Thursday, February 5, 2015

வந்த மாட்டையும்...!

பாலகரின் மழலையிலும் குழந்தைகளின் மொழியிலும்
வலிமையை உறுதிப்படுத்தி உம் பகைவரை ஒடுக்கினீர்!
(திபா 8:2)

பிப்ரவரி மாதத்தின் முதல் ஞாயிற்றை இத்தாலியில் உள்ள ஆலயங்களில் 'ஜோர்னாத்தா தெல்லா வீத்தா' (வாழ்வின் அல்லது உயிரின் நாள்) என்று கொண்டாடுகிறார்கள். இந்தத் திருநாளின் பின்புலம் பிப்ரவரி 2ஆம் தேதி கொண்டாடப்படும் 'குழந்தை இயேசுவைக் காணிக்கையாக ஒப்புக்கொடுக்கும் நாள்' தான்.

இரண்டு நாட்களுக்கு முன்பாக நண்பர் ஐ.ஏ.எஸ் அவர்கள் குறிப்பிட்டிருந்தார்கள். இன்றைய பணிவாழ்விற்கு அவசியம் படைப்புத்திறனும் (கிரியேட்டிவிட்டி), நாணயம் அல்லது நம்பகத்தன்மையும் (ஜென்யுன்னெஸ்).

வருடத்தின் 52 ஞாயிறையும் நம் ஊர்களிலும் இப்படி ஏதாவது ஒரு நாளாக சிறப்பிக்கலாமே என்று எனக்கும் எண்ணம் தோன்றியது: உயிர் குறித்த விழிப்பு ஞாயிறு, சர்க்கரை ஞாயிறு, புற்றுநோய் ஞாயிறு, எய்ட்ஸ் ஞாயிறு, சுற்றுச் சூழல் பாதுகாப்பு ஞாயிறு, இறையழைத்தல் ஞாயிறு, மணவுறவு ஞாயிறு, குழந்தைகள் ஞாயிறு, திருக்குறள் ஞாயிறு, பல்சமய ஞாயிறு, வேலைவாய்ப்பு ஞாயிறு, அரசியல் ஞாயிறு என இப்படி யோசித்தால் கண்டிப்பாக 52 வாரங்களையும் நிரப்பி விடலாம். ரொம்ப செலவாகும் என்றெல்லாம் பயப்படத் தேவையில்லை. அந்தத் துறையில் புலமை பெற்றோரை அழைக்கலாம். நாம் எடுத்துக் கொண்ட தலைப்பைக் குறித்துச் சிந்திக்கலாம். குழந்தைகளுக்கு போட்டிகள் நடத்தலாம். சேர்ந்து சாப்பிடலாம். நாம் மக்களோடு எந்த அளவிற்கு நம் நேரத்தைச் செலவழிக்கிறோமோ அதைப் பொறுத்தே அவர்களோடு இருக்கும் உறவு நிலையும் இருக்கும்.

உயிர் நாள் அன்று எங்க பங்கில் என்னதான் நடந்தது?

ஒவ்வொரு ஊருக்கும் ஒவ்வொரு பிரச்சினை. நம்ம ஊருல திருமணம் ஆவதற்குத் தடையாக வரதட்சணை இருக்கிறது. சாதி, மத பேதம் இருக்கிறது. வளர்ந்த நாடுகளில் உள்ள பிரச்சினை 'டீன் ஏஜ் பிரக்னன்சி' (பதின்பருவ கர்ப்பம்). பள்ளிகளில் படிக்கும் போதே மாணவியர் கருவுறத் தொடங்குகின்றனர். நம்ம ஊரிலும் பெருநகரங்களில் இந்த ஃபேஷன் வந்துவிட்டது. 'ஆணும் பெண்ணும் பழகுவது சரியா? தவறா?' என்ற வாக்குவாதம் வேண்டாம். ஆனால் பழகும் போது வருகின்ற பிரச்சினைகளில் ஒன்று இது. இந்தத் 'தேவையற்ற கர்ப்பத்தை' என்ன செய்வது? என்பது தான் இவர்கள் சந்திக்கும் பெரிய பிரச்சினை. திருமணம் ஆகிவிட்டால், கொஞ்சம் விவரம் தெரிய கருத்தடை சாதனங்கள் பயன்படுத்தியோ, முன்-பின் மாத்திரைகள் பயன்படுத்தியோ கர்ப்பமடைதலை நிறுத்தி விடலாம், தடுத்து விடலாம் அல்லது 'கலைத்து' விடலாம்.

ஆக, இந்த நாளின் முக்கிய பிரச்சினையாக இருப்பது 'அபார்ஷன்' - கருக்கலைப்பு.

ஏன் நம் திருஅவை கருக்கலைப்பைத் தடைசெய்கிறது? ரொம்ப சிம்பிள் லாஜிக் - உங்களால உயிரை உருவாக்க முடியாது. ஆக, உயிரை அழிக்கும் உரிமை உங்களுக்கு இல்லை.

