Tuesday, August 17, 2021

நல்லவனாய் இருப்பதால்?

இன்றைய (18 ஆகஸ்ட் 2021) நற்செய்தி (மத் 20:1-16)

நல்லவனாய் இருப்பதால்?

மத்தேயு நற்செய்தியில் மட்டுமே காணப்படுகின்ற விண்ணரசு பற்றிய உவமை ஒன்றை இன்றைய நற்செய்தியில் நாம் வாசிக்கின்றோம். காலையிலிருந்து மாலை வரை வேலை செய்த அனைவருக்கும் ஒரே கூலி கொடுக்கப்படுகின்றது. நமக்கு நெருடலான ஒரு வாசகம். இது அநீதி! என்று குரல் எழுப்ப நம்மைத் தூண்டும் ஒரு வாசகம். அநீதி எதுவும் நடக்கவில்லையே! என்று நம்மையே சாந்தப்படுத்த நம்மைத் தூண்டும் வாசகம். நிலக்கிழார் அனைவருக்கும் இரக்கம் காட்டியிருக்கலாமே! முதலில் வந்தவர்களை நீதியோடும் கடைசியில் வந்தவர்களை இரக்கத்தோடும் அவர் அணுகுவது ஏன்? என்று கேட்கத் தூண்டும் வாசகம்.

இந்த வாசகத்தின் வரலாற்றுப் பின்னணி, மத்தேயு நற்செய்தியாளரின் குழுமத்தில் நிலவிய வேறுபாடு அல்லது பிரிவினையாக இருக்க வேண்டும். இயேசுவின் உயிர்ப்புக்குப் பின்னர் நற்செய்தியை அறிவிக்கின்ற திருத்தூதர்கள் முதலில் யூதர்களுக்கும், பின்னர் புறவினத்தாருக்கும் அறிவிக்கின்றனர். ஆக, முதலில் கிறிஸ்தவராக மாறியவர்கள் நாங்கள், நீங்களோ கடைசியில் அல்லது பின்னர் வந்தவர்கள் என்ற, 'நாங்கள்-நீங்கள்' பாகுபாடு அங்கே எழுந்திருக்கலாம். 'முதலில் வந்த நாங்கள் பெரியவர்களா? கடைசியில் வந்த நீங்கள் பெரியவர்களா?' என்ற கேள்விக்கு விடையாக மத்தேயு நற்செய்தியாளர் இந்த உவமையை உருவாக்கியிருக்கலாம். அல்லது இயேசு இதைச் சொல்லியிருக்க, மற்ற நற்செய்தியாளர்கள் இதை எழுதாமல் விட்டிருக்கலாம்.

இந்த உவமையை நாம் பல கோணங்களில் பார்;த்திருக்கின்றோம். திராட்சைத் தோட்டம் என்பது பொதுவாக இஸ்ரயேல் மக்களைக் குறிக்கின்ற உருவகம். ஆக, புதிய இஸ்ரயேலாகிய திருச்சபை என்னும் திராட்சைத் தோட்டத்தை இது குறிப்பதாக நாம் எடுத்துக்கொள்ளலாம். வேலைக்கு முதலில் வந்தவர்களின் பார்வையில் நாம் இந்த உவமையைப் பார்த்தால், அவர்களுக்கு அநீதி இழைக்கப்பட்டது போல நமக்குத் தெரிகிறது. கடைசியில் வந்தவர்களின் பார்வையில் பார்த்தால், கடவுள் அவர்களுக்கு இரக்கம் காட்டியது நமக்குத் தெரிகிறது. அவர்களின் தேவை அறிந்து அவர்களுக்குக் கூலி கொடுத்தது தெரிகிறது. நிலக்கிழாரின் பார்வையில் பார்த்தால், அவர் தன் திராட்சைத் தோட்டப் பணியையே முதன்மைப் படுத்துகின்றார். பணம் அவருக்கும் பெரிதாகத் தெரியவில்லை. ஆகையால்தான், குறைவான அளவு வேலை செய்தவர்களுக்கும் அவர் முழுமையான கூலியைக் கொடுக்கினின்றார். ஒரு சிலரை நீதியோடும் - பேசிய அளவு கூலி, இன்னும் சிலரை இரக்கத்தோடும் - குறைவான வேலைக்கும் நிறைவான கூலி என்று அவர் கொடுக்கின்றார்.

