Saturday, February 7, 2015

அவர்கள் அவரிடம் அவரைப் பற்றி!

'அக்காலத்தில் இயேசுவும், சீடர்களும் தொழுகைக்கூடத்தை விட்டு வெளியே வந்து யாக்கோபு, யோவானுடன் சீமோன், அந்திரேயா ஆகியோரின் வீட்டிற்குள் சென்றார்கள். சீமோனுடைய மாமியார் காய்ச்சலாய்க் கிடந்தார். உடனே அவர்கள் அதைப் பற்றி இயேசுவிடம் சொன்னார்கள்.'
(காண்க மாற்கு 1:29-39)

'உடனே அவர்கள் அதைப்பற்றி இயேசுவிடம் சொன்னார்கள்'

ஒரு சின்ன திருத்தம். சரியான மொழிபெயர்ப்பு:

'உடனே அவர்கள் இயேசுவிடம் அவரைப் பற்றிச் சொன்னார்கள்'

ஞாயிறு மறைக்கல்விக்காக இந்த நற்செய்திப்பகுதியை வாசித்துக் கொண்டிருந்தபோது இந்த வரி என்னில் ஆச்சர்யத்தை ஏற்படுத்தியது.

தகவல் தொடர்பு என்று நாம் சொல்லும் போது அதில் மூவர் இடம் பெறுகின்றனர்: பேசுபவர், கேட்பவர் மற்றும் பேசப்படுபவர். அல்லது நான், நீ மற்றும் அவர் என்றும் சொல்லலாம்.

இந்த வரியை வைத்துப் பார்த்தால், பேசுபவர் 'அவர்கள்' என்று குறிப்பிடப்பட்டுள்ளது. இந்த அவர்கள் சீமோன் மற்றும் அந்திரேயாவாக இருக்கலாம். அல்லது அவர்கள் சொல்லத் தயங்கினார்கள் என வைத்துக் கொள்வோம். ஏன்னா! நம்ம வீட்டுக்கு யாராவது புதுசா வந்தா அவரிடம் நம்ம வீட்டுல உள்ள நல்லதத்தான் காட்டுவோமே தவிர, அவருக்கு உடம்பு சரியில்லை. இவரு ஆஸ்பத்திரியல இருக்கார் என்று நாம் சொல்வதில்லை. அப்படி ஒருவேளை சொல்வதற்கு வீட்டார் தயங்க, யாக்கோபும், யோவானும் இயேசுவிடம் சொல்லியிருக்கலாம். அல்லது சீமோனின் வீட்டின் பணியாளர்கள் சொல்லியிருக்கலாம். கப்பர்நாகுமிற்குச் சென்றால் இன்றும் சீமோனின் வீட்டைப் பார்க்கலாம். அந்தக் காலத்திலேயே மூன்று அடுக்குகளாகக் கட்டப்பட்ட வீடு. கண்டிப்பாக பணியாளாகள் இல்லாமல் அந்த வீட்டைப் பராமரித்திருக்க முடியாது. அல்லது சீமோன் மற்றும் அந்திரேயாவின் மனைவிமார்கள் சொல்லியிருக்கலாம். கூட்டுக்குடும்பம் இருந்திருக்கும் வாய்ப்பும் அதிகம். நற்செய்தியாளர் ஏன் அந்த 'அவர்கள்' யாரென்பதை மொட்டையாக எழுதி வைக்கின்றார்? இயேசுவிடம் பேசுவதற்கு அவர், இவர் தான் என்றிருக்க வேண்டுமல்ல. யார் வேண்டுமானாலும் பேசுவதற்கு முடியும், அந்த அளவிற்கு எளிதாகப் பழகக் கூடியவர் என்பதைக் காட்டுவதற்காக ஒரு வேளை மாற்கு 'அவர்கள்' என்னும் அவர்களைப் பற்றி எழுதாமல் விட்டிருக்கலாம்.

'சீமோனின் மாமியார்' தான் பேசப்படும் அவர். அவர்தான் பேசுபொருள்.

