Sunday, August 29, 2021

சிங்கத்தின் தேன் - 4

சிம்சோன் புதிரும் புதினமும்

வாடகைத் தாய்

அவளுக்கு ஒரு மகன் பிறப்பான். ஆம்! அவளுக்கு! இந்த நிமிடம் வரை, உண்மையாகவே அது பற்றி அவளுக்கு ஒன்றும் தெரியாது. அச்செய்தியைச் சொன்ன வானதூதருக்கே அது முதலில் தெரியும். அவர் அச்செய்தியை அவளுக்குச் சொல்லிக் கொண்டிருக்கும்போதே அவளுடைய வயிற்றில் ஏதோ ஒன்று உருண்டு புரள்வதை அவள் அறிந்திருப்பாள். ஏனெனில், வெளிப்பாடு நடந்தவுடன் செயல்பாடும் நடந்துவிடும். இஸ்ரயேலைக் காப்பாற்றப் போவது தன் மகன்தான் என்று அறிந்த அந்த நொடி அவள், ஓர் ஆண்மயில்போலப் பெருமையில் தன் கழுத்தை அப்படியே நீட்டியிருப்பாள். கடவுளின் மக்களை மீ;ட்கும் ஒருவன் தன் வயிற்றில் பிறப்பது பற்றி எந்தத் தாய் பெருமை கொள்ளாமல் இருப்பாள்? ஆனால், ஒருவேளை, அவளுடைய உள்ளத்தின் ஒரு மூலையில், ஏதோ ஒரு வருத்தம் சம்மணம் போட்டு அமர்ந்திருக்கும். ஆம்! அவளுடைய மகிழ்ச்சி நிறைவானது அல்ல!

இன்னொரு துன்பமான, ஆனால் வெளிப்படுத்த இயலாத விடயம் அவள் நெஞ்சைப் பிழிந்திருக்கும். அவள் கருத்தாங்கியிருப்பது அவளின் தனிஅன்புக்குரிய, நெஞ்சுக்கு நெருக்கமான மகன் அல்ல. மாறாக, ஒரு 'நாட்டின் நம்பிக்கை நட்சத்திரத்தை,' கடவுளின் நாசீரை, இஸ்ரயேல் மக்களின் மீட்பரை அவள் கருத்தாங்கியிருக்கிறாள். அவனுடைய இந்த அடையாளம், அவன் பிறந்து, வளர்ந்து, வயதானபின் அவனுக்கு வருவது அல்ல. இதோ! அவள் கருத்தரிக்கத் தொடங்கும் அந்த நொடியே அவனுடைய அடையாளமும் உருவாகத் தொடங்குகிறது. ஒருவேளை அவன் வளர்ந்தபின் அந்த அடையாளத்தைப் பெற்றால், அவனோடு இணைந்து அவனுடைய தாயும் வளர்ந்திருப்பாள். ஆனால், தாய் இங்கே அப்படியே இருக்க மகன் மட்டும் வேகமாக வளர்கிறான். அவனோடு இணைந்து அவளும் வளர்ந்திருந்தால், நாட்டின் மீட்பரை உருவாக்கியது தன் பொறுப்புணர்வு என்று பெருமிதம் கொண்டிருப்பாள். ஆனால், அப்படி எதுவும் நடக்கவில்லை. இதோ! அவன் இப்போதே, வயிற்றிலேயே அந்த அடையாளத்தோடு வளர்ந்துகொண்டிருக்கிறான். ஏனெனில், 'கருவறையிலிருந்தே கடவுளுக்கான நாசீராக இருப்பான்' என்றே அவளுக்குச் சொல்லப்பட்டது.

அவள் புரிந்துகொள்ள முயல்கிறாள். இந்த மகன், அவள் நீண்டகாலம் காத்திருந்த அன்பு மகன், அவன் அவளிடம் கொடுக்கப்பட்ட அந்த நொடியே, அவளின் வயிற்றில் முளைவிட ஆரம்பித்துவிட்டான். அவன் முளைவிடத் தொடங்கிய அந்தப் பொழுதே அவனை வெளியிலிருந்து யாரோ ஒருவர் அவனைத் தொட்டுத் தழுவிக்கொண்டார். ஆக! அவளுடைய வயிற்றில் வளர்வது அவளுக்கே அந்நியமானது! அவளுடைய வயிற்றில் அது வளர்ந்தாலும், அது அவளுடைய குழந்தை அல்ல! அவளுடைய குழந்தையாக அது ஒருபோதும் இருக்காது!

