Thursday, August 26, 2021

சிங்கத்தின் தேன் - 2

சிம்சோன் புதிரும் புதினமும்

அவள் ஒரு மலடி

இப்படிப்பட்ட சுழற்சியின் நடுவில், தாண் குலத்து ஆண் ஒருவனும், பெண் ஒருத்தியும் வாழ்ந்து வந்தனர். யூதேயாவின் பள்ளத்தாக்குப் பகுதியான சோராவில் அவர்கள் வாழ்ந்து வந்தனர். குழாயைத் திறந்தால் இரத்தம் ஓடும் கொடுமையான வன்முறை நிறைந்த பகுதி அது. அந்நாள்களில் இஸ்ரயேலுக்கும் பெலிஸ்தியருக்கும் இடையேயான எல்கையாக இருந்தது அது. இஸ்ரயேல் மக்களைப் பொருத்தவரையில், பெலிஸ்தியரிடமிருந்து தங்களைத் தற்காத்துக்கொள்ளும் முதல் வரிசை அது. பெலிஸ்தியரைப் பொருத்தவரையில், யூதேயா மலைநாட்டுக்குள் நுழையத் தாக்க வேண்டிய முதல் பகுதி அது. அந்த ஆணின் பெயர் மனோவாகு. பெண்ணின் பெயர் குறிப்பிடப்படவில்லை. அவள் 'ஒரு மலடி, குழந்தை பெறவில்லை' என்ற குறிப்பைத் தவிர, வேறு எந்த அடையாளமும் அவளுக்கு இல்லை. அந்த அடையாளமே அவளுக்குப் போதுமானதாக இருந்தது. அல்லது அந்த அடையாளமே தனக்குப் போதும் என அவள் நினைத்துக் கொண்டாள். 'அவள் ஒரு மலடி, குழந்தை பெறவில்லை' என்னும் இவ்வார்த்தைகளே போதும்! தன்னுடைய மற்ற துன்பங்களோடு, திருமணமே ஒரு துன்பமாகி, அதையும் மற்ற துன்பங்களோடு தன் முதுகில் தூக்கித் தெரிந்தாள்.

எபிரேய விவிலியம் படிக்கும் அனைவருக்கும், அந்த விவிலியத்தின் 'மலடி குழந்தை பெறுதல்' என்னும் இலக்கியக்கூறு உடனே பிடிபடும். ஏனெனில், எப்போதெல்லாம் அது 'மலடியாயும் குழந்தை பெறாமலும்' இருக்கும் ஒரு பெண்ணைப் பற்றிக் குறிப்பிடும்போதெல்லாம், தொடர்ந்து, 'அவள் வியத்தகு முறையில் குழந்தை பெற்றெடுப்பதையும்' குறிப்பிடும். ஒரு நாள், 'இஸ்ரயேல் மக்கள் ஆண்டவரின் பார்வையில் தீயதெனப்பட்டதைச் செய்து கொண்டிருந்த அந்நாள்களில்' ஒரு நாள், அவள் தனியாக இருந்தபோது, ஆண்டவரின் தூதர் அவளுக்குத் தோன்றுகிறாள். இந்தப் பெண்ணிண் இன்னொரு விந்தை என்னவென்றால், அவள் பெரும்பாலும் தனியாகவே இருப்பாள். குறிப்பாக, ஆண்டவரின் தூதர் அவளுக்குத் தோன்றும்போதெல்லாம் அவள் தனியாகவே இருப்பாள். தனிமையை ஏன் அவள் தழுவிக்கொண்டாள்? கணவனோடு இருந்தபோதெல்லாம் தன் மலட்டுத்தன்மையும், குழந்தைபெற இயலாத நிலையும் அவளுக்கு நெருடலாக இருந்ததால், அவனிடமிருந்து தள்ளிச் சென்றாளா? அல்லது அவளின் இருப்பை அவளுடைய இல்லத்தின் சுற்றத்தார் விரும்பவில்லையோ? அல்லது அவள் வயலில் வேலை பார்ப்பவளாக இருந்ததால், இல்லத்தை விட்டுத் தூரமாக வசித்தாளோ? அல்லது யாருடனும் இருக்க அவளுக்குப் பிடிக்கவில்லையோ? அல்லது தன்னோடு தான் இருக்கும் நேரத்தை அவள் விரும்பினாளா? அல்லது இப்படி ஒரு நாள் ஆண்டவரின் தூதர் அவளுக்குத் தோன்றுவார் என அவளுக்குத் தெரிந்திருந்ததா? ஆனால், அவள் தனியே இருந்தாள்.

