Wednesday, August 18, 2021

அதைப் பொருட்படுத்தவில்லை

இன்றைய (19 ஆகஸ்ட் 2021) நற்செய்தி (மத் 22:1-14)

அதைப் பொருட்படுத்தவில்லை

நாம் வளர்கிறோம் என்பதற்கான முக்கியமான அடையாளம் நம் வார்த்தையைக் குறித்து நாம் கவனமாக இருக்க வேண்டும் என்ற எண்ண முதிர்ச்சியே. சிறு வயதில் அல்லது இளம் வயதில் நாம் நிறையப் பேசுகிறோம். ஆனால், நாம் வளர வளர வார்த்தைகள் எவ்வளவு முக்கியம் என்பதை உணர்கின்றோம்.

வார்த்தைகளின் முக்கியத்துவம் தெரியாமல் பேசிவிட்டு பின்பு கஷ்டப்படுகின்ற இருவரை இன்றைய வாசகங்களில் நாம் பார்க்கின்றோம்.

முதல் வாசகத்தில், இப்தா என்ற நீதித்தலைவரை நாம் எதிர்கொள்கின்றோம். இவர் ஒரு விலைமாதுவின் மகன். ஆணின் உதவி இல்லாமல் வெறும் பெண் மட்டுமே குழந்தை வளர்க்கும் இடத்தில், குழந்தைகள் இயல்பாகவே அதிகம் பேசுவார்கள். ஏனெனில் வார்த்தை அல்லது பேச்சு என்பது பெண்ணின் முதல் ஆயுதம் (அவளது கடைசி ஆயுதம் கண்ணீர்). மேலும், முன்பின் விளைவுகளை யோசிக்காமல் அந்த நேரத்தில் தனக்குச் சரி எனத் தோன்றுவதையும், ஓர் இறுக்கத்தை இலகுவாக்கவும் வார்த்தைகளைப் பயன்படுத்துவதில் பெண்கள் சிறந்தவர்கள். இப்தா தன் தாயிடம் இப்படித்தான் வளர்க்கப்படுகின்றார்.

அவரை அவருடைய ஊரார் ஒதுக்கிவைக்கிறார்கள். ஆனால், தேவை என்று வரும்போது அவரைத் தேடிச் செல்கின்றனர். தன்னைத் தலைவராக ஏற்றுக்கொண்டால் தான் வருவதாகக் கூறுகிறார் இப்தா. தலைவராக அவர்கள் ஏற்றுக்கொண்டவுடன் மகிழ்ச்சியில் ஆண்டவர் முன் ஒரு வாக்குறுதி கொடுக்கின்றார். 'நான் அம்மோனியர்களை வென்றால், அல்லது ஆண்டவர் அம்மோனியர்கள்மேல் வெற்றி தந்தால், தன் வீட்டுக்கு வெளியே முதலில் வருவதை அல்லது வருபவரை எரிபலியாகக் கொடுக்கிறேன்!'

ஆண்டவர் அவரிடம் எந்த வாக்குறுதியும் கேட்கவில்லை. ஆனால், விலைமாதுவினால் வளர்க்கப்பட்டதால் நிபந்தனை விதித்தே பழகிவிட்டார். ஏனெனில், 'நீ எனக்கு இதைத் தந்தால் நான் உனக்கு அதைத் தருவேன்' என்பதுதான் விலைமாதுவின் பேச்சாக பெரும்பாலும் இருக்கும். பாவம் இப்தா! ஆண்டவரிடம் நிபந்தனை விதிக்கின்றார். தன் வாக்குறுதியின் பின்விளைவை அவர் யோசிக்கவில்லை. போர் முடிந்து வீடு திரும்பும்போது அவருடைய ஒரே மகள், கன்னிப் பெண், ஆணுறவு கொள்ளாதவள் (இப்படித்தான் விவிலியம் சொல்கிறது) வீட்டை விட்டு வெளியே வருகின்றாள் ஆடிப் பாடிக்கொண்டு. தந்தையின் வாக்குறுதி பற்றி அவள் அறியவில்லை. 'நீ எனக்கு மோசம் செய்துவிட்டாயே!' என்று தன் மகளைச் சொல்கின்றார் இப்தா. என்ன ஓர் அநியாயம்! மோசம் செய்தவர் இப்தா. தன் வாக்குறுதியால் மோசம் செய்துவிட்டு, சற்றே பொறுப்புணர்வின்றி பழியைத் தன் மகள்மேல் போடுகிறார். ஆனால், மகள் தந்தையின் வாக்குறுதியின்படி எரிபலியாக்குவதற்கு தன்னையே கையளிக்கிறார். அவர் எரிபலி ஆக்கப்பட்டாரா என்பது பற்றி எந்தக் குறிப்பும் இல்லை.

