Wednesday, February 18, 2015

உங்கள் தந்தை

நாளை திருநீற்றுப் புதன்.

நெற்றியில் சாம்பல் அணிந்து தவக்காலத்தைத் தொடங்குகிறோம்.

நாற்பது நாளைக்கு அது செய்யக் கூடாது, இது செய்யக் கூடாது அல்லது அது செய்யணும், இது செய்யணும் அப்படின்னு சில முடிவுகளும் எடுத்திருப்போம்.

நான் ஒவ்வொரு வருடமும் இப்படி எடுக்குற முடிவுகள் விரலைக் கொண்டு ஈ ஓட்டுற மாதிரி விரலுக்கும் பயனில்லாம, ஈயையும் விரட்டாமல் தான் இருக்கும். ஆனாலும் இந்த வருடம் சிலவற்றைச் செய்யலாம், சிலவற்றை விடலாம் என்று காலையில் இருந்து தோணுது. ஆனா, எதைச் செய்ய, எதை விட என்றுதான் இன்னும் தெரியல. இன்னும் விடியலைல. விடியறுத்துக்குள்ள பாத்துக்குடுவோம்.

ஒவ்வொரு வருடம் திருநீற்றுப் புதன் அன்றும் நாம் திருப்பலியில் வாசிக்கும் நற்செய்திப் பகுதி மத்தேயு 6:2-18. தர்மம் செய்தல், இறைவேண்டல் செய்தல் மற்றும் நோன்பு இருத்தல் பற்றிய இயேசுவின் மலைப்பொழிவு போதனையின் மையப்பகுதி தான் இது. தவக்காலத்தில் மட்டுமல்ல, எந்தக் காலத்திலும் ஒவ்வொரு கிறிஸ்தவரும், ஏன் ஒவ்வொருவரும் செய்யக்கூடிய கடமைகளாக இந்த மூன்றும் இருந்தால் சால்பு.

இறைவேண்டலின் வழியாக நமக்கும் கடவுளுக்கும் உள்ள உறவிலும்,

தர்மம் செய்தலின் வழியாக நமக்கும் பிறருக்கும் உள்ள உறவிலும்,

நோன்பிருத்தல் வழியாக நமக்கும் நமக்குமான உறவிலும் வளர்கிறோம்.

நான் தவக்காலத்தில் என் மனதுக்குள் வைத்துக்கொள்ள நினைத்துக் கொள்ளும் ஒரே சிந்தனை இதுதான்:

'உங்கள் தந்தை!'

இன்று நாம் வாசிக்கும் நற்செய்திப் பகுதியில் இந்த இரண்டு வார்த்தைகளும் ஏழுமுறை பயன்படுத்தப்பட்டுள்ளன.

1. உங்கள் தந்தை உங்களுக்கு கைம்மாறு அளிப்பார் (6:4)
2. மறைவாய் உள்ள உங்கள் தந்தையை நோக்கி (6:6)
3. மறைவாய் உள்ளதைக் காணும் உங்கள் தந்தையும் (6:6)
4. உங்கள் தேவையை உங்கள் தந்தை அறிந்திருக்கிறார் (6:8)
5. மன்னியாவிடில் உங்கள் தந்தையும் உங்களை மன்னிக்கமாட்டார் (6:15)
6. மறைவாய் இருக்கிற உங்கள் தந்தைக்கு மட்டும் தெரியும் (6:18)
7. மறைவாய் உள்ளதைக் காணும் உங்கள் தந்தையும் (6:18)

மேலும் 'விண்ணகத்திலிருக்கிற எங்கள் தந்தை' என்று 6:9லும், 'உங்கள் விண்ணகத் தந்தை' என்று 6:14லிம் வாசிக்கிறோம். 'விண்ணகத்தில்' அப்படிங்கிற வார்த்தை குறுக்க நிற்கிறதுனால இந்த இரண்டு இடங்களையும் தவிர்த்து விடுவோம்.

இந்த 'உங்கள் தந்தை' யார்?

முதல் ஏற்பாட்டில் யாரும் கடவுளை 'தந்தை' என்று அழைத்ததில்லை. கடவுள் எட்டாதவராகவும், மிக மதிப்பிற்குரியவராகவும் கருதப்பட்டதால் யாரும் கடவுளை அப்படி அழைக்கவும் துணியவில்லை. ஒரு சில இடங்களில் கடவுள் இஸ்ராயேல் மக்களின் தந்தையாக தன்னையே உருவகப்படுத்துகின்றார். உதாரணத்திற்கு, 'தந்தை தன் மகனுக்குக் கற்றுக்கொடுப்பது போல உங்கள் கடவுளாகிய ஆண்டவர் உங்களுக்குக் கற்றுக் கொடுத்தார்' (இச 8:5). இந்த இடத்தில் கூட கடவுள் தன்னை 'உடல்ரீதியான' தந்தையாக அல்லாமல், 'மீட்புரீதியான' தந்தையாகவே தன்னை முன்னிறுத்துகின்றார்.