அவளிடம் வந்த ஆண்டவரின் தூதர், 'நீ மலடியாய் இருந்ததால் இதுவரை குழந்தை பெற்றெடுக்கவில்லை. ஆனால், இனி நீ கருவுற்று ஒரு மகனைப் பெற்றெடுப்பாய்' என்றார். தொடர்ந்து அவளுக்கு நிறைய அறிவுரைகளையும் எச்சரிக்கைகளையும் கொடுக்கின்றார்: 'இப்பொழுது கவனமாயிரு! திராட்சை இரசமோ, மதுபானமோ அருந்தாதே! தீட்டான எதையும் உண்ணாதே! ஏனெனில், நீ கருவுற்று ஒரு மகனைப் பெற்றெடுப்பாய். சவரக்கத்தி அவன் தலைமீது படக் கூடாது. ஏனெனில், பையன் பிறப்பிலிருந்தே கடவுளுக்கென 'நாசீர்' ஆக இருப்பான். அவன் இஸ்ரயேல் மக்களைப் பெலிஸ்தியரின் கையிலிருந்து விடுவிக்கத் தொடங்குவான்.'

தன் கணவனிடம் வந்த அவள், 'கடவுளின் மனிதர் ஒருவர் என்னிடம் வந்தார்' என்கிறாள். இவளின் இந்த வார்த்தைகள் வாசகரின் கவனத்தைத் தட்டி எழுப்புகின்றன. ஏனெனில், 'ஆண்டவரின் தூதர் அவளுக்குத் தோன்றினார்' என ஆசிரியர் பதிவு செய்ய, இவளோ, 'கடவுளின் மனிதர்' என்று சொல்வதோடு, 'தோன்றினார்' என்பதை, 'என்னிடம் வந்தார்' என்கிறாள். ஏனெனில், விவிலியத்தில், 'ஆண் பெண்ணிடம் வருவது' என்பதற்கு, 'ஆண் பெண்ணிடம் உடலுறவு கொள்வது' என்பது பொருள்.

அவளுடைய கணவனின் கவனமும் தட்டி எழுப்பப்படுகின்றது. வீட்டின் திண்ணையில், ஒய்யாரமாகச் சாய்ந்து உட்கார்ந்திருந்த அவனுடைய கவனம், ஓடி வந்து, நின்றும் நிற்காமலும் தன்னிடம் பேசிக்கொண்டிருக்கும் மனைவியின்மேல் குவிகிறது. பேசிக்கொண்டிருந்தவளே, அவன் எதுவும் கேட்காமலேயே, தொடர்கிறாள்: 'அவரது தோற்றம் கடவுளின் தூதரின் தோற்றம் போல் பெரிதும் அச்சத்திற்குரியதாய் இருந்தது. அவர் எங்கிருந்து வந்தவர் என்று நான் கேட்கவில்லை. அவரும் எனக்குத் தம் பெயரை அறிவிக்கவில்லை.' அவளுடைய வார்த்தைகளுக்கு இடையே, அவள் ஏதோ மன்னிப்புக்காய் இறைஞ்சுவதாயும், தான் தவறு எதுவும் செய்யவில்லை என்று முன்னதாகவே கணவனிடம் சரணாகதி ஆவது போலவும் அவள் பேசுவதை, நாம் கண்டுபிடித்துவிட முடியும். வந்திருந்த தூதரின் தோற்றம் அச்சத்திற்குரியதாய் இருந்தால், அவள் எங்கிருந்து வருகிறார் என்றும், அவருடைய பெயர் என்ன என்றும் அவள் கேட்கத் துணியவில்லை.

