கிதியோன்
நீதித்தலைவர்கள் நூலில் உள்ள சுழற்சியை நேற்றைய முதல் வாசகத்தில் வாசித்தோம். மிதியானியர்கள் கையிலிருந்து இஸ்ரயேல் மக்களை விடுவிக்க ஆண்டவராகிய கடவுள் பயன்படுத்திய கருவியே கிதியோன். 'வலிமை மிக்க வீரராகிய இவர்', மிதியானியர்களுக்கு அஞ்சி திராட்சை ஆலையில் கதிர்களை அடித்துக்கொண்டிருக்கின்றார். திராட்சை ஆலையில் மறைந்து நின்று கதிர்களை அடிக்கக் காரணம் மிதியானியர்களைக் குறித்த அச்சம். பிழிவுக் குழியில் நின்று கதிர்களை அடித்தால் அது கதிர்களை அடிப்பவருக்கே ஆபத்தாக முடியும். அந்த ஆபத்தையும் சகித்துக்கொள்ளத் துணிகின்றார் கிதியோன்.
'ஆண்டவர் உன்னுடன் இருக்கிறார்' என்று தூதர் சொன்னவுடன், 'ஆண்டவர் எங்களோடு இருக்கிறார்' என்றால் ஏன் எங்களுக்கு இப்படி எல்லாம் நடக்கிறது? எனக் கேள்வி கேட்கின்றார் கிதியோன். ஆண்டவர் அவர்களோடுதான் இருந்தார். ஆனால், அவர்கள்தான் ஆண்டவரோடு இல்லை.
கிதியோனின் இத்துணிச்சலைப் பாராட்டுகின்ற கடவுளின் தூதர் அவருக்குத் தன் உடனிருப்பை அடையாளங்கள் வழியாக வெளிப்படுத்துகின்றார்.
கிதியோன் தன்னுடைய ஆற்றலால் இயலாது என்ற அச்சத்தில்தான் ஆண்டவரின் உடனிருப்பை நாடுகின்றார்.
நற்செய்தி வாசகத்தில் செல்வம் பற்றிய இயேசுவின் போதனையைக் கேட்கின்றோம்.
செல்வத்தின் பெரிய வரமும் சாபமும் ஒன்றுதான்: அது ஒருவருக்கு தற்சார்பை உருவாக்கிவிடும். 'என்னால் இது முடியும்' என்ற ஆற்றலை ஒருவருக்குத் தருவதோடு, 'உன்னைத் தவிர உனக்கு வேறு யாரும் தேவையில்லை' என்ற எண்ணத்தையும் உருவாக்கிவிடும்.
கண்ணாடியில் உள்ள சில்வர் பூச்சு மற்றவரை மறைத்து ஒருவருக்கு அவரை மட்டுமே காட்டுகிறது. காலப் போக்கில் அவரால் மற்ற எவரையும் காண இயலாமல் போய்விடும்.
இறைவனின் உடனிருப்பு தருகின்ற ஆற்றலை நம் வாழ்வில் உணர நாம் என்ன செய்ய வேண்டும்?
அவர் நம்மைத் தேடி வருகின்ற நேரம் அவரைப் பற்றிக்கொள்ள வேண்டும்.
பல நேரங்களில் வாழ்க்கை நம் மேல் கசப்பை அள்ளிக் கொட்டுகிற போது ஆண்டவரின் உடனிருப்பைக் கேள்விக்குள்ளாக்குகிறோம். நம்முள் உறையும் தேவனைக் கண்டுகொள்ளாமல் வெளியில் தேடுகிறோம்.பல வடிவங்களில்….பல அடையாளங்களில் நம் கண்முன் வருபவரை நாம் தான் கண்டுகொள்வதில்லை என்பதற்கு உதாரணமாக வருகிறார் கிதியோன். உதாரணமாக வருபவரைப் பாடமாகவும் ஏற்றுக்கொண்டால் நம் வாழ்வு வளம் பெறும்.
ReplyDeleteசெல்வம் ஒருவருக்குப் பெற்றுத் தருவது வரமா? சாபமா? அதைக் கையில் வைத்திருப்பவரின் மன ஓட்டத்தைப்பொறுத்தது. சரித்திரத்தைத் திரும்பிப் பார்த்தால் கொடுத்து உயர்ந்தவர்களும் உண்டு; கொடுக்காமல் அழிந்தவர்களும் உண்டு என்பது புரியும்.
எல்லாவற்றிற்கும் மேலாக இறைவனையும்,அவரின் உடனிருப்பையும் தேடவும், அவர் நம்மைத் தேடி வருகின்ற நேரம் அவரைப் பற்றிக்கொள்ளவும் வழி சொல்கின்றன இன்றைய வாசகங்கள். அவர் நம்மைத் தேடி வருகின்ற நேரம் நம் கண்கள் அவரைக் கண்டு கொள்ள இறைவன் துணை புரிவாராக! நச்சென்று வந்த நாலு வார்த்தைகளுக்காகத் தந்தைக்கு நன்றிகள்!!!