இரண்டாம் ஏற்பாட்டில் கடவுளுக்கு தந்தை என்ற சொல்லாடல் பயன்படுத்தப்படுகின்றது. இந்தச் சொல்லாடலை அதிகம் பயன்படுத்துபவர் யோவான் நற்செய்தியாளர் (109 முறை). மத்தேயு நற்செய்தியாளர் மொத்தம் 44 முறை பயன்படுத்துகிறார். இவற்றில் 21 இடங்களில் கடவுளை இயேசு தன் சீடர்களுக்கும், கடவுளுக்குமான உறவில் 'உங்கள் தந்தை' என முன்வைக்கின்றார். மத்தேயு நற்செய்தியாளரைப் பொறுத்தவரையில் கடவுளை சீடர்கள் மட்டும் தான் 'தந்தை' என்று அழைக்க முடியும்.

கடவுள் எல்லா மனிதர்களுக்கும் தந்தை என்றாலும், இந்த 'தந்தைக்குரிய' நிலையை அவர் எல்லாருக்கும் தருவதில்லை. 'மகளுக்குரிய' அல்லது 'மகனுக்குரிய' நிலையில் யார் இருக்கிறார்களோ அவர்கள் மட்டுமே கடவுளை 'தந்தை' என அழைக்க முடியும்.

முதல் ஏற்பாட்டில் தூரமாய் ஒளிந்திருந்த கடவுள் இரண்டாம் ஏற்பாட்டில் தொட்டு 'அப்பா' என்று அழைக்கக் கூடிய தூரத்திற்கு நெருங்கி வருகின்றார்.

இந்தத் தவக்காலத்தில் நமக்கிருக்க வேண்டிய (அட்லீஸ்ட் எனக்கு இருக்க வேண்டிய!) நம்பிக்கை இதுதான்: 'உங்கள் தந்தை' உன்னோடு இருக்கிறார்!

சின்ன வயதுல குழந்தை தன் தந்தையைப் போல இந்த உலகத்தில் வீரன் யாருமேயில்லை என்று நினைக்குமாம். தன் தந்தையை மட்டும் அது ஹீரோவாகப் பார்க்குமாம்.

அந்தக் குழந்தை மனது இன்று நமக்கு இருந்தால் போதும். இன்று நம்மை அலைக்கழிக்கும் கவலை. மனத்துயரம், வெறுமை, நாளை என்ன நடக்கும் என்ற படபடப்பு, அடுத்த வருஷம் என்ன செய்யலாம் என்ற வெற்று மன ஓட்டம் எல்லாவற்றிற்கும் காரணம் நாம் அடிக்கடி 'நம் தந்தை' இருக்கிறார் என்பதை மறந்தவிடுவதுதான்.
இந்த ஒரு எண்ணம் மட்டும் நமக்கு ஆழ்மனதில் பதிந்துவிட்டால் போதும். வெற்றியோ, தோல்வியோ, வறுமையோ, செல்வமோ, துன்பமோ, இன்பமோ எல்லாம் ஒன்றுபோலத் தெரிய ஆரம்பிக்கும்.

இந்த உலகில் யாரும் நம்மைப் பார்க்கவில்லையென்றாலும், நாம் செய்வதைப் பாராட்டவில்லையென்றாலும், நம் செயல்கள். சொற்கள் பிடிக்கவில்லை என்று சொன்னாலும் மனதில் கலக்கம் தேவையில்லை.

ஏனெனில், உங்கள் தந்தை உங்களோடு!

இந்தத் தவக்காலம் உங்களுக்கு அருளின் காலமாக அமையட்டும்!



4 comments:

  1. Anonymous2/18/2015

    Yseu good morning. Very good reflection. Let me use it for the people. Thank you. May God as you said unite us in His Ministry of love

    ReplyDelete
    Replies
    1. How did the day go IAS? Wish you a blessed Lent.

      Delete
  2. அழகானதொரு ஆரம்பம்.ஒரு தகப்பன் தன் குழந்தையை முதல் நாள் பள்ளியில் சேர்க்கும் நேர்த்தியுடன் எங்களை விண்ணகத்தந்தையிடம் நெருங்கும் வழியைக் கூறியுள்ளீர்கள்.'தந்தை'..என்ற சொல்லுகையிலேயே அவரின் அணைப்புக்குள் சுகம் காணும் ஒரு ஃபீல் கிடைக்கிறது.'தந்தை'யை இழந்தவர்களுக்கு இந்த வார்த்தை இன்னும் கூட பொருள் செறிந்ததாக இருக்கும். இந்தத் தந்தையின் நெருக்கம் நமக்கு வரும் அத்தனை இடர்பாடுகளையும் தூக்கி எறிந்துவிடுமெனில் அவரிடம் செல்வதில் என்ன தயக்கம்!? என்ன கலக்கம்!? தந்தையே! " நம் தந்தை நம்மோடு இருக்கிறார்"என்று நாம் அனைவருமே சேர்ந்து சொல்வோமே!

    ReplyDelete
  3. When God takes away one's earthly father from someone He replaces with another. This is my strong belief. He has replaced for you and for me. Good day.

    ReplyDelete