மனோவாகு எப்படி இதற்கு எதிர்வினை ஆற்றினான்? அவளுடைய வார்த்தைகள் அவனுடைய உள்ளத்தில் ஏற்படுத்திய சலனங்கள் எவை? தன் சலனங்களைச் சத்தமில்லாமல் தன் அமைதிக்குள் அவன் அடக்கிக்கொள்வதன் பொருள் என்ன? அல்லது அவன் அரைத் தூக்கத்தில் இருந்ததால் அவள் பேசியது அவனுக்குப் புரியவில்லையா? தன் புருவங்களை மெதுவாக உயர்த்திக் கொண்டு, தன்னை இப்படிப்பட்ட ஒரு குழப்பத்திற்குள் தள்ளிய தன்னுடைய மனைவியின் வார்த்தைகளை முழுமையாகப் புரிந்துகொள்ள முடியாமல், அவளிடம் என்ன கேள்வி கேட்பது என்று அவன் யோசித்துக் கொண்டிருக்கும் அந்த நொடியில், அவளே தொடர்கிறாள். அவன் ஏதாவது கேட்பான் என்று அவள் காத்திருக்கவோ, அவனுடைய கேள்வியை அவள் எதிர்பார்க்கவோ இல்லை. வேகமாக, ஆனால், சற்றே கலக்கத்தோடு, புதிய தகவல்களைச் சொல்லத் தொடங்குகிறாள்: 'நீ கருத்தரிப்பாய்!' என்று கடவுளின் மனிதர் சொன்னார். எனக்கு ஒரு மகன் பிறப்பான் என்று வாக்குறுதி தந்த அவர், நான் திராட்சை இரசமோ, மதுபானமோ அருந்தக் கூடாது என்றும், தீட்டானது எதையும் உண்ணக்கூடாது என்றும் அறிவுறுத்தினார். ஏனெனில், பையன் கருவில் உருவான நாள் முதல் இறக்கும் நாள் வரை நாசீராக இருப்பான் ...

(தொடரும்)

4 comments:

  1. நேற்றையப் பதிவின் அழகான தொடர்ச்சி! மனோவாகுவின் பெயர் தெரியாத மனைவி! ‘மலடி’ எனும் வார்த்தைகளே அவளுக்குப் போதுமானதாகவும்,அடையாளமாகவும் இருந்தது.அவள் தன் கணவனை விட்டுத் தூரமாகவே இருந்தாள்….இதற்கு தந்தை தரும் பல காரணங்களுக்கிடையே “ஆண்டவரின் தூதர் அவரைத் தேடி வருவார் என அவளுக்குத் தெரிந்திருந்தது” என்பதை மட்டுமே மனம் ஏற்றுக்கொள்கிறது.

    தனக்குத் தோன்றிய வானதூதரை “தன்னிடம் வந்தார்” என்று மாற்றிப் போட்ட வார்த்தைகள் அவளை அவள் கணவனிடமிருந்து இன்னும் அந்நியமாக்குகிறது.கணவன் சஞ்சலத்தின் நடுவில் உலவுவது கூட தெரியாத அந்தப் பேதைப்பெண் தன் வார்த்தைகளைத் தொடர்கிறாள்…
    “ நீ கருத்தரிப்பாய்!” என்றதோடு “ எனக்கொரு மகன் பிறப்பான் என்று வாக்குறுதி தந்த அவர் திராட்சை இரசமோ,மதுவோ,தீட்டானது எதையுமோ உண்ணக்கூடாது; ஏனெனில் பையன் கருவான நாள் முதல் இறக்கும் நாள் வரை நாசீராக இருப்பான்…..”

    இன்றையப் பதிவு முழுவதும் ‘குழந்தை இல்லை’ எனும் ஒரே காரணத்திற்காகக் கையறு நிலையில் இருக்கும் ஒரு அபலைப்பெண் குறித்த வார்த்தைகள்! அதைத் தந்தை வெளிப்படுத்தியுள்ள விதம் நம் நெஞ்சையும் சேர்த்தே பிசையச் செய்கிறது. இம்மாதிரிப் பேச்சுக்கள் நம் செவிகளில் விழுகையில் இது மனிதர்கள் வாழும் பூமி தானா? என்று நம்மையே நொந்து கொள்ளச் செய்கிறது. எடுத்த எடுப்பிலேயே நம் கண்களைக் கசக்கச் செய்யும் தந்தையின் எழுத்து நடை, போகப் போக எப்படி இருக்குமோ? கொஞ்சம் யோசிக்கையில் “சோகம் கூட சுகமே!” என்று தோன்றுகிறது! கண்களைப் பிழியச் செய்யும் எழுத்து நடைக்காகத் தந்தைக்கு என் நன்றிகள்!!!

    ReplyDelete
  2. Satan came to Eve when she was alone. Angel comes to this woman and Mary when they were alone. This is why they say watch your thoughts when you are alone.

    ReplyDelete
  3. குழாயைத் திறந்தால் இரத்தம் ஓடும் கொடுமையான வன்முறை நிறைந்த பகுதி அது. // எது கலவர பூமியிலே காத்து வாங்க வந்தீங்களா

    ReplyDelete