புனித ஜான் மரிய வியான்னி
'கடவுளின் இரக்கத்தால் நாங்கள் இத்திருப்பணியைப் பெற்றிருக்கிறோம். ஆகையால் மனந்தளராமல் இருக்கிறோம் ... இந்தச் செல்வத்தை மண்பாண்டங்கள் போன்ற நாங்கள் கொண்டிருக்கிறோம்' (2 கொரி 4:7)
'நான் என் அம்மாவுக்கு நிறையக் கடன்பட்டிருக்கிறேன். மதிப்பீடுகள் அன்னையர்களிடமிருந்தே பிள்ளைகளுக்குச் செல்கின்றன. தங்கள் கண்முன் நடக்கும் நல்லவை அனைத்தையும் தாங்களும் செய்ய வேண்டும் என அவர்கள் விரும்புகிறார்கள்' - இப்படித்தான் தன் அன்புத் தாயை நினைவுகூர்கிறார் இன்றைய நம் புனிதர் ஜான் மரிய வியான்னி. இவரை நாம், பங்குப்பணியாளர்களின் பாதுகாவலர், மறைமாவட்ட அருள்பணியாளர்களின் பாதுகாவலர் எனக் கொண்டாடி மகிழ்கின்றோம்.
'இவருடன் அருள்பணிநிலைப் பயிற்சிக்கு ஒன்பது பேர் இணைந்தனர். அவர்களில் ஒருவர் கர்தினாலாகவும், இருவர் ஆயர்களாகவும், மூவர் பேராசிரியர்களாகவும், மூவர் முதன்மைக் குருக்களாகவும் மாறினர். இவர் ஒருவர் மட்டும் புனிதராக மாறினார்' என்று இவரைப் பற்றிச் சொல்லப்படுவதுண்டு.
'எளிய வழியில் புனிதம்' என்றும், 'வாழ்வின் மிக அழகானவை அனைத்தும் எளிமையில்தான் உள்ளன' என்றும் நமக்குக் கற்றுக்கொடுக்கின்றார் இவர்.
நீடித்து நிலைக்கக் கூடிய எதுவும் நீடித்த நேரம் எடுக்கிறது என்பது வாழ்வியல் எதார்த்தம். தன் இருபதாவது வயதில் அருள்பணிநிலைப் பயிற்சிப் பாசறைக்குள் நுழைந்தார். படிப்பு அவருக்கு எளிதாகக் கைகூடவில்லை. மத்தியாஸ் லோரஸ் என்ற அவருடைய சக மாணவர் (12 வயது) அவருக்கு தனிப்பட்ட வகுப்புகள் எடுத்தார். வியான்னி தான் எடுக்கும் பாடங்களைப் புரிந்துகொள்ள முடியாத அளவுக்கு மந்த புத்தி உள்ளவராக இருக்கக் கண்டு ஒருநாள் எல்லார் முன்னிலையிலும் அவரைக் கன்னத்தில் அறைந்துவிடுகின்றார். ஆனால், அவர்மேல் எந்தக் கோபமும் கொள்ளாமல், தன்னைவிட எட்டு வயது குறைவான அந்த இளவலின் முன் முழந்தாள்படியிட்டு மன்னிப்பு கேட்கின்றார். மத்தியாஸின் உள்ளம் தங்கம் போல உருகுகின்றது. அழுகை மேலிட முழந்தாளில் நின்ற வியான்னியை அப்படியே தழுவிக்கொள்கின்றார். பிற்காலத்தில் டுபுக் (அமெரிக்க ஐக்கிய நாடுகள்) மறைமாவட்டத்தின் ஆயரான மத்தியாஸ் தன் வாழ்வின் இறுதிக்கட்டத்திலும், வியான்னியின் வார்த்தைகளில் இருந்த இயலாமையை நினைத்துப் பார்த்தார்.
தான் மற்றவர்களால், 'கழுதை' என அழைக்கப்பட்டாலும், 'இந்தக் கழுதை ஆண்டவருக்குத் தேவை!' என்பதில் உறுதியாய் இருந்தார் வியான்னி.
அ. என்னால் இயலும்
'என்னால் இயலும்' என நீ நினைத்தால், 'உன்னால் இயலாது' என யார் சொன்னாலும், 'உன்னால் இயலும்.' ஆனால், 'என்னால் இயலாது' என நீ நினைக்க, 'உன்னால் இயலும்' என இந்த உலகமே சொன்னாலும், 'உன்னால் இயலாது.' 'என்னால் இயலும்' என்ற தன்மேல் நம்பிக்கை (self-belief) வியான்னிக்கு நிறையவே இருந்தது. தன்னுடைய மதிப்பை அவர் மற்றவர்களின் செயல்பாடுகளை வைத்து மதிப்பிடவில்லை. மற்றவர்களைப் போலத் தன்னால் எதுவும் செய்ய இயலவில்லை என்றாலும் தனக்கு என்று ஒரு தன்மதிப்பு உண்டு என்று அவர் ஆழமாக நம்பினார்.
