Tuesday, February 17, 2015

கடவுளின் கண்ணீர்

மண்ணுலகில் மனிதரை உருவாக்கியதற்காக ஆண்டவர் மனம் வருந்தினார்.
அவரது உள்ளம் துயரமடைந்தது.
(தொடக்கநூல் 6:6)

இந்த வசனத்தில் என்னவொரு சோகம் பாருங்க!

'மனம்' என்று முதலில் பயன்படுத்தும் வார்த்தையை, தொடர்ந்து 'உள்ளம்' என்றும், 'வருத்தம்' என்பதை, மீண்டும் 'துயரம்' என்று சொல்வதன் வழியாகவும் இந்தப் பகுதியை எழுதியவர் கடவுளின் உள்ளக்கிடக்கையை ஆழமாகப் பதிவு செய்கின்றார்.

கடவுளின் இந்தத் துயரத்திற்குக் காரணங்கள் இரண்டு:

அ. காயின் சிந்திய ஆபேலின் இரத்தம் (தொநூ 4:1-12)
ஆ. மனிதர்கள் தெய்வப்புதல்வர்களோடு (அரக்கர்களோடு) திருமண உறவு வைத்துக் கொண்டது (தொநூ 6:1-4)

ஆக, வன்முறை மற்றும் கூடாஒழுக்கம் கடவுளின் பார்வையில் தீயதாகப்படுகின்றது.

நம் சமூத்தில் ஒவ்வொருவருக்கும் ஒரு 'ரோல்' உண்டு. ஒரு சில நேரங்களில் ஒரே நபர் பல 'ரோல்களையும்' கொண்டிருக்கின்றோம்: வீட்டில் மகள், பள்ளியில் மாணவி, அலுவலகத்தில் ஊழியர், பேருந்தில் பயணி எனச் சொல்லலாம். ஒரே நபர் பல 'ரோல்களில்' செயல்படும்போது அதுவே அவருக்கு மனஅழுத்தமாகவும் மாறிவிடுவதுண்டு. மற்றொரு பக்கம் 'ரோல்'-பிறழ்வு - அதாவது. தான் மேற்கொள்ளும் 'ரோலுக்கு' ஏற்றவாறு செயல்படாமல் இருப்பது, அல்லது பிறழ்வுபட்டுச் செயல்படுவது.

இப்படியாக அன்றாடம் மனிதர்கள் செய்யும் பல்வேறு செயல்பாடுகள் தாம் சமூகத்தை முன்னேற்றிச் செல்கின்றது.

இந்தச் சமூகம் எப்படி முன்னேறுகிறது என்று பார்க்கும் போது மூன்று பேரின் கூற்றுக்களை நாம் கருத்தில் கொள்ளலாம்:

அ. எமில் டெர்க்கைம் - இவரைப் பொறுத்தவரையில் சமூகம் ஒரு உடல். உடலின் ஒவ்வொரு உறுப்பும் ஒவ்வொரு செயல்பாட்டைச் செய்து உடலின் இயக்கத்தைச் சீராக வைத்திருப்பது போல சமூகத்தின் ஒவ்வொருவரும் தத்தம் 'ரோலை' சரியாக செய்வதன் வழியாக ஒட்டுமொத்த வளர்ச்சிக்கு உதவுகின்றனர். இது ஒருவேளை இவருக்கு தூய பவுலடியாரின் கடிதத்தின் உந்துதலாகக் கூட இருக்கலாம். இதன் பெயர் 'ஆர்கானிக் மாடல்'.

ஆ. காரல் மார்க்ஸ் - சமூக முன்னேற்றத்திற்கு அடிப்படை காரணம் 'டென்ஷன்' - இருப்பவருக்கும், இல்லாதவருக்கும் இடையேயான டென்ஷன்தான் சமூகத்தின் இயக்கத்தை ஊக்குவிக்கிறது. சமூகத்தில் இரண்டு பாகங்கள் உண்டு: ஒன்று அடிப்பாகம் (பேஸ் ஸ்டரக்சர்) - பொருளாதாரம். மற்றொன்று மேற்பாகம் (சூப்பர் ஸ்டரக்சர்) - மதம், கலை, படிப்பு, பயணம், பொழுதுபோக்கு எல்லாம். ஒருவரின் பொருளாதாரத் தேவைகள் முழுமையடைந்தால் தான் அவர் கடவுளைப் பற்றியோ, கலை பற்றியோ, கவிதை பற்றியோ சிந்திக்க முடியும். மேலும் முதலாளி, தொழிலாளி என்ற இரண்டு பேருக்குமான டென்ஷன் தான் சமூகத்தை மாற்றிக் கொண்டே போகிறது. இதன் பெயர் 'கான்ஃப்ளிக்ட் மாடல்'.

இ. மேக்ஸ் வேபர் - ஏறக்குறைய முதல் மாடல் போலத்தான். ஆனால், ஒருவர் மற்றவரோடு ஒருங்கிணைந்து நடப்பது ஏதோ மெக்கானிக்காக இல்லாமல் முழு மனதோடு நடப்பது. இதன் பெயர் 'சிம்பாலிக் இன்டராக்சனிசம் மாடல்'.

