Monday, August 2, 2021

உடனிருப்பவரின் வெற்றி

இன்றைய (3 ஆகஸ்ட் 2021) முதல் வாசகம்

உடனிருப்பவரின் வெற்றி

நேற்றைய முதல் வாசகத்தில், தனக்கு வெளியே இருந்த இஸ்ரயேல் மக்களின் புலம்பல் தன்னை முள் போலக் குத்தியதை மோசே உணர்ந்தார். இன்றைய வாசகத்தில், தனக்கு உள்ளிருந்தே ஒரு முள் குத்துவதை இன்றைய வாசகத்தில் உணர்கின்றார்.

மோசேயின் சகோதரர் ஆரோனும், சகோதரி மிரியாமும் மோசே மணந்திருந்த எத்தியோப்பியப் பெண்ணை முன்னிட்டு அவருக்கு எதிராகப் பேசுகின்றனர். சில நேரங்களில் அந்நியர்கள் நம் வெற்றியை விரும்பும் அளவுக்கு நமக்கு அருகிலிருப்பவர்கள் நம் வெற்றியை விரும்புவதில்லை என்பதே வாழ்வியல் எதார்த்தம். அப்படிப்பட்ட ஒரு நிகழ்வுதான் மோசேயின் வாழ்க்கையில் நடந்தேறுகிறது.

'ஆண்டவர் உண்மையில் மோசே வழியாக மட்டுமா பேசியுள்ளார்? அவர் எங்கள் வழியாகவும் பேசவில்லையா?' என்று மக்கள் முன்னிலையில் பேசுகின்றனர். ஒரே நேரத்தில் மோசேயின் நாணயத்தையும், கடவுளின் தெரிவையும் கேள்விக்குட்படுத்துகின்றனர். ஆண்டவர் உடனடியாக அவர்களைச் சந்திப்புக் கூடாரத்திற்கு வரவழைத்து அவர்களைக் கடிந்துகொள்கின்றார்.

இந்த நிகழ்விலிருந்து ஒன்று தெளிவாகத் தெரிகிறது. மோசேயின் தலைமைத்துவத்தை விரும்பாத நபர்கள் அவருடைய சமகாலத்தில் இருந்தனர். அதுவும், அவரது குடும்பத்திலேயே இருந்தனர். ஆனால், இதே மிரியம்தான் மோசே குழந்தையாக நைல் நதியில் அவருடைய தாயாரால் விடப்பட்ட போது, நதிநீரின் குளிர்ச்சி பொறுத்து தன் தம்பியைக் காவல் காத்த நல்ல அக்கா. இதே ஆரோன்தான் எகிப்தில் மோசேயின் வாய் போல இருந்து, மோசே போல அறிகுறிகளை நிகழ்த்தியவர். மேலும், இந்த நிகழ்வு மோசேக்கும் கடவுளுக்கும் உள்ள நெருக்கத்தை மற்றவர்கள் உணர்வதற்காக எழுதப்பட்ட பகுதி என்றும் எடுத்துக்கொள்ளலாம்.

நிகழ்வின் இறுதியில் மிரியாம் தொழுநோயால் பீடிக்கப்படுகின்றார். ஆனால், ஆரோனுக்கு எந்தத் தண்டனையும் வழங்கப்படவில்லை. பெண் மட்டுமே இங்கே தண்டிக்கப்படுவது நமக்கு நெருடலாக இருக்கின்றது. ஆரோன் தலைமைக்குருவாக இருந்ததால் அவர் பெற்ற தண்டனை பற்றி ஆசிரியர் பதிவு செய்யாமல் இருந்திருக்கவும் வாய்ப்பு உண்டு.

மோசே இந்நிகழ்வுக்கு எந்தப் பதிலிறுப்பும் செய்ததாகக் குறிப்பு இல்லை.

