Monday, August 30, 2021

சிங்கத்தின் தேன் - 5

சிம்சோன் புதிரும் புதினமும்

இறக்கும் நாள் வரை

மனேவாகின் மனைவி அவனிடம் சென்று தான் வானதூதரைச் சந்தித்த நிகழ்வைப் பற்றிச் சொல்கிறாள். அவளுடைய பேச்சு மன்னிப்பு கோரும் நடையில் இருப்பதாகவும், அவள் நிறைய வார்த்தைகளைக் கையாளுகிறாள் என்றும் நாம் ஏற்கெனவே பார்த்தோம். எல்லாவற்றையும் சொல்வதுபோல இருந்தாலும், அவள் நிறையவற்றை மறைக்கவே செய்கிறாள். இந்த நிகழ்வை விளக்கும் நிறைய விளக்கவுரையாளர்களும், சிம்சோன் கதையாடலைத் தங்களுடைய பாடல், ஓவியம், புதினம், மற்றும் திரைப்படத்தில் கையாண்டவர்களும், சிம்சோன் பிறந்தது அவனுடைய தாய் மற்றும் 'கடவுளின் மனிதருக்கும்' இடையேயான 'உறவில்தான்' என்று சொல்லத் தவறவில்லை. இன்னும் சிலர், குறிப்பாக, விலாடிமிர் யாபோடின்ஸ்கி தன்னுடைய நாசீராகிய சிம்சோன் என்னும் புதினத்தில், சிம்சோன், அவனுடைய தாய்க்கும் பெலிஸ்தி ஆண் ஒருவனுக்குமான உறவில் பிறந்தவன் என்று குறிப்பிடுகின்றார். இந்தப் பின்புலத்தில் பார்த்தால், 'கடவுளின் மனிதர் என்னிடம் வந்தார்' என்று அவள் தன் கணவனிடம் சொல்வது, பெலிஸ்திய ஆண்மகனால் தான் கருத்தரித்ததை மறைப்பதற்கான புனைவு என்று சொல்லலாம். ஏனெனில், 'அந்நாள்களில் இஸ்ரயேல் மீது அதிகாரம் செலுத்தி வந்த பெலிஸ்தியரைத் தண்டிக்க ஆண்டவர் வாய்ப்பு தேடிக் கொண்டிருந்தார்.' பெலிஸ்திய ஆண்மகன் ஒருவனையே ஆண்டவர் பயன்படுத்தி மனோவாகின் மனைவியை கருத்தரிக்கச் செய்திருக்கலாம். இந்தக் குறிப்பு, சிம்சோன் நிகழ்வின் சாரத்தைச் கூட்டுவதுடன், சிம்சோனுக்கும் பெலிஸ்தியருக்கும் இடையே இருந்த உறவுநிலைகளைப் புரிந்துகொள்ளவும் உதவுகிறது. ஏனெனில், சிம்சோன், தன் இனத்து மக்களிடம் இணைந்திருக்கும் நேரத்தைவிட, பெலிஸ்தியரிடமே அதிகமாக இணைந்திருக்கிறார். இன்னும் சொல்லப் போனால், தன் இனத்து மக்களை அவர் எதிரிகளாக மட்டுமே பார்க்கிறார். ஆனால், நாம், மேற்காணும் புரிதலை ஏற்றுக்கொண்டாலும், சிம்சோனின் தாய் சொன்ன வார்த்தைகளை அப்படியே நம்பி ஏற்றுக்கொள்வோம். ஏனெனில், அவள் உண்மையே பேசியிருந்தாலும், இறுதியில், இன்னும் பெரிய சிக்கலையே சந்திக்கிறாள்.

