அங்கே அவர்களிடையே
இன்றைய முதல் வாசகத்தில் (இச 34:1-12) மோசே என்ற சகாப்தம் நிறைவுக்கு வருகின்றது. தன் கண்கள் குளிர வாக்களிக்கப்பட்ட நாட்டைக் கண்டுகொண்ட மோசே, வாக்களிக்கப்பட்டு நாட்டுக்குள் நுழையாமலேயே இறந்து போகின்றார்.
“ஆண்டவர் கூறியபடியே, அவர்தம் ஊழியர் மோசே மோவாபு நாட்டில் இறந்தார். மோவாபு நாட்டில் பெத்பகோருக்கு எதிரே உள்ள பள்ளத்தாக்கில் அவர் அவரை அடக்கம் செய்தார். ஆனால், இன்றுவரை எந்த மனிதருக்கும் அவரது கல்லறை இருக்குமிடம் தெரியாது. மோசே இறக்கும்போது அவருக்கு வயது நூற்றிருபது. அவரது கண்கள் மங்கியதுமில்லை. அவரது வலிமை குறைந்ததுமில்லை.”
மோசே பற்றி இப்படித்தான் ஆசிரியர் பதிவுசெய்கின்றார். ஆண்டவராகிய கடவுளால் அடக்கம் செய்யும் பேறு பெற்றவராகின்றார் மோசே. தண்ணீரில் தொடங்கிய இவருடைய வாழ்க்கைப் பயணம் பாலைவனத்தில் முடிகின்றது. இனி மோசே இஸ்ரயேல் மக்களின் நினைவில் மட்டுமே இருப்பார். ஆள்கள் மறையலாம். நினைவு என்றும் நிலைத்திருக்கும். முந்தையதை விட பிந்தையதுக்கு ஆற்றல் அதிகம்.
இன்றைய நற்செய்தி வாசகத்தில் மூன்று கருத்துகள் ஒன்றோடொன்று இணைந்து கிடக்கின்றன: ஒன்று, சகோதரரின் குற்றங்கடிதல்; இரண்டு, குற்றங்கடியும்போது மனதில் கொள்ள வேண்டிய ஒழுக்கம்; மூன்று, குழும வாழ்வில் இயேசுவைக் கண்டுகொள்தல்.
இந்தப் பகுதி மத்தேயு நற்செய்தியில் மட்டுமே உள்ளது. ‘குழும போதனை’ என்றழைக்கப்படுகின்ற குழும வாழ்வு பற்றிய அறிவுரையை மத்தேயு நற்செய்தியாளர் மட்டுமே பதிவு செய்கின்றார். இயேசுவின் கருத்துருக்களை எடுத்து மத்தேயு தன் குழுமத்தின் தேவைக்கு ஏற்றவாறு மாற்றியமைக்கின்றார். இங்கே, ‘திருச்சபை’ என்ற சொல்லாடலை மத்தேயு பயன்படுத்துகின்றார். ‘திருச்சபை’ என்பது சிறிய குழுமம் என்ற பொருளில்தான் இங்கே கையாளப்படுகின்றது.
முதலில், சகோதரரின் குற்றங்கடிதல். மற்றவரின் குற்றங்கடிதல் இன்று நேருக்கு நேர் நடப்பதை விட சமூக வலைதளங்களில் அதிகம் நடக்கின்றது. தவறுவது மனித இயல்பு. ஒருவர் செய்யும் தவறு குழும வாழ்வுக்கு இடையூறாக இருந்தால் அது தண்டிக்கப்பட வேண்டியது. ‘மற்றவர்களின் மனத்தை நான் ஏன் காயப்படுத்த வேண்டும்?’ என்ற கேள்வியும், ‘நான் அவருடைய தவறைச் சுட்டிக்காட்ட, அவர் என் தவறைச் சுட்டிக்காட்டிவிட்டால் என்ன செய்வது?’ என்ற கேள்வியும் நம் உதடுகளைக் கட்டிப் போடுகின்றன. குற்றங்கடிதலை நாம் பல நேரங்களில் தவிர்க்கின்றோம்.
இரண்டாவது, குற்றங்கடிதலில் உள்ள ஒழுக்கம். இன்று தனியுரிமை (ப்ரைவஸி) எல்லா இடங்களிலும் வலியுறுத்தப்படுகிறது. அதாவது, முன்பின் தெரியாத ஒருவரிடம், ‘உங்கள் பெயர் என்ன?’ என்று நான் கேட்டால், அது அவருடைய தனியுரிமையைப் பாதிப்பதாக அவர் வழக்குத் தொடரலாம். இது ஒரு பக்கம் இருக்க, இன்னொரு பக்கம் இன்று நமக்கென எந்தவொரு அந்தரங்கமும் இல்லாத அளவுக்கு நம் நிலை இருக்கின்றது. நம்மைச் சுற்றியும் கேமராக்கள். நம் மொபைலில் உள்ள ஜிபிஎஸ். இப்படி நிறையக் காரணிகள் நம் ப்ரைவஸியை எடுத்துவிட்டன. இன்று எதுவும் யாருக்கும் பெர்சனல் அல்ல. ஆனால், இயேசு குற்றங்கடிதலில் தனியுரிமையை மிகவும் மதிக்கின்றார். முதலில் தனித்து நான் சகோதரரை எதிர்கொள்ள வேண்டும். அடுத்ததாக, இரண்டு அல்லது மூன்று பேருடன். இறுதியாக, திருச்சபை வழியாக.