மொத்தத்தில், தனக்கு அருகில் இருக்கும் மோசேயின் வெற்றியை அவருடைய உடன்பிறப்புகள் ஏற்றுக்கொள்ளவில்லை என்பதும், அப்படி ஏற்றுக்கொள்ளாதபோது ஆண்டவராகிய கடவுளே குறிக்கிட்டு மோசேயின் வெற்றி பற்றி சான்று பகர்ந்தார் என்பதும் தெளிவாகிறது.

இன்றைய நற்செய்தி வாசகம் (காண். மத் 14:22-36) நேற்றைய வாசகத்தின் தொடர்ச்சியாக இருக்கிறது. ஐந்து அப்பங்களை ஐயாயிரம் பேருக்குப் பலுகச் செய்த இயேசு, உடனடியாக தனிமையாக இறைவேண்டல் செய்ய மலைக்குச் செல்கின்றார். தனிமையில் இரவெல்லாம் இறைவேண்டலில் செலவிடுகின்றார். இயேசுவின் இத்தனிமை அடுத்த அறிகுறிக்கு வாசகரைத் தயாரிக்கிறது. இரவில் சீடர்கள் கடலில் அலைக்கழிக்கப்பட அவர்களிடம் கடல்மீது நடந்து வருகின்றார் இயேசு. கடல்மீது நடத்தல் என்பது இயேசு தீய ஆவியின் மேலும், இயற்கையின் மேலும் ஆற்றல் கொண்டிருந்தார் என்பதை முதல் நம்பிக்கையாளர்களுக்கு நற்செய்தியாளர்கள் முன்வைக்க விரும்பிய இறையியல் கருத்துரு என்றும் நாம் எடுத்துக்கொள்ளலாம்.

முதலில் இயேசு அவர்களோடு இல்லை. பின், தூரத்தில் 'பேய்' போல தெரிகின்றார். இறுதியாக, அவர்களோடு படகில் ஏறுகின்றார்.

இந்நிகழ்வில், மத்தேயு நற்செய்தியாளர் மட்டும் இன்னொரு நிகழ்வை உள்ளிடுகின்றார். பேதுருவும் இயேசுவைப் போல கடலில் நடக்க முயற்சி செய்கின்றார். முதலில், நடக்கின்றார். பின்னர், தடுமாறுகின்றார். இறுதியாக, இயேசுவால் தூக்கிவிடப்படுகின்றார். 'நம்பிக்கை குன்றியவனே, ஏன் ஐயம் கொண்டாய்?' என அவரைக் கடிந்துகொள்கின்றார் இயேசு.

இயேசு தன் உடனிருந்த பேதுருவின் வெற்றியை விரும்புகின்றார். பேதுரு அல்ல, தான் மட்டுமே கடல்மேல் நடக்க வேண்டும் என அவர் நினைக்கவில்லை. தனக்கு அடுத்திருப்பவரின் வெற்றியைத் தன் வெற்றி எனப் பார்த்தார்.

எனக்கு அடுத்திருப்பவரின் வெற்றியை நான் கொண்டாட வேண்டும் என்றால்,

எனக்கு அடுத்திருப்பவரும் என்னைப் போல வெற்றிபெற வேண்டும் என நான் நினைக்க வேண்டும் என்றால்,

நான் என்ன செய்ய வேண்டும்?

'தனிமைத்தவம் செய்ய வேண்டும்'

முதல் வாசகத்தில், மக்கள் முன் வீண் ஆரவாரம் செய்த ஆரோனையும் மிரியாமையும் சந்திப்புக் கூடாரத்திற்குள் அழைக்கின்றார் ஆண்டவராகிய கடவுள். சந்திப்புக் கூடாரத்தின் தனிமையில் அவர்கள் தங்கள் தனித்துவத்தையும் மோசேயின் தனித்துவத்தையும் புரிந்துகொள்கின்றனர். மற்றவர்கள் முன் தங்களை நிரூபிக்க விரும்பியவர்கள் இப்போது தங்களின் தன்நிலை அறிகின்றார்கள்.

