Thursday, August 12, 2021

தொடக்கமுதல்

இன்றைய (13 ஆகஸ்ட் 2021) நற்செய்தி (மத் 19:3-12)

தொடக்கமுதல்

இன்றைய நற்செய்தி வாசகம் திருமணம் என்னும் வார்த்தையின் மூன்று பரிமாணங்கள் பற்றிப் பேசுகின்றது: (அ) மண உறவு, (ஆ) மணமுறிவு, (இ) மணத்துறவு.

இரு நாள்களுக்கு முன்பாக, 'ஆதாம் ஏன் ஆப்பிளைத் தின்றார்?' என்ற கட்டுரை ஒன்றை வாசித்துக்கொண்டிருந்தேன். இந்தக் கட்டுரை, 'சூறையாடுகின்ற பெண்' ('தெ ப்ரடேட்டரி ஃபீமேல்') (The Predatory Female) என்ற புத்தகத்தின் ஒரு பகுதி. ஆண்-பெண் திருமண உறவு அவசியமில்லை என்று வாதாடுகின்றது இந்தப் புத்தகம். இந்த இடத்தில் நாம் 'அன்பு' மற்றும் 'பாலுறவு' ஆகியவற்றைக் கொண்டுவர வேண்டாம். ஏனெனில், 'திருமணம்,' 'அன்பு,' 'பாலுறவு' ஆகிய மூன்றும் ஒன்றோடொன்று தொடர்புடைய சொற்கள் என்றாலும், ஒன்று மற்றொன்று இல்லாமல் இருக்கவும், இயங்கவும் முடியும். எடுத்துக்காட்டாக, 'திருமணமும்' 'பாலுறவும்' கொள்ளாமல் நான் ஒருவரை 'அன்பு' செய்ய முடியும். 'திருமணமும்' 'அன்பும்' இல்லாமல் நான் ஒருவருடன் 'பாலுறவு' கொள்ள முடியும். 'அன்பும்' 'பாலுறவும்' இல்லாமல் நான் 'திருமணத்தில்' இருக்க முடியும்.

'ஆதாம் ஏன் ஆப்பிளைத் தின்றார்?' என்ற கேள்விக்கு ஆசிரியர் இப்படி விடை தருகின்றார். 'விலக்கப்பட்ட கனியைப் பறித்துத் தின்ற ஏவாளைக் கடிந்துகொள்ளாமல் ஆதாம் அவர் தந்த கனியைத் தானும் உண்டதேன்?' எனக் கேள்வியை நீட்டிக்கின்றார் ஆசிரியர். இரண்டு காரணங்களுக்காக ஆதாம் ஆப்பிளைத் தின்கின்றார்:

ஒன்று, 'மறுத்துச் சொல்ல மனமில்லாமை.' அதாவது, மூளை அதைத் தவறு என்கிறது. ஆனால், மனம் அதைச் சொல்ல மறுக்கிறது. ஏனெனில், 'நான் அடுத்தவரை நிராகரித்தால் அவர் என்னை நிராகரிப்பார்' என்ற அச்சத்தினால் ஆதாம் ஏவாளுக்கு 'நோ' சொல்ல மறுக்கின்றார். சமூகம் வைத்திருக்கின்ற ஒரு மாயையான விதி இது. நாம் பல நேரங்களில் நமக்குப் பிடிக்காத விடயங்களையும் செய்யுமாறு நம்மை உந்தித் தள்ளுவது இந்த விதியே. எடுத்துக்காட்டாக, எனக்கு அடுத்த அறையில் வாழ்கின்ற அருள்பணியாளர், 'வா! கடைக்குப் போவோம்!' என்கிறார். 'நான் வரவில்லை!' என்று சொல்ல எனக்கு விருப்பம்தான். ஆனால், 'இன்று நான் அவர் கூப்பிட்டுப் போகவில்லை என்றால், நாளை நான் கூப்பிட்டு அவர் வர மறுத்துவிடுவாரோ?' என்ற அச்சத்தில் நான் உடனடியாகப் புறப்பட்டுப் போகின்றேன். சமூகம் இந்த முட்டாள்தனமான செயலுக்கு, 'தியாகம், பிறரன்பு, கனிவு, காயப்படுத்தாமை' என்று போலிப் பெயர்கள் சொல்லி அழைத்து, நம் செயலை நியாயப்படுத்துகின்றது.

