்கிறது.
'திருமணமான பெண்களே, கணவருக்குப் பணிந்திருங்கள் ... திருமணமான ஆண்களே உங்கள் மனைவியரிடம் அன்பு செலுத்துங்கள்' என்ற போதனை பலருக்கு நெருடல் தருகின்ற பகுதியாக இருக்கின்றது. பெண்கள் ஏன் பணிந்திருக்க வேண்டும்? இது ஆணாதிக்க சிந்தனை என்று சில பெண்ணியவாதிகள் தங்கள் எதிர்ப்பைப் பல தளங்களில் பதிவு செய்கின்றனர். உண்மையில் இது பெண்ணடிமைத்தன அல்ல, பெண் விடுதலை சிந்தனையே. எப்படி? இந்தப் பாடத்தின் பின்புலத்தில் இருப்பது கிரேக்க-உரோமை குடும்ப வாழ்க்கை முறை. அந்த வாழ்க்கை முறையின்படி, 'பெண்' அல்லது 'மனைவி' என்பவர் கணவருடைய ஒரு உடைமை. அதாவது, கணவன் தனக்கென்று ஆடு, மாடு, வீடு, வைத்திருப்பதுபோல, 'பெண்' அல்லது 'மனைவியை' வைத்திருப்பார். மனைவிக்கென்று எந்தச் சொத்துரிமையும் கிடையாது. ஆக, பொருள் போலக் கருதப்பட்டு பயன்படுத்தப்பட்ட பெண்ணை, ஆள் போலக் கருதி அன்பு செய்யுமாறு பணிக்கின்றார் பவுல். தன்னை அன்பு செய்கிற ஆணின்மேல் உரிமை கொண்டாடும் பெண், அந்த உரிமையை மதிப்பு என்று பதிலிறுப்பு செய்ய வேண்டும். ஆக, ஆணின் உரிமை அன்பு என்றும், பெண்ணின் உரிமை பணிவு என்றும் வெளிப்படுகின்றது.
இந்த உறவுக்கு உதாரணமாக, கிறிஸ்துவைக் கணவர் என்றும், திருச்சபையை மனைவி என்றும் உருவகிக்கின்றார் ஆசிரியர். கிறிஸ்து திருச்சபைக்காகத் தன்னையே ஒப்புவிக்கின்றார். அத்தகையே தற்கையளிப்பை கணவர் மனைவிக்குத் தர வேண்டும். மேலும், அத்திருச்சபை கறைதிறையோ, வேறு எக்குறையோ இல்லாமல் இருப்பதுபோல மனைவியும் பிளவுபடா உள்ளத்துடன் தன் கணவருக்குப் பணிந்திருக்க வேண்டும். கணவரின் உடைமை அல்ல மனைவி. மாறாக, அவருடைய உடல் என்று வரையறுக்கின்ற ஆசிரியர், இதில் அடங்கியுள்ள மறைபொருள் பெரிது என்று வியக்கின்றார்.
ஆக, திருச்சபையின் நம்பிக்கையாளர்கள் ஆண்டவரைத் தெரிந்துகொள்கிறார்கள் என்றால், ஆண்டவரின் தற்கையளிப்பை உணர்கிறார்கள் என்றால், அதை அவர்கள் தங்கள் குடும்ப உறவில் காட்ட வேண்டும்.
நற்செய்தி வாசகத்தில், நாம் கடந்த நான்கு வாரங்களாகக் கேட்டு வந்த, 'வாழ்வுதரும் உணவு நானே' என்னும் இயேசுவின் பேருரை நிறைவுக்கு வருகின்றது. பேருரையின் இறுதியில், கேட்டுக்கொண்டிருந்த மக்கள் முடிவெடுக்க வேண்டும். மத்தேயு நற்செய்தியில் மலைப்பொழிவின் இறுதியில், 'இருவகை அடித்தளங்கள்' உருவகத்தின் வழியாக, தன் சீடர்கள் எவ்வகையான அடித்தளத்தைத் தெரிவு செய்கிறார்கள் என்ற கேள்வியை விடுக்கிறார் இயேசு. அவ்வாறே, இங்கும் தன் சீடர்கள் தன்னைத் தெரிவு செய்கிறார்களா? இல்லையா? என்ற கேள்வியை முன்வைக்கின்றார் இயேசு. 'வாழ்வுதரும் உணவு' பேருரையின் தொடக்கத்தில் ஐயாயிரம் பேர் இருந்தனர். பின்னர் அது ஒரு சிறிய கூட்டமாக மாறுகிறது. பின் தொழுகைக்கூடத்தில் உள்ள சிறிய குழுவாக மாறுகிறது. தொடர்ந்து இயேசுவின் சீடர்கள். இறுதியில் பன்னிரு திருத்தூதர்களுடன் பேருரை நிறைவு பெறுகிறது. அகன்ற இடத்தில் தொடங்கும் உரை, குறுகிய இடத்தில் முடிகிறது. அப்படி முடியும் உரை வாசகரின் உள்ளம் நோக்கி நகர்கிறது. அதாவது, தனது வாசிப்பின் இறுதியில் வாசகர், இயேசுவைத் தெரிந்துகொள்கிறாரா அல்லது இல்லையா என்பதை அவரே முடிவுசெய்ய வேண்டும்.