இரக்கத்திற்கும் நீதிக்குமான ஒரு பிரச்சினை தீர்க்க முடியாத பிரச்சினை.

எடுத்துக்காட்டாக, தேர்வில் ஒரு மாணவன் பார்த்து எழுதுகிறான் என வைத்துக்கொள்வோம். அந்த மாணவன் ஏழைப் பின்புலத்திலிருந்து வருபவன். அவன் நல்ல மதிப்பெண் வாங்கினால்தான் அவன் விரும்புகிற அல்லது இலவசமான படிப்பு அவனுக்குக் கிடைக்கும். அவன் ஏழை என்பதற்காக அவன்மேல் இரக்கப்பட்டு அவனைப் பார்த்து எழுதுமாறு அனுமதித்தால் அவன் இன்னொரு மாணவனின் இடத்தைப் பறித்துக்கொள்வான் அல்லவா! அல்லது அவன் செய்த செயலுக்கான தண்டனை என்று நீதியோடு தண்டித்தால் அவன் தன் எதிர்காலத்தையே இழந்துவிடக் கூடும் அல்லவா!

'சாலையில் பச்சை விளக்கு எரிகிறது. உன் வாகனம் செல்லலாம்!' என்கிறது நீதி.

'முதியவர் ஒருவர் சாலையைக் கடந்துகொண்டிருக்கின்றார். பொறு!' என்கிறது இரக்கம்.

இதே பிரச்சினைதான் லூக்கா நற்செய்தி 13இல் நாம் காணும் காணாமல் போன மகன் உவமையிலும் வருகின்றது. 'சொத்தை எல்லாம் அழித்தவனுக்கு அல்லது குற்றம் செய்தவனுக்குத் தண்டனையே தவிர, மன்னிப்பு அல்ல!' என்கிறது நீதி கேட்டு நிற்கும் அண்ணனின் மனது. 'அவனாவது வந்தானே! சொத்து போனா பரவாயில்லை!' என்கிறது இரக்கம் காட்டி நிற்கும் அப்பாவின் மனது. இரண்டு பேரின் விவாதமும் அவரவரின் தளத்திலிருந்து பார்த்தால் சரி.

இந்த உலகத்தில் இரக்கம் மட்டுமே காட்டிக்கொண்டிருந்தால் எந்தவொரு ஒழுங்கும் இல்லாமல் போய்விடுமே!

நீதியைக் கொண்டு மட்டுமே நடத்த முயன்றால் எல்லாரும் இயந்திரங்கள் ஆகிவிடுமே!

'நான் நல்லவனாய் இருப்பதால் பொறாமையா?' எனக் கேட்கிறார் நிலக்கிழார்.

'நான் நீதியைக் கேட்பதால் உனக்குக் கோபமா?' என்று அந்த வேலைக்காரர் கேட்டிருந்தால் நிலக்கிழார் என்ன பதில் அளிப்பார்?

காலையிலேயே வந்தவர் தனக்கு அநீதி இழைக்கப்பட்டதாக வெளியேறுகிறார். மாலையில் வந்தவர் தன் தலைவர் இரக்கம் காட்டியதாக மகிழ்ச்சியோடு வெளியேறுகிறார்.

வாழ்க்கை இப்படித்தான் குண்டக்க மண்டக்க நம்மை நடத்துகிறது. 'இது ஏன்?' என்ற கேள்வியை நம்மால் கேட்க முடிவதில்லை.

நமக்கு அருகில் உள்ள ஆப்கான் நாட்டில் இந்நாள்களில் நடைபெறும் நிகழ்வுகள் நமக்கு அச்சத்தைத் தருகின்றன. உலக நாடுகள் எல்லாம் அமைதியாக நிற்கின்றன. சமயத்தின் பெயரையும் கடவுளின் பெயரையும் சொல்லிக்கொண்டு அமைதி சீர்குலைக்கப்படுகிறது. எப்படியாவது தப்பித்துவிட வேண்டும் என்ற எண்ணத்தில், வானூர்தியின் சக்கரத்தில் அமர்ந்துகொண்டு தப்பிக்க முயன்று, உயரத்திலிருந்து கீழே விழுந்து மடிகின்றனர். இவர்களை வாழ்க்கை நீதியின் அடிப்படையில் நடத்தவும் இல்லை! இரக்கத்தின் அடிப்படையில் நடத்தவும் இல்லை!

