Friday, July 30, 2021

புனித இனிகோ

இன்றைய (31 ஜூலை 2021) திருநாள்

புனித இனிகோ

'மாஜிஸ்' – 'ஆத் மெயோரெம் தெய் க்ளோரியாம்' – 'இறைவனின் அதிமிகு மகிமைக்கே' என்னும் வாக்கியத்தை தன் வாழ்வாக்கி, தான் தோற்றுவித்த 'இயேசு சபையின்' இலக்கு வாக்கியமாக நிர்ணியத்துச் சென்ற, லொயோலா நகர் புனித இஞ்ஞாசியாரின் (இனிகோ) திருநாளை இன்று கொண்டாடுகின்றோம்.

'மாஜிஸ்' என்ற ஒற்றைச் சொல்லை நம் சிந்தனைக்கு எடுத்துக்கொள்வோம்.

இது வெறும் வார்த்தையல்ல. இது ஒரு தத்துவம். கிறிஸ்துவுக்காக அதிகம் செய்வது. அப்படிச் செய்வது என்றால் மற்றவர்களுக்கு அதிகம் செய்வது. இது ஒருவரை உந்தித் தள்ளக் கூடிய எந்திரம், மந்திரம். கிறிஸ்துவை மையமாக வைத்து உருவாகவிருக்கும் ஒரு சமூகத்திற்கான முதற்படி.

'புனித இஞ்ஞாசியாரின் ஆன்மிகப் பயிற்சிகளில்' தியானம் செய்பவர் தன்னையே இப்படிக் கேட்பார்: 'நான் கிறிஸ்துவுக்காக என்ன செய்தேன்? கிறிஸ்துவுக்காக என்ன செய்கிறேன்? கிறிஸ்துவுக்காக நான் என்ன செய்ய வேண்டும்?' இனிகோவைப் பொருத்தவரையில் ஒருவர் எந்த அளவுக்குக் கிறிஸ்துவை அறிகிறாரோ, அந்த அளவுக்கு அவர் கிறிஸ்துவை அன்பு செய்வார், அந்த நெருக்கத்தில் கிறிஸ்துவைப் பின்பற்றுவார். பயிற்சிகள் முழுவதும் ஒருவர் கேட்கக் கூடிய வரமும் இதுவே: கிறிஸ்துவை இன்னும் நெருக்கமாகப் பின்பற்றுவது. அல்லது கடவுளுக்கு உகந்ததைச் செய்வது. நாம் எதற்காகப் படைக்கப்பட்டோமோ அதை அடையும் வரை நாம் ஓய்ந்துவிடக் கூடாது என்பது இனிகோவின் அறிவுரை. 'மாஜிஸ்' (இன்னும் கொஞ்சம் அல்லது இன்னும் மேலாக) என்பது ஆன்மிகப் பயிற்சிகளில் அடிக்கடி வருகின்ற ஒரு வார்த்தை.

இன்று மேலாண்மையியலில் தலைமைத்துவப் பாடமாகவும் இது கருதப்படுகிறது.

'இன்னும் கொஞ்சம்' எக்ஸ்ட்ரா செய்வதில்தான் நம் வாழ்க்கையும் ஆன்மிகமும் அடங்கியுள்ளது. 'இன்னும் கொஞ்சம்' என்று நாம் நடக்க, நடக்க பாதை விரியும் என்பதுதான் வாழ்வியல் எதார்த்தம்.

'இன்னும் கொஞ்சம்' நடக்க வேண்டும் எனில் நமக்கு முதலில் தேவை 'கட்டின்மை.' நம் ஆன்மிக வாழ்க்கை இந்த ஒற்றைச் சொல்லில் கட்டப்பட்டுள்ளது என்கிறார் இனிகோ. கட்டின்மை அடையும் ஒருவரே எளிதில் எதையும் தேர்ந்து தெளிய முடியும். அல்லது அவர் தன் உடல்சார் அல்லது உறவுசார் கட்டுக்களுக்குக் கட்டுப்பட்டே முடிவுகள் எடுப்பார்.

கடவுளை அனைத்திலும் நாம் காண வேண்டும் எனில் நாம் கட்டின்மையோடு இருக்க வேண்டும். கட்டின்மையோடு இருக்க நம் உளத்தை அவரிடம் சராணதி ஆக்க வேண்டும். நம்மிடம் இருக்கும் அனைத்தையும், நம்முடையது என அழைக்கும் அனைத்தையும் அவரிடம் ஒப்படைக்க வேண்டும்.

'எடுத்துக் கொள்ளும் ஆண்டவரே! என் கட்டின்மை, என் நினைவு, என் புரிதல், என் உளம், என்னிடம் இருக்கும் அனைத்தையும், நான் உடைமையாக்கிய அனைத்தையும் எடுத்துக்கொள்ளும்! இவை அனைத்தும் நீர் எனக்குக் கொடுத்தவையே! உம்மிடமே அவற்றை நான் ஒப்படைக்கிறேன்! அனைத்தும் உம்முடையதே! உம் திருவுளப்படியே அவற்றைப் பயன்படுத்தும். உம் அன்பையும் அருளையும் எனக்குத் தாரும்! அதுவே எனக்குப் போதும்!' – புனித இனிகோ

1 comment:

  1. “இறைவனின் அதிமிக மகிமைக்கே!” எனும் வேத வாக்குக்குச் சொந்தக்காரர்; அதைவிடத் திரு அவையின் அடிநாதமும்…ஆணிவேருமாயிருக்கிற இயேசு சபையைத் தோற்றுவித்தவர்.”…. “புனித இனிகோ” எனும் “இலொயோலா இஞ்ஞாசியாரின்” திருவிழா!” கிறிஸ்துவைப் பின்பற்றுபவர்..அவரை இன்னும் நெருக்கமாகப் பின்பற்றுவார்” எனும் விருதுவாக்குக்குச் சொந்தக்காரர். இன்று பலர் பின்பற்றும் ஆன்மீகப் பயிற்சிகளுக்கு மூத்த மகனாய் விளங்கும் இவர் “எல்லாவற்றிலும் எக்ஸ்ட்ரா”
    சொல்லடைக்குச் சொந்தக்காரர். “கடவுளை அனைத்திலும் காண, கட்டின்மையோடு சரணாகதியும் சேர்ந்து நம்மிடமுள்ள அனைத்தையும, அவரிடம் ஒப்படைத்தலே நம் பிறவிப்பயன்” என்று அறைகூவல் விட்டவர்.

    அவரின் செபமாகத் தந்தை நம்மிடம் எடுத்து வைக்கும்.. “ எடுத்துக்கொள்ளும் ஆண்டவரே!………….உம் அன்பையும் அருளையும் எனக்குத்தாரும்! அதுவே எனக்குப் போதும்!” எனும் செபம் இறைவனுக்காகக் கொஞ்சம் எக்ஸ்ட்ரா நடக்கத் துடிப்பவர்களுக்குத் துணையாய் அமையட்டும்! தந்தைக்கும்….அனைவருக்கும்….விசேஷமாக இயேசு சபைக் குருக்களுக்கும் திருவிழா வாழ்த்துக்கள்!!!

    ReplyDelete