அவசரமான பேச்சு, தேவையற்ற வார்த்தை பிரவாகம் - இப்தா தன் மகளை இழக்கிறார்.

நற்செய்தி வாசகத்தில் திருமண விருந்து எடுத்துக்காட்டில், திருமண விருந்துக்கு வருகிறேன் என்று சொன்னவர்கள் தங்கள் வார்த்தையைப் பொருட்படுத்தவில்லை. 'வருகிறேன்' என்று வாக்குக் கொடுத்துவிட்டு, இப்போது வர மறுத்ததால் அரசரின் கோபத்திற்கு ஆளாகின்றனர்.

மேலும், வந்தவர்களில் ஒருவர் திருமண ஆடையின்றி வருகின்றார். அதாவது, பாதிப் பொறுப்புணர்வு. 'வருகிறேன் ஆனால் நிபந்தனையோடு' என்று வருகின்றவரும் அரசரின் கோபத்திற்கு ஆளாகின்றார்.

வார்த்தை மிகவும் முக்கியம்.

வார்த்தையின் முக்கியத்துவம் பற்றி சபை உரையாளர் மிகவே எச்சரிக்கின்றார்: 'கடவுள் முன்னிலையில் சிந்தித்துப் பாராமல் எதையும் பேசாதே. எண்ணிப் பாராமல் வாக்குக் கொடுக்காதே. கடவுள் விண்ணுலகில் இருக்கிறார். நீயோ மண்ணுலகில் இருக்கிறாய். எனவே, மிகச் சில சொற்களே சொல். கவலை மிகுமானால் கனவுகள் வரும். சொல் மிகுமானால் மூடத்தனம் வெளியாகும்' (சஉ 5:2-3).

வார்த்தைகளை நாம் எப்படிப் பயன்படுத்துகின்றோம்?

நமக்குத் தேவையானதைச் சாதித்துக்கொள்வதற்காக வார்த்தையை நம் நோக்கத்திற்குப் பயன்படுத்துவது தவறு. இன்னொரு பக்கம் நம் வார்த்தைகளுக்கு நாமே பொறுப்பு என்று உணர்ந்து, மிகச் சில சொற்கள் சொல்வதும், சொல்லும் சொற்களை செயல்களாக்குவதும் நலம்.

இப்தா அளவிற்குப் பெரிய விலை கொடுக்கவில்லை என்றாலும், நாம் கொடுக்க வேண்டிய விலை மிகப் பெரியதே!

1 comment:

  1. அவசரமாக வார்த்தைகளை உதிர்த்து அவதிப்பட்ட பல நேரங்கள் நம்மில் பலருக்குப் புதிதல்ல. வார்த்தை ஜாலத்தால் பாஞ்சாலியைப் பகடைக்காயாக்கி…பந்தயத்தில் தோற்று அனைத்தையும் இழந்தவரின் வழி வந்ததவர் தானே நாம்! “ஒருவன் வள்ர்ந்து விட்டான் என்பதற்கு அவன் உபயோகப்படுத்தும் வார்த்தைகளின் எண்ணிக்கையே சாட்சி” போல் சிந்திக்க வைக்கிறது இன்றையப் பதிவு.அந்த நேரம் காரியத்தை சாதித்துக் கொள்வதற்காகவே என்ன பேசுகிறோம் என்று தெரியாமலே பேசுபவர்களும் உண்டு. இதில் ஆண் என்ன பெண் என்ன பேதம் ? இன்றைய வாசகத்தில் வரும் இப்தா ஒரு ஆண்தானே!

    ஒவ்வொரு முறை நாம் ஒரு வாக்குக் கொடுக்க வாய் திறக்கும் போதும் சபை உரையாளரின் வார்த்தைகளை நினைவு கொண்டாலே போதும்.”நம் வார்த்தைகளுக்கு நாமே பொறுப்பு” என்ற நினைப்பு நம் தேவையற்ற வார்த்தைகளைத் தடுத்து நிறுத்தும். சிந்தும் பொருட்களை அள்ளி விடலாம்.ஆனால் சிந்திய- சிதறிய வார்த்தைகளை என்ன செய்வது?
    வளருபவர்களும்…வளர்ந்தவர்களும் தங்கள் நினைவில் தூக்கி சுமக்க வண்டிய ஒரு செய்தி இன்றையது. தந்தைக்கு நன்றிகள்!!!

    ReplyDelete