இயேசுவின் பேச்சைக் கேட்டுக்கொண்டிருக்கின்ற சீடர்கள், 'இதை ஏற்றுக்கொள்வது கடினம். இன்னும் கேட்டுக்கொண்டிருக்க முடியுமா?' என்று இடறல்படுகின்றனர். மூன்று காரணங்களுக்காக இயேசுவை அவர்களால் ஏற்றுக்கொள்ள முடியவில்லை: ஒன்று, நாசரேத்தூரில் பிறந்த ஒருவர் தன்னையே எப்படி வானினின்று இறங்கி வந்த உணவு என்று சொல்ல முடியும்? என்ற இடறல். இரண்டு, இயேசுவைப் பின்பற்றுவதால் உடனடி பரிசு அல்லது வெகுமதி என்று எதுவும் இல்லை. மூன்று, அவர்கள் இயேசுவின்மேல் வைத்திருந்த எதிர்பார்ப்புகள் அனைத்தும் ஏமாற்றங்களாக முடிகின்றன. 'வாழ்வு தருவது தூய ஆவியே. ஊனியல்பு ஒன்றுக்கும் உதவாது' என்ற மிக அழகான வாக்கியத்தை மொழிகின்றார் இயேசு. அதாவது, காணக்கூடிய இயல்பு மறையக்கூடியது. காணாதது நிலையானது. அவர்கள் இயேசுவின் உடலை மட்டுமே கண்டு, அந்த உடலின் சதையை நினைத்து இடறல்பட்டனர். 'வார்த்தை மனுவுருவானர்' என்பதை அவர்கள் காணவில்லை.
ஆனால், பேதுரு அதைக் கண்டுகொள்கின்றார். 'நீங்களும் போய்விட நினைக்கிறீர்களா?' என்று இயேசு பன்னிருவரைக் கேட்டவுடன், 'ஆண்டவரே, நாங்கள் யாரிடம் போவோம்?' என்று தன் கேள்வியால் விடை அளிக்கின்றார் பேதுரு. மேலும், 'வாழ்வுதரும் வார்த்தைகள் உம்மிடம்தானே உள்ளன' என்கின்றார். ஆக, பேதுரு இயேசுவில் வார்த்தையைக் காண்கின்றார். வார்த்தை மனுவுருவாயிருப்பதைக் காண்கின்றார். தொடர்ந்து, 'நீரே கடவுளின் தூயவர் அல்லது கடவுளுக்கு அர்ப்பணமானவர்' என்ற நம்பிக்கை அறிக்கை செய்கின்றார்.
ஆக, இயேசுவின் போதனை கேட்டு இடறல்பட்டு, அவரை விட்டு விலகிய சீடர்கள் ஒரு பக்கம். இயேசுவை மட்டுமே தெரிந்துகொண்ட பன்னிருவர் இன்னொரு பக்கம்.
இவ்வாறாக,
முதல் வாசகத்தில், இஸ்ரயேல் மக்கள் ஆண்டவரைத் தெரிந்துகொள்கின்றனர். தங்கள் சிலைகளை விடுகின்றனர்.
இரண்டாம் வாசகத்தில், எபேசு நகர மக்கள் ஆண்டவரைத் தெரிந்துகொள்கின்றனர். தங்கள் குடும்ப உறவுகளில் உள்ள வேறுபாட்டையும், மேட்டிமை உணர்வையும் களைகின்றனர்.
நற்செய்தி வாசகத்தில், பன்னிரு திருத்தூதர்கள் ஆண்டவரைத் தெரிந்துகொள்கின்றனர். அவரிடம் வாழ்வையும் தூய்மையையும் கண்டுகொள்கின்றனர்.
இன்று நாம் ஆண்டவரைத் தெரிந்துகொள்கின்றோமா?
நம் தெரிவு வழக்கமாக மூன்று விதிமுறைகளால் கட்டப்படுகின்றது: (அ) இன்பம்-வலி. இன்பமான ஒன்றைத் தெரிவு செய்து துன்பமான மற்றொன்றை விட்டுவிடுவது. (ஆ) நன்மை-தீமை. நன்மையானதைப் பற்றிக்கொண்டு தீமையானதை விட்டுவிடுவது. (இ) பரிசு-தண்டனை. நமக்குப் பரிசாக உள்ளதை எடுத்துக்கொண்டு, தண்டனை போல இருப்பதை விட்டுவிடுவது.
கடவுளைத் தெரிந்துகொள்தல் வலி தருவதாலும், உடனடி பரிவு எதுவும் இல்லாததாலும் அவரை நாம் தெரிந்துகொள்ள மறுக்கின்றோம். அல்லது தெரிந்துகொள்வதைத் தள்ளி வைக்கின்றோம். நன்மை-தீமை என்ற தளத்தில் இயங்கும்போது மட்டுமே நம்மால் அவரைத் தெரிந்துகொள்ள முடிகிறது.