நீதியையும் இரக்கத்தையும் தாண்டி வாழ்க்கை தன் வழியில் நம்மை இழுத்துக்கொண்டே செல்கிறது.

இன்றைய முதல் வாசகத்தில் கிதியோனின் கடைசி மகன் இஸ்ரயேல் மக்களைப் பார்த்துப் புலம்புகின்றான். அரசாள வேண்டிய நான் இங்கே இருக்க, முன்பின் தெரியாத முள்செடி போன்ற ஒருவனை வைத்து நீங்கள் உங்களை ஆளுகிறீர்களே! எனப் புலம்புகின்றான். பாவம்! அந்தக் கடைசி மகனின் புலம்பல் யாருடைய காதுகளிலும் விழவில்லை.

அவனுக்கு நீதியும் கிடைக்கவில்லை! இரக்கமும் கிடைக்கவில்லை!

'நான் நல்லவனாய் இருப்பதால் உனக்குப் பொறாமையா?' என்று கடவுள் என்னவோ கேட்டுக்கொண்டே இருக்கிறார்.

'உன்னை நல்லவன் என்று யார் சொன்னா?' என்ற நம் புலம்பலும் திராட்சைத் தோட்டத்திற்குள் தோன்றி மறைகிறது.

2 comments:

  1. இந்த ‘திராட்சைத் தோட்ட உவமை’ பற்றிய பேச்சு வரும்பொழுதெல்லாம் கிட்டத்தட்ட எல்லோரது இல்லங்களிலும் இதைக்குறித்து எதிர்மறை விமர்சனம் செய்ய யாரேனும் ஒருவராவது இருப்பார்கள்.இரக்கமும்,நீதியும் இங்கு ஒன்றுக்கொன்று மோதுகின்றன. எது வெல்லும்? எதுவுமே வென்ற மாதிரி தெரியவில்லை.நிலக்கிழார் திராட்சைத்தோட்டப் பணியை முதன்மையாக வைத்தவர் தான்….. அவருக்குப் பணம் என்பது ஒரு பெரிய விஷயமில்லைதான்.ஒரு சிலரை நீதியோடும்,மற்றவரை இரக்கத்தோடும் பார்க்கிறார் தான். ஆனால் நாளின் முடிவில் அவருக்கும் சரி…. வேலைக்கு வந்தவர்களுக்கும் சரி… மனத்தில் மகிழ்ச்சி இருந்ததா? திருப்தி இருந்ததா? இல்லையே! ஒரு மனமகிழ்ச்சியும், திருப்தியும் தராத எதுவும் நியாயமான செயலா? தெரியவில்லை.

    கிதியானின் நிலமையைப் பார்க்கையில் திராட்சைத்தோட்டத் தொழிலாளர் நிலமை கொஞ்சம் பரவாயில்லைதான்! அவர்களுக்கு ஏதோ ஒன்று கிடைத்தது. கிதியானுக்கோ நீதியும் இல்லை…..இரக்கமும் இல்லை. எல்லாவற்றையும் மீறி இறைவன் நல்லவரே! என்ற conviction ம் நம் உள்மனத்திலிருந்து நம்மை உந்தித்தள்ளுகிறது. யாரைக் குறை கூறுவது? தெரியவில்லை. என்னைப் பொறுத்தவரையில் இன்றையப் பொழுது நல்லபடியாகக் கழிந்தால் நீதியோ….இரக்கமோ எனக்கு அது போதும். இரண்டுமே எனக்குக் கிடைக்கவில்லை எனினும் கூட ‘இறைவன் நல்லவர் தான்’ என்று சொல்லப் பழக்கப்பட்ட மனம் இது. …”என்றேனும் ஒருநாள் இரட்டிப்பாகத் தருவார் எனும் நம்பிக்கையோடு”. இந்தப் பதிவை எழுதி முடித்தபின் என்ன மாதிரியான எண்ண ஓட்டம் தந்தையின் மனத்தில்? தெரிந்து கொள்ள ஆசை. ஒரு விவாதத்திற்குட்பட்ட தலைப்பு எனினும் முடிந்த அளவு நியாயம் செய்த தந்தைக்கு நன்றிகள்!!!

    ReplyDelete