இந்த வரி நமக்குச் சொல்வது மூன்று:

அ. கடவுளிடம் நாம் மற்றவர்களைப் பற்றிப் பேச வேண்டும். நாம் கடவுளோடு பேசும் உரையாடலை அல்லது செபிக்கும் செபங்களை ஒரு நிமிடம் நினைத்துப் பார்த்தால் 'நான், எனது, எனக்கு' என்று தான் இருக்கும். கொஞ்சம் விரிந்தால் 'என் குடும்பம், எனது குடும்பத்திற்கு' என்று இருக்கும். இதை விடுத்து நாம் அவ்வளவாக யாரைப் பற்றியும் கடவுளிடம் பேசி விடுவதில்லை. இதை நாம் வேண்டுமென்று செய்கிறோம் என்று சொல்ல முடியாது. நம் சிந்தனை சில நேரங்களில் குறுகியே கிடக்கிறது. இன்றைக்கு ஒரு சின்ன முயற்சியாக நாம் செபம் செய்யும் போது நமக்கு சம்பந்தமில்லாத யாரைப் பற்றியாவது பேசிப் பார்க்கலாமே! நாம் பஸ்சில் பயணம் செய்த போது நமக்கு சில்லறை மறுத்த கண்டக்டர், ஆனந்த விகடன் வாங்கும் போது யார் மேலோ உள்ள எரிச்சலை நம்மேல் காட்டிய புத்தகக் கடைக்காரர், நாம் முக்கியமான வேலையைப் பார்த்துக் கொண்டிருந்த போது நம்மை அலைபேசியில் அழைத்து எங்க பேங்க்ல ஹெல்த் இன்சூரன்ஸ் எடுக்கிறீங்களா என்று கேட்ட ஒரு மாலா அல்லது திவ்யா அல்லது ப்ரியா. 'ஒரு இளனி வெட்டுங்கண்ணே!' என்று நாம் சாலையில் கண்ட இளநீர் விற்பவர். நம்மைப் பற்றி முன்பின் தெரியாது என்றாலும் நம் வீட்டின் முகவரியை கையில் வைத்துக் கொண்டு தேடும் கூரியர் பாய். இப்படி யாராவது முகம் தெரியாத ஒருவரைப் பற்றி கடவுளிடம் இன்று நாம் பேசலாமே!

ஆ. இயேசு கேட்காமல் அவர்கள் சொல்லியிருப்பார்கள் என நினைக்கிறீர்களா? இல்லை என்றே நான் நினைக்கிறேன். ஏனெனில், இயேசு வாழ்ந்த காலத்தின் யூத சமூகம் பக்கா ஆணாதிக்க சமூகம். ஆண்கள் மட்டும் தான் மனிதர்கள் என்று கருதப்பட்டனர். பெண்கள் வெறும் குழந்தை பெற்றுத் தரும் இயந்திரங்களாக மட்டுமே பயன்படுத்தினார்கள். இயேசுவின் சமகாலத்துக் கிரேக்கர்கள் உடலுறவு இன்பத்திற்காக பெண்களைப் பயன்படுத்துவதை இழுக்கு எனக் கருதி, ஆண்களைப் பயன்படுத்தியதை பிளேட்டோ, அரிஸ்டாட்டில், பிளைனி, யோசேப்புஸ் போன்றவர்கள் புத்தகங்களில் வாசிக்கலாம். ஆக, பெண்கள் கணக்கில் எடுத்துக் கொள்ளப்படாதவர்கள். யார் இருக்கிறார்கள் என்பதை விடுத்து, யார் இல்லை என்பதைத் தான் கடவுளைப் பார்க்கின்றார். இதுதான் இருக்கின்ற 99 ஆடுகளை விடுத்து, காணாமற்போன ஆட்டைத் தேடுவது. இயேசு தான் போதித்ததையே வாழ்ந்து காட்டுகிறார். 'எங்க அவங்களக் காணோம்?' என்று தேடுகிறார் இயேசு. இன்றைக்கு நாம் இருக்கின்றவர்களைத் தான் தேடுகிறோம். இல்லாதவர்கள் இல்லாதவர்களாக மறைந்து கொண்டே போகின்றனர். இன்றைக்கு நம் தேடல் எப்படி இருக்கிறது? என்று பார்க்கலாம். நீங்க ஒரு வீட்டுக்குப் போறீங்க. நீங்க தேடிப்போன ஆளையும் பார்க்குறீங்க. அந்த நேரத்தில் அந்த வீட்டில் இல்லாமல் இருக்கும் அவருடைய பையனைப் பற்றி விசாரியுங்களேன். அந்தப் பையன் வீட்டிற்கு வந்தவுடன் அவனுடைய பெற்றோர், 'டேய்! உன்னைய ஃபாதர் எங்கனு கேட்டார்டா!' அப்படின்னு சொன்னா, அவன் அப்படியே உள்ளுக்குள் துள்ளிக் குதிப்பான். 'நம்மை யாரோ தேடுகிறார்!' என்ற உணர்வே நம்மில் முழு உற்சாகம் கொண்டு வரும்.

