Thursday, August 19, 2021

பெத்லகேமில் பஞ்சம்

இன்றைய (20 ஆகஸ்ட் 2021) முதல் வாசகம் (ரூத்து 1)

பெத்லகேமில் பஞ்சம்

இன்றைய முதல் வாசகம் ரூத்து நூலிலிருந்து எடுக்கப்பட்டுள்ளது. 'அந்நாள்களில் இஸ்ரயேலில் அரசர் இல்லை. ஒவ்வொருவரும் தம் கண்களில் சரியெனப்பட்டதைச் செய்தனர்' என்ற வரியோடு நீதித்தலைவர்கள் நூல் முடிவடைகிறது. யாரும் ஆண்டவருடைய கண்களில் சரி எனப் படுவதைச் செய்ய முயற்சி செய்யவில்லை.

விளைவு, அப்பத்தின் வீடு என்றழைக்கப்பட்ட பெத்லகேமில் பஞ்சம் வருகிறது.

பஞ்சம் பிழைப்பதற்காக அவ்வூரைச் சார்ந்த ஒருவர் தம் மனைவியையும் மைந்தர் இருவரையும் அழைத்துக்கொண்டு புறவினத்து நாடான மோவாபுக்குச் செல்கின்றார். மோவாபு நாட்டைச் சார்ந்த பெண்கள் இருவரைத் தன் மைந்தருக்கு மணமுடிக்கின்றார். அவர்களுள் இளையவர் ரூத்து.

இந்த ரூத்து தாவீது அரசரின் தாத்தாவைப் பெற்றெடுக்கின்றார். புறவினத்துப் பெண் ஒருவர் இஸ்ரயேல் மக்களின் மீட்பு வரலாற்றுக்குள் நுழைகின்றார்.

ஆண்டவர் தம் மக்களைக் கருணையுடன் கண்ணோக்கினார் எனக் கேள்வியுறுகின்ற நகோமி தன் கணவரை இழந்தவராய், தன் மகன்கள் இருவரையும் இழந்தவராய், தனியாக பெத்லகேம் வரை விழைகின்றார். மூத்த மருமகள் தன் வழியே செல்கின்றாள். ரூத்து நகோமியைப் பற்றிக்கொள்கின்றாள்.

'உன் கடவுளே என் கடவுள்' என்று ரூத்து இஸ்ரயேலின் கடவுளை ஏற்றுக்கொள்கின்றார்.

இரு பெண்கள், இரு கைம்பெண்கள் பெத்லகேம் நகருக்குள் நுழையும் வேளையில் வாற்கோதுமை அறுவடை தொடங்கியிருந்தது எனப் பதிவு செய்கின்றார் ஆசிரியர்.

இனி அங்கு வளமைதான்.

வறுமையால் நாட்டை விட்டுப் புறப்பட்டவர்கள், வளமையில் மீண்டும் வந்து சேர்கின்றனர். ஆண்டவரின் கருணை வளமை தருகின்றது.

நற்செய்தி வாசகத்தில் இறையன்பு மற்றும் பிறரன்பு பற்றிய கட்டளைகள் முதன்மையான கட்டளைகளாக முன்வைக்கப்படுகின்றன. ரூத்து தன் ஒற்றைச் சொல்லால் இஸ்ரயேலின் இறைவனையும் தன் மாமியார் ரூத்தையும் பற்றிக்கொள்கின்றார்.

1 comment:

  1. மக்கள், இறைவன் கண்களில் சரியெனப்பட்டதைச் செய்யாமல் தங்கள் கண்களில் சரியெனப்பட்டதையே செய்ய முற்படுகையில் அங்கே வருவது பஞ்சம்.” உன் கடவுளே என் கடவுள்” ரூத்து தன் மாமியாரின் கடவுளைத் தன் கடவுளாக ஏற்றுக்கொண்டு பெத்லகேம் நுழைகையில் அங்கே அவர்கள் கண்டது வளமை! காரணம் அவர்கள் பற்றிக்கொண்ட இறைவன் அவர்களுக்கு வாழ்வின் வளமையை அள்ளித்தருகிறார். இன்றையப் பதிவில் வரும் இரு பெண்களுமே தங்கள் வாழ்வின் வறுமையிலும்,வளமையிலும் நேசித்தது இறைவனை மட்டுமல்ல…தங்களுடைய அயலாரையும் தான்.மாமியார்களே நடுங்கும் மருமகள்கள் கோலோச்சும் நாட்களில் இப்படியும் ஒரு மருமகளா? என வியக்கும் முறையில் வாழ்ந்து காட்டிய மருமகள் ரூத்துக்கு தாவீது அரசரின் தாத்தாவைப் பெற்றெடுக்கும் பெருமையை வழங்கினார் இறைவன்!

    “ அவரைக் கண்ணோக்கிப் பார்ப்பவர்கள் வெட்கத்தினால் தலை குனிவதில்லை” எனும் திருப்பாடலை மெய்யாக்கும் ஒரு பதிவைத் தந்த தந்தைக்கு நன்றிகள்!!!

    ReplyDelete