வரி செலுத்துவதில்லையா?
பெரியவற்றின் (முதன்மையானவற்றின்) இடத்தை சிறியவை எடுக்கக் கூடாது. சிறியவை எடுக்கத் தொடங்கிவிட்டால் பெரியவை சீக்கிரம் மறைந்துவிடும்.
மேற்காணும் வாக்கியத்தை ஏற்றுக்கொள்வதில் நமக்கத் தயக்கமில்லை. பல நேரங்களில் பெரியவற்றை விடுத்து சிறியவற்றைப் பற்றிக்கொண்டதால் நாம் வாழ்வில் அடைந்த இழப்புகளையும் அறிவோம்.
எடுத்துக்காட்டாக, வாழ்வில் நான் அடைய வேண்டிய இலக்கு என்பது பெரியது. ஆனால், சோம்பல் அல்லது அதீத தூக்கம் என்பது சிறியது. இலக்கை விடுத்து நான் சோம்பலைப் பற்றிக்கொள்தல் தவறு.
இன்றைய நற்செய்தி வாசகத்தில் இரண்டு நிகழ்வுகள் ஒருசேரக் கொடுக்கப்பட்டுள்ளன. ஒன்று, இயேசு தன் பாடுகளை இரண்டாம் முறை முன்னறிவிக்கின்றார். இரண்டு, இயேசு தனக்காகவும் தன் சீடர்களுக்காகவும் வரி செலுத்துகின்றார். இரண்டாம் நிகழ்வை மத்தேயு நற்செய்தியாளர் மட்டுமே பதிவு செய்கின்றார்.
'உங்கள் போதகர் வரி செலுத்துகிறாரா? இல்லையா?' என்பது பேதுருவிடம் வைக்கப்படும் கேள்வி. இயேசுவோ இதை ஒரு பிரச்சினையாக ஆக்க விரும்பாமல், போகிற போக்கில், 'மீனின் வாயைத் திறந்து அதில் கிடைக்கும் நாணயத்தைக் கட்டு' என்று பேதுருவிடம் சொல்கின்றார். வரி வாங்குதலையே இயேசு கேலிக்குள்ளாக்குவது போல, அல்லது மற்றவர்களின் கேள்வியை நகைச்சுவையாக்குவது போல இருக்கிறது இயேசுவின் பதிலிறுப்பு.
தன்னுடைய இலக்கு என்பது பாடுகள் பட்டு இறப்பது.
அந்த இலக்கு தெளிவாக இருந்ததால் சிறிய விடயமான வரி செலுத்துதல் பற்றி இயேசு அலட்டிக்கொள்ளவில்லை. தன் நோக்கம் வரிக்கு எதிராகப் போராடுவதோ, அல்லது வரி வசூலிப்பவர்களைக் கடிந்துகொள்வதோ இல்லை.
வாழ்வின் பெரியவை இயேசுவுக்குத் தெளிவாக இருந்ததால், சிறியவற்றை அவர் பொருட்படுத்தவில்லை.
இன்றைய முதல் வாசகத்தில், இஸ்ரயேல் மக்களின் வாழ்வில் பெரியது என்றால் என்ன என்பதை வரையறுக்கின்றார் மோசே: 'உங்கள் கடவுளாகிய ஆண்டவருக்கே அஞ்சுங்கள். அவருக்குப் பணி புரிந்து அவரைப் பற்றிக்கொள்ளுங்கள்.'
இந்த இலக்கு தெளிவாக இருந்தால் இஸ்ரயேல் மக்களின் வாழ்க்கைப் பாதை தெளிவாக இருக்கும் என்பது இயேசுவின் பாடம்.
இன்று நாம் பல நேரங்களில் பெரிய இலக்குகளை நிர்ணயித்தாலும், நம் அன்றாடக் கவலைகள் என்னவோ சிறியவை பற்றிய விவாதங்களிலேயே கடந்து போகின்றது. இன்றைக்கு என்ன மீம் வந்தது? இன்ஸ்டாகிராமில் யார் ரீல் இடுகிறார்? வாட்ஸ்ஆப்பில் என்ன ஸ்டேடஸ் வைப்பது? அவன் ஏன்று இந்த ஸ்டேடஸ் வைத்திருக்கிறான்? எத்தனை பேர் என் ஸ்டேடஸைப் பார்க்கிறார்கள்? என் இடுகை எத்தனை பேரைச் சென்றடைகின்றது?
சிறியவை ஒருபோதும் பெரியவற்றின் இடத்தை எடுத்துவிட வேண்டாம் என்பதில் கவனமாக இருப்போம்.
நம் வாழ்க்கையை ஆண்டுகள் என எண்ணினால் அவை 60, 70, 80 என அதிகமாகத் தோன்றும். ஆனால், பத்தாண்டுகள் என எண்ணினால் வெறும் விரல்களால் அவற்றை எண்ணிவிட முடியும். முதல் இருபது ஆண்டு வாழ்க்கை கற்றலில் கழிந்தது. மீதமுள்ள நான்கைந்து பத்தாண்டுகளைக் கழிப்பதில்தான் எத்தனை போராட்டம்?
“பாடுகள் பட்டு இறப்பது” தான் தன் வாழ்வின் இலக்கு என்று அறிந்த இயேசு தன்னைச்சுற்றி நடந்த பிற விஷயங்களில் நாட்டம் செலுத்தவில்லை என்பது இன்றைய பதிவு நமக்கு சுமந்து வரும் செய்தி.” பாதை தெளிவாக இருப்பின் பயணமும் சிறப்பாக இருக்கும்” என்பது இயேசு கற்றுத்தரும் பாடம்.”உங்கள் ஆண்டவராகிய கடவுளுக்கே அஞ்சுங்கள். அவருக்குப் பணி புரிந்து அவரைப் பற்றிக் கொள்ளுங்கள்.” வாழ்வின் பெரியவை எவை எனத்தெளிவாகக் கற்றுத்தந்த நம் பிதாப்பிதாக்களுக்கு முன் இவ்வுலகின் மீம்,இன்ஸ்டாகிராம், வாட்ஸ்அப் போன்ற சில்வண்டுகளுக்கு என்ன முக்கியத்துவம் இருக்க முடியும்?
ReplyDeleteதந்தையின் இறுதி வரிகள் கொஞ்சம் கலக்கத்தோடு நம்மை யோசிக்க வைக்கின்றன.. “நம் வாழ்வின் முதல் இருபது ஆண்டுகள் கற்றலில் கழிந்தது. மீதமுள்ள நான்கைந்து பத்தாண்டுகளைக் கழிப்பதில் தான் எத்தனை போராட்டம்?” குமுறலோடு வரும் தந்தையின் வரிகள் என்னை யோசிக்க வைக்கின்றன. எனக்கு “இலக்கு” என்று இருக்கிறதா? அப்படியானால் அது என்ன? அதையடைய என முயற்சிகள் என்ன? காலம் கடந்து விடவில்லை……இன்னும் போராடலாம் என்று ஊக்கமூட்டும் தந்தைக்கு என் நன்றிகள்!!!