நற்செய்தி வாசகத்தில், தனிமையில் தன் தந்தையோடு விழித்திருக்கின்றார். இயேசுவின் தனிமை அவருடைய தனித்துவத்தைக் கொண்டாட வழி செய்வதோடு, நம்பிக்கையில் வலுவிழக்கும் தன் சீடருக்கு உதவிக்கரம் நீட்டவும் அவரை உந்தித் தள்ளுகிறது.

நாம் நம் தனிமையில் தனித்துவத்தை உணரத் தொடங்கினால், மற்றவர்களின் இருத்தல் நம் இருத்தலுக்கு ஒரு போதும் ஆபத்தாக அமையாது.

தனிமைத்தவம் மேற்கொள்ளாதவர் தனக்கு அருகில் இருக்கும் நபர் தன் எதிரி என்பார்.

தனிமைத்தவம் மேற்கொள்பவர் எதிரியையும் தன் அருகில் இருப்பவர் போல நினைத்து அவரின் வெற்றிக்குத் துணைநிற்பார்.

தனிமைத்தவமே நம்மை யாரென்று காட்டும் கண்ணாடி!

2 comments:

  1. தற்செயலாகப் பதிவின் தமிழாக்கத்தைப் பார்க்கும் முன்பே என் கண்கள் அந்த ஆரம்ப ஆங்கில வரிகளைக் கண்டன.நாம் வாழ்க்கைப்படகின் தனிமையில் இருக்கையில் இறைவன் நம்மோடு செபத்திலும்….. நம் வாழ்வில் புயலலைகள் வீசும் நேரங்களில் நமக்கருகே ஒரு ஆவி( பேய்) போலவும்….நம் வாழ்க்கைப்படகில் நமக்கு பயம், கலக்கம் மற்றும் நம்பிக்கையின்மை இவைகளைப் போக்க உதவும் நேரங்களில் நம்மைக் காக்கும் இறைவனாகவும் இருக்கிறார். எப்படியும் ஏதோ ஒரு உருவத்தில் இறைவன் நம்மோடு பயணிக்கிறார் என்பதே உண்மை! இரத்தினச் சுருக்கமான வார்த்தைகளுக்காகத் தந்தைக்கு ஒரு சபாஷ்!

    நம் உடனிருப்போரின் வெற்றியை நம் வெற்றியாகக் கொண்டாட வேண்டுமென்று அழைப்பை விடுக்கும் அதே நேரம் மோசேயின் வெற்றியைக் கண்டு பொறாமை கொண்ட அவரது இரத்த சொந்தங்களை இறைவன் கடிந்து கொண்டதையும் உணரமுடிகிறது. ஒவ்வொரு முறையும் இயேசு அரிய பெரிய காரியங்களை நிகழ்த்துமுன் தனிமையில் தன் தந்தையுடன் பேசினார்( செபித்தார்) என்பதைத் தந்தை இப்பதிவில் முன் வைக்கிறார்.தனிமை…அது ஒரு “வரம்”….. அது ஒரு “ தவம்” என நம்மை உணரவைக்கிறார் இயேசு.அவரின் தனித்துவம் போல் நாமும் தனிமையைக் கொண்டாடவும்…அந்தத் தனிமை தரும் இனிமையில் நம் அருகிலிருப்பவர் நம்பிக்கையில் வலுவிழக்கும் நேரங்களில் அவருக்கு உதவிக்கரம் நீட்டவும், அவரின் வெற்றியை நம் வெற்றியாக நினைத்துக் கொண்டாடவும் இறைவன் உதவி செய்வாராக! இந்த தனிமைத் தவம் எனும் கண்ணாடி நாம் நம்மை யாரென்று உணர்ந்து கொள்ள உதவட்டும்!

    ஒரே நிகழ்வாக இருப்பினும் ஒவ்வொரு முறையும் புதிய,புதிய கோணங்களில் நிகழ்வுகளைப் படம் பிடித்துக்காட்டும் தந்தைக்கு என் வாழ்த்துக்கள்!!!

    ReplyDelete