ஆனால், 'என் உடம்பு, என் சுதந்திரம், என் உரிமை' - இதுதான் இன்றைய மாடர்ன் யூத்தின் விருதுவாக்காக இருக்கிறது.

இதற்கிடையில் ரெண்டு வாரங்களுக்கு முன்னால் பிலிப்பைன்ஸ் நாட்டுக்குத் திருப்பயணம் போன போப்பாண்டவர் பிரான்சிஸ் அவர்களை அங்கிருந்த ஒரு பெண் சந்தித்திருக்கிறார். சந்திப்பின் போது, 'உங்களுக்கு எத்தனை குழந்தைகள்?' என்று கேட்டிருக்கிறார். 'ஒன்பது' என்று சொல்லியிருக்கிறார் அந்தப் பெண். 'திடீர்னு உங்களுக்கு உடம்பு சரியில்லாம போச்சுன்னா அந்தக் குழந்தைகளை யார் கவனித்துக் கொள்வார்கள்?' என்று கேட்டிருக்கிறார். 'கடவுள் கொடுத்தார். அவர் பார்த்துக்க மாட்டாரா?' என எதிர்கேள்வி கேட்டிருக்கிறார் அந்தப் பெண். இந்த நிகழ்வு முடிந்து பறக்கும் விமானத்தில் பத்திரிக்கையாளர்களைச் சந்தித்த திருத்தந்தை இந்தப் பெண்ணைக் குறிப்பிட்டதோடு மட்டுமல்லாமல், 'கத்தோலிக்கக் கிறிஸ்தவர்கள் முயல்குட்டிகளைப் போல குழந்தைகள் பெற்றுக்கொள்வதைத் தவிர்த்து பொறுப்புணர்வோடு குழந்தைகளைப் பெற்றுக்கொள்ள வேண்டும்' என்று கூறியிருக்கிறார்

இது ஒரு பக்கம் இருக்க, நம்ம ஊருல பாஜக எம்.பி. ஒருத்தரும், நம்ம பக்கத்து ஊரு சந்திரபாபு நாயுடுவும், 'பெண்கள் நான்கு குழந்தைகளாவது பெற்றுக்கொள்ள வேண்டும்!' என்று சொல்லி நம் வயிற்றில் புளியைக் கரைக்கிறார்கள்.

போப்பாண்டவரின் வார்த்தைகள் திருச்சட்டம் படித்தவர்கள் மத்தியிலும், கருத்தடையை எதிர்ப்போர் மத்தியிலும் பதற்றத்தை உண்டாக்கியிருக்கிறது.

'இப்படிச் சொல்வதால் போப்பாண்டவர் மறைமுகமாக கருத்தடையை ஆதரிக்கிறாரா?' என்பதுதான் பலரின் கேள்வி.

கருத்தடையை ஆதரித்தால் தவறில்லை என்றுதான் நான் சொல்வேன். ஏற்கனவே திருச்சபை இயற்கை முறை கருத்தடையை ஆதரிக்கிறது. செயற்கையாகச் செய்யப்படும் அனைத்து கருத்தடை முறைகளையும் தடை செய்கிறது.

ஒரு சின்ன டைவர்சன் - என்னைப் பொறுத்தவரையில் 'மணத்துறவு' என்னும் செலிபஸி கூட ஒரு வகையான சொஃபிஸ்டிகேடட் ஆர்டிபிஷியல் கான்ட்ராசெப்ஷன் தான்!

நாங்கள் குருமடத்தில் படிக்கும் போதே நாங்கள் கருத்தடையை ஆதரித்து கருத்தமர்வுகள் நடத்தியிருக்கிறோம். இந்தியா போன்ற மக்கள் தொகை அதிகம், சுகாதாரம், கல்வி குறைவு போன்ற இடங்களில் பொறுப்பான முறையில் குழந்தைகள் பெற்றுக்கொள்வது அவசியமாக இருக்கிறது. நிறைய இடங்களில் குழந்தைகள் பெற்றுவிட்டு அவர்களைப் பாதுகாத்துப் பராமரிக்க முடியாமல் அவர்கள் அலங்கோலப்பட்டு நிற்பதைப் பார்க்கலாம். மேலை நாடுகளில் மாதிரி 'காக்கா குஞ்சு கலாச்சாரமும்' நம்ம ஊரில் இல்லை. அதாவது, குஞ்சுகள் வளரும் வரை தாய்க்காகம் பார்த்துக்கொள்ளும். வளர்ந்துவிட்டால் அவ்வளவு தான். நீ வேறு! நான் வேறு! ஆனா, நம்ம ஊருல அப்படி இல்லையே - குழந்தையைப் பெற்று, வளர்த்து, படிக்க வைத்து, வேலை வாங்கிக் கொடுத்து, திருமணம் செய்து வைத்து, பேறுகாலம் பார்த்து, அந்தப் புள்ளைக்கு பேர் வைத்து, மொட்டை அடித்து, காது குத்தி, பூப்புனித நீராட்டு விழா வைத்து, அதற்கும் திருமணம் செய்து வைத்து என வாழையடி வாழையாக தொடர்கிறது. ஒரு புள்ளைப் பெத்தவனின் பாடே மாதம் 50ஆயிரம் சம்பளம் வாங்குனாலும் அல்லாடுது. இதுல நாலஞ்சின்னா அவ்வளவுதான். எழுதும் போதே கண்ணக்கட்டுது!

