Wednesday, September 1, 2021

சிங்கத்தின் தேன் - 7

சிம்சோன் புதிரும் புதினமும்

பிறக்கப் போகும் குழந்தை

இன்னும் பிறக்காத அந்தக் குழந்தை மேல் சுமத்தப்பட்ட அந்நியத்தன்மை மேலும் அதிகமாகிக்கொண்டே போகிறது. ஆச்சர்யத்தால் நிலைகுலைந்து போன மனோவாகு, கடவுளிடம் வேண்டுகின்றான். மேலும் பல அறிவுரைகளை அவர் அருளுமாறு மன்றாடுகின்றான்: 'என் தலைவரே! நீர் அனுப்பிய கடவுளின் மனிதர், மீண்டும் எங்களிடம் வந்து, பிறக்கப்போகும் குழந்தைக்கு நாங்கள் என்ன செய்ய வேண்டும் என்பதைக் கற்றுத் தரட்டும்.'

'பிறக்கப்போகும் குழந்தை?' இன்னும் தாயின் வயிற்றில் இருக்கும் அந்தக் குழந்தையை, சிம்சோனின் தந்தை, இப்படித்தான் வரையறுக்கிறான்: 'பிறக்கப்போகும் குழந்தை.' மிகவும் கவனமாக, வானதூதர் சொன்ன வார்த்தைகளை – 'பிறக்கப்போகும் குழந்தை' – சொல்கிறானே அன்றி, 'நம் மகன்' என்றோ, 'எங்கள் மகன்' என்றோ, 'என் மகன்' என்றோ, 'என் பையன்' என்றோ அவன் சொல்லவில்லை. இவ்வளவு நாள் குழந்தைப் பேற்றுக்காக அவனும் ஏங்கியிருந்தாலும், தன் மனைவி கருத்தாங்கியிருக்கும் குழந்தையைத் தன் மகன் என அழைக்க அவனுக்க மனம் வரவில்லை. அல்லது இன்னும் கொஞ்சம் நாள்களில் உயர்ந்த மனிதனாக அவன் உலா வருவான் என்று நினைத்து முன்கூட்டியே அவனிடமிருந்து தன்னை அந்நியப்படுத்திக்கொண்டானா மனோவாகு?

மேலும், இது ஒரு அசாதாரணமான குழந்தையாக இருப்பதால், தங்களுடைய ஆற்றலால் மட்டும் அதைப் பாதுகாக்கவோ, வளர்த்தெடுக்கவோ இயலாது என்ற நிலையில், கடவுளின் துணையையும் அவருடைய அறிவுரையையும் அவன் விரும்பியிருக்கலாம். ஆகையால்தான், அறிவுரைகளை வழங்குமாறு ஆண்டவரிடம் மன்றாடுகிறான்.

அல்லது, தன் மனைவியிடம் வந்தது ஆண்டவரின் தூதரா என்ற ஐயத்தில் அவன் கடவுளிடம் மன்றாடுகிறானா? தன்னைவிட்டு அவ்வப்போது தனியே தப்பிப் போகும் தன் மனைவி தவறான வழியில் குழந்தை தரித்துவிட்டு, இப்போது வந்து, 'கடவுளின் மனிதர்,' 'காட்சி,' 'குழந்தை,' 'நாசீர்' எனத் தன்னை ஏமாற்றுகிறாளா என்பதை ஊகித்து, தன் ஊகத்தை உறுதிப்படுத்திக்கொள்ள, மீண்டும் ஒரு காட்சியைக் கேட்கின்றானா? அல்லது, ஏதோ ஓர் உள்ளுணர்வால் குழந்தையின் எதிர்காலத்தை உணர்ந்த அவன், தந்தைக்குரிய பாசத்தோடும், எளிமையோடும், திறந்த உள்ளத்தோடும் ஆண்டவரின் அறிவுரையை நாடி நின்றானா? ஆனால், ஆண்கள் அவ்வளவு எளிதாக யாருடைய அறிவுரைகளுக்கும் மனம் திறப்பதில்லை. 