நாம் நம்மை அறியாமல் தூக்கி வருகின்ற குட்டி தெய்வங்கள், நம் உள்ளத்தில் உள்ள மேட்டிமை உணர்வு, அல்லது கடவுள் பற்றிய முற்சார்பு எண்ணம் ஆகியவற்றால் நாம் அவரைத் தெரிந்துகொள்ள மறுக்கின்றோம்.
தெரிவு செய்தல் என்பது மூன்று நிலைகளில் நடக்க வேண்டும்: ஒன்று, நம் முன் இருப்பவற்றைச் சீர்தூக்கிப் பார்ப்பது. இரண்டு, அல்லவை விடுத்து நல்லவை பற்றுவது. மூன்று, அந்தப் பற்றுதலில் நிலைத்து நிற்பது.
தெரிவுகளே நமக்கு ஆற்றல் தருகின்றன. தெரிவுகள் பலவாக இருக்கும்போது நம் ஆற்றல் சிதைந்து போகிறது. ஒன்றைத் தெரிந்தால், நன்றைத் தெரிந்தால் ஆற்றல் சிதைவு மறைந்து பொறுப்புணர்வு கூடும். நம் தெரிவுக்கு நாமே பொறுப்பு. அந்தப் பொறுப்புணர்வே நமக்கு ஆற்றல் தருகிறது. அந்த ஆற்றல் நம்மை தலைசிறந்த மனிதர்களாக வாழவும், மகிழ்ச்சியுடனும் அமைதியுடனும் ஒருவர் மற்றவருடன் இணைந்து வாழவும் தூண்டுகிறது.
ஆண்டவரைத் தெரிந்துகொள்தல் என்பது நம்மையே தெரிந்துகொள்ளும் புதுப்பிறப்பு போன்றது. அகுஸ்தினார் ஆண்டவரைத் தெரிந்துகொண்ட அன்று தான் தன்னையே தெரிந்துகொண்டார்.
ஆண்டின் பொதுக்காலத்தின் 21 ம் ஞாயிறின் மறையுரை! நம் வாழ்வின் ‘தெரிவில்’ இறைவனை மட்டுமே நாம் தெரிந்து கொண்டால் வாழ்வு எத்துணை இனிமையாக இருக்கும்! என்ற மையப் பொருளை எடுத்து வைக்கிறது இன்றைய மறையுரை!
ReplyDeleteசிலைவழிபாட்டின்…., வயல்களின் வளமையில்….., கால்நடைகளிலும் இலயித்துப்போய்த் தங்களைப் படைத்தவரை மறந்து போன மக்களைக்கண்டு வெந்து, வெதும்பிப் போன யோசுவா “ நானும் என் வீட்டாரும் இறைவனுக்கே ஊழியம் புரிவோம்” என்று சொல்ல, நாளடைவில் எறும்பூறக் கல்லும் தேயும் எனும் பழமொழிக்கேற்ப அந்த மக்களும் “ நாங்களும் ஆண்டவருக்கே ஊழியம் புரிவோம்” என அவர் பின்னால் செல்கின்றனர் என்பதைக் எடுத்துரைக்கும் முதல் வாசகம்….
பொருள் போலக் கருதப்பட்டுப் பயன்படுத்தப்பட்ட பெண்ணை ஆள்போலக் கருதி அன்பு செய்ய வேண்டுமென அறைகூவல் விடும் பவுலின் வார்த்தைகளைக் கொண்ட இரண்டாம் வாசகம்….
“ வாழ்வு தரும் உணவு நானே!” என்ற இயேசுவின் வார்த்தைகளை ஏற்றுக்கொள்ள இயலாத சீடர்கள் மத்தியில் “ ஆண்டவரே! நாங்கள் யாரிடம் போவோம்? வாழ்வு தரும் வார்த்தைகள் உம்மிடம் தானே உள்ளன!” என்று இயேசுவை உலகிற்குப் பிரகடனப்படுத்திய பேதுருவின் வார்த்தைகளை எடுத்துரைக்கும் நற்செய்தி….
இறுதியில் வரும் தந்தையின் வார்த்தைகள்.. “தெரிவு என்பது நமக்கு ஆற்றல் தருவதால் ஒன்றையே தெரிந்து,அதில் நன்றைத் தெரிந்தால் நம் பொறுப்புணர்வு கூடும். நாம் தலைசிறந்த மனிதர்களாகவும்… மகிழ்ச்சியுடனும்…அமைதியுடனும் வாழ வழி அதுவே” எனும் உணர்வைத்தருகின்றன.
“ஆண்டவரைத் தெரிந்து கொண்டதால் தம்மையே தெரிந்து கொண்ட புனித அகுஸ்தினாராக நாமும் மாற முடியும்!” என்ற நல்லதொரு மறையுரைக்காகத் தந்தைக்கு நன்றியும்! ஞாயிறு வாழ்த்துக்களும்!!!