கடவுள் படைத்த இந்த உலகத்தில் வாழும் மனித சமூகம் இப்படித்தான் ஒரு கட்டத்திலிருந்து மறு கட்டத்திற்குக் கடந்து செல்கிறது.

காயின் ஆபேலின் மேல் வன்முறையை உபயோகிக்கும் போதும், மண்ணுலகினர் தெய்வப்புதல்வர்களோடு கூடாஒழுக்கம் கொள்ளும்போதும் இந்த 'ஒர்க்கிங் மாடலில்' பிரச்சினை வருகின்றது. அங்கே சமூகம் முன்னேறுவதற்குப் பதில் பின்னடைவு பெறுகிறது.

எகிப்தின் மின்யாவுக்கு அருகில் எல்-ஆவூர் என்ற கிராமத்தில் செபம் செய்து கொண்டிருந்த 21 பேரை பிணைக்கைதிகளாக எடுத்துச் சென்றவர்களை, திரிபோலியில் ஒரு கடற்கரையில் வரிசையாக மண்டியிடச் செய்து தலைகளை வெட்டிப் படுகொலை செய்தனர் ஐ.எஸ். எனப்படும் இஸ்லாமிய ஸ்டேட் குழுவினர். ஒன்று, இரண்டு என அரங்கேறிக்கொண்டிருந்து இன்று பத்து, இருபது என மாறிவிட்டது.

தான் சிந்திய ஒருவனின் இரத்தித்திற்கே காயின் கொடுமையான தண்டனை அனுபவிக்க நேர்ந்தது என்றால், இவர்கள் சிந்தும் இரத்தத்திற்கு என்ன விலை கொடுப்பார்கள்?

அப்படியென்ன தங்கள் மதத்தின் மேல் இப்படி ஒரு வெறி? ஒரு மனிதனை சமைத்துப் பதப்பத்துவதால்தான் அதற்கு 'சமயம்' என்று பெயர் வந்தது. அதுவே அவனுக்கு மதம் பிடிக்கச் செய்வதால் தான் அதை மதம் என்றும் அழைக்கின்றோம்.

'உங்களைக் கொல்லுவோர் கடவுளுக்குத் திருப்பணி செய்வதாக எண்ணும் காலமும் வருகிறது' (யோவான் 16:2) என்று இயேசு தன் சீடர்களைப் பார்த்து இறைவாக்காகச் சொன்னது இன்று நிறைவேறுகிறது போல!

ஆயுதம் ஏந்தி நிற்கும் ஒரு மிருகத்தின் முன்னால் நிராயுதபாணியாய் முழந்தாள்படியிட்டு நின்ற அந்த 21 பேரைப் பார்க்கும் போது கண்கள் கசிந்துவிட்டன. அவர்களைப் பெற்றெடுத்த தாய்மார்களின் கண்ணீருக்கு அவர்கள் என்ன பதில் சொல்வார்கள்? மனைவியருக்கு? பிள்ளைகளுக்கு? நண்பர்களுக்கு? இறந்தவர்களின் உள்ளங்களில் எவ்வளவு கனவுகள் இருந்திருக்கும்? மானிடருக்கு இறப்பே பெரிய சாபம். அதிலும் இந்தப் படுகொலை. பாவம் இந்த அப்பாவிகள்!

வன்முறையின் குழந்தை வன்முறைதான்! தீவிரவாதத்தின் பிள்ளை தீவிரவாதம்தான்!

நம்மை உருவாக்கியதற்காகக் கடவுள் இன்றும் அழத்தான் செய்கிறார்!


4 comments:

  1. நேற்றைய இரவு உறங்கச்செல்லுமுன் இன்றைய 'தொடக்கநூல்' வாசகத்தைப்படித்த எனக்கு கலக்கமாகவும்,பயமாகவும் இருந்தது. இன்றையப்பதிவில் உள்ள தங்களின் ஒவ்வொரு வார்த்தையும் என் கலக்கத்தை மேலும் கூட்டியுள்ளது. இறைவனின் கண்களைக் கசிய வைப்பது எத்துணை சாபக்கேடான செயல்?! நாம் நம் சமுதாயத்துக்கும்,சகமனிதனுக்கும் எதிராகச் செய்யும் ஒவ்வொரு செயலுமே இதை ஆமோதிக்கிறது. தவக்காலத்தை நெருங்கிக்கொண்டிருக்கும் நமக்கு 'தக்க பருவத்தில் விதைக்கப்பட்ட விதையாகும்' இன்றையப்பதிவு.இதை விதைத்த தந்தைக்கு பாராட்டுக்கள்.தவக்காலத்தில் இன்னும் நிறைய விதைப்பீர்களென எதிர்பார்க்கிறேன்.நன்றி....

    ReplyDelete
    Replies
    1. Thanks amma. Wish you a blessed Lent. God bless us.

      Delete
  2. Anonymous2/17/2015

    Good reflection Yesu

    ReplyDelete
    Replies
    1. Thanks IAS. Wish you a graceful Lent.

      Delete