அவன் எந்தக் காரணத்திற்காகக் கேட்டிருந்தாலும், அவனுடைய மன்றாட்டு கேட்கப்படுகிறது. வானதூதர் மீண்டும் வருகிறார். ஆனால், இம்முறையும், 'அப்பெண் வயலில் அமர்ந்திருந்தபோது, அவளுடைய கணவன் அவளோடு இல்லாதபோது' வருகிறார். தன் கணவனின் மன்றாட்டை அவள் அறிந்திருந்தாளா? ஏதோ ஒரு காரணத்திற்காக, வானதூதர், தகவல்களையும், இரகசியத்தையும், பெண்ணிடம் கொடுக்கவே விரும்புகிறார். ஆகையால்தான், அவள் தனியாக இருக்கும்போது அவளுக்குத் தோன்றுகிறாள். இங்கே ஆசிரியர் அவளுடைய தனிமையை இரண்டு சொல்லாடல்களில் பதிவு செய்கிறார்: 'தனியாக அமர்ந்திருந்தாள்,' 'அவளுடைய கணவன் அவளோடு இல்லை!' அவளின் தனிமையை வாசகர் தவறவிட்டுவிடக்கூடாது என்று அவர் இரு முறை எழுதினாரா? அல்லது அவளின் தனிமை மிகவும் முக்கியத்துவம் வாய்ந்தது என்பதை அடிக்கோடிட அப்படி எழுதினாரா? தெரியவில்லை. ஆனால், அவள் வானதூதரைவிட விவரமானவள். 'நீ வந்து எதையாச்சும் சொல்லிவிட்டுப் போய்விடுவ! நான் அந்த மனுசன்ட்ட நீ சொன்னதைச் சொல்ல, அவன் என்னைச் சந்தேகப்படுறான்! நல்லா இருக்கிற வீட்டுல நீயே சண்டைய உண்டாக்கிடுவ போல! கொஞ்சம் இரு! வந்துடறேன்! அவனக் கூட்டிட்டு வந்துடுறேன்!' என்று வானதூதரைக் காத்திருக்க வைத்துவிட்டுத் தன் இல்லம் நோக்கி ஓடுகிறாள். தன் கணவன்தானே கடவுளிடம் மன்றாடினான். ஆகவே, அவனும் வரட்டும் என்று ஓடினாளா? அல்லது அவன் சந்தேகத்தைப் போக்க இதுவே வழி, என்று, தான் குற்றமற்றவள் என்பதை அவனுக்கு எப்படியாவது உணர்த்திவிட வேண்டும் என்ற வைராக்கியத்தில் ஓடினாளா?

(தொடரும்)

 

1 comment:

  1. ஆண்கள் யாருடைய அறிவுரைகளுக்கும் மனம் திறப்பதில்லை தான். அதனால் தான் தன் மனைவியின் கருத்தரித்தல் பற்றி அத்தனை சந்தேகங்கள் அவன் மனத்தில்! தன்னை மேல் நோக்கிப் பார்ப்பவர்களின் விண்ணப்பங்களை மட்டுமின்றி தனக்குப் புறமுதுகு காட்டுபவர்களின் விண்ணப்பங்களுக்கும் செவிமடுக்கிறார் நம் இறைவன்!
    அதனால் தான் மனோபாகுவின் மனைவியின்
    தனிமையில் மீண்டும் வானதூதர் வர, தன் கணவனின் சந்தேகம் களையும் மனத்துடன் இல்லம் நோக்கி ஓடுகிறாள்.

    ஒரே கூரையின் கீழ் உள்ள கணவன்- மனைவி.அவர்களுக்குள் தான் எத்தனை எத்தனை குழப்பங்கள். அவர்கள் ஆசைப்பட்டது பொன்னுக்கோ... பொருளுக்கோ அல்ல. தங்கள் கைகளில் தவழ்ந்து விளையாட ஒரு மகவே! ஒருவேளை தன் எதிர்காலத்தில் அந்த மகன் செய்யப்போகும் வீர தீர செயல்களுக்காக அவன் பெற்றோர்களைக் கொஞ்சம் உரசிப் பார்க்கிறாரா இறைவன்? அவருக்கே வெளிச்சம்!
    கணவன்- மனைவி உள்ளங்களின் கொந்தளிப்பை ஒளிவு மறைவின்றி எழுத்தாக்கிய தந்தைக்கு ஒரு சபாஷ்!!!




    ReplyDelete