Friday, August 27, 2021

சிங்கத்தின் தேன் - 3

சிம்சோன் புதிரும் புதினமும்

கணவனுக்குப் புரியுமா?

அதோ! அவள் அனைத்தையும் சொல்லிவிட்டாள். தான் சொன்னது தன் கணவனுக்குப் புரியுமா என்று புரியாமலேயே அனைத்தையும் சொல்லிவிட்டாள். தன் மனத்தில் தான் வைத்திருந்த சுமை அனைத்தையும், தான் கண்ட அரிய காட்சியின் அனைத்துச் செய்திகளையும், ஒரே மூச்சில் அவன் முன் இறக்கிவிட்டு, பெருமூச்சி இரைந்து அமைதி காத்தாள். ஆனால், அவள் பேசி முடித்தவுடன் அவர்கள் இருவருக்கும் இடையே நிகழ்ந்த எந்தவொரு உணர்வுப் பரிமாற்றத்தையும் விவிலியம் பதிவு செய்யவில்லை. அவர்கள் ஒருவரை ஒருவர் பார்த்துக்கொண்டார்களா என்ற குறிப்பும் கூட இல்லை. இது நமக்கொன்றும் வியப்பல்ல. ஏனெனில், விவிலியம் பெரும்பாலும் தன் கதைமாந்தர்களின் உணர்வுகளைப் பதிவுசெய்வது இல்லை. செயல்பாடுகள் மற்றும் நிகழ்வுகளின் தொகுப்புதான் விவிலியமே தவிர, கதைமாந்தர்களின் உணர்வுப் பரிமாற்றங்களை வாசகர்களின் கற்பனைத்திறத்திற்கு விட்டுவிடுகிறது. கற்பனைத்திறத்தின் ஆர்வத்தில் சில நேரங்களில் அங்கே மிகைப்படுத்துதலும் நடந்துவிடும். இருந்தாலும், நாம் கொஞ்சம் கற்பனையோடு நிகழ்வுகளை வாசிக்கத் துணிவோம். ஏனெனில், நமக்கு முன் விவிலியத்தை வாசித்த அனைவருமே தங்கள் கற்பனைத்திறத்தோடுதான் அதை வாசித்துள்ளார்கள். ஆகையால்தான், இன்றும் விவிலியம் ஒவ்வொரு நாளும், ஒவ்வொருவருக்கும், ஒவ்வொரு பொருளைத் தருகின்றது. ஒவ்வொருவரும் தன்னுடைய நம்பிக்கையின் பின்புலத்தில், தன் முற்சார்பு எண்ணங்களோடு, தன் பின்புலத்தோடு, தன் தனிப்பட்ட விருப்பு வெறுப்புக்களோடு விவிலியப் பாடங்களை அணுகி, தான் விரும்பும் பொருளை, அதன் ஒவ்வொரு வார்த்தை மற்றும் அசையின்மேல் சுமத்தி, தனக்கான முடிவை எடுத்துக்கொள்கின்றார். சில நேரங்களில், அப்பொருள் அவருடைய விருப்பமாக இருக்கும். சில நேரங்களில், அவர் தேர்ந்துகொண்ட பொருள் அவரையே ஏமாற்றும்.