இரண்டு, 'தனிமை பற்றிய அச்சம்.' அதாவது, 'இந்தப் பெண் செய்வது போன்று நானும் செய்யவில்லை என்றால் இவள் என்னை விட்டுப் போய்விடுவாளோ?' என்ற அச்சம் ஆதாமுக்கு வருகின்றது. தொடக்கமுதல் தனிமையிலேயே இருந்திருந்தால்கூட ஆதாமுக்கு அது பெரிய வலியாக இருந்திருக்காது. மாறாக, துணையுடன் சில காலம் இருந்துவிட்டு மீண்டும் தனிமைப்படுத்தப்படுவது அவரால் ஏற்றுக்கொள்ள முடியாத உணர்வாக இருக்கின்றது. இது அவருடைய 'குறைவு மனப்பான்மையின் (ஸ்கேர்சிட்டி மென்ட்டாலிட்டி) வெளிப்பாடு' என்கிறார் ஆசிரியர். 'மனிதன் தனிமையாக இருப்பது நல்லதன்று' என்று ஆண்டவராகிய கடவுளே சொல்லும் அளவுக்குத் தனிமை முதல்மனிதனுக்குக் கொடுமையான உணர்வாக இருக்கிறது.

நிற்க.

'ஒருவர் தன் மனைவியை எக்காரணத்தை முன்னிட்டாவது விலக்குவது முறையா?' என்று இயேசுவிடம் கேள்வி கேட்கப்படுகின்றது. இயேசு இங்கே, தொடக்கநூலில் நாம் வாசிக்கும் இரண்டு படைப்பு கதையாடல்களின் பின்புலத்தில் விடை தருகின்றார். முதல் கதையாடலின்படி, 'கடவுள் ஆணும் பெண்ணுமாக மனிதரைப் படைக்கின்றார்' (காண். தொநூ 1:27). இரண்டாம் கதையாடலின்படி, 'கணவன் தன் தாய் தந்தையை விட்டுவிட்டுத் தன் மனைவியுடன் ஒன்றித்திருப்பான். இருவரும் ஒரே உடலாய் இருப்பர்' (காண். தொநூ 2:24). இங்கே, கணவன் தன் முந்தையை பிணைப்புகளை விடுத்து (தாய் தந்தையர்) பிந்தையை பிணைப்புடன் (மனைவி) இணைகின்றார். விவிலியத்தில், 'அன்பு செய்வது' ஆணின் செயல் என்றே வரையறுக்கப்படுகின்றது. எபேசு நகரத் திருஅவைக்கு எழுதுகின்ற பவுல், 'திருமணமான பெண்களே, ஆண்டவருக்குப் பணிந்திருப்பது போல, உங்கள் கணவருக்கு நீங்கள் பணிந்திருங்கள்' என்றும், 'திருமணமான ஆண்களே, கிறிஸ்து திருச்சபைமீது அன்பு செலுத்தியதுபோல நீங்களும் உங்கள் மனைவியரிடம் அன்பு செலுத்துங்கள்' (காண். எபே 5:21,25) என்றும் அறிவுறுத்துகின்றார். ஆண் அன்பு செய்கிறார். பெண் பணிந்திருக்கிறார். ஆணின் அன்பு, பெண்ணின் பணிவும் பிரமாணிக்கமாக மாறுகிறது. தன் மனைவியை அன்பு செய்ய மறுக்கும் ஆண் பிரமாணிக்கமின்மையைத் தழுவுகின்றார். தன் கணவனுக்குப் பணிய மறுக்கும் பெண்ணும் பிரமாணிக்கமின்மையைத் தழுவுகின்றார்.