தங்களுக்கு ஒரு மகன் பிறப்பான் என்று மனோவாகிடம் அவள் சொல்லி முடித்தவுடன், வானதூதர் சொன்ன செய்தியின் இரண்டாம் பகுதியையும் சொல்லத் தொடங்குகிறாள். ஆனால், வானதூதர் சொன்ன வார்த்தைகளை அவள் தெளிவாகவும் முழுமையாகவும் சொல்லவில்லை. 'சவரக்கத்தி குழந்தையின் தலைமேல் படக்கூடாது' என்ற குறிப்பை மறைக்கிறாள். அவர்களின் மகன் நாட்டின் மீட்பராக மாறுவான் என்பதையும் அவள் சொல்லவில்லை. 'பையன், கருவில் உருவாகும் நாள் முதல்' எனத் தொடங்கும் அவள், தன்னை அறிந்தும் அறியாமல், 'அவன் இறக்கும் வரை கடவுளுக்கான நாசீராக இருப்பான்' என முடிக்கிறாள்.

அவளின் இறுதி வார்த்தைகள் நமக்கு ஆச்சர்யமாகவும் அதிர்ச்சியாகவும் இருக்கின்றன. 'பையன் இறக்கும் வரை' என்கிறாள். 'பையனின் இறப்பைப் பற்றி' வானதூதர் ஒன்றும் குறிப்பிடவில்லையே. பின் ஏன் இவள் அப்படிச் சொன்னாள்? குழந்தைப் பேற்றுக்காக பல ஆண்டுகளாகக் காத்திருக்கும் எந்தத் தாயாவது, தனக்கு ஒரு மகன் பிறப்பான் என்ற வாக்குறுதி கிடைத்தபோது, அதைத் தன் கணவனிடம் மகிழ்ச்சியாகப் பகிரும் அந்த நொடியில், அந்த ஆசை மகனின் இறப்பைப் பற்றிப் பேசுவாளா

அவள் ஏன் அப்படிச் சொன்னாள்? பிறக்கின்ற அனைத்தும் இறக்க வேண்டும் என்ற சபை உரையாளரின் ஞானமும், நம் ஊர் பட்டினத்தாரின் ஞானமும் அவளுக்கு இருந்ததா? அல்லது தன் மகன், தன் வாழ்நாள் முழுவதும் கடவுளுக்கான நாசீராக இருக்க வேண்டும் என்பதை, உருவகமாக, 'பிறப்பு முதல் இறப்பு வரை' என்று சொன்னாளா? அல்லது பிறக்கின்ற மகன் தனக்கானவன் அல்ல என்று அவளின் பெண்ணுக்குரிய உள்ளுணர்வு சொன்னதால், மகன் பிறக்குமுன்பே அவனது இறப்பைப் பற்றி எண்ணத் தொடங்கினாளா அந்த ஏழைத்தாய்!

குழந்தையைப் பெற்றெடுக்காத யாரும்கூட, ஒரு குழந்தை கருவில் இருக்கும்போது, அதன் இறப்பைப் பற்றிப் பேசியிருக்க மாட்டார்கள். இந்த உலகம் பற்றியும், உலகில் உள்ள துன்பங்கள் பற்றியும் அறிந்து, அவற்றைத் தன் குழந்தை படக்கூடாது என்று அக்கறைப்படும் தாய்கூட, தன் குழந்தையின் இறப்பை எதிர்பார்க்க மாட்டாள். அவள், தன் குழந்தை வளர்ந்து, படித்து, ஆளாகி, நல்ல நிலையில் இருப்பதைக் கற்பனை செய்வாளே தவிர, தன் குழந்தை இறந்து போவது பற்றிக் கற்பனை செய்திருக்க மாட்டாள்.

சிம்சோன் பாவம்! எல்லாக் குழந்தைகளும் பிறந்து இறக்கின்றன! அவனோ, இறப்பதற்காகவே பிறக்கிறான்! தாயின் இந்த வார்த்தைகள் வயிற்றில் குழந்தையாய் இருந்த அவனின் காதுகளிலும் விழுந்தததோ என்னவோ, பிறப்பு முதல் இறப்பு வரை அவன் தன் தாயுடன் ஒட்டவே இல்லை. தான் சாவதற்காகப் பிறந்ததால், ஒவ்வொரு நொடியும் இறப்பு என்ற அந்த முள்ளை நோக்கி ஓடிப் போய் அதில் விழ முயல்கின்றான். அல்லது தன் இறப்பு உறுதி என்பதால் எதையும் அசாத்திய துணிச்சலோடு செய்கிறான்.

