Thursday, August 5, 2021

ஆண்டவரின் தோற்றமாற்றம்

இன்றைய (6 ஆகஸ்ட் 2021) திருநாள்

ஆண்டவரின் தோற்றமாற்றம்

இன்று ஆண்டவரின் தோற்றமாற்றத் திருநாளைக் கொண்டாடுகிறோம். இது ஒரு வரலாற்று நிகழ்வு என்று சொல்வதை விட, இதை ஓர் இறையியல் நிகழ்வு என்றுதான் நாம் சொல்ல முடியும்.

இத்திருநாளின் பொருளை நாம் இரண்டு நிலைகளில் புரிந்துகொள்ள முயற்சி செய்வோம். எல்லாவற்றையும் நாம் இரு புலங்களில் பார்க்க முடியும். எடுத்துக்காட்டாக, நான் இந்தப் பாடத்தை எழுதுகிறேன். எழுதுகின்ற நான் என் பாடத்தை ஒரு கோணத்தில் பார்க்கிறேன் என்றால், இதை வாசிக்கின்ற ஒருவர் இன்னொரு கோணத்தில் பார்ப்பார்.

தோற்றமாற்ற நிகழ்வை இயேசு எப்படிப் பார்த்தார்? சீடர்கள் எப்படிப் பார்த்தனர்? என்பதே இந்நிகழ்வு பற்றிய இரு கோணங்கள்.

முதல் கோணம். இயேசு இந்த நிகழ்வை எப்படிப் பார்த்தார்?

இந்த நிகழ்வை இயேசுவே முன்னெடுக்கின்றார். இடத்தையும் நேரத்தையும் உடன் வர வேண்டிய நபர்களையும் இயேசுவே தேர்ந்தெடுக்கின்றார். அந்த நிகழ்வு பற்றி வெளி நபர்கள் தெரிந்துவிடக்கூடாது என்பது பற்றி எச்சரிக்கையாக இருக்கின்றார். நிகழ்வின் இறுதியிலும், 'இதை யாருக்கும் சொல்ல வேண்டாம்' என்று கட்டளையிடுகின்றார்.

இயேசுவைப் பொருத்தவரையில் அவர் தன் வாழ்வில் ஏற வேண்டிய முதல் மலை. இந்த மலையில் அவர் மாட்சி பெறுகிறார். அவர் ஏற வேண்டிய இன்னொரு மலையில் அவர் இகழ்ச்சி அடைவார். இங்கே சீடர்கள் அருகே இருக்கின்றனர். அங்கே அவருடன் யாரும் இருப்பதில்லை. இங்கே மோசேயும் எலியாவும் தோன்றுகிறார்கள். அங்கே இரு கள்வர்கள் அருகில் இருப்பார்கள். இங்கே, 'இதோ என் அன்பார்ந்த மைந்தர்' என்று தந்தை குரல் கொடுக்கின்றார். அங்கே, 'என் இறைவா, என் இறைவா, ஏன் என்னைக் கைநெகிழ்ந்தீர்?' என இயேசு அபயக் குரல் எழுப்புகின்றார். இங்கே அவருடைய ஆடை வெண்மையாக இருக்கிறது. அங்கே ஆடையின்றி நிர்வாணமாகத் தொங்குவார். இந்த மலையும் அந்த மலையும் ஒன்றிலிருந்து மற்றொன்று பிரிக்க இயலாதவை என்பதை இயேசு அறிந்திருந்தார். இரண்டு மலையும் இயேசுவுக்கு ஒன்றாகவே தெரிகிறது. இந்த மலையின் மாட்சி கண்டு அவர் மகிழவில்லை. அந்த மலையின் இகழ்ச்சி கண்டு துவண்டுபோகவில்லை.

உருமாற்றம் என்பது இத்தகைய உளமாற்றம்தான். நமக்கு வெளியே நடக்கும் எதைக் கண்டும் அலட்டிக்கொள்ளாமல் இருக்காது. தோற்றமாற்ற நிகழ்வில் அனைத்தும் வெளிப்புறமே நிகழ்கின்றன. ஆனால், வெளியே நடக்கின்ற நிகழ்வுகளுக்கு அவர் உள்ளார்ந்த பதிலிறுப்பு தருகின்றார்.

'இதை யாருக்கும் சொல்ல வேண்டாம்' என்று இயேசு சொல்வதேன்? இந்த அனுபவம் மற்றவர்களுக்குச் சொன்னால் புரியாது. நம் வாழ்வில் நடக்கும் துன்பகரமான நிகழ்வுகளை நாம் மற்றவர்களிடம் சொல்லாமல் இருந்துவிடுவது நல்லது. ஏனெனில், நாம் சொல்லியும் அவர்கள் அதைப் புரிந்துகொள்ளவில்லை என்றால், நம் வலி இரட்டிப்பாகிவிடும்.

ஆக, இயேசுவைப் பொருத்தவரையில் தோற்றமாற்றம் என்பது தான் யார் என்பதைத் தன் சீடர்களுக்கு வெளிப்படுத்தும் ஒரு வாய்ப்பு. கல்வாரியின் அவலம் காண்பவர்கள் இயேசுவுக்கு மாட்சியும் இருந்தது என்று எண்ணிக்கொள்வதற்கான ஒரு வாய்ப்பு.

இரண்டாம் கோணம். இந்த நிகழ்வை சீடர்கள் எப்படிப் பார்த்தார்கள்?

