Sunday, August 1, 2021

சோர்வும் பரிவும்

இன்றைய (2 ஆகஸ்ட் 2021) முதல் வாசகம் (எண் 11:4-15)

சோர்வும் பரிவும்

இன்றைய முதல் வாசகம் அழகியல் பார்வையில் மிக அழகான பகுதியாக இருக்கின்றது. இவ்வாசகத்தின் அழகியல் கூறுகளை எடுத்து, இன்றைய நற்செய்தி வாசகத்துடன் (காண். மத் 14:13-21) பொருத்திச் சிந்திப்போம்.

எண்ணிக்கை நூல் இஸ்ரயேல் மக்களின் பாலைவனத் திரிதல் நிகழ்வுகளை நம் கண்முன் கொண்டு வருகின்றது. செங்கடலைக் கடந்த பின்னர் தண்ணீரும் உணவும் இல்லை என்று அவர்கள் முணுமுணுக்க, ஆண்டவராகிய கடவுள் பாறையிலிருந்து தண்ணீர் வரச் செய்கின்றார், மன்னாவும் காடையும் தருகின்றார். மன்னா இஸ்ரயேல் மக்களுக்கு வெறுத்துப் போய்விட்டது. மீண்டும் அவர்களுடைய நினைவு எகிப்து நோக்கிச் செல்கின்றது: 'நாம் எகிப்தில் செலவின்றி உண்ட மீன், வெள்ளரிக்காய், கொம்மட்டிக்காய், கீரை, வெங்காயம், பூண்டு ஆகியவற்றின் நினைவு வருகின்றது. ஆனால், இப்போதோ நம் வலிமை குன்றிப் போயிற்று. மன்னாவைத் தவிர வேறெதும் கண்களில் படுவதில்லையே!'

இங்கே மூன்று விடயங்கள் கவனிக்கத் தக்கவை: (அ) ஒரே உணவை உண்டதால் இஸ்ரயேல் மக்களுக்கு அந்த உணவின்மேல் சலிப்பு ஏற்பட்டுவிட்டது. (ஆ) வெறும் மன்னாவை மட்டும் உண்டதாலும், அடிக்கடி பாலைவனப் பயணம் செய்ய வேண்டிய நிலை இருந்ததாலும் அவர்கள் வலிமை குறைய ஆரம்பித்தது. (இ) எகிப்து நாட்டில் செலவின்றி 'வெரைட்டியாக' உண்டதை நினைவுகூர்கின்றனர். ஆனால், அந்த உணவுக்காக அவர்கள் தங்களையே அடிமைகளாகக் கையளித்திருந்தார்கள் என்பதை அவர்கள் மறந்துவிட்டார்கள். அடிமைத்தனத்தின் வியர்வையின் உப்பு என்னவோ அவர்கள் உண்ட உணவில் கலந்து அதற்குச் சுவை தந்ததாக அவர்கள் நினைத்தனர்.

முதலில் முணுமுணுத்த மக்கள் இப்போது அழுது புலம்புகின்றார்கள். முணுமுணுப்பு, புலம்பல் அல்லது அழுகையாக மாறிவிடாதவண்ணம் பார்த்துக்கொள்தல் நலம். மக்களின் அழுகை கேட்டு ஆண்டவர் கோபம் கொள்கின்றார். மோசே ஆண்டவராகிய கடவுள் முன் ஓர் அருள்புலம்பல் செய்கின்றார்: 'எனக்கு ஏன் இந்தக் கேடு? எல்லாப் பளுவையும் என்மேல் சுமத்தியது ஏன்? இம்மக்களை நானா கருத்தரித்தேன்? நானா இவர்களைப் பெற்றெடுத்தேன்?' இறுதியில், 'இவர்கள் எனக்கு மிகப்பெரும் பளு ... உடனே என்னைக் கொன்றுவிடும்' என்கிறார் மோசே. பாவம் மோசே! அவருடைய கையறுநிலையை அப்படியே இறைவன்முன் எடுத்துரைக்கின்றார்.

மோசே தன்னை ஒரு தாய்க்கு ஒப்பிட்டுப் பேசுகின்றார். தாயினும் சாலப் பரிந்து நிற்பவர் இறைவன். ஆனால், மோசேயோ தன் மக்களை, 'பளு' என்கிறார்.

மக்களின் தேவைகளைத் தலைவர்கள் நிறைவேற்றினாலும், அவர்கள் திருப்தி அடையாதபோது, தலைவர்கள் ஒரு வகையான கையறுநிலைக்கு ஆளாகின்றனர்.