ஆ. அன்னை பக்தி
அன்னை கன்னி மரியா மேல் மிகுந்த பக்தி கொண்டவர் வியான்னி. தன் அன்னையின்மேல் கொண்ட அன்பினால் என்னவோ, அன்னை கன்னி மரியாமேல் மிகுந்த விருப்பம் கொண்டிருந்தார் வியான்னி. தன் இயலாமையை அந்த அன்னையிடம் சொல்லி மன்றாடினார். தான் செபத்தில் கேட்கும் எதுவும் கிடைக்கும் என்ற எளிய, ஆனால், உறுதியான நம்பிக்கை கொண்டிருந்தார் நம் புனிதர்.
இ. இலக்குத் தெளிவு
தான் ஆர்ஸ் நகரத்தில் காண விரும்பிய மாற்றத்தைக் கனவு கண்டார். அந்த ஒற்றைக் கனவை தன் எல்லாமாக மாற்றினார். தன் இறைவேண்டல், திருப்பலி, வழிபாடு, வீடு சந்திப்பு, நோயுற்றோர் சந்திப்பு, பயணம் என அனைத்திலும் தன் மக்களை மட்டுமே நினைவில் கொண்டிருந்தார்.
ஈ. மாற்றம் நேரம் எடுக்கும்
மாற்றத்தை விரும்பும் எவரும் அதற்கான நேரத்தைக் கொடுக்க வேண்டும் என உணர்ந்திருந்தார் வியான்னி. தன் நேரத்தை ஆலயத்தில் இறைவேண்டலிலும் ஒப்புரவு அருளடையாளம் வழங்குவதிலும் செலவிட்டார் புனிதர். அவற்றைத் தன் நேர விரயமாக அவர் கருதவே இல்லை.
உ. வலுவற்ற அவர் வலுவற்றவர்களின் உணர்வை அறிந்தார்
தானே இயலாமையில் இருந்ததால் மற்றவர்களின் இயலாமையை அறிந்தார். மற்றவர்கள் வார்த்தைகளைக் கேட்டு பொருள் உணர்ந்த வேளையில், இவரோ மற்றவர்களின் ஆன்மாக்களின் மௌனம் கேட்டுப் பொருள் உணர்ந்தார். ஆன்மாக்களை ஊடுருவிப் பார்த்தன அவருடைய கண்கள். 'எனக்காக ஒருவர் இருக்கிறார்' என்று தன் மக்கள் உரிமை கொண்டாடும் அளவுக்கு அவர்களுக்கு அந்த நம்பிக்கையைக் கொடுத்தார்.
ஊ. உடலில் தைத்த முள்
அவருடைய உடல்நலக் குறைவு உடலில் தைத்த முள்போல அவரை வாட்டியது. உணவுக்கும் ஊட்டத்துக்கும் உடல்நலத்துக்கும் உரிய நேரத்தை அவர் கொடுக்கவில்லை. அடிக்கடி உடல்நலக் குறைவால் பாதிக்கப்பட்டதால், அருகில் செல்லும் பயணத்திற்கும் அடுத்தவரின் துணை அவருக்குத் தேவைப்பட்டது. ஆனால், 'என் அருள் உனக்குப் போதும்' என்ற இறைவனின் உடனிருப்பை நிறையவே உணர்ந்தார்.
இன்றைய கண்ணோட்டத்தில் பார்த்தால், இந்தப் புனிதரின் செயல்பாடுகளும், ஆன்மிகப் பயிற்சிகளும் தேவையற்றவை எனத் தோன்றலாம். இன்று யார் பாவத்தைப் பற்றி நினைக்கிறார்கள்? யார் பாவசங்கீர்த்தனம் செய்கிறார்கள்? எதற்கு ஆலயத்திற்குள்ளேயே கிடக்க வேண்டும்? பத்துக் கட்டளைகளை மீறினால் என்ன? செபமாலை சொல்வதால் என்ன பயன்? என நிறையக் கேள்விகளை நாம் கேட்கின்றோம். இவற்றுக்கான விடைகளை நாமே கண்டு, நம்மை நாமே திருப்திப்படுத்திக்கொள்கின்றோம்.
இப்புனிதர் அப்படி என்ன செய்துவிட்டார்? புத்தகம் எழுதினாரா? திருஅவைச் சட்டம் கற்றாரா? நற்செய்தி அறிவிப்புப் பணி செய்தாரா? சபையைத் தோற்றுவித்தாரா? ஒப்புரவு அறையில் நாள் முழுவதும் அமர்வது என்ன கடினமான காரியமா? என்று சில இளம் அருள்பணியாளர்கள் எழுப்பிய கேள்விகளை நான் அறிவேன்.