மூன்றாவது, குழும வாழ்வில் இயேசுவைக் கண்டுகொள்தல். மத்தேயு நற்செய்தியாளர் தன் நற்செய்தியை எருசலேம் ஆலயம் இடிக்கப்பட்ட பின்னர் எழுதுகின்றார். ஆக, கடவுளின் காணக்கூடிய அடையாளமாக இருந்த ஆலயம் இல்லை. தொழுகைக்கூடங்களிலும் கிறிஸ்தவர்கள் அனுமதிக்கப்படவில்லை. இந்த நிலையில் ஆலயம் அல்லது கோவில் பற்றிய புதிய இறையியல் உருவாகின்றது. இறைவனின் திருமுன்னிலை (பிரசன்னம்) என்பது இடம் சார்ந்தது அல்ல, மாறாக, ஆள் அல்லது நபர் சார்ந்தது என்பதே அந்த இறையியல். இந்தப் பின்புலத்தில்தான் பவுல் கொரிந்து நகர மக்களை, ‘நீங்கள் தூய ஆவியார் குடிகொள்ளும் ஆலயம்’ என அழைக்கின்றார். இனி இயேசுவின் பிரசன்னம் நினைவு சார்ந்ததாக இருக்கும் என்று இன்னும் ஒரு படி மேலே போகிறார் மத்தேயு. ஆக, இரண்டு மூன்று பேர் குழுமமாக இயேசுவை நினைத்து அவருடைய பெயரில் கூடினாலே, அங்கே அவர்களிடையே அவர் இருப்பார். ‘கடவுள் நம்மோடு’ (‘இம்மானுவேல்’) என்ற இறையியலும் இதன் பின்புலத்தில் உள்ளது என்பதை மனத்தில் கொள்வோம்.
மோசே என்ற ஆள், நினைவாக மாறுகின்றார்.
இயேசு என்ற ஆள், நினைவாக மாறுகின்றார்.
நபர்கள் மறைந்தாலும் நினைவுகள் மறைவதில்லை. நினைவுகள் குழும நினைவுகளாக மாறும்போது அவை இன்னும் நீடித்திருக்கின்றன. குழும நினைவுகளில் குடிகொள்ளும் கடவுள் நம் சகோதர, சகோதரிகளின் குற்றங்களைக் கடிந்துகொள்ள அழைக்கின்றார். கடிந்துகொள்வதில் உள்ள ஒழுக்கமே தனிநபரின் ஒழுக்கம்.
‘ மோசே’ குறித்த முதல் வாசகம்! வாக்களிக்கப்பட்ட நாட்டுக்குள் நுழையாமலேயே மோசே இறந்தபோது அவருக்கு வயது நூற்றிஇருபது. அவர் கண்கள் மங்கியதுமில்லை; வலிமை குறையவுமில்லை. தண்ணீரில் தொடங்கிய மோசேயின் வாழ்வு தண்ணீரில் மடிகிறது. இப்படிப் பல விஷயங்கள்.ஆனால் அந்த இறைவனின் அடியார் இன்னும் நம் “நினைவில்… வாழ்வில்” என்பது இறைவன் அவருக்குக் கொடுத்த பேறு.வாழ்வு எப்படியோ…சாவும் அப்படித்தான் என்பதில் உள்ள உண்மை மோசேயைப் போலவே நமக்கும் கிடைத்தால் நாமும் பாக்கியவான்களே!
ReplyDelete“ குற்றங்கடிதல்” பெயரிளவில் உள்ள விஷயமே! யார் யாரைக் கண்டிப்பது? சிலருக்கு தொட்டாலும் தப்பு..பட்டாலும் தப்பு. சிலருக்கோ தப்பு என்ற ஒரு சொல்லே தப்பு. நிலமை இப்படியிருக்க “ குற்றங்கடிதல்” என்ற ஒரு சொல் மனசாட்சி உள்ளவர்களுக்கு மட்டுமே பொருள் தரும்.ப்ரைவஸி என்ற போர்வையில் பல விஷயங்கள் நிழலாகவே தங்கி விடுகின்றன. இன்று நாம் வாழும் உலகில் நம் ஒழுக்கத்தைப் பத்திரமாகக் காப்பதே சிரமம்.இதில் ஒருவரின் மதிப்புக்குப் பங்கம் வராமல் அவரின் குற்றத்தை கோடுகாட்டுவது கொஞ்சம் சிரமமே! ஆகவே தான் இயேசு குற்றவாளியை படிப்படியாக திருத்த யோசனை சொல்கிறார்.முதலில் தனியாகவும்,பின் ஒரு சிறு குழு மூலமும் இறுதியாகத் திருச்சபை வழியாகவும்.இவ்வாறு நடக்கும் இடங்களில் ஒருவர் தவறு செய்திடினும் நாம் அவரை நடத்தும் விதத்தில் மனிதன் கூட தெய்வமாக வழியுண்டு.
நாம் பொறுப்புடன் மேற்கொள்ளும் எந்த செயலுமே நம் சந்ததியரால் நினைவு கூறப்படுகிறது என்பதற்கு மோசேயும்,இயேசுவும் எடுத்துக்காட்டாய் நிற்கிறார்கள்.
நாமும் நம் மறைதலுக்குப் பின் அடுத்தவரின் மனத்தில் நிற்கும் படியானதொரு வாழ்வை வாழ அழைக்கிறது இன்றையப்பதிவு. வழி சொல்கிறார் தந்தை.நன்றிகள்.!!!