Friday, August 20, 2021

தொண்டராக இருத்தல்

இன்றைய (21 ஆகஸ்ட் 2021) நற்செய்தி (மத் 23:1-2)

தொண்டராக இருத்தல்

மேலாண்மையியல் எழுத்தாளர் திரு. ராபின் ஷர்மா, மேலாளராக இருப்பதை விட பணியாளராக இருப்பது நல்லது என்று அலுவலக மேலாண்மையில் கற்பிக்கின்றார். அதாவது, ஓர் அலுவலகத்தின் நெளிவு சுளிவுகளை அறிந்துகொள்ள வேண்டுமெனில், அங்கு பணியாற்றும் மேலாளர்களை விட, பணியாளர்களைக் கேட்டால் நல்லது என்றும், பணியாளர்களின் பார்வையில் அலுவலகச் செயல்பாடுகளைப் பார்த்தால் நிறைய ஆதாரங்களைச் சேகரிக்கலாம் என்றும் சொல்கின்றார்.

ஒரு மேலாளர் தனக்கு உள்ள நிலையில்தான் யோசிப்பார். எடுத்துக்காட்டாக, அலுவலகத்தில் ஒரு கூட்டம் நடத்துகிறோம் என வைத்துக்கொள்வோம். அந்தக் கூட்டத்திற்கு சிற்றுண்டி ஏற்பாடு செய்ய வேண்டும். மேலாளர் தனக்குத் தெரிந்த பெரிய அளவில்தான் அதற்கான ஏற்பாட்டை யோசிப்பார். ஆனால், கடைநிலைப் பணியாளர் தன் நிதிக்கு ஏற்றாற் போல திட்டமிட்டு சிற்றுண்டி உட்கொள்வார். அவரிடம் கேட்டால், மிக மலிவான விலையில் சிற்றுண்டியை ஏற்பாடு செய்துவிடுவார். சிற்றுண்டி ஒன்றுதான்.

மேலும், கடைநிலைப் பணியாளரோடு தன்னையே ஒன்றித்துக்கொள்ளும் தலைவரே சிறந்த தலைவராக இருக்க முடியும்.

இன்றைய நற்செய்தி வாசகத்தில், 'உங்களுள் பெரியவர் உங்களுக்குத் தொண்டராக இருக்க வேண்டும்' என்கிறார் இயேசு.

இதற்கு மாறாக, பரிசேயர்களை எடுத்துக்காட்டிச் சொல்கின்ற இயேசு அவர்கள் இருநிலைகளில் தவறுவதாகச் சுட்டிக் காட்டுகின்றார்: ஒன்று, தாங்கள் சொல்வதை அவர்கள் செய்வதில்லை. இரண்டு, தங்களையே அனைத்திலும் முன்னிலைப்படுத்துகின்றனர். தங்களுக்கென்று தலைப்புகளையும் பெயர்களையும் விரும்பிப் பெற்றுக்கொள்கின்றனர்.

தங்கள் பெயர்களை மறைத்து இடத்திற்கு அழகு சேர்ப்பவர்கள் பணியாளர்கள்.

ஓர் இல்லத்திற்கு வருகின்ற நபர் அங்கிருக்கும் உணவு நன்றாக இருப்பது பற்றி இல்லத்தலைவரைப் பாராட்டுகின்றார். ஆனால், பாராட்டுக்கு உரியவர் தலைவர் அல்லர். மாறாக, அடுப்பின் வெப்பம் பொறுத்து சமையல் செய்தவரே. அவர் தன் செயலில் சரியாக இருக்கிறார். அடுப்பின் புகை போலவே அவருடைய உழைப்பும் பல நேரங்களில் மறக்கப்படுகிறது.

தங்களையே மறைத்துக்கொண்டு நம் நலனுக்காகப் பாடுபடும் அனைவரையும் எண்ணிப்பார்த்தல் நலம்.

1 comment:

  1. கடைநிலைப் பணியாளரோடு தன்னையே ஒன்றித்துக் கொள்ளும் தலைவரே சிறந்த தலைவர். மாற்றுக்கருத்தே இல்லை. தங்கள் பெயர்களை மறைத்து இடத்திற்கு அழகு சேர்ப்பவர்கள் அவர்கள்; மற்றவரை மேடையில் நடனமாடவிட்டுத் தங்கள் முகம் தெரியாதவாறு திரைச்சீலையை முன்னும்,பின்னும் இழுப்பவர்கள் அவர்கள். இப்படி பணியாளர்களுக்கான மேட்டிமையை அடுக்கிக் கொண்டே போகலாம். இத்தனையும் செய்வதால் எந்த பலனும் அவர்களுக்குக் கிட்டுமோ? இல்லையென்றே சொல்ல வேண்டும். அடுப்பின் புகை பொறுத்து அவர் செய்த உணவை வந்த விருந்தினரின் அருகில் உண்ணும் வாய்ப்பு பெற்ற ஒரே காரணத்தினால் மட்டுமே இல்லத் தலைவர் பாராட்டு பெறுகிறார். நாம் தேனை ருசிக்கையில் அதன் சுவை மட்டுமே நம் நாக்கிலும்,மனத்திலும் பதிகிறதே தவிர, அந்தத் தேனை நாம் சுவைப்பதற்காக எங்கெங்கோ அலைந்து, ஒவ்வொரு மலராய் அமர்ந்து,முகர்ந்து அதைத் தேடிக்கொண்டு வரும் தேனியை நினைக்கிறோமா? இல்லையே! அப்படித்தான் தொண்டராக இருப்பதும்! ஆனால் காலம் அப்படியே நின்று விடாது. காலச்சக்கரம் சுழல்கையில் தொண்டனும் ஒருநாள் இல்லத்தலைவனாவான்; அவனுடைய தொண்டன் செய்த நல்ல செயலுக்காக இவன் பாராட்டு பெறுவான்; அந்தப் பாராட்டிற்குக் காரணமே தொண்டன் என்பதை மறந்தும் போவான். இது தான் வாழ்க்கை! இதிலிருந்து ஒதுங்கி,மாறுபட்டு வாழ்பவர் மிகச்சிலரே! அந்த மிகச் சிலரில் நானும் ஒருத்தியாய் இருந்தால்….நமக்குத் தெரிந்த ஒரு விஷயத்தோடு தெரியாத ஒரு கருத்தையும் சேர்த்தே படம் பிடித்துக் காட்டியிருக்கும் தந்தைக்கு ஒரு சபாஷ்!!!

    ReplyDelete