அருள்பணியாளர்களாகிய எங்களுக்கு இவர் ஒரு சவால்.
'என் தனிப்பட்ட பணி,' 'என் பங்குப் பணி,' 'என் நிர்வாகப் பணி' என்று தனிப்பட்ட பெட்டிகளாக நிற்கும் எங்கள் பணிகள் நடுவில், 'இறைப்பணியே தன் பணி' என்றும், 'நான் ஓர் அருள்பணியாளர் அது போதும். அதை நான் வாழ்வேன்' என்றும் இருந்தார் நம் புனிதர்.
இவருடைய பரிந்து பேசுதல் எங்களுக்கு நம்பிக்கை தருவதாக!
இவருடைய வாழ்வு எங்களுக்கு முன்மாதிரியாக இருப்பதாக!
“ எளிய வழியில் புனிதம்”, “ வாழ்வின் மிக அழகானவை அனைத்தும் எளிமையில் தான் உள்ளன”…… இன்றையப் புனிதர்…. பங்குத்தந்தையர் மற்றும் அனைத்துப் பங்குப் பணியாளர்களின் பாதுகாவலர் ‘ புனித ஜான் மரிய வியான்னி’க்குத் தந்தை சூட்டும் மகுடம்.இவருடன் இணைந்து குருத்துவப் பணிக்குச் சென்ற ஒன்பது பேரில் மற்ற எட்டுப் பேரும் உயர்ந்த நிலைகளுக்குத் தேர்ந்தெடுக்கப்பட, “ இவர் மட்டுமே புனிதராக மாறினார்” என்பது இவர் ஒரு கழுதையின் தரத்திற்குத் தன்னை இறக்கினாலும்
ReplyDelete“இந்தக் கழுதை ஆண்டவருக்குத் தேவை” என்பதை அவர் அறிந்து வைத்திருந்த காரணத்தினாலேயே!
மற்றவர்களின் தன்னைக்குறித்த கணிப்பை பொய்யாக்கிய இந்தப் புனிதர், தன் மேல் தான் கொண்டிருந்த நம்பிக்கையால்….அன்னை மரியாள் மேல் கொண்டிருந்த பக்தியால்…….தான் முன் வைத்த தெளிவான இலக்குகளால்…..வலுவற்றவர்களின் வலுவாக வாழ்ந்ததால், அவரின் உடல்நலக்குறைவு முள்ளாகத் தைத்தாலும் தனக்குள்ளும் மாற்றம் நிகழும் என்று பொறுமை காத்தது மட்டுமின்றி “ என் அருள் உனக்குப் போதும்” என்று இறைவனின் உடனிருப்பை உணர்ந்தும் இருந்தார்.
இந்தப் புனிதரைப் போற்றுபவர்கள் இருக்கும் அதே குருத்துவக் குடும்பத்தில் அவரைக் குறித்த கேள்விகளை எழுப்புபவர்களும் இருக்கிறார்கள் என்கிறார் தந்தை. “ கல்லடி பட்டால் தானே அது கனி? இவர் மட்டும் எப்படி விலக்காக முடியும்?
இந்தப் பதிவிற்குப் பின்னூட்டம் எழுதும் அதே நேரம் “ அன்புள்ள சீடனுக்கு!” என்ற பாடலின் மனத்தை உருக்கும் வரிகள் பின்னனியில் ஒலிப்பதை உணர்கிறேன்.” நான் ஒரு அருள்பணியாளர்..அது போதும். அதைநான் வாழ்வேன்” என்பதைத் தன் விருதுவாக்காக வைத்திருந்த இந்தப்புனிதர் நம் அருட்பணியாளர்களுக்கு முன்மாதிரியாக இருக்கவும்….. அவருடைய பரிந்து பேசுதல் அவர்களுக்கு நம்பிக்கை தரவும் நாமும் இணைந்து இறைவனை வேண்டுவோம்.
இறைவன் தனக்கு வேண்டிய மலரை அது தெளிந்த தாமரைத் தடாகமாக இருந்தாலும் சரி…. சேறும், சகதியுமாக இருக்கும் குளமாக இருந்தாலும் சரி….அதிலிருந்து பறித்துக் கொள்வார் என்பதைப் பாடமாகச் சொல்கிறது இன்றையப் புனிதரின் வாழ்க்கை.எம்முறையும் போல இம்முறையும் மனத்தை நெகிழச்செய்த ஒரு பதிவிற்காகத் தந்தைக்கு நன்றிகள்! அனைத்து அருட்பணியாளர்களுக்கும் திருவிழா வாழ்த்துக்கள்!!!