தனக்கு நடக்கும் வரை நடப்பதெல்லாம் வேடிக்கைதானே. வேடிக்கை பார்க்கின்றனர் சீடர்கள். 'உமக்கு ஒன்றும் மோசேக்கு ஒன்றும் எலியாவுக்கு ஒன்றும்' என்று கூடாரங்கள் அடித்து, அந்தப் பொழுதை அப்படியே உறையச் செய்ய விரும்புகின்றனர். இன்னொரு பக்கம் அச்சம் அவர்களை மேற்கொள்கிறது.

'இவருக்குச் செவிசாயுங்கள்' என்ற கட்டளை தங்கள் காதுகளை வந்தடைந்தபோது, இயேசுவைத் தவிர அங்கு வேறு யாரும் இல்லை. 'செவிசாய்த்தல்' அல்லது 'கேட்டல்' என்பது யூதர்களைப் பொருத்தவரையில் முதல் ஏற்பாட்டு, 'இஸ்ரயேலே! கேள்!' என்னும் சொல்லாடல்களைத்தான் அவர்களுக்கு நினைவூட்டியிருக்கும். இங்கே இயேசுவைக் கடவுளாக முதன்முதலாக சீடர்கள் அறியத் தொடங்குகின்றனர். இது அவர்களுடைய வாழ்க்கையைப் புரட்டியிருக்க வேண்டும். ஆனால், புரட்டவில்லை. இதற்குப் பின்னரும் இயேசு அவர்களால் தவறாகப் புரிந்துகொள்ளப்படுவார்.

இன்றைய இரண்டாம் வாசகத்தில், புனித பேதுரு மிக அழகான உருவகம் ஒன்றைப் பயன்படுத்துகின்றார்: 'பொழுது புலர்ந்து விடிவெள்ளி உங்கள் இதயங்களில் தோன்றும் வரை அது இருண்ட இடத்தில் ஒளிரும் விளக்கைப் போன்றது.' அதாவது, நான் உள்ளொளி பெறும் வரை எனக்கு வெளியில் இருப்பதெல்லாம் வெறும் விளக்கின் வெளிச்சமே. உள்ளொளி பெற்றவுடன் என் வாழ்வே ஒளிரத் தொடங்குகிறது. அங்கே இருள் என்பதே இல்லாமல் போய்விடுகின்றது.

சீடர்கள் அச்சம் என்னும் இருளால் ஆட்கொள்ளப்பட்டனர். அவர்கள் இயேசுவின் உயிர்ப்புக்குப் பின்னரே இந்நிகழ்வைப் புரிந்துகொள்கின்றனர்.

இயேசுவின் உருமாற்றம் சீடர்களின் உள்ளத்தை பின்னால்தான் மாற்றுகிறது.

இரண்டு பாடங்கள்:

ஒன்று, வாழ்வின் எதார்த்தங்கள் நம்மைப் பாதிக்காதவண்ணம் வாழக் கற்றுக்கொள்வது.

இரண்டு, உள்ளொளிப் பயணத்தை தொடங்குவது, தொடர்வது.


2 comments:

  1. இயேசுவின் “உருமாற்றம்” என்று அறியப்பட்ட ஒரு விஷயத்திற்குத் “ தோற்றமாற்றம்” எனப் பெயரிட்டுள்ளார் தந்தை. இந்நிகழ்வை விரைவில் இயேசு அனுபவிக்கப்போகும் பாடுகளின் நிகழ்வோடு ஒப்பிட்டிருப்பது….. நடந்து கொண்டிருப்பது மகிழ்வையும், நடக்கவிருப்பவை கலக்கத்தையும் தருகின்றன.”இரு நிகழ்வுகளும்…இரு மலைகளும் ஒன்றாகவே தெரிந்தன இயேசுவுக்கு!” இந்த மலையின் மாட்சிகண்டு மகிழவில்லை.அந்த மலையின் இகழ்ச்சி கண்டு துவண்டுபோகவில்லை….இறைவனில் இணைந்திருப்பவர்களுக்கு மனத்தில் சலனமற்றவர்களுக்கு எல்லாமே ஒன்றாகவே தெரிகின்றன எனச் சொல்லும் வரிகள் நம்மனத்தையும் சேர்த்தே பதப்படுத்துகின்றன.

    சீடர்களுக்கோ இந்த நிகழ்வோ…. இல்லை “ இவருக்கு செவிசாயுங்கள்” என்ற வார்த்தைகளோ எந்த பாதிப்பையும் ஏற்படுத்தாத ஒரு வேடிக்கை நிகழ்ச்சி; அவர்களின் வாழ்க்கையைப் புரட்டிப்போட்டிருக்க வேண்டிய ஒரு செயல். ஆனால் எதிர்பார்த்தது விழலுக்கிறைத்த நீரே என்கின்றன தந்தையின் வார்த்தைகள்.

    “உள்ளொளி பெறும் வரை எனக்கு வெளியில் இருப்பதெல்லாம் வெளிச்சமே உள்ளொளி பெற்ற வாழ்வே வெளிச்சமானது”…பேதுருவின் வார்த்தைகள் நம்மை வெளிச்சத்தை ஏற்றத் தூண்டுவதோடு மற்றவரின் வாழ்க்கையிலும் வெளிசசம் பாய்ச்ச அழைக்கின்றன. இவை உண்மையாகும் பட்சத்தில் வாழ்வின் எதார்த்தங்கள் நம் வாழ்வைப் பாதிக்காது; அப்படிப்பட்ட ஒரு வாழ்வே நம் உள்ளொளிப் பயணத்தை தொடங்குவும்,தொடரவும் உதவி செய்யும். தொடங்கவும்…தொடரவும் இறையை துணைக்கழைப்போம்! தூண்டுகோலான தந்தைக்கு நன்றி சொல்வோம்!!!

    ReplyDelete
  2. Your way of reflection really nice father. Thought provoking. Thank you father.

    ReplyDelete