இதை அவள் உடனடியாகப் புரிந்துகொள்கிறாளா? அவள் புரிந்துகொண்டாளா என்பது நமக்குத் தெரியாது. கனவுபோல நடந்த அந்த நிகழ்வு அவளை அப்படியே ஆக்கிரமித்துக்கொண்டது. அந்த நொடிப் பொழுதில், அளவில்லா மகிழ்ச்சியும், கறையில்லாப் பெருமையும் கொண்ட அவள், தன் வயிற்றில் பிறக்கும் சிறப்புக்குரிய அந்த மகன் குறித்துப் பூரித்துப் போனாள். ஏனெனில், அவளுக்கு, ஆம்! அவளுக்கு, அவளுடைய குலத்தில் உள்ள வேறெந்தப் பெண்ணுக்கும் அல்ல, அவளுக்கு, 'மலடி' என அழைக்கப்பட்ட அவளுக்கு, குழந்தைப் பேறு இல்லாத அவளுக்கு, அந்தக் குழந்தை கொடுக்கப்பட்டுள்ளது. ஆனாலும், பெண்ணுக்குரிய உள்ளுணர்வுடன் - இது நம்பிக்கை அல்லது சமயம்சார் அறிவு அல்ல – அவளுக்குத் தெரியும். தனக்கு குழந்தை கொடுக்கப்பட்ட அந்த நொடியே அது தன்னிடமிருந்து பிடுங்கப்பட்டுவிட்டது என்பது அவளுக்குத் தெரியும். அவள் தனக்குத்தானே வைத்து, நினைத்து, ரசித்து அனுபவிக்கின்ற நெருக்கமான அந்தப் பொழுது, பெண்மை தாய்மையாகக் கனியும் அந்தப் பொழுது, அவளிடமிருந்து திருடப்பட்டு, பொதுவான செய்தியாக்கப்பட்டு, அந்நியர்களோடு (பல ஆயிரம் ஆண்டுகளுக்குப் பின் இக்கதையை வாசிக்கும் நாமும் இதில் அடக்கம்) பகிரப்படுகிறது. இந்தக் காரணத்திற்காகவே, தான் அந்நியமாக்கப்பட்ட, தன்னுடைய பெண்மையின் தனிமை நெறிக்கப்பட்ட இந்தக் காரணத்திற்காகவே, அவள் தனக்கு நெருடலாய் இருந்த அச்செய்தியைத் தானே விழுங்கிக்கொள்கிறாள். தன் கணவனோடு பகிர்ந்துகொள்ள மறுக்கிறாள்

இத்தாயின் நிலையில்தான், விவிலியத்தில் நாம் வாசிக்கும் இன்னொரு கதைமாந்தரான அன்னாவும் இருக்கிறாள். கண்ணீரோடு, இறைவேண்டல் செய்கின்ற அன்னா, தனக்கொரு மகன் பிறந்தால் அவனை, நாசீராகக் கடவுளுக்கே அர்ப்பணம் செய்வதாகப் பொருத்தனை செய்கிறாள். பொருத்தனையின் விளைவாக, சாமுவேல் பிறக்கிறான். அவன் பால்குடி பிறந்தவுடன் அவனை எடுத்துக்கொண்டு ஏலியிடம் கொண்டு செல்லும் கட்டாயத்திற்கு ஆளாகிறாள். வியத்தகு முறையில் நடந்தேறிய இந்த இரு கருத்தரிப்புக்களிலும், கடவுள் இவர்களைத் தனக்கெனப் பயன்படுத்திக் கொண்டார் என்ற கோபமே நமக்கு எழுகிறது. இரு தாய்மார்களின் இதய ஏக்கத்தை, மனப் புழுக்கத்தை, உள்ளத்தின் விரக்தியை தனக்குச் சாதகமாகப் பயன்படுத்திக்கொள்கிறார் கடவுள். குழந்தைப்பேற்றுக்காக ஏங்கும் இத்தாய்மார்கள் தனக்காக எதையும் செய்வார்கள் என்ற அவர்களுடைய நன்மைத்தனத்தை, ஏக்கத்தை, எதிர்பார்ப்பை, வெற்றிகொண்டு தன் திட்டத்திற்குள் அவர்களை வளைத்துப்போடுகின்றார் கடவுள். இன்றைய நம் மருத்துவ வார்த்தைகளில் சொன்னால், கடவுளின் மாபெரும் திட்டங்களுக்கான 'வாடகைத் தாய்மார்களாக' தங்களையே 'விரும்பிக்' கையளிக்குமாறு அவர்கள் கட்டாயப்படுத்தப்படுகிறார்கள்.