ஏறக்குறைய இதே போன்றதொரு பிரச்சினையை இயேசு வேறு மாதிரியாகக் கையாளுகின்றார். பாலைவனத்தில் பசித்திருந்த மக்களுக்கு ஐந்து அப்பங்களையும் இரண்டு மீன்களையும் பகிர்ந்து கொடுக்கின்றார். 'மக்களைக் கண்டு அவர்கள்மீது பரிவு கொண்டார்' என மத்தேயு நற்செய்தியாளர் பதிவு செய்கின்றார்.

மோசே தன் மக்களைப் பார்த்து, 'இவர்கள் என் பளு' எனச் சொல்ல, இயேசுவோ தன் மக்களைப் பார்த்து, 'இவர்கள்மேல் நான் பரிவு கொள்கின்றேன்' என்கிறார்.

பளுவுக்கும் பரிவுக்கும் உள்ள வேறுபாடு இதுதான்: நானே என் மக்களைத் தூக்கி நிற்பேன் என்று அடுத்தவர்களுடைய பிரச்சினைக்கு நான் விடைதேட முயன்றால் அங்கே மக்கள் பளுவாக மாறிவிடுகிறார்கள். ஆனால், அவர்கள் பிரச்சினைக்கு அவர்களே வழி தேடிக்கொள்வார்கள் என்றும், இறைவன் தன்னோடு இருக்கிறார் என்றும் உணந்தால் அங்கே பரிவு மலர்ந்து விடுகிறது.

தனியே சுமந்தால் பளு.

இறைவனோடு சுமந்தால் பரிவு.

மோசே தலைவர் என்ற நிலையில் எல்லாவற்றுக்கும் தானே தீர்வு காண விழைகின்றார். இந்த இடத்தில், அவர்கள் கடவுளுடைய மக்கள் என்றும், தான் அவர்களுடைய மேற்பார்வையாளர் என்பதையும் மறந்துவிடுகின்றார்.

நம் வாழ்வையும் வேலைப் பளு அழுத்துகின்றது. இன்னொரு பக்கம் நம் நினைவு பழைய அடிமைத்தனத்தின் பூண்டு, வெங்காயம், கீரை மேல் அலைபாய்கின்றது.

மோசே கற்றுக்கொடுக்கும் பாடம், 'இறைவனிடம் அருள்புலம்பல் செய்வது.'

இயேசு கற்றுக்கொடுக்கும் பாடம், 'பரிவு காட்டிச் செயலில் இறங்குவது.'

'அழுதுகொண்டே இருந்தாலும் உழுதுகொண்டே இருந்தால்' பளு குறையும்!


2 comments:

  1. அருமையிலும் அருமை! மோசேயா? இல்லை இயேசுவா? யார் தலைவர்? ஒரு பட்டிமன்றத்திற்கிணையான பதிவு! பளுவா? இல்லை பரிவா? எது காலத்தின் தேவை? விடை காண விழைந்திருக்கிறார் தந்தை.”தனியே சுமந்தால் பளு; இறைவனோடு சேர்ந்து சுமந்தால் பரிவு.” என்னதான் தன்னைச் சார்ந்திருந்ந மக்களின் பிரச்சனைகளுக்குத் தானே தீர்வு தேட முயன்றாலும் இறுதியாக மோசே நமக்குக் கற்றுத்தருவது “ இறைவனிடம் அருள் புலம்பல் செய்வது” எனும் பாடமே! அதைப் பின்னுக்குத் தள்ளி “ பரிவு காட்டி செயலில் இறங்கு” ( ஏறக்குறைய தன் கையே தனக்குதவி) என்பதற்கிணையான பாடத்தை நமக்குக் கற்றுத்தருகிறார் இயேசு. அதையும் பின்னுக்குத்தள்ளி நம் தலையில் ஒரு தட்டு தட்டிச் சொல்கிறார் தந்தை… “அழுது கொண்டே இருந்தாலும் உழுதுகொண்டே இருந்தால் பளு குறையும்!” என்று.மோசேவா…. இயேசுவா…..இல்லைத் தந்தையா? யாரைப்பின்பற்றப் போகிறோம்? முடிவு நம் கையில்!

    “அடிமைத்தனத்தின் உப்பு என்னவோ அவர்கள் உணவில் கலந்து அதற்கு சுவை தந்ததாக அவர்கள் நினைத்தனர்”….. தந்தையின் கற்பனை வளம் ….சிறப்பு! வாழ்த்துக்கள்!!!

    ReplyDelete