ஆகவே, கொஞ்சம் எச்சரிக்கையோடும், கற்பனைத்திறம் தரும் நிறைய ஆர்வத்துடனும், அவனுக்கும் அவன் மனைவிக்கும் இடையே நடைபெற்ற உரையாடலின்மேல் நம் சிந்தனையைப் பதிப்போம். அவள் பேச, அவன் கேட்கிறான். பெண்ணுக்கே உரிய இயல்போடு அவள் பேசிக்கொண்டே இருக்க, ஆணுக்கே உரிய இயல்போடு அவன் அமைதியாக கேட்டுக்கொண்டே இருக்கிறான். அவள் நீளமாய் அடுக்கிக் கொண்டே போக, அவன் அமைதியாக அவளுடைய உதடுகள் பார்க்கிறான். அவளின் கண்களையும் இடையிடையே பார்த்துக்கொள்கிறான். ஏனெனில், பெண்களின் இதழ்கள் பொய் பேசுவதை அவர்களின் கண்கள் காட்டிக்கொடுத்துவிடும் என்று அவனுக்குத் தெரியும். அவளுடைய இதழ்களுக்கும் கண்களுக்கும் இடையே அவனுடைய கண்கள் ஓடிக்கொண்டே இருக்க, அவளுடைய வார்த்தைகளும் அவனுடைய ஓட்டத்தைக் கவனிக்காதவாறு ஓடிக்கொண்டே இருக்கின்றன. அவனுடைய அமைதியில் அவன் உள்ளத்தில் எழுந்த உணர்வுகள் எவை? ஆச்சர்யம் கொண்டானா? அக்களித்து எழுந்தானா? 'அப்படியா!' என அவளை ஆரத் தழுவிக்கொண்டானா? அல்லது முன்பின் தெரியாத அந்நியன் ஒருவனிடம் மனம்விட்டுப் பேசிக்கொண்டிருந்துவிட்டு, அதையே என்னிடம் வந்து பெருமையாகப் பேசுகிறாள் என்று அவள்மேல் கோபம் கொண்டானா? அவள் தன் கணவனுடன் பேசிக்கொண்டிருந்தபோது அவனுடைய கண்களை நேருக்கு நேர் பார்த்தாளா? அல்லது தாழ்வாரத்தின் கூரையில் தன் கண்களைப் பதித்துக் கொண்டாளா? அல்லது குனிந்து தன் பாதங்களைப் பார்த்துக் கொண்டே பேசி முடித்தாளா? தன் கணவனிடமிருந்து – ஏதோ ஒரு காரணத்திற்காக கடவுளின் மனிதர் அவனுக்குத் தோன்றவில்லை – தன் கண்களைத் திருப்பிக் கொண்டாளா? அவர்கள் கேட்ட செய்தி – அவள், தூதரிடம் கேட்டது, அவன், மனைவியிடம் கேட்டது - அவர்கள் இருவரையுமே கொஞ்சம் உலுக்கித்தான் விட்டது. இவ்வளவு நாள்கள் அவள் மலடியாய் இருந்தது பற்றிய நினைவு அவனுக்கு வந்த நொடி, அவள் இப்போது கருத்தரிக்கிறாள் என்ற செய்தி குழப்பத்தை ஏற்படுத்தியிருக்கும். தான் கருத்தரித்திருப்பதைப் பற்றிய நினைவு வந்து அவள் மகிழ்ந்த அந்த நொடி, தன் கணவனின் வலுவின்மையும் இயலாமையும் அவளுடைய உள்ளத்தில் ஓர் இகழ்சிரிப்பை உண்டாக்கியிருக்கும். ஆனால், அமைதியான அந்த சில நிமிடங்களில் அவர்களுக்கு இடையே நிறைய உணர்வுப் பரிமாற்றங்கள் நடந்திருக்கும். 

இந்த உணர்வுப் பரிமாற்றங்கள் பற்றி நாம் சிந்தித்துக்கொண்டிருக்கும் இந்நேரத்தில், அவள் அவனிடம் பேசிய வார்த்தைகளில், அவள் தவறவிட்ட சில தரவுகளைக் கவனிக்க மறந்துவிட வேண்டாம். அவள் தன் கணவனிடம் அனைத்தையும் சொல்வதுபோலத் தெரிந்தாலும், அவள் அனைத்தையும் சொல்லவில்லை. பெண்கள் தாங்கள் விரும்புவதை மட்டுமே சொல்வார்கள்! தாங்கள் கேட்டதை அல்ல! அவளும் அப்படித்தான் செய்கிறாள். முக்கியமான இரண்டு தரவுகளைத் தன் கணவனிடம் சொல்லாமல் மறைக்கின்றாள் அவள். பரபரப்புடனும் கலக்கத்துடனும் அவள் அவனிடம் பேசினாலும், தான் எதைப் பேச வேண்டும், எதைப் பேசக் கூடாது என்பதை அறிந்தவளாகவே இருந்தாள். அவள் மறைத்த முக்கியமான குறிப்புக்கள் இரண்டு: பிறக்காத அந்த மகனின் தலைமேல் சவரக்கத்தி படக்கூடாது என்ற குறிப்பையும், இந்த மகன் 'இஸ்ரயேல் மக்களைப் பெலிஸ்தியரிடமிருந்து விடுவிக்கத் தொடங்குவான்' என்ற குறிப்பையும் தன் கணவனிடமிருந்து மறைத்துவிடுகிறாள். 

முக்கியமான இந்தக் குறிப்புக்களை அவள் சொல்லத் தவறியது ஏன்?