இ. யார்கிட்ட எதைச் சொல்லணுமோ, அவர்கிட்ட அதைச் சொல்ல வேண்டும். கேட்பவரும் தனக்குத் தேவையில்லாத இன்ஃபர்மேஷன் தன்னிடம் வரும்போது அதைக் கண்டுகொள்ளாமல் இருந்து விட வேண்டும். இயேசுவுக்கு மாற்கு நற்செய்தியின் படி இதுதான் முதல் அற்புதம். இதற்கு முன் தொழுகைக்கூடத்தில் அவர் பேயை ஓட்டுகிறார் (காண். மாற்கு 1:21-28). ஆனால், அது அவருடைய போதனையின் அறிகுறியாக மட்டுமே இருக்கிறது. நம்மிடம் மற்றவரைப் பற்றி ஒரு செய்தி சொல்லப்படுகிறது என்றால் அவருக்குத் தேவையானதைச் செய்ய நாம் தயாராக இருந்தால் மட்டுமே அதைப் பற்றிக் கேட்க வேண்டும். வெறும் பொழுதுபோக்கிற்காகவும், கேட்பதற்கு இனிமையாக இருக்கிறது என்பதற்காகவும் மற்றவர்களைப் பற்றிய பேச்சில் நாம் ஆர்வம் காட்டக் கூடாது. அதை நாம் இயேசுவின் உடனடிச் செயலில் பார்க்கிறோம். மாமியாரைப் பற்றிச் சொல்லப்பட்டவுடன் உடனே செயலில் இறங்குகிறார். 'அப்படியா! காய்ச்சலா? எத்தனை நாளா? கவனமா இருக்க வேண்டாமா? அங்க இங்கனு ஏன் அலையுறீங்க! மருந்து ஏதாவது எடுத்தீங்களா?' என்று எதிர்மறையாகக் கேட்கவோ, 'ஐயயோ! காய்ச்சலா! நல்லாப் பாருங்க! எங்க பெரியப்பா ஒருவர் இப்படித்தான் வெறும் காய்ச்சல்னு நினைச்சாரு. ஆனா, அதுவே அவருடைய உயிரை வாங்கிடுச்சு!' என்று பயமுறுத்தவோ இல்லை. உடனடி நிவாரணம் தருகிறார் இயேசு.

'உடனே அவர்கள் அவரிடம் அவரைப் பற்றி சொன்னார்கள்!'



5 comments:

  1. Anonymous2/08/2015

    Super yesu. You have already become a biblical scholar. Fr Hermes words.Par Excellance

    ReplyDelete
  2. டைப்படித்த விரல்களைக் கண்களில் ஒத்திக்கொள்ள வேண்டும் போல் தோன்றுகிறது. மயிலிறகால் மனதை வருடிக் கொடுத்த உண்ர்வு. ஒருவர் உடல்நலக்குறைவோடு இருப்பதை மற்றொருவருக்கு உணர்த்துவது வெகு இயல்பான, சாதாரணமான விஷயம்.ஆனால் அதை எந்த உணர்வோடு,எப்படிப்பார்த்தால் ' அசாதாரண' நிகழ்வாக மாற்ற முடியம் என்பதை தங்களுக்கே உரித்தான சொற்களில் விளக்கியுள்ளீர்கள்.இறைவனின் பார்வையில் யாரும்,எந்த நிகழ்வும் 'சாதாரணமில்லை' என்பதைப்புரிய வைத்துள்ளீர்கள். எல்லாமே ஆழ்மனத்தைத் தொட்ட விஷயங்கள். இறைவன் தங்களை எந்த நோய்நொடியுமின்றி பாதுகாத்துக்காப்பாராக! வாழ்த்துக்கள்...

    ReplyDelete
    Replies
    1. Thanks da ma for the blessings and prayers. You are my mistress and mentor. God bless us.

      Delete
  3. Anonymous2/08/2015

    Yesu just read your message once again. Not exactly correction but just alteration of words. 5th paragraph. Communication involves three persons: the one who is spoken, the listener and the speaker. He, you and I. Nan nee and he enpathaivida ....you know the rest. Good evening yesu

    ReplyDelete
  4. Thanks IAS for the compliments and the corrections. I must take time to revise the post before publishing. Thanks. Good day.

    ReplyDelete