பிரமாணிக்கமின்மைக்காக ஓர் ஆண் தன் பெண்ணுக்கு மணவிலக்கு சான்று கொடுக்கலாம் என்று மோசேயின் கட்டளை மேற்கோள் காட்டப்படுகின்றது. பெண்ணின் பிரமாணிக்கமின்மை என்னும் செயலை வைத்துக் கொடுக்கப்படும் மணமுறிவு, ஆணின் அன்பின்மைக்கும் கொடுக்கப்பட வேண்டும் என இயேசு புரட்சி செய்கின்றார். ஆக, பரத்தமை என்ற செயல் வழியாகப் பெண் தவறினாலும் மணமுறிவு. அன்பின்மை என்ற உணர்வு வழியாக ஆண் தவறினாலும் மணமுறிவு என்கிறார் இயேசு.

'மணமுறிவு' என்று நாம் எளிதாகச் சொல்லிவிடுகிறோம் அல்லது எழுதிவிடுகிறோம். ஆனால், அதில் உள்ள வலி மிகவும் கொடியது. மணவிலக்கினால் உணர்வு ரீதியான துன்பத்தை மணமக்கள் மற்றும் குழந்தைகள் அனுபவிப்பதுடன், பொருளாதார அடிப்படையிலும் குடும்பங்கள் அனுபவிக்கின்றன. பல நேரங்களில் அரசின் சட்டங்களும், நீதித்துறையும் பெண்கள் சார்பாகவே தீர்ப்பைக் கொடுக்கின்றன. பல நேரங்களில் ஆண்கள் வன்முறையாளர்கள் போலவும், பாலுணர்வுப் பிறழ்வு கொண்டவர்கள் போலவும் குடும்ப உறவுகளில் காட்டப்படுகின்றனர். ஒவ்வொருவரும் நம் உள்ளம் என்னும் நீதிமன்றத்தில் நமக்கு நாமே வாதாடி தீர்ப்பு கொடுத்துக்கொள்ள வேண்டும். அவ்வளவுதான்!

'கணவர் மனைவியர் உறவுநிலை இத்தகையது என்றால் திருமணம் செய்துகொள்ளாதிருப்பதே நல்லது!' என்று சீடர்கள் சொல்வது அடுத்து வரப்போகும் 'மணத்துறவு' பற்றிய இயேசுவின் போதனையை முன்குறிப்பதாக உள்ளது.

வீடு கட்டுவதில் சிரமம் இருக்கிறது என்பதற்காக, நான் தெருவிலேயே படுத்துக்கொள்கிறேன் என்று சொல்ல முடியுமா?

'அருள்கொடை பெற்றவரன்றி வேறு எவரும் இக்கூற்றை ஏற்றுக்கொள்ள முடியாது' என்று இயேசு சொல்வது படைப்பின் தொடக்கத்தில் கடவுள் சொன்ன வார்த்தைகளுக்கு முரணாகத் தோன்றுகிறது. 'மணத்துறவு' என்பது யூத சமயத்தில் இல்லாத ஒன்று. தங்களை மற்றவர்களிடமிருந்து ஒதுக்கி வாழ்ந்த 'எஸ்ஸீனியர்களும்' (ஒரு குழுவினர்) திருமண உறவில் இணைந்திருந்ததற்கான சான்றுகளை கும்ரான் குகை தொல்பொருள் ஆராய்ச்சி சொல்கிறது.

மூன்றுவகை மணத்துறவு பற்றி இயேசு பேசுகின்றார்: (அ) பிறப்பினால் வரும் மணத்துறவு. இது இயல்பிலேயே இருப்பது. (ஆ) மருத்துவக் காரணங்களுக்காக மணத்துறவு. விபத்தில் ஒருவருக்கு ஆண்மை இழப்பு நேருகிறது. அல்லது பெண் கருவுற இயலாமல் மாறுகின்றார். தற்காலிக மணத்துறவு – பணி, பயணம், உடல்நலம் போன்ற காரணங்களுக்காக - இதில் அடங்கும். (இ) விண்ணரசின் பொருட்டு மணத்துறவு – தனிமையை விரும்பி ஏற்றுக்கொள்வது. இது இன்று பேசப்படும் 'புகுத்தப்பட்ட மணத்துறவு' போன்றது அல்ல. அதாவது, இன்றைய இளைஞர்கள் தங்கள்மேல் மணத்துறவைச் சுமத்திக்கொள்கின்றனர். அது ஒரு கருத்தியலாக வேகமாக வளர்கின்றது.