தான் பெற்ற ஆச்சர்யமான அனுபவத்திலும், அந்த அனுபவம் தந்த ஆர்வத்திலும் குழப்பத்திலும் அவள் சவரக்கத்தி பற்றி முழுமையாக மறந்துவிட்டாள் என்று சொல்லலாமா? அவள் குழப்பத்துடன்தான் இருந்தாள். அல்லது, 'நாசீர்' என்ற வார்த்தையிலேயே, 'சவரக்கத்தி தலையில் படக்கூடாது' என்ற குறிப்பைத் தன் கணவன் அறிந்திருப்பான் என்று அவள் ஊகித்துக்கொண்டாள் என வைத்துக்கொள்வோம். ஏனெனில், ஆண்டவருக்கென நாசீராக ஒருவர் அர்ப்பணிக்கப்படும்போது அவருடைய தலையில் சவரக்கத்தி படக்கூடாது என்பது மோசேயின் நூல்களில் எழுதப்பட்டிருந்தது (காண். எண் 6:1-15). அவள் மறைத்த இரண்டாவது குறிப்பை எப்படிப் புரிந்துகொள்வது? ஒரு பெண் தன் கணவனிடமிருந்து தன் மகனைப் பற்றிய அந்த முக்கியமான குறிப்பை எப்படி மறைக்க முடியும்? அத்தகவலை அவள் தனக்கென எப்படி வைத்துக்கொள்ள இயலும்? தங்களுடைய எதிர்கால மகன் செய்யப்போகும் அந்த அரிய பெரிய செயல் அவனுக்கு நிறைவையும் பெருமையையும் கொடுத்திருக்குமே! மலட்டுத்தன்மையுடன் கடந்த பல ஆண்டுகள் ஏற்படுத்திய கசப்புணர்வை அது துடைத்திருக்குமே!

இதைப் புரிந்துகொள்ளவும், அவளைப் புரிந்துகொள்ளவும், நாம் கொஞ்சம் பின்நோக்கிப் போய், அவளுடைய கண்கள் வழியே கதையை வாசிக்க வேண்டும். விவிலியப் பாடம் அவளுடைய பெயரைக் குறிப்பிடவே இல்லை. அவளுடைய பெயர் யாருக்கும் ஒரு பொருட்டே இல்லை. 'மலடி' என்ற குறிப்பைத் தவிர வேறு எந்தக் குறிப்பும் அவளைப் பற்றி இல்லை. இன்னும் கொடுமையாக, 'அவள் மலடி,' 'அவள் குழந்தை பெறவில்லை' என்று அவளுடைய 'குறை' இரட்டிப்பாக்கிப் பேசப்பட்டது. இந்தக் குறிப்பிலிருந்து, அவள், பிறக்காத தன் குழந்தைக்காக எவ்வளவு ஆண்டுகளாகக் காத்திருந்தாள் என்பதை நாம் புரிந்துகொள்ள முடிகிறது. தனக்கு ஒரு நாள் குழந்தை பிறக்கும் என்ற நம்பிக்கையைக் கூட அவள் இழந்திருக்கலாம். மேலும், 'மலடி' (எபிரேயத்தில், 'அகாரா') என்ற அந்தப் பெயர், மற்றவர்களால் அவளுக்குக் கொடுக்கப்பட்ட பட்டம், 'காரணப் பெயர்.' அவளுடைய குடும்பத்தில், குலத்தில், ஊரில் மற்றவர்கள் அவளை அப்படித்தான் அழைத்தார்கள். ஏன்! ஒருவேளை, அவளுடைய கணவன்கூட, தன் இயலாமையை மறைப்பதற்காகவும், தன் கோபத்தின் வெளிப்பாடாகவும், சில நேரங்களில், அவளை, 'மலடி' என அழைத்திருப்பான். 'ஏய்! மலடி! இங்க வாடி! இதை எடுத்து உள்ளே வை!' என்று மற்றவர்கள்முன் வசைபாடியிருப்பான். 'மலடி' என்பதே தன்னுடைய பெயராய் நிலைத்துவிட்டதை எண்ணி அவள் முதலில் வருந்தியிருப்பாள். பின் இதுவே தன் நியதி என்றும், இதுவே தன் விதி என்றும் தன்மேல் விரும்பி ஏற்று, தானே மௌனமாய்ச் சுமந்துகொண்டிருந்திருப்பாள். தான் தனியே ஓய்ந்திருந்த பொழுதுகளில், தன்னைப் பற்றியும், தன் கையறுநிலை பற்றியும் அவள் எண்ணிய பொழுதெல்லாம், 'மலடி' என்ற அந்த வார்த்தை தேனீயாய் அவளைக் கொட்டியிருக்கும்