சிம்சோனின் தாய் ஒரு வாடகைத்தாய். கடவுளின் நாசீரை, இஸ்ரயேல் மக்களை பெலிஸ்தியர்களிடமிருந்து காப்பாற்றவிருக்கும் மீட்பரைப் பெற்றெடுக்கத் தன் வயிற்றைக் கொடுக்கிறாள். குழந்தையைக் கொடுத்த அந்த நொடியே கடவுள் குழந்தையை பறித்துக்கொள்கிறார்

பாவம் சிம்சோன்! அவன் யாருக்கும் சொந்தமல்ல! இந்த அநாதை உணர்வே வாழ்நாள் முழுவதும் யாரையாவது அரவணைத்துக்கொள்ளுமாறு அவனை உந்தித் தள்ளுகிறது! இந்த அநாதை உணர்வினாலேயே அவன் தாயின் மடிக்கு ஏங்குகிறான்! அவன் தூங்கிய அனைத்து மடிகளுமே அவனுக்கு உரியவை அல்ல! ஏனெனில், அவன் அவர்களுக்கு உரியவன் அல்லன்!

(தொடரும்)


3 comments:

  1. அவளுக்குத் தெரியும்…அவளுக்குக் குழந்தை கொடுக்கப்பட்ட அந்தப் பொழுதே அது அவளிடமிருந்து பறிக்கப்பட்டுவிட்டதென்று.ஆகவே தான், அதைப் பகிர மறுக்கிறாள். இந்த த் தாயை விவிலியத்தில் வரும் அன்னாவோடு இணைத்துப் பேசுகிறார் தந்தை.வியக்கத்தக்க முறையில் நடந்த கருத்தரிப்புகளேயானாலும் அதைப்பற்றிய தந்தையின் பார்வை வேறுவிதமாக இருக்கிறது. தங்கள் உதரத்தில் ஒரு குழந்தை உருவாக என்ன வேண்டுமானாலும் செய்யத் தயாராக உள்ளனர் தாய்மார்கள் என்பது உண்மையே!ஆனாலும் கடவுளின் மாபெரும் திட்டங்களுக்கான வாடகைத்தாய்மார்களாக தங்களையே விரும்பிக் கையளிக்கக் கட்டாயப்படுத்தப்படுகிறார்கள் என்பது கொஞ்சம் குழப்பமாக இருக்கிறது. அப்படியானால் உலக மீட்பர் இயேசுவைச் சுமந்த அன்னை மரியாவும் ஒரு வாடகைத்தாய்தானா? மரியாளுக்கு அது பெரும் பேறு எனில் அன்னாளுக்கும், பெயர் தெரியாத இந்தத் தாய்க்கும் தானே! தாய்மார்களுக்கு நிலமை இதுவெனில் சிம்சோன் நிலை அதையும் விட பரிதாபம்!

    அனாதை உணர்வினால் சிம்சோன் தனக்காக ஒரு மடி தேடுவதும்,ஆனால் எந்த மடியும் அவனுக்குச் சொந்தமல்ல என்னும் உண்மையை அவன் மனது ஏற்க மறுப்பதும்…..சில பேரை பிறப்பிற்கு முன்னேயே இறைவன் ஆசீர்வதிப்பதும்…வேறு சிலரை நமக்குத் தெரியாத காரணங்களுக்காக அவர்களை அலற விடுவதும் நமக்குப் புதிதல்ல! காரணம் தேடவோ..கேட்கவோ நமக்கு உரிமையில்லை.ஏனெனில் அவர் இறைவன்!

    தொண்டைவரை துக்கம் அடைத்தாலும் கொஞ்சம் கூட உணர்வுகளின் உண்மை மாறாமல் விஷயங்களைத் தந்திருக்கும் தந்தையின் செயல் வாழ்த்துக்குரியது! நன்றி!!!

    ஆன

    ReplyDelete
  2. everyone's life is mangled in His hands... and father is comparing nazarite's mothers to surrogate mothers ..

    ReplyDelete