இதற்கு நம்ம ஊருல தியாகம், பாசம், உறவு அப்படின்னு பட்டங்கள் வேறு!

'உயிரின் நாள்' இங்கு முன்னிறுத்தியது 'கருக்கலைப்பு வேண்டாம்!' என்பதைத் தான்.

ஆனால் இதை இன்னும் கொஞ்சம் நீட்டி இவர்கள் கொண்டாடியிருக்கலாம்: பிறக்கவிருக்கும் உயிர், வாழ்ந்து கொண்டிருக்கும் உயிர், பிரியவிருக்கும் உயிர் என அனைத்து நிலைகளிலும் உயிரின் அவசியத்தைச் சொல்லியிருக்கலாம். ஏனெனில் இன்று வேகமாக வரும் மற்றொரு அபாயம் 'தற்கொலை' மற்றும் 'கருணைக்கொலை' (யுத்தனாசியா).

கருக்கொலையோ, தற்கொலையோ, கருணைக்கொலையோ - தவறுதான்!

ஒரு கருவை அழித்ததால் அதன் வலியை மறக்க முடியாமல், அதற்காக தங்களையே மன்னிக்க முடியாமல் வாழ்நாள் முழுவதும் தவிக்கும் தம்பதியர் ஒரு பக்கம். 'வந்த மாட்டையும் கட்ட மாட்டேன்! போன மாட்டையும் தேட மாட்டேன்!' என்று இன்று நம் நடுவில் உருவாகும் புதிய தலைமுறை மறுபக்கம்.

என்ன செய்யப் போகிறோம்?

5 comments:

  1. என்னே ஒரு பொறுப்பான பதிவு! ஒவ்வொரு எழுத்தையும் மிக அளவாகத்,தெளிவாகக் கையாண்டுள்ள விதம் பாராட்டுக்குரியது."Needof the hour." வாஸ்தவம்தான்....'கொலை' அது எந்த வடிவிலிருந்தாலென்ன?..' உயிரைத்தரமுடியாத நமக்கு அதை எடுக்கவும் அதிகாரமில்லைதான்' 'ஒரு கருவை அழித்த்தால் அதன் வலியை மறக்கமுடியாமல்,தங்களையே மன்னிக்க முடியாமல் வாழ்நாள் முழுதும் தவிக்கும் தம்பதியர் ஒருபக்கம்'.....வலியை என்னாலும் உணரமுடிந்தது.'மணத்துறவு எனும் செலிபஸி கூட ஒரு வகையான சொஃபிஸ்டிகேட்டட் ஆர்டிஃபிஷியல் கான்ட்ராசெப்ஸன்' என்னில் புன்னகையை வரவழைத்தது.ஆனாலும் நம்மூர் 'தியாகத்தை இப்படிக் கொச்சைப்படுத்தியிருக்க வேண்டாம். இன்னும் இதுபோன்ற பொறுப்பு மிக்க விஷயங்களத் தங்களிடமிருந்து எதிர்பார்க்கிறோம்.மனங்களைத்தொட இறைவன் தங்களைத் தன் கருவியாகப் பயன்படுத்தட்டும்.....

    ReplyDelete
  2. Anonymous2/05/2015

    Dear Yesu every week we can celebrate the Holy mass with a theme is really an innovative idea. Let me prepare and send it to you. I llove arrange for it

    ReplyDelete
  3. Anonymous2/05/2015

    Yesu just i read once more. at least i read your article thrice a day. every time it seems to be a new reading with a new insight.Yesterday we had Matha TV shooting of the Holy y Mass. the broadcast is n 28th febr.

    ReplyDelete
  4. Anonymous2/05/2015

    Recently i read 'Kaurvacchi Kaviyam' by Vairamuthu. your writing resembles his style. to be frank little more than that. his writings is more of emotions and expressions. yours is more of information and down to earth expressions.

    ReplyDelete
  5. Dear IAS, Thanks a lot for the compliments. I will surely view the mass telecast on 28 Feb. The other day I saw our Lawrence conducting St Joseph Novena. We will try realising our ideals together. Have a nice day.

    ReplyDelete