இப்போது, இதே 'குழந்தை பெறாத மலடி' திடீரென்று வானதூதர் ஒருவர் தோன்றியதால் அருள் பெறுகிறாள். அவள் ஒரு குழந்தையைப் பெற்றெடுப்பாள் என்ற செய்தியை அவரே கொண்டுவருகின்றார். இருந்தாலும், அதே பொழுதில், அவளுடைய நீண்டநாள் கனவு நிறைவேறிய அந்தப் பொழுதில், அவள் அளவில்லா மகிழ்ச்சி அடைந்த அந்தப் பொழுதில், வானதூதர் தொடர்கிறார்: 'ஏனெனில், பையன் பிறப்பிலிருந்து கடவுளின் நாசீராக இருக்க வேண்டும். அவனே இஸ்ரயேல் மக்களைப் பெலிஸ்தியர்களின் கைகளிலிருந்து விடுவிக்கத் தொடங்குவான்.'

அவள் அப்படியே எண்ணங்களுக்கும், உணர்ச்சி ஓட்டங்களுக்கும் கீழே ஆழ்ந்து அமிழ்ந்து போகிறாள்.


(தொடரும்)

2 comments:

  1. தன் மனத்திலிருந்த அத்தனையையும் தன் கணவனுடன் இடைவெளியின்றி ஒப்பித்தபின் அவர்களிடையே இருந்த உணர்ச்சிப் போராட்டத்தைத் தந்தை விவிரித்துள்ள விதம் ஒரு மௌன திரைப்படம் பார்க்கும் உணர்வைத் தருகிறது.அவள் நீளமாய் அடுக்கிக் கொண்டே போக,அவனுடைய கண்கள் அவள் இதழ்களுக்கும்,கண்களுக்குமிடையே ஏற்பட்ட மாற்றங்களை அளக்க, அவள் சாமர்த்தியமாக தேவனின் தூதர் தன்னிடம் பகிர்ந்து கொண்ட முக்கியமான விஷயத்தை மறைப்பதில் கண்ணாயிருக்கிறாள்.இதில் பெண்கள் பொய் பேசுவதை அவர்களின் கண்கள் காட்டிக்கொடுத்துவிடும் என்ற தந்தையின் இடைச்செருகல் வேறு.

    என்னதான் தனக்கு ஒரு ஆண்மகன் பிறக்கப்போகிறான் என்ற வானதூதரின் செய்தி அவள் மனத்தில் ஸ்வரங்கள் இசைத்தாலும், அவள் அவன் கணவனிடமிருந்து மறைத்த “ அவன் பிறப்பிலிருந்து நாசீராக இருக்க வேண்டும்; அவனே இஸ்ரேல் மக்களைப் பெலிஸ்தியர்களின் கைகளிலிருந்து விடுவிக்கத் தொடங்குவான்” எனும் செய்தி அவள், மனத்தில் சிறிது சிறிதாக சில்லிட்ட பனிக்கட்டியாக உறையத் தொடங்கியது…..

    ஏற்கனவே தெரிந்த விஷயங்களே எனினும் விஷயங்கள் விவரிக்கப்பட்டிருக்கும் விதம், இரு ரொட்டித் துண்டுகளுக்குடையே வைத்த ஜாம்( jam) போன்று, தந்தை தரும் கூடுதல் விஷயங்கள் அனுபவமிக்க ஒரு எழுத்தாளராக தந்தையை உயர்த்திக் காட்டுகிறது. தொடரட்டும் புதிரும்…புனிதமும்….. தந்தைக்கு வாழ்த்துக்கள்!!!

    ReplyDelete
  2. பிறக்காத அந்த மகனின் தலைமேல் சவரக்கத்தி படக்கூடாது என்ற குறிப்பையும், இந்த மகன் 'இஸ்ரயேல் மக்களைப் பெலிஸ்தியரிடமிருந்து விடுவிக்கத் தொடங்குவான்' என்ற குறிப்பையும் தன் கணவனிடமிருந்து மறைத்துவிடுகிறாள். // Even when Esau and Jacob were in their mother's womb, Rebecca knew from the Lord that they would fight against each other , but she never told that to Isaac. Also, she secretly helped Jacob.

    ReplyDelete