மணஉறவிலும் மணத்துறவிலும் முறிவு வரலாம். இரு முறிவுகளுமே வருத்தத்திற்குரியவை.

இன்றைய முதல் வாசகத்தில், செக்கேமில் உடன்படிக்கையைப் புதுப்பிக்கின்ற யோசுவா இஸ்ரயேல் மக்களிடம், 'உங்கள் வாளாலும் அன்று! உங்கள் அம்புகளாலும் அன்று!' என்று ஆண்டவராகிய கடவுளின் வார்த்தைகளைச் சுட்டிக்காட்டுகின்றார்.

மணஉறவும், மணத்துறவும் நிலைபெறுவது நம் வாளாலும் அம்புகளாலும் அன்று! மாறாக, அவருடைய அருள்பெருக்காலேயே!

அவரே மனிதனின் தனிமையை வெறுத்து, துணையை உருவாக்கினார்.

அவரே மணத்துறவும் ஏற்றார்.


1 comment:

  1. ஆதாம்- ஏவாள் கதையின் பின்னனியில் தந்தை எடுத்து வைக்கும் பல விஷயங்கள் என் சிறுமதிக்குப் புரிந்தும்,புரியாமலும் இருக்கிறது. ஆதாம் தவறு செய்த தன் மனைவியைக் கண்டிக்காமல், அவளோடு சேர்ந்து தானும் இறைவனுக்கு எதிராகச் சென்றதன் காரணம் ‘மறுத்துச் சொல்ல மனமில்லாமை’ மற்றும் ‘தனிமை அச்சம்’ என்கிறார் தந்தை. உண்மையே! நம்மில் பலரின் வாழ்வில் நாம் எதிர் கொள்ளும் விஷயமே! “குறைவு மனப்பாடு” எனும் வார்த்தை ஆதாமின் செயலுக்கு இன்னும் கொஞ்சம் கூடுதல் அர்த்தம் தருகிறது.

    பின்னால் திருமணம் பற்றிப்பேசும் வரிகள்…” அன்பு செய்ய ஆணும்,பணிவிடை செய்யப் பெண்ணும் மறுக்கையில் பிரமாணிக்கம் தவறுகிறார்கள்”….. எத்தனை பெண்கள் ஒத்துக்கொள்வார்கள் தெரியவில்லை.

    மண உறவு மற்றும் மணத்துறவு…முறிவு எதில் வந்தாலும் வருத்தத்திற்குரிய விஷயமே! ஏற்றுக்கொள்ள வேண்டிய உண்மை! ஒரு “வார்த்தை விளையாட்டு “ ரேஞ்சுக்கு” புரிந்த….புரியாத விஷயங்களுக்கிடையே என்னால் நன்கு புரிந்த விஷயம்
    “ மண உறவும்,மணத்துறவும் நிலை பெறுவது நம் வாளாலும் அம்புகளாலும் அன்று! மாறாக அவருடைய அருள்பெருக்காலேயே!” மனிதனின் தனிமையை வெறுத்து, துணையை உருவாக்கிய அதே இறைவன் தான் மணத்துறவையும் ஏற்றவர். மண உறவை ஏற்றவர்களும் சரி…. மணத்துறவை ஏற்றவர்களும் சரி… தேர்ந்தெடுத்த வாழ்வில் மனம் ஒன்றி வாழ, இறைவன் தன் ஆசீரையும்,வரங்களையும் பொழிய வாழ்த்துகிறேன். பல விஷயங்களைப் புரியவைக்க சிரம்மெடுத்த தந்தைக்கு என் வாழ்த்துக்கள்! நன்றிகள்!!!

    ReplyDelete