தாய்மைக்குரிய வாஞ்சையிலிருந்து அந்நியப்பட்டு நின்ற சிம்சோனின் தாய், அந்நியப்பட்டு நின்ற தன் மகன்மேல், தொடுக்கும் வன்ம அம்புதான், அவனுடைய இறப்பைப் பற்றி அவள் பேசியது.

ஒரு பெண் உணர்ச்சியற்றவளாக இருந்தால் மட்டுமே, தன் வயிற்றில் உரு எடுக்கத் தொடங்கியிருக்கும் சிசுவின் இறப்பு நாள் பற்றி இவ்வளவு வெளிப்படையாகவும் சத்தமாகவும் பேச முடியும். அவள் அப்படித்தான் இருந்தாள். தன் குழந்தையிடமிருந்தும், இவ்வார்த்தைகளைக் கேட்கும் தன் குழந்தையின் தந்தையிடமிருந்தும், ஏன், தன்னிடமிருந்துமே அவள் அந்நியப்பட்டு நின்றாள்! பாவம் அவள்! கடவுள் அவளை ஏமாற்றிவிட்டார்! குழந்தையைக் கொடுத்த அதே நொடியில் அவர் எடுத்துக்கொண்டார்! அந்தக் கோபத்தின் உச்சியில்தான் அவள், அவர் கொடுத்த குழந்தையை அவரிடமே, அந்த நொடியே, தூக்கி எறிகின்றாள். 

இல்லை என்றால், அவள் எப்படி இந்த வார்த்தைகளைப் பேசியிருப்பாள்?

(தொடரும்)

 

2 comments:

  1. மனோவாகுவின் மனைவி யாரால் கருவுற்றுக் குழந்தைக்குத் தாயானாள் போன்ற கேள்விகள் அவளைச் சுற்றியிருப்பினும், நம் மனம் என்னவோ கலவரப்படுவது சிம்சோனைக்குறித்தே!எல்லாக் குழந்தைகளும் பிறந்து இறக்க அவனோ இறப்பதற்காகவே பிறக்கிறான்; அதனாலேயே இறப்பு எனும் முள்ளை நோக்கியே ஓடுகிறான்…அதையும் துணிச்சலோடு செய்கிறான் போன்ற வரிகள், மகனின் பாசம் கிடைக்காத சோகம் அந்த மகனைக் கொடுத்தவரிடமே திருப்பிக் கொடுக்கச் செய்கிறது.எல்லோரிடமிருந்தும் அந்நியப்பட்டு நின்ற தாயைப் புரிந்து கொள்வார் யாருமில்லை! அவள் செய்த குற்றம் தான் என்ன? எல்லாப் பெண்களையும் போல் ஒரு குழந்தை வேண்டி தவமிருந்த அவளுக்குப் பிறந்த மகனையும் சேர்த்தே சோகமே வாழ்வில்!
    குழந்தையைக் கொடுத்த அதே நொடியில் அதைப் பறித்துக்கொண்ட கடவுளா? தவமிருந்து அருமை பெருமையாய் தன்னைப் பெற்ற தாயோடு ஒட்டாமல் தள்ளி நின்ற தனயனா?
    பிறந்த மகன் தனக்கானவன் அல்ல என்று உள்ளுணர்வில் உந்தப்பட்டதால், அவன் பிறக்குமுன்பே அவன் இறப்பைப் பற்றியே நினைத்துக் கொண்டிருந்த தாயா? யார் குற்றவாளி? பல நேரங்களில் இறைவன் தேவையன்றி பலரின் வாழ்வோடு விளையாடுவது அவரவரின் நன்மைக்காகவே என்று சொல்லக் கேட்கிறோம். அதை இறைவனே இறங்கி வந்து சொன்னால் எத்துணை நலம்! சோக ரசத்தைப் பிழிந்து கொடுத்திருக்கிறார் தந்தை! வாழ்த்